!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, February 1, 2011

சிறைகளில் செல்போன், தேவையற்ற வழக்குகள்- part 3



அந்த அபத்தத்தை படிக்கும் முன் உங்களிடம் சில கேள்விகள்.

நீங்கள் காரில் போய்க் கொண்டிருக்கிறீர்கள். வழியில் ஒரு போலீஸ்காரரை யாரோ ரவுடிகள் வெட்டி குற்றுயிராய் போட்டுவிட்டு போய்விட்டார்கள். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனடியாக ஆம்புலன்சுக்கு தகவல் தந்து அது வரும்வரை காத்திருப்பீர்களா, அல்லது உங்கள் காரிலேயே அந்த போலீஸ்காரரை ஏற்றி உடனடியாக ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்வீர்களா?



என்ன... எங்கேயோ படிச்ச மாதிரி இருக்கா? அதேதான். ஒரு உயிரை காப்பாற்ற, அடிபட்டவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லவேண்டும். அதுதான் முக்கியம். உடனடியாக ஆம்புலன்ஸ் கிடைத்தால் நல்லது. இல்லையென்றால், நம்மிடம் இருக்கும் வாகனங்களையும்  (வாய்ப்புகளையே) அதற்கு பயன்படுத்தி கொள்ளலாம்.  ஆனால் ஒரு தமிழக அமைச்சருக்கு அந்த எண்ணம் வரவில்லை. இவர்கள் சட்டத்தை அப்படியே... அதாங்க... அப்படியே அமல்படுத்துபவர்கள். எனவே, `யாருக்காவது உதவி தேவையென்றால் ஆம்புலன்சுக்கு கால் பண்ணுங்கள்` என்று அரசு சொல்வதை இவர் வேதவாக்காக ஏற்று சொன்னதை செய்துவிட்டார். `ஒருவேளை உங்களிடம் வாகனம் இருந்தாலோ அல்லது ஆம்புலன்ஸ் வர தாமதமானாலோ, நீங்கள் உங்கள் வாகனத்தையும் பயன்படுத்திக் கொள்ளலாம்`  என்று தெளிவான வழிகாட்டுதலை அரசு வழங்கவில்லை. இது அரசின் தவறு. அந்த அமைச்சரின் தவறல்ல. திமுக அமைச்சர்கள் விதிமுறைகளை மீறி எதுவும் செய்யமாட்டார்கள் என்பதை 2  ஜி அலைகற்றை ஒதுக்கீட்டிலேயே நாம் பார்த்துவிட்டோம். அரசுக்கு எத்தனை லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டாலும் பரவாயில்லை, ஆனால் நமக்கு (முந்தைய) அரசு சில விதிமுறைகளை வகுத்திருக்கிறது.  நாம் அதை மீறக்கூடாது என்ற இவர்களின் கடமை உணர்ச்சியை பார்த்து நாடே அதிர்ந்து போயிருக்கிறது.

சரி, இதையே வேறுவிதமாக பாப்போம். உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று டாக்டரிடம் அப்பாயின்மென்ட் வாங்கியிருக்கிறீர்கள். ஆனால் அப்பாயின்மென்ட் வாங்கிய பிறகு உங்களுக்கு காலில் அடிபட்டுவிட்டது. இப்போது இதற்கென்று தனியாக அப்பாயின்மென்ட் வாங்குவீர்களா, அல்லது ஏற்கனவே டாக்டரிடம் போவது என்று முடிவாகிவிட்டது, அவரிடமே இதையும் காட்டி மருந்து வாங்கிவிடலாம் என்று நினைப்பீர்களா?

இந்த கேள்வியே உங்களுக்கு அபத்தமாக தெரியும். ஏனென்றால் அனைவரும் இரண்டாவதாக சொன்னதைத்தான் செய்வோம். தனிநபர்களை பொறுத்த வரையில் இது சாத்தியம். ஆனால், அரசு நிர்வாகம் என்று வரும்போது, எடுத்த முடிவு சரியானதுதான் என்றாலும், இது போல் முடிவெடுக்க முடியாது. `சூழ்நிலைகளை அனுசரித்து முடிவெடுங்கள்` என்று விதிமுறைகளை தளர்த்தினால், கீழ்மட்ட அதிகாரிகள் ஆளுக்கொரு காரணத்தை சொல்லி புகுந்து விளையாடிவிடுவார்கள். எனவே எதுவாயிருந்தாலும்  இவர்களுக்கு அரசின் வழிகாட்டுதல் அல்லது முன்னுதாரணம் கண்டிப்பாக தேவை.

இனி அந்த அபத்தத்தை பார்ப்போம். இப்போது சாதரணமாக ஒரு குற்றம் நடந்தால் என்ன செய்ய வேண்டும்? அந்த குற்றம் நடந்த இடம் எந்த காவல்நிலைய வரம்பில் வருகிறதோ அங்கே புகார் பதியப்பட்டு, அந்த காவல்நிலையம் எந்த நீதிமன்ற வரம்பில் வருகிறதோ அங்கே வழக்கு பதியப்படும். இதுதான் நடைமுறை. சரி, சிறையில் ஒரு குற்றம் (செல்போன் பிடிபட்டது) நடந்தால் என்ன செய்வது? இப்போதும் அதே நடைமுறைதான். அந்த சிறை எந்த காவல் நிலைய, நீதிமன்ற வரம்பில் வருகிறதோ அங்கேதான் வழக்கு பதிய வேண்டும்.

நடந்தது சட்டப்படி குற்றம் தானா, ஆம் என்றால் இதற்கு என்ன தண்டனை வழங்க வேண்டும் என்றெல்லாம் முடிவு செய்பவர் நீதிபதிகள்தான். அதே சமயம் குற்றம் சாட்டப்பட்டவர் தனது தரப்பு நியாயத்தை எடுத்துரைக்க அவருக்கு வழக்கறிஞர் தேவை. எனவேதான் இந்த நீதிமன்ற நடைமுறைகள். எல்லாம் சரிதான். ஆனால் இந்த கைதி மீதுதான் ஏற்கனவே வழக்கு இருக்கிறதே, அதற்காக இவர் ஒரு நீதிபதியிடம் போய்கொண்டிருக்கிறாரே. அவரும் சட்டம் தெரிந்தவர்தானே. அங்கயும் வழக்கறிஞர்கள் இருக்கிறார்களே. எனவே அவரே இந்த வழக்கையும் விசாரித்து தீர்ப்பு வழங்கினால் தேவையற்ற ஒரு வழக்கு மற்றும்  செலவுகள் மிச்சமாகுமே!  கேள்வி நியாயமானதுதான். ஆனால் அரசுத்துறையில் இப்படியெல்லாம் செய்ய முடியாது. இங்கே அரசு ஊழியர்கள் (சிறைத்துறையினர்)  விதிமுறையைத்தான் கடைபிடிக்க வேண்டும்.

இங்கே இதனால் அரசுக்கு என்ன நஷ்டம்?  வேறு ஒரு கோர்ட்டில் ஒரு புதிய வழக்கு பதிய மற்றும் அதை நடத்த ஏற்படும் நடைமுறை செலவுகள். இங்கே செலவுகள் எப்படி என்றெல்லாம் வகைப்படுத்த முடியாது. ஒரு வழக்கை நடத்துவது என்பது பலதுறைகள் சம்பந்தப்பட்டது. காவல்துறை, நீதித்துறை, சிறைத்துறை மற்றும் கைதிகளை கோர்ட்டுக்கு அழைத்து செல்லும் எஸ்கார்ட் போலீசார் என பலவிதமான துறைகளின் பலவிதமான  செலவுகள். எனவே கணக்கிடுவது சிரமம்.

இப்போது ஒரு நபர் கைது செய்யப்பட்டால் சட்டப்படி அவரை 15 நாள்தான்  தடுப்பு காவலில் வைக்க முடியும். நம் நாட்டில் ஒரு வழக்கை பதிந்து அதன் மீது தீர்ப்பு வர, அது சின்ன வழக்காக இருந்தாலும் குறைந்தது ஒரு வருடம் ஆகும். இந்த கைதியோ பெயில் இல்லாமல் சிறையிலேயே இருக்கிறார். எனவே இந்த ஒரு வருடத்திற்கு 15 நாட்களுக்கு ஒரு முறை இந்த கைதியை நீதிமன்றத்துக்கு அழைத்து சென்று காவல் நீட்டிப்பு வாங்க வேண்டும். ஒரு கைதியை கோர்ட்டுக்கு அழைத்துபோக, ஒரே ஒரு கைதியாய் இருந்தால் 2 அல்லது 3 காவலர்கள் தேவை  (+ போக்குவரத்து செலவு ). குரூப்பாக என்றால் மொத்தத்தில் கொஞ்சம் குறையும். எனவே இவர்களை கோர்ட்டுக்கு அழைத்துபோக மட்டும், கவனிக்கவும், இவர்களை கோர்ட்டுக்கு அழைத்துபோக மட்டும் தோராய செலவு வருடத்துக்கு 15000 ரூபாய் ஆகும். பிற செலவுகளையும் சேர்த்தால் இந்த கணக்கு எங்கே போய் முடியுமோ?  (இதையும் படிக்கவும் - அபராதத்தை அதிகரிக்கவும் ). அதே சமயம் இவ்வளவு செலவு செய்து ஒரு வழக்கை நடத்தி 6 மாத தண்டனையும் வாங்கி கொடுத்தால், இந்த குற்றவாளிகள் அபத்தமான இன்னொரு சட்ட விதிமுறையை பயன்படுத்தி தண்டனையிலிருந்து தப்பிவிடுகிறார்கள். எனவே எதற்கு இந்த அபத்தமான நடைமுறை?

சரி. அரசு என்ன செய்யவேண்டும்.

`சிறைக்குள் கொலை` போன்ற பெரிய விஷயங்களை தவிர்த்து, செல்போன் வைத்திருந்தது போன்ற சிறு குற்றங்களை, வழக்கு என்றில்லாமல் ஒரு அறிக்கையாக, அந்த கைதி எந்த கோர்ட்டுக்கு போகிறாரோ அந்த நீதிபதியிடமே சிறை அதிகாரிகள் அளித்து விடலாம். நீதிபதிக்கு ஏதாவது சந்தேகம் எழும் பட்சத்தில், சிறை அதிகாரிகளை, காவலர்களை அழைத்து விசாரித்து, குற்றம் ஊர்ஜிதமானால் அவரே தண்டனையையும் வழங்கி விடலாம்.

 அதேபோல் சிறைக்குள்ளும் சில கைதிகள் செல்போன் பயன்படுத்துதல், கஞ்சா கடத்தல் போன்ற செயல்களில் ஈடுபட்டு, அது சம்பந்தப்பட்ட நீதிபதிக்கு அறிக்கையாக வந்தால், அந்த கைதியின் மீதிருக்கும் பிற வழக்குகளில் (வாய்பிருந்தாலும்) கடைசிவரை பெயில் மறுக்கப்படும் என்ற எச்சரிக்கையும் தேவை. (இது கண்டிப்பாக பலனளிக்கும்.)

இங்கே இன்னுமொரு நடைமுறை சிக்கல் இருக்கிறது. தொடர் குற்றவாளிகள் பெரும்பாலும் பெரிய குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள். இவர்களுடைய வழக்குகள் செஷன்ஸ் கோர்ட்டில்தான் நடக்கும். ஆனால் செல்போன் வைத்திருத்தல் போன்ற (6 மாத தண்டனை அளிக்க கூடிய) சிறிய குற்றங்கள் மாஜிஸ்டிரேட் அளவில் விசாரிக்கப்படவேண்டியவை. எனவே சிறைக்குள் நடக்கும் குற்றங்களை நிர்வாக வசதிக்காக எந்த ஒரு நீதிபதியும் விசாரிக்கலாம் என்றும்  சில சட்ட திருத்தங்கள் தேவை         

இங்கே சிறைத்துறையில் இருக்கும் சில அபத்தங்களை, அதுவும் நான் ஒரு சிறைவாசியாக இருந்ததால் தெரிந்து கொண்டவைகளை இங்கே தெரியப்படுத்தி இருக்கிறேன். இதுபோன்ற பல அபத்தங்களால் பல துறைகளில் மக்களின் வரிப்பணம் வீனாகிகொண்டிருக்கும்.

அபத்தமான சட்டங்களை யாரும் வேண்டுமென்றே உருவாக்குவ தில்லை. இப்படியெல்லாம் அபத்தங்கள் வரும் என்று அவர்கள் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். எனவே சட்டத்தை உருவாக்கியவர்களை நாம் குறை சொல்லவேண்டாம். அவ்வப்போது இது போன்ற அபத்தங்களை விரைவாக கண்டறிந்து அவற்றை உடனடியாக சரி செய்வதுதான் இன்றைய ஆட்சியாளர்களின் கடமை.
   
  

0 comments:

Post a Comment