!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Friday, January 28, 2011

சிறைகளில் செல்போன் - அபத்தமான தண்டனை - part 2



சிறையில் செல்போன் கைப்பற்றப்பட்டால் சிறை அதிகாரிகள் பெரும்பாலும் அதற்காக வழக்கு போட விரும்புவதில்லை. மிக அபூர்வமாகத்தான் வழக்கு பதிவு செய்யப்படும். காரணம். இவ்வளவு கடுமையான கண்காணிப்பையும் மீறி எப்படி செல்போன் உள்ளே வருகிறது என்று மக்கள் கேள்வி கேட்ப்பார்கள். மக்கள் கேட்டுவிட்டு போகட்டும். அவர்கள் கருத்தையெல்லாம் இப்போது யாரும் பொருட்படுத்துவதே இல்லை. ஆனால், நீதிபதிகள் நேரடியாக கேள்வி கேட்டு நக்கலடிப்பார்கள். அவமானமாக இருக்கும்.

அதற்காக இவர்களை அப்படியே விட்டுவிட முடியுமா? எனவே, சில தண்டனை மற்றும் கணக்கில் வராத `அபராதத்தோடு` அந்த விஷயம் முடிந்துவிடும். இங்கே லஞ்சம் வாங்கவேண்டும் என்ற நோக்கம் தெரியவில்லை. வழக்கு போட அவர்களுக்கு விருப்பம் இல்லை. எனவே இவர்களே அபராதம் போட்டு வசூலித்துக் கொண்டார்கள்.

அதே சமயம், வழக்கு என்றால் அது சிறை போலீசாருக்கும் அலைச்சல்தான். சரி, கடமையை செய்வோம் என்று தண்டனை வாங்கி கொடுத்தாலும் செல்போன் வைத்திருந்த குற்றத்திற்கு 6 மாதம்தான் அதிகபட்ச தண்டனை. இந்த 6 மாத தண்டனையை அமல்படுத்தப்படும் விதமும் விநோதமானது.

பாண்டவர்கள் திரௌபதியை அழைத்துவந்த போது, குந்தி தேவி பிட்சை என்று நினைத்து `பகிர்ந்து கொள்ளுங்கள்` என்று சொன்னதை அவர்கள் அப்படியே கடைபிடித்ததை போல், சட்டம் சொல்வதை, சில சமயம் அது அபத்தமாக இருந்தாலும், சிறை அதிகாரிகள் அதை அப்படியே கடைபிடிகிறார்கள். அவர்களுக்கும் வேறு வழியில்லை. நீதிமன்ற உத்தரவையும், சட்டம் சொல்வதையும் அப்படியே அமல்படுத்த வேண்டியதுதானே சிறைத்துறையின் வேலை.

சரி, இனி இந்த அபத்தத்தை பார்ப்போம். சிறையில் செல்போன் வைத்திருப்பவர்கள் பெரும்பாலும் பெயில் கிடைக்காத தொடர் குற்றவாளிகள் மற்றும் பெயில் மறுக்கப்பட்ட போதை கடத்தல் கைதிகள். இவர்கள் மீது புதிதாக (செல்போன் வைத்திருந்ததாக) வழக்கு பதிவானால் என்னவாகும். சட்டப்படி ஒரு வழக்கு பதிவு செய்யப்படும்போது, குற்றம் சாட்டப்பட்டவரின் நிலை என்ன என்பதை, அதாவது இவர்கள் கைது செய்யப்பட்டார்களா இல்லையா என்பதை கோர்ட்டில் தெரிவிக்க வேண்டும். இவர்கள் ஏற்கனவே சிறையில் இருப்பதால், இவர்கள் மீது சிறைக்குள்ளேயே கைது வாரன்ட் வைக்கப்பட்டு , இந்த புதிய வழக்கிலும் கைதாகி ரிமாண்டில் இருப்பதாக கணக்கு காட்டுவார்கள்.

இன்னொரு சட்டம் என்ன சொல்கிறதென்றால், ஒரு வழக்கில் கைதாகி ஒருவர் ரிமாண்டில் இருந்த காலத்தை அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையில் கழிக்கப்பட வேண்டும் என்று. எல்லாம் சரிதான். ஆனால் இவையெல்லாம் ஒருவன் தவறு செய்தால் அவனை சட்டபூர்வமாக தண்டிக்கவும் அதை அமல்படுத்தவும் உருவாக்கப்பட்ட சட்டங்கள்.ஆனால் ஒருவனே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டால், அப்போது அந்த நபருக்கு வழங்கப்படும் தண்டனையை எப்படி அமல்படுத்துவது என்று சட்டம் தெளிவாக சொல்லவில்லை போலிருக்குது. அதுதான் இங்கே காமெடியாகி விட்டது.

இப்போது ஒருவர் மீது செல்போன் வைத்திருந்தாக வழக்கு பதிவாகிவிட்டது என்று வைத்து கொள்வோம். இவர் ஏற்கனவே ஒரு வழக்கில் பெயில் இல்லாமல் இரண்டு வருடமாக சிறையில் இருக்கிறார். இப்போது செல்போன் வழக்கும் சேர்ந்துவிட்டது.ஒரு வருடம் கழித்து, அவருடைய பழைய வழக்குக்கு மூன்று வருட தண்டனையும், செல்போன் வைத்திருந்த குற்றத்திற்கு 6 மாத தண்டனையும் வழங்கப்பட்டால், நம் கணக்குப்படி அந்த நபர் 3  1/2 வருட தண்டனையை அனுபவிக்க வேண்டும். ஆனால் அப்படி நடப்பதில்லை.

அவருடைய முதல் குற்றத்திற்கு 3 வருட தண்டனை வழங்கப்பட்டாலும், ரிமாண்டிலேயே அவர் 3 வருடம் சிறையில் இருந்ததால் அந்த கணக்கு சரியாகி விட்டது. அப்படியென்றால் செல்போனுக்காக வழங்கப்பட்ட 6 மாத தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டுமே? அதுதான் கிடையாது. ஒரு வருடம் முன்பு இந்த செல்போன் வழக்கிலும் கைதாகி சிறையில் இருப்பதாக கணக்கு காட்டப்பட்டதால், இந்த வழக்கிலும் அவர் ஒரு வருடமாக ரிமாண்டில் இருக்கிறார். எனவே இந்த கணக்குப்ப்டியும் அந்த 6 மாத தண்டனையை கழித்துவிடமுடியும். நடைமுறையில் பார்த்தால் செல்போனுக்காக வழங்கப்பட்ட தண்டனையை அவர் அனுபவிக்கவே வேண்டியதில்லை. வாழைப்பழ கதையாய் அதுதான் இது என்று கணக்கு முடிந்து விடுகிறது.

எனவே, சிறையில் செல்போன் வைத்து கொண்டால் உங்களுக்கு நஷ்டம் என்று பார்த்தால், சாதாரண ஆளாக இருந்தால் அடி வாங்கவேண்டி இருக்கும், செல்போனும் பறிபோகும். வசதியானவர்கள் `உடனடி அபராதம்` கட்டிவிட்டு கைபடாமல் வந்துவிடுவார்கள். அவ்வளவுதான். தொடர் குற்றவாளிகள், அடியை பொருட்படுத்துவதே இல்லை. ` ஸ்டேஷன்ல நாங்க வாங்காத அடியா` என்பார்கள். இதுதான் சிறையில் செல்போன் துணிச்சலாக பயன்படுத்த காரணம்.

இவராவது பரவாயில்லை. 6 மாத தண்டனையைதான் அனுபவிக்காமல் ஏமாற்றிவிட்டார். ஸாரி... அவர் ஏமாற்றவில்லை. சட்டம் தெளிவாக இல்லாதது அவருக்கு லாபமாகிவிட்டது. ஆனால் இந்த நடைமுறை எந்த அளவுக்கு அபத்தமாக இருக்கிறது தெரியுமா? மேலும் படியுங்கள்.

ஒரு கைதியின் மீது 10 வழக்குகள் பதிவாகி இருப்பதாக வைத்துக்  கொள்வோம். அந்த 10 வழக்கிலும் அவர் கைதாகி அவர் ரிமாண்டில் இருப்பதாக கணக்கு காட்டப்பட்டு இருக்கும். அந்த 10 வழக்கில், சில வழக்குகள் ஆதாரம் இல்லாமல் தள்ளுபடியாகக்கூடும். மற்ற வழக்குகளில் தோராயமாக 2,3,5, என வேறுவேறு நீதிபதிகள் தண்டனை வழங்கி, அந்த தண்டனையை கூட்டினால் 15 வருட தண்டனை வருகிறது என்றும் வைத்து கொள்வோம். இப்போது அந்த கைதி எத்தனை வருடம் சிறையில் இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் திறமையாய் கேசை நடத்துவதை பொருத்து 4 வருடத்தில் கூட கணக்கை சரி பண்ணி விடலாம்.

இந்த லாஜிக்படி பார்த்தால் நீங்கள் ஒரு திருட்டு வழக்கில் மாட்டினால் 3 வருடம் தண்டனை. அதே சமயம் நீங்கள் ஒரு தொடர் குற்றவாளியாய் இருந்து பல திருட்டு செயல்களில் ஈடுபட்டாலும் சட்டத்தின் இந்த அபத்தமான லாஜிக்கை பயன்படுத்தி 4 அல்லது 5 வருடங்களில் நீங்கள் வெளியே வந்துவிடலாம். இவர்கள் ஏற்கனவே கிரிமினல்கள். சட்டத்தில் இப்படி ஒரு ஓட்டை இருந்தால் விடுவார்களா?

சட்டத்தில் இன்னொரு அபத்தமும் இருக்கிறது. தவறு செய்யும் ஒருவன் திருந்த வாய்ப்பிருகிறது, எனவே, குற்றத்தின் தன்மை மற்றும் சிறையில் அந்த நபரின் நடத்தையை பொறுத்து, வழங்கப்பட்ட தண்டனையில் நன்னடத்தைய காரணம் காட்டி தண்டனையை குறைப்பார்கள். அநேகமாக தண்டனையில் 30 சதவிகிதம் வரை குறையும். இதுவும் நியாயமான நடைமுறைதான். ஆனால், முதல் முறை என்றால் ஏற்றுக்கொள்ளலாம். ஒருவன் எத்தனை முறை உள்ளே வந்தாலும் இந்த கழிவு உண்டு என்றால் இந்த நடைமுறையை என்னவென்று சொல்வது.

தற்போது சட்டத்தில் இது குறித்து விளக்கமான வழிகாட்டுதல் இல்லாததால், 10 வது முறையாக தண்டனை பெரும் ஒருவர், சிறை ரெமிஷன் அலுவலர்களிடம் கொஞ்சம் `வெயிட்டாக` கேட்டால் இந்த விதிமுறையை காட்டி தண்டனையை குறைத்து கொள்ளலாம்.

சரி. அரசு என்ன சட்டதிருத்தம் கொண்டுவர வேண்டும்.

1) நன்னடத்தையை காரணம் காட்டி தண்டனையை குறைப்பது என்பது முதல் குற்றத்திற்கு மட்டுமே பொருந்தும் என்று...

2) சட்ட நடைமுறைகளுக்காக ஒரு கைதி பல வழக்குகளில் ரிமாண்டில் இருப்பதாக கணக்கு காட்டப்பட்டாலும், தண்டனை என்று வரும்போது அவருக்கு முதலில் வரும் தீர்ப்பில் மட்டுமே அந்த ரிமாண்ட் காலம் கழிக்கப்படவேண்டும் என்று...

(ஒரு வேளை அவர் 5 வருடமாக ரிமாண்டில் இருந்து அவருக்கு முதலில் கிடைத்த தண்டனை 3 வருடமாக இருக்குமேயானால், மீதி 2 வருடத்தை அடுத்து வரும் தண்டனைகளில் கழித்து கொள்ளலாம் என்று...)

இந்த சீர்திருத்தங்களை அரசு விரைவில் கொண்டுவராத வரையில் தொடர் குற்றவாளிகளும், சிறை அலுவலர்களும் இந்த அபத்தமான விதிமுறைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு நாட்டை குற்றவாளிகளின் சொர்கமாக மாற்றிவிடுவார்கள். அதேசமயம் இந்த சீர்திருத்தங்கள் விரைவில் வந்தால் நம்நாட்டில் பாதிக்கும் மேற்பட்ட குற்றங்கள் குறைந்துவிடும்.

இந்த செல்போன் வழக்கு பதிவு செய்யப்படுவதில் இன்னொரு அபத்தமும் இருக்கிறது. அது அடுத்த பதிவில்...

4 comments:

அருண் பிரசாத் said...

நல்ல அனுபவ அலசல்...

சிவானந்தம் said...

நன்றி, அருண் பிரசாத்.

கண்ணுக்கு தெரியாமல் பல அபத்தங்கள் பல துறைகளில் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. சில அபத்தங்களையாவது நாம் வெளிப்படுத்தி, அது சரி செய்யப்பட்டால் சந்தோஷமே.

ஜீவன்சிவம் said...

சட்டங்கள் மாறாதவரை இங்கு எதுவும் மாறபோவதில்லை.

Indian said...

Keep going.

Post a Comment