!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Tuesday, March 1, 2011

சிறை அனுபவம்: (ஜீவி செய்தி) சிறையில் ராசா எப்படி இருக்கிறார் (இருப்பார்)?

ஆ.ராசாவை, அவரது மனைவி பரமேஸ்வரி பார்த்து சொன்ன செண்டிமெண்ட் வார்த்தைகளை கேட்டு ராசா கண்கலங்க, பரமேஸ்வரியும் அழுதுவிட்டாராம். கொசுக்கடியால் ஆரம்ப நாட்களில் தூங்க முடியாமல் தவித்தாராம் ஆ. ராசா. குளிர்காலம் என்பதால், மற்ற கைதிகளுக்கு வழங்கப்படுவதைப் போலவே ராசாவுக்கும் ஏழு போர்வைகளை ஜெயில் நிர்வாகம் வழங்கியது. அவற்றில் இரண்டை கீழே விரித்தும் இரண்டை தன் உடலில் போர்த்திக்கொண்டும் தூங்குகிறாராம். ஒன்றை தலைக்கு வைத்துக்கொள்கிறார்.

ஆ. ராசா அடைக்கப்பட்டுள்ள அறையில் ஜன்னல் கிடையாது. 15 -க்கு 10 என்கிற அளவுள்ளது. காலையிலும் மாலையிலும் ரோல்கால் நடக்கிறது. அப்போது மற்ற கைதிகளுடன் சேர்ந்து வரிசையில் நிற்கிறார். அந்த சமயங்களில் ஆர்.கே. சந்தோலியா, சித்தார்த் பெஹுராவுடன் பேசுகிறார். ஆங்கிலப் பத்திரிக்கைகளை படிக்கிறார். தமிழ் பத்திரிகை கேட்டிருக்கிறாராம். அவரது அறையை சுற்றி மட்டும் வாக்கிங் போக அனுமதிக்கிறார்களாம்.

......வீட்டில் இருந்து இரண்டு வேளை உணவுக்கு அனுமதி இருந்தாலும், ரொட்டி, டால், ராஜ்மா போன்ற உணவுகளை சாப்பிட வேண்டி இருப்பதால், வயிறு கோளாறால் அவதிப்படுகிறாராம். கடந்த 24 -ம் தேதியன்று கூட ஜெயிலில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்தாராம். ரூ. 500 -க்கு கேண்டீன் டோக்கன் வாங்கி வைத்திருக்கிறார். அதை கொடுத்து ஸ்நாக்ஸ், டீ வாங்கி சாப்பிடுகிறாராம். ஆ.ராசா வெளியில் வந்துவிட்டு செல்லுக்குள் போகும்போது வெறும் கையால் சோதனை போடாமல் மிஷின் வைத்து சோதிக்க வேண்டும்` என்று அவசர உத்தரவு போடப்பட்டு இருக்கிறதாம்.


இது ஜு வி யில் வந்த துண்டு செய்தி.

**********************************************
தமிழ்நாட்டில் நடுநிலைமையான அரசியல் பத்திரிகை என்று ஓரளவு சொல்லக் கூடிய ஜுவியில் இந்த செய்தியை படித்தவுடன் முதலில் எனக்கு சிரிப்புதான் வந்தது. அதிலும் `ரூ. 500 -க்கு கேண்டீன் டோக்கன் வாங்கி வைத்திருக்கிறார். அதை கொடுத்து ஸ்நாக்ஸ், டீ வாங்கி சாப்பிடுகிறாராம்` என்ற செய்தியை படித்தவுடன் எனக்கு அதிர்ச்சி + ஆச்சரியம்.

சிறை அதிகாரிகள் மற்றும் சிலர் இது போன்ற செய்தியை வேண்டுமென்றே பரப்பலாம். ஆனால் ஆசிரியர் குழுவினர் இதெல்லாம் டுபாக்கூர் செய்தி என்று புரிந்து கொள்ள வேண்டாமா?  ஒரு முன்னணி பத்திரிகையில் இதுபோன்ற செய்தி வருவதால் மக்கள் இதை உண்மை என்று நம்புவதற்கே வாய்ப்பு அதிகம் என்பதால் கொஞ்சம் ஆராய்ந்து எழுதவேண்டாம்! ஒருவேளை ஜூவிக்கு உண்மையிலேயே சிறையைபற்றி ஒண்ணுமே தெரியாதா? சரி. எனது சிறை அனுபவத்திலிருந்து சில விஷயங்களை சொல்கிறேன்,  நீங்களே தெரிந்து கொள்ளுங்கள்.

நான் இருந்தது புழல் (2) சிறையில் என்றாலும் தமிழ்நாட்டில் மற்ற சிறைகள் மற்றும் மற்ற மாநிலங்களில் சிறை எப்படி இருக்கும் என்ற தகவல்கள் ஓரளவு என் காதிலும் விழுந்தது. ஒரு கைதி, `புழல் வேஸ்ட்ன்னே` என்று சொன்னவர், (சில ஊரை குறிப்பிட்டு) அந்த ஜெயில்தான்னே சூப்பர். அங்கே யாரும் எதுவும் கண்டுக்கமாட்டாங்க! எல்லாமே கிடைக்கும்` என்றார். அவர் சொன்ன ஊரில் ஓன்று எனக்கு நன்ன்ன்ன்கு அறிமுகமான ஊர்.

பெங்களூரிலிருந்து ஒரு கைதி புழலுக்கு வந்தார். அவர் சொன்னதை பார்த்தால் பெங்களூர் ஜெயிலுக்குள் ஒரு பர்மா பஜாரே இருக்கும் போலிருக்கிறது. `கையில பணம் இருந்தால் போதும். உங்களுக்கு அது ஜெயில் மாதிரியே தெரியாது` என்றார். அவர் சொன்னதை கேட்டு பெங்களூர் ஜெயிலுக்கு ஒருதடவையாவது போய்ட்டு வரணும்ங்கற ஆசையே எனக்கு வந்தது.

மும்பையிலிருந்து வந்த ஒரு கைதிக்கு புழல் பிடித்துபோய் விட்டது. காரணம், மும்பை சிறைகளில் இட நெருக்கடி அதிகம் போலிருக்கிறது. ரெண்டு வருஷம் ஆனாலும் இங்கியே இருந்து கேசை முடிக்கணும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். இவர் வடமாநிலத்தவர் என்பதால் இந்திக்காரர்களிடம் சேர்ந்துவிட்டதால் தப்பித்தார். வேறு பிளாக்குக்கு போயிருந்தால் நொந்து நூலாகியிருப்பார்.     

ஆனால், டெல்லி சிறைபற்றி எதுவும் நான் தெரிந்துகொள்ளவில்லை. இருந்தாலும் ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல், எனது புழல் அனுபவத்தை வைத்து ஒரு விஷயத்தை நான் உறுதியாக சொல்லுவேன். உங்களிடம் பணமும் அதிகாரமும் இருந்தால், இந்தியாவைப் பொறுத்த வரையில், சிறை உங்களுக்கு ஒரு பிரச்சினையே இல்லை. எனக்கு தெரிந்த வரையில் சிறையில் டோக்கன் வாங்குபவர்கள் மிகமிக சாதாரனக்கைதிகள். மற்றவர்கள் எல்லாம் `காந்தியையே` அதிகம் பயன்படுத்துவார்கள். அதிலும் சுமாரான விஐபி க்களே சிறைக் கேண்டீன் டீயை குடிக்காமல், தேவையான `அனைத்தும்` ஸ்பெஷலாக வாங்கிக் கொள்ளும் நிலையில், `ஆ.ராசா 500 ரூபாய்க்கு டோக்கன் வாங்கி வச்சிருக்காராம். அதை வைத்துதான் டீ வாங்கி சாப்பிடறார்`ன்னு ஒரு செய்தி. என்னத்த சொல்றது!        

இந்திய சிறைகளில் உள்ள பிரச்சினை என்னவென்றால், சிறைக்கு வரும் விஷயம் தெரிந்த வி ஐ பி கள் தனித்த உயர் பாதுக்காப்பு தொகுதிகளில் அடைக்கப்படுவதால், உண்மையான ஜெயிலை இவர்கள் பார்பதேயில்லை. அப்படியும் இவர்கள் சில சலுகைகளை அனுபவித்தால், அதை வெளியே சொல்ல முடியாது. தொடர் குற்றவாளிகள் இதையெல்லாம் வெளியே சொல்லமாட்டார்கள். அப்படி சொல்லி ஜெயில் உண்மையான ஜெயிலாக மாறிவிட்டால், நஷ்டம் அவர்களுக்குத்தான். மற்ற சாதாரண அப்பாவி கைதிகளுக்கு சிறை நடத்தப்படும் விதம் ஓரளவு தெரிய வரும். ஆனால் அவர்களுக்கு சமூக அக்கறை இருக்காது அல்லது  நமக்கெதுக்கு வம்பு என்று ஒதுங்கிவிடுகிறார்கள். எனவே, சிறை நடத்தப்படும் விதம், அங்கே கிடைக்கும் சலுகைகள் பற்றி மக்களுக்கென்ன, ஒரு முன்னணி பத்திரிக்கைகே தெரியவில்லை எனும்போது, இந்தியாவில் குற்றச் செயல்களின் எண்ணிக்கையும், ஊழலும் அதிகரித்து வருவதில் ஆச்சரியமேதுமில்லை .

செங்கொடி ஏந்தும் தோழர்கள் இருவர் தமிழகத்தின் முக்கிய வாரிசை எதிர்த்து போஸ்டர் ஒட்டி கைதாகி உள்ளே வந்தார்கள். பெரிய இடத்து விஷயம் என்பதால் உடனடியாக பெயில் கிடைக்காமல் ஒரு மாதம் உள்ளே இருந்துவிட்டு `பொதுச் சேவை`யும் செய்து மாமூலும் கொடுத்து இருந்துவிட்டு போனார்கள். நான் அவர்களிடம் உள்ளே புதுக்கைதிகளை பழைய கைதிகள் வசம் ஒப்படைப்பதால், அவர்களை மிருகம் போல் வேலை வாங்குவது மட்டுமின்றி, பல நேரங்களில் மிரட்டி பணம் பறிக்கும் கொடுமையையும் சொன்னேன். ஒரு மாதம் உள்ளே இருந்ததில் அவர்களே இதை தெரிந்து கொண்டார்கள். அவ்வளவு ஏன், அவர்களே இதில் பாதிக்கப்பட்டவர்கள்தான். புரட்சிப் பாதையில் நம்பிக்கையுள்ள தைரியமான தோழர்கள் என்பதால் `மேடையில் இதைப்பற்றி பேசி, மக்களுக்கு இவையெல்லாம் தெரிந்தால்தான் விமோசனம் பிறக்கும்` என்று நான் அவர்களிடம் சொன்னேன். அவர்கள் பேசினார்களா இல்லையா என்பது எனக்கு தெரியாது. ஆனால் அவர்களிடம் `இதைப்பற்றி துணிச்சலாக பேசுங்கள்` என்று சொன்னவன் நான். தற்போது வெளியே வந்துவிட்டதால், நானும் அதையேதானே செய்யவேண்டும். என்னால் மேடை ஏறி பேச முடியாவிட்டாலும், முடிந்த அளவு பதிவுகளாவது போடுவோம் என்றுதான் போட்டுக்கொண்டிருக்கிறேன்.

சிறைக்கு சென்ற முதல் மூன்று மாதம் என்னுடைய பிரச்சினைகளையே மறக்கும் அளவுக்கு சிறை பற்றிய சிந்தனையில் மூழ்கிப்போனேன். சிறைக்கு போன சில நாட்களிலேயே என்னை சமாதானப்படுத்தி பெயிலில் வரவழைப்பதற்கு உறவினர்கள் ஒரு சிறைக்காவலரை அனுப்பிவைக்க, அவர் என் கதையை அந்த பிளாக் ரைட்டரிடம் சொல்லிவிட்டதால்,  என்னை யாரும் எந்த தொந்தரவும் செய்யவில்லை. மாமுல் மட்டும் கொடுத்தால் போதும். இந்த மாமுலும் கொஞ்ச நாள்தான். 3 மாதத்தில் நானும் பழய கைதியாகிவிட்ட உடன், என்னிடம் கேட்பதில்லை. ஆனால் மற்ற அப்பாவி கைதிகளை இவர்கள் டார்ச்சர் செய்த விதமும், முறையும்தான் என்னால் ஜீரணிக்கவும்  முடியவில்லை, தடுக்கவும் முடியவில்லை. முதலில் நம்முடைய பிரச்சினையை தீர்த்துக்கொண்டு வெற்றிகரமாக வெளியே வருவோம், அப்புறம் இந்த அநியாயத்துக்கு முடிவு கட்டுவோம் என்று அமைதியாக பல விஷயங்களை கவனிக்க ஆரம்பித்தேன். ஆனால் விதி....

நான் விடுதலை ஆனவுடன், இதை பற்றி அமைச்சர்களுக்கு பெட்டிஷன் அனுப்பவேண்டும் என்று நினைத்தேன்.  ஊழலை ஊக்குவிப்பதே அவர்கள்தான் என்ற நிலையில் நான் இதை எழுதி அனுப்பி என்ன பயன்? பத்திரிக்கைகளில் எழுதி, மக்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் தெரிய வந்ததால் அதன் மூலம் அரசியல்வாதிகளுக்கு நிர்பந்தம் ஏற்பட்டு மாற்றங்கள் வரலாம். ஆனால் பிரபலமான பத்திரிக்கைகள் இது போன்ற விஷயங்களை ஆதாரமில்லாமல் தொடமாட்டார்கள். ஜெயிலுக்குள்ளே நடக்கும் இது போன்ற விஷயங்களுக்கு எப்படி ஆதாரத்தை தருவது? நான் எனது சொந்த பிரச்சினையிலிருந்து தப்பிக்க ஜெயிலுக்கு போனால் அங்கே இவ்வளவு ஊழலும், அராஜகமும் இருக்குமென்றோ, சிறை சில அப்பாவி கைதிகளுக்கு நரகமாகவும், பணம் படைத்தோருக்கு சொர்க்கமாகவும் இருக்குமென்றோ நான் கனவிலும் நினைக்கவில்லை.

விளைவுகள் குறித்த அச்சமும், உயிர் பயமும்தான் பலரை பேச விடாமல் தடுக்கிறது. எனக்கு அந்த கவலை இல்லை. மரணமே என்னை தேடி வந்தாலும் `ஏன் லேட்டு`ன்னுதான் கேட்பேனே தவிர `ஏன் வந்தாய்` என்று கேட்க மாட்டேன். எனவே தான் இந்த துணிச்சலான பதிவுகள்.

பத்திரிக்கைகளை தொடர்ந்து படிப்பவர்கள் ஒன்றை புரிந்து கொள்வார்கள். அரசியலில் பல தகவல்களை நம்பத்தகுந்த வட்டாரங்கள் தரும். சில விஷயங்களை நாமே அனுமானித்து கொள்ளவேண்டியிருக்கும். எனவே வெளியிடப்படும் சில விஷயங்கள் பொய்யாகிப்போகும் வாய்பிருக்கிறது. ஆனால் இந்த செய்தி என்னை ரொம்பவே டென்ஷனாக்கி விட்டது. மேம்போக்கான பார்வையிலேயே இது நம்பத்தகுந்த செய்தி அல்ல என்பதை தெரிந்து கொள்ளலாம். எனவே ஈழதமிழர்களுக்கான எனது பதிலை (பதிவை) தள்ளிவைத்து விட்டு இந்த பதிவுக்கு வந்தேன்.

ஜுவி வெளியிடும் செய்திகள் ஓரளவு நம்பகத்தன்மை உடையவை என்று நான் நம்பிகொண்டிருக்கிறேன். அந்த நம்பிக்கையை ஜூவி தான் காப்பாற்ற வேண்டும்.


6 comments:

நிகழ்காலத்தில்... said...

//மரணமே என்னை தேடி வந்தாலும் `ஏன் லேட்டு`ன்னுதான் கேட்பேனே தவிர `ஏன் வந்தாய்` என்று கேட்க மாட்டேன். //

இந்தத் துணிச்சல் எழுத்தில் நன்கு தெரிகிறது. பாராட்டுகிறேன் நண்பரே..

சீ.பிரபாகரன் said...

சிறந்த பதிவு. காவல்துறை, சிறைத்துறை போன்றவற்றை எதிர்கொண்டவர்களுக்கே அதனடைய உண்மையான முகம் தெரியும். இவைகள் தொடர்பாக மக்களிடம் காட்டப்படும் பிம்பங்கள் ஒரு மாயை மட்டும்தான்.

மனிதாபிமானத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இந்தத் துறைகளை சீர்திருத்த தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். முயற்சி செய்வோம்....

சிவா said...

@நிகழ்காலத்தில்

////இந்தத் துணிச்சல் எழுத்தில் நன்கு தெரிகிறது. பாராட்டுகிறேன் நண்பரே.///

நன்றி, (நிகழ்காலத்தில்)சிவா.

துணிச்சல் எனக்கு இயற்கையாக வரவில்லை. பலர் பயந்து உண்மையை பேச தயங்குவதால், அதையெல்லாம் பார்த்து வெறுத்துப் போய் வந்தது.

சிவா said...

@சீ.பிரபாகரன்

////மனிதாபிமானத்தின் மீது நம்பிக்கை உள்ளவர்கள் இந்தத் துறைகளை சீர்திருத்த தொடர்ந்து முயற்சிக்க வேண்டும். முயற்சி செய்வோம்...///

நன்றி, பிரபாகரன். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த பதிவுகள். முடிந்த வரை இந்த நாட்டை சீர்திருத்த முயற்சி செய்வோம்.

நிலவு said...

http://powrnamy.blogspot.com/2011/03/blog-post.html

பட்டது போதுமா ! பழ நெடுமாறா !

Anonymous said...

சிறை அனுபவம் என்பது நம்மை போன்ற சாதராண மக்களுக்கு ஒரு கொடிய அனுபவம். நானும் 11 நாள் இருந்துள்ளேன். சந்தேக வழக்கில் ஒரு அப்பாவி சிறைக்கு வருகிறார். அவருக்கு வழங்கப்பட்ட தட்டு,டம்ளர், போர்வை பழைய கைதிகளால் மிரட்டி அபகரிக்கப்பட்டது.பாலித்தீன் பையில் தண்ணீர் பிடித்து பயன்படுத்தினார். சாப்பாடு - மறுநாள் காலை உணவு முதல் நாள் மாலை 5 மணிக்கு தயாரிக்கப்பட்டு ஸடெச்சரில் வைத்திருப்பார். சூழ்நிலை கைதிகள் நிலை பரிதாபம். ரவுடிகளுக்கு சிறை சொர்க்கம்.

Post a Comment