!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Sunday, February 6, 2011

சிறைக்குள் செல்போன்: அண்ணே.. இதை அனுப்பாதீங்கன்னே!


சிறைக்குள் கைதிகள் அதிக பயமில்லாமல் செல்போனை பயன்படுத்த காரணம் என்ன என்பதை நான் புரிந்து கொண்டவுடன், சிறைக்குள் போனின் அவசியத்தையும் மற்றும் சிறைக்குள் நடக்கும் குற்றங்களுக்குக்கான தண்டனையில் தேவைப்படும் சீர்திருத்தங்களையும் சுருக்கமாக எழுதி தினமலர் `இது உங்கள் இடம்` பகுதிக்கு அனுப்ப நினைத்தேன்.

எனது கடிதங்கள் தினமலருக்கு போகாது என்று தெரியும். இருந்தாலும், சிறையில் சும்மா இருக்க முடியாதல்லவா. எனவே இதை ஒரு பயிற்சியாக அவ்வப்போது எனது கடிதங்களை அனுப்பிக் கொண்டிருந்தேன். அதேசமயம் என் கையெழுத்து ரொம்ப மோசம் என்பதால், எனது கடிதங்களை சிறை நண்பர் (போதை கடத்தல்) ஒருவர் எழுதித்தருவார். அவருடைய கையெழுத்து அழகாக இருக்கும்.

எனவே அந்த நண்பரை அழைத்து இந்த கடிதத்தையும் எழுதித்தரச் சொன்னேன். இதை படித்த அந்த நண்பர் அதிர்ச்சியாகி, ` அண்ணே.. இதை அனுப்பாதீங்கன்னே!` என்றார்.

இந்த போதைப்பொருள் கடத்தலில் உள்ளே வந்த கைதிகளில் பலர் ஐந்து வருடத்திற்கும் மேலாக உள்ளே இருக்கிறார்கள். ஐந்து வருடத்திற்கும் மேலாக விசாரணை சிறைவாசியாக இருப்பவர்களுக்கு பெயில் கிடைக்கும் என்று யாரோ சொல்லிவிட... இப்போது அனைவரும் அந்த எதிர்பார்ப்பில். நான் சொன்ன சீர்திருத்தங்கள் அமல்படுத்தப்பட்டால், இவர்கள் அனைவருக்கும் பாதிப்பு. நான் ஒரு கடிதம் எழுதி அது பிரசுரமாகி உடனடியாக எந்த மாற்றமும் வந்துவிடப் போவதில்லை. இருந்தாலும் அவருக்கு ஒரு பயம்.

`` ஏற்கனவே நாங்க கோர்ட்ல பெயில் கேட்டிருக்கோம். இப்ப எங்க ஜட்ஜே இந்த கேசையும் விசரிக்க்கலாம்ன்னா, நிச்சயமா  எங்களுக்கு பெயில் கொடுக்கமாட்டார் .  வேணாம்ன்னே, இதை அனுப்பாதீங்க``

வேறு வழி. அந்த நண்பரின் பேச்சை தட்ட முடியவில்லை. எனவே அந்த கடிதத்தை நான் அனுப்பவில்லை.

அந்த கடிதத்தில் நான் எழுதியிருந்ததைதான் விளக்கமான பதிவாக இங்கே பதிவிட்டேன்.


எங்கெங்கு காணினும் செல்போனடா! 

இந்த கைதியை வேறு ஒரு மாநிலத்தில் கைது செய்து புழலுக்கு கொண்டு வந்தார்கள். தீடிரென்று நோட்டீஸ் எல்லாம் கொடுக்காமல் கைது செய்தால் எப்படி? அவருக்கு வெளியே  உடனடியாக சொல்லி `சரி` செய்ய வேண்டிய பல விஷயங்கள் இருந்திருக்கும் போலிருக்கிறது. விளைவு. வந்த மறுநாளே போன் பேசினார்.

இங்கே இன்னொரு விஷயத்தை நான் சொல்லியாக வேண்டும். புது ஆள் என்றால் எல்லோருக்கும் பிடிக்கும். குறிப்பாக வியாபாரிகளுக்கும், ஆட்டோகாரர்களுக்கும்  பிடிக்கும். ஏனென்றால் புதியவர்கள் அதிகம் பேரம் பேச மாட்டார்கள். கேட்டகாசை கொடுப்பார்கள். முக்கியமாக கடனும் வைக்கமாட்டார்கள்.

வந்தவரோ வசதியான புதுநபர். எனவே, உள்ளே இருந்த ஒரு பூத் ஓனர் இந்த ஆளுக்கு மறுநாளே போனை கொடுத்துவிட்டார். இவர் யார்யாருக்கு பேசினாரோ, ஆனால் இவர் போன் பேசிய ஒரு நம்பர் அங்கே கண்காணிக்கப்படுகிறது போலிருக்கிறது. `என்னடா இது, இப்பத்தான் இந்த ஆள புடிச்சி உள்ள போட்டோம். அதுக்குள்ள எப்படி போன் பண்றான்`  என்று சந்தேகமடைந்த அங்குள்ள அதிகாரிகள் இங்கே கேள்வி எழுப்ப... வந்தது ரெய்ட்.

ரெய்டில் சிக்கியது எலிவால்தான். ஆனால் கிடைத்த `மரியாதை`யில், அது இன்னொரு புலிவாலையும் இழுத்துவிட்டது. சிறைக்குள்ளிருந்து போன், அதுவும் வெளிமாநில அதிகாரிகள் இதைப்பற்றி விசாரித்தால் அசிங்கம்தானே. ஏதாவது நடவடிக்கை எடுத்தாக வேண்டுமே. நடவடிக்கை எடுத்தார்கள். தப்பு செய்தவர்கள் மீதும் கூடவே தப்பு செய்யாதவர்கள் மீதும்.

கர்நாடக முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி தினகரன் மீது புகார் வந்தபோது, அப்போதைய தலைமை நீதிபதி பாலகிருஷ்ணன் அவர் மீது நடவடிக்கை எடுத்தாரா? இல்லை. காரணம், அவர் மீது நடவடிக்கை எடுத்தால் அவர் வாய் சும்மா இருக்குமா? பல வில்லங்கங்களை வெளியே கொட்டுவார். ஆனால் புகார் வந்துவிட்டதே. என்ன செய்வது?  எனவே நடவடிக்கையும் எடுக்கவேண்டும் அதே சமயம் அவரை பகைத்துகொள்ளவும் கூடாது. எனவே என்ன செய்தார்கள் என்பதை நாம் பார்த்தோம். கிட்டத்தட்ட சிறையிலும் அதே நிலைமைதான். கையோடு மாட்டியவர்கள், பனிஷ்மென்ட் பிளாக்குக்கு மாற்றப்பட்டார்கள். இருந்தாலும் மாட்டாத பலர் உள்ளே இருக்கிறார்களே அவர்களுக்கு என்ன தண்டனை தருவது? செல்போன் பயன்பாட்டையும் எப்படித் தடுப்பது? அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால், அவர்கள் ஒட்டுமொத்தமாக படி (சாப்பாடு) வாங்காமல் அடம் பிடிப்பார்கள். `உயர் அதிகாரிகளை, நீதிபதிகளை வரச்சொல்லுங்கள். செல்போன் உள்ளே எப்படி வருகிறது என்று நாங்கள் சொல்கிறோம்` என்று வசனம் பேசுவார்கள். எனவே இந்த பழைய கைதிகளை பகைத்துக்கொள்ள முடியாது. கடைசியில் பாதிக்கப்பட்டது நாங்கள்தான். அதாவது புதுக்கைதிகள்.

நான் இருந்த பிளாக்கிலிருந்து சிறு குற்ற வழக்குகளில் வந்த கைதிகளை வேறு பிளாக்கு மாற்றும்படி உத்தரவு வந்தது. பஞ்சும் நெருப்பும் பக்கத்தில் இருப்பதால்தானே பற்றிகொள்கிறது. அதாவது புதுக்கைதிகளை இந்த பிளாக்குக்கு அனுப்புவதால்தானே அவர்களிடம் போனை கொடுக்கிறீர்கள். அவர்கள் இல்லையென்றால்... இதுதான் அவர்களின் லாஜிக்.

மேலதிகாரிகள் வந்திருந்தால் நான் தப்பியிருப்பேன். ஆனால் இந்த இடமாற்றலை செய்தது கீழ்நிலைக் காவலர்கள் என்பதால் எனக்கும் சனிப்பெயர்ச்சி. மீண்டும் நான் ஏற்கனவே இருந்த பிளாக்குக்கே போனேன். ஆனால் வேறு செல். இருந்தாலும் அந்த செல் ரைட்டர் (நிர்வாகி ) ஏற்கனேவே தெரிந்தவர்தான். என்னை பார்த்ததும், `அண்ணே, இன்னுமா நீங்க பெயில்ல போவல?  என்னதான் கோவம் இருந்தாலும் இவ்வளவு நாளாவா பெயில் வேண்டாம்னு உள்ள இருக்கீங்க!` என்று ஆச்சரியமாக கேட்டார். என் கதையாய் அரைகுறையாய் கேட்டிருப்பார் போலிருக்கிறது. அவரிடம் சிரித்து மழுப்பி சமாளித்தாலும்,  இந்த பிளாக்கில் எப்படி இருக்கமுடியும் என்ற கவலையில் நான் மூழ்கிப்போனேன். என்கூட பிளாக் மாறி வந்தவர் என்னிடம், `உங்களுக்கு ஒன்னும் பிரச்சினை இல்லை. நாளைக்கு நீங்க சூப்ரிடென்ட்டை போய் பார்த்தால் உங்கள விட்டுருவாங்க. நான்தான் இங்க இருந்து அவஸ்தைபடனும்` என்று புலம்பிகொண்டிருந்தார்.

எனக்கும் அந்த நம்பிக்கை இருந்தது. காரணம், மேலதிகாரிகள் என்னை அழைத்து என்னைப் பற்றி, என் வழக்கைப்பற்றி ஏற்கனவே விசாரித்துவிட்டார்கள்.எனவே குற்றவாளிகள் லிஸ்டில் என்னை சேர்க்க வாய்ப்பில்லை என்பதால் அந்த நம்பிக்கை.

இங்கே ஜெயில் என்றால் சாப்பாடுமட்டும்தான் ஒரேமாதிரி இருக்கும் ஆனால் பிளாக்குகளின் வசதி கொஞ்சம் மாறி இருக்கும். தொடர்குற்றவாளிகள் மற்றும் கீழ்மட்ட குற்றவாளிகள் அடிக்கடி சண்டை போட்டுகொள்வார்கள். எனவே இவர்களுக்கான பிளாக்கினுள் லைட், ஃபேன் என்று எதுவும் இருக்காது. ஒரே கஞ்சா, பீடிபுகையாகதான் இருக்கும். உங்கள் பையில் எதையும் வைத்துவிட்டு நிம்மதியாக தூங்கமுடியாது. ஒருநாள் இந்த பிளாக்கில் இருந்தால் தமிழில் இருக்கும் அத்தனை கெட்ட வார்த்தைகளையும் நீங்கள் கற்றுக்கொள்ளலாம். அதைவிட மோசம் காலைகடன்களை கழிப்பது. பாத்ரூம் பக்கம் எட்டி பார்க்கவே முடியாது.

நான் இருந்த பிளாக்கில் இருப்பவர்களும் பல வருடங்களாக சிறையில் இருந்தாலும், இவர்கள் மிடில் கிளாஸ் மற்றும் வசதியானவர்கள் என்பதால் மேலே சொன்ன எந்த தலைவலியும் இங்கே கிடையாது. வார்த்தைகள் நாகரீகமாக இருக்கும். நான் இந்த பிளாக்கு வந்து சேர்ந்ததே நல்லது செய்தால் நல்லது நடக்கும் என்ற தியரியில்தான். நான் கடலூரில் சிறிய அளவில் நடத்திவந்த லைப்ரரியை மூடிவிட்டதால், என்னிடம் கொஞ்சம் புத்தகங்கள் மீதி இருந்தது. அதில் கொஞ்சம் புத்தகங்களை நான் சிறை நூலகத்துக்கு வழங்க, சிறை (நூலக) காவலருக்கு உதவியாக இருந்தவர் எனக்கு நண்பரானார். இருவரும் புத்தகப்புழு என்பதால் நட்பு பலப்பட்டு, அவர் இருந்த செல்லுக்கே என்னையும் அழைத்துக் கொண்டார். எனவே இங்கே கொஞ்சம் நிம்மதியாக இருந்தேன். கடைசியில் அந்த நிம்மதிக்கு தான் ஆபத்து வந்தது.

அன்று இரவு நான் சென்ற அந்த செல்லில் எண்ணிக்கை அதிகமாக இருந்ததால், ஒரே பீடி புகையும் கஞ்சா புகையுமாக இருந்தது. தூங்க முடியவில்லை. மறுநாள் காலையில் அந்த செல்வாசி ஒருவர் சொன்னார். `நம்ம செல்லுல ஆள் கம்மிதான்னே. நேத்து போன் பேசனும்ன்னு 3 பேர் எக்ஸ்ட்ரா வந்துட்டாங்க. அதுதான் கொஞ்சம் சிரமமாயிட்டுது. கடைசியில புதுசா நீங்களெல்லாம் வரவே பயந்துக்குனு யாரும் பேசல`. நான் போன் பேசாவிட்டாலும் இந்த தலைவலி நம்மை விடாது போலிருக்கிறது என்று நினைத்துக்கொண்டேன்.

அந்த பிளாக் பராமரிப்பு மிக மோசமாக இருந்தது. பாத்ரூம் பக்கம் போக முடியவில்லை. எனவே 10  மணி அளவில் லைப்ரரி திறக்க அங்கே போய் `ரிலாக்ஸ்` ஆனேன். அந்த வேலை முடிந்ததும் பேப்பரை புரட்டினால் தினமலரில் எனது `குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதா` கடிதம். சிறை தபாலில் போட்டால் இந்த கடிதம் போகாது என்பதால், நேரடியாக சூப்ரிடென்டிடம் கொடுத்திருந்தேன். எனவே அது போயிருக்கிறது.    

சாயங்காலம் நான் அவரை போய் பார்க்க... அவர், `உங்க கடிதத்தை நான் அப்போதே அனுப்பிவிட்டேனே` என்றார். அது பிரசுரமானதையும் சொல்லி அப்படியே எனக்கு ஏற்பட்ட சனிபெயர்ச்சியையும் சொல்ல... அந்த பிரச்சினையும் தீர்ந்தது. மறுபடியும் அந்த அமைதியான பிளாக்குக்கே போய் சேர்ந்தேன். அதன் பின் உண்மையிலேயே ரிலாக்ஸான மூடில் லாக்கப்புக்கு (6 மணி) முன் பாத்ரூம் போய்வருவோம் என்று போனால், அங்கே ஒருவன் செல்போன் பேசிக்கொண்டிருந்தான். கடுங்கோபத்தில், `நேத்து நம்ம பிளாக்குல எரிமலையே வெடிச்சி இன்னும் அந்த சூடே அடங்கல,     மறுபடியும் ஃபோனா?` என்று நான் கேட்க...

`அட நீங்க வேற... இதெல்லாம் நாங்க அடிக்கடி பாக்கறதுதான். நான் வீட்டுக்குத்தானே பேசறேன்` என்று சமாளித்தான். சிறை அதிகாரிகள் எச்சரித்துவிட்டு போனதை இவர்கள் ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை.

இந்த பதிவுகளில் குறிப்பிடப்பட்டிருக்கும் அபத்தமான சட்டங்கள் திருத்தப்பட்டு, செல்போன் வைத்திருந்தால் தண்டனை உறுதி, அதுவும் அந்த தண்டனையை இந்த ரிமாண்டில் கழிக்க முடியாது என்ற சூழ்நிலை வரும்வரை, சிறைகளில் செல்போன் புழக்கத்தை தடுக்கமுடியாது. 

0 comments:

Post a Comment