இந்த பாட்டில் பிரச்சினை இந்த நூற்றாண்டுக்குள் முடியாது போலிருக்கிறது.
பலர் கண்ட இடங்களில் பாட்டில்களை வீசுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதைத் தடுக்க நீதிமன்றம் முயற்சித்தது என்னவோ நல்ல விஷயம்தான். ஆனால், அது சரிவரவில்லை என்பதைப் புரிந்த பிறகாவது அந்த முயற்சியைக் கைவிட்டிருக்க வேண்டும், அல்லது மாற்று வழியை உருவாக்கியிருக்க வேண்டும்.
ஆனால், நாங்கள் ஒன்றை ஆரம்பித்துவிட்டோம்; எனவே, எப்படியாவது அதை நிறைவேற்றுவோம் என்று அபத்தமாக நீதிமன்றங்களும் அரசுகளும் இந்த விஷயத்தில் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன.
எனவே, இங்கே நாம் மாற்றி யோசிக்க வேண்டியதுதான்.
கூரியர் சர்வீஸ் என்று ஒன்று இருக்கிறது. 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த நிறுவனங்கள் சில கடைகளுக்குக் கலெக்ஷன் ஏஜென்ட் என உரிமம் கொடுப்பார்கள். நானும் அப்படி ஒரு கடையை நடத்தியிருக்கிறேன். தினமும் 5-10 கவர்கள் வரும். 20 % கமிஷன் கிடைக்கும்.
அதேபோல், இந்த டாஸ்மார்க் நிறுவனமும் சில கடைகளுக்கு அப்படி ஒரு அனுமதியைக் கொடுத்தால் என்ன?
இப்படி அனுமதிப்பதன் மூலம் தெருவுக்குச் சில கடைகள் வந்துவிடும். அவர்களிடம் பாட்டிலுக்கு தகுந்தாற்போல் 5 -10 ரூபாய் கொடுத்து வாங்கிக்கொள்ளச் சொல்லலாம். அவர்களுக்கு 2 ரூபாய் கமிஷன் கொடுத்தால்கூடப் போதும். பல சிறிய கடைகளுக்கு இது கூடுதல் வருமானமாக இருக்கும்.
தினமோ அல்லது வாரமோ ஒருவர் வந்து பாட்டில்களைச் சேகரித்து, அதற்கான குடோனுக்கு எடுத்துச் செல்லலாம். அதற்கான பிற செலவினங்களைக்கூட இந்த 3 ரூபாயில் சமாளித்துவிடலாம். இதனால், டாஸ்மார்க் ஊழியர்களுக்கும் இந்தத் தலைவலி இருக்காது.
அதைவிட முக்கியமாக, குடிப்பவன் அதன் பிறகு போதையில் இருப்பான். உடனடியாக இந்த பாட்டிலை டாஸ்மார்க்குக்கு வந்து கொடுத்து காசு வாங்க வேண்டும். அவர்கள் 'ஏதாவது வாங்கினால்தான் ரிட்டர்ன் எடுப்போம்' என்று சொல்லுவார்கள். இது ஒரு தலைவலி.
மறுபடியும் டாஸ்மார்க்குக்குப் போகும்வரை பாட்டிலை எப்படி பாதுகாப்பது? அல்லது அந்த 10 ரூபாய்க்கு ஆசைப்பட்டு வீட்டுக்கு எடுத்துச் சென்று, 'எங்கப்பன் குதிருக்குள் இல்லை' என்று மாட்டிக்கொள்வானா?
200 ரூபாய்க்குக் குடிப்பவன், பாட்டிலை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டுச் செல்லத்தான் நினைப்பான்.
ஆனால், இப்படி தெருவுக்குத் தெரு கடைகள் இருந்தால், பாட்டில்களை அங்கே கொடுத்துக் காசாகவோ அல்லது வேறு ஏதாவது பொருளாகவோ வாங்கிக்கொள்வது அவர்களுக்கு வசதியாக இருக்கும்.
அல்லது, பாட்டிலைக் கீழே போடாமல், இல்லாதவர்களிடம் கொடுத்து, அந்தப் பெட்டிக்கடையில் கொடுத்து டீ சாப்பிடு என்று சொல்லி ஒரு பெரிய மனுஷனாக மாறலாம்!
இப்படி ஏதாவது எளிமையான வழியைக் கையாண்டால் இந்தத் தலைவலிகள் குறையும்.
அமைச்சர் விக்னேஷ் கவனிப்பார் என நம்புகிறேன்.

0 comments:
Post a Comment