!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Thursday, March 17, 2011

தமிழ்நாட்டில் காங்கிரசின் அரசியல் தற்கொலை!

எப்படியோ திமுக - காங்கிரஸ் கூட்டணி ஏற்பட்டுவிட்டது. இந்த கூட்டணி ஏற்படாமல் இருந்தால் நாட்டுக்கும் நல்லது, காங்கிரசுக்கும் நல்லது என்று நான் நினைத்திருந்தேன். ஆனால் என் ஆசையில் காங்கிரஸ் மண்ணை அள்ளிப்போட்டுவிட்டது.

கூட்டணி உறுதியானாலும் தலையை பிய்த்துக் கொள்ள வைக்கும் ஒரு கேள்விக்கு இங்கே பதில் இல்லை. நம்மிடம் சொல்லப்படும் எந்த ஒரு செய்தியும் கோர்வையாக இருந்தால்தானே அதை நம்பமுடியும்? `இந்த தேர்தலில் திமுக தோற்றால், அம்மா ஒரு பக்கமும் 2 ஜி ஊழல் இன்னொரு பக்கமும் திமுகவை பந்தாடும் என்பதால், (இவர்களே உருவாக்கிக் கொண்ட) பல அவமானங்களை தாங்கிக் கொண்டு திமுக காங்கிரசுக்கு பணிந்து போகிறது` என்ற செய்தி கோர்வையாக இருப்பதால், நம்மால் இதை நம்ப முடிகிறது.


ஆனால் காங்கிரஸ் தனது முடிவை மாற்றிய காரணம்? திமுக கூட்டணியை தொடர வேண்டும் என்ற எண்ணம் காங்கிரசுக்கு உண்மையிலேயே இருந்திருந்தால், திமுக மறைமுகமாக மிரட்டப்பட்டு, உடன்பாடு சுமுகமாக முடிந்திருக்கும். ஏற்கனவே இருகட்சி தொண்டர்கள் மத்தியில் வெறுப்பு அதிகமாயிருக்கும் நிலையில், காங்கிரஸ் இந்த உடன்பாட்டை தெருச்சண்டை அளவுக்கு கொண்டு போயிருக்காது. எனவே காங்கிரசும் திமுகவை போல் கடைசி நேரத்தில் பல்டி அடித்திருப்பதாகத்தான் தெரிகிறது. ஆனால் அதற்கான காரணத்தைதான் சரியாக கணிக்க முடியவில்லை.

தமிழகத்தில் திமுகவை கழட்டி விடுவதன் மூலம் காங்கிரஸ் பல விதமான விமர்ச்சனங்களிலிருந்து தப்பி விடலாம். வேறு சில லாபமும் இருக்கிறது. எனவே காங்கிரஸ் 90 சீட் கேட்கிறது என்ற செய்தியை படித்தபோது, நான் இதை நம்பவில்லை. மத்தியில் உங்களுக்கு அமைச்சர் பதவி கொடுத்திருக்கிறோம், அதேபோல் மாநிலத்திலும் எங்களுக்கு அமைச்சர் பதவி தாருங்கள் என்று கேட்டால் அது நியாயம். ஆனால் காங்கிரஸ் தனது தகுதிக்கு மீறிய சீட்டுக்களை கேட்டதற்கான காரணம், திமுக தானாக விலகுவதற்காக செய்த நாடகம் என்றுதான் நான் நினைத்தேன்.

ஈழ எதிர்ப்புணர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல், திமுகவினர் செய்யவிருக்கும் உள்குத்து, விஜயகாந்த சென்றதன் மூலம் பலமாகியிருக்கும் அதிமுக கூட்டணி என, இந்த திமுக கூட்டணி தோற்பதற்கான பல காரணங்கள் இருக்கும் நிலையில், எதற்க்காக காங்கிரஸ் இப்படி ஒரு அரசியல் தற்கொலையில் இறங்க வேண்டும். திமுக தனது ஆதரவை வாபஸ் வாங்காது, அப்படியே வாங்கினாலும் அரசுக்கு ஆபத்து எதுவும் இல்லை என்ற நிலையில், காங்கிரசின் இந்த முடிவு ஒரு புதிர்தான்.

ஒரு கணிப்பு என்னவென்றால், இந்த தேர்தலில் கணிசமான எம் எல் ஏக்களை பெறுவதன் மூலம் அடுத்து வரும் ஆட்சி மைனாரிட்டியாக இருந்தால், அமைச்சரவையில் இடம் பெறலாம் என்ற நம்பிக்கை. இது ஒரு வகையில் சாத்தியம்தான். அம்மா மைனாரிட்டி ஆட்சி அமைக்க நேர்ந்தால், மத்தியில் அமைச்சர் பதவி, வழக்குகளில் பிரச்சனை வராமல் இருக்க என பல காரணங்களால் (அவருடைய கூட்டணி கட்சியிலேயே போதுமான ஆதரவு இருந்தாலும்) காங்கிரசையே அனுசரித்து போகும் வாய்ப்பு அதிகம்தான். அதேபோல்தான் திமுக கதையும். ஆனால் இவையெல்லாம் தற்போதைக்கு சாத்தியமா? திருமங்கலம் தேர்தலுக்கு பிறகு தமிழக வாக்களர்களை நம்பி எதுவும் சொல்லமுடியாது என்றாலும், இந்த கூட்டணி படு தோல்வி அடைவதற்கான வாய்ப்புகளே அதிகம். இதை காங்கிரசும் உணர்ந்திருக்க வேண்டும் என்றுதான் நான் நினைக்கிறேன். எனவே காங்கிரஸ் தனது முடிவை கடைசி நேரத்தில் மாற்றியதற்கான காரணம் வேறு ஏதாவதாக இருக்க வேண்டும்.

அதேபோல் கலைஞர் என்னதான் வயதாகி, பிரச்சினைகளில் சிக்கித் தவித்தாலும், அவருடைய அரசியல் அனுபவத்திற்கு தெரியாதா, காங்கிரசை மிரட்டும் நிலையில் தற்போது நாம் இல்லை என்பது! அப்படியே மிரட்ட கூடிய அளவுக்கு ஏதாவது விஷயம் இருந்தாலும், வெளிப்படையாக மிரட்டினால் அது காங்கிரசுக்கு கௌரவ பிரச்சினையாகி, கடைசியில் திமுகதான் பணிந்து போகவேண்டி இருக்கும் என்பதும் அவருக்கு தெரியாதா? தெரிந்தும் ஏன் இந்த நாடகம்? எதற்கு அவமானத்தை விலை கொடுத்து வாங்க வேண்டும்? எனவே திமுகவின் `விலகல் பின்னர் சரண்டர்` நாடகமும், காங்கிரசின் `கூட்டணியில் தொடரும்` முடிவும் லாஜிக்கோடு ஒட்டவில்லை.  

ஒருவேளை சில நாவல்களில் கிளைமாக்ஸ் நாம் எதிர்பாராத ஒன்றாக இருக்குமே அதுபோல் இங்கேயும் நடந்திருக்குமோ?  அதாவது திமுகவின் வேறு ஏதாவது மிரட்டலுக்கு காங்கிரஸ் அடிபணிந்திருக்கிறதா? தலைக்குமேல் வெள்ளம் போக ஆரம்பித்தால் மனிதர்கள் பல விஷயங்களை பேச ஆரம்பித்து விடுவார்கள். அது ஆபத்து.  எனவே இப்போதைக்கு திமுகவை அனுசரித்து போவோம் என்ற முடிவுக்கு காங்கிரஸ் வந்திருக்கிறதா?  ஆனால் ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு பிறகு, திமுக மிரட்ட காங்கிரஸ் இறங்கி வருவது போன்ற தோற்றம் வந்தால் எதிர்கட்சிகள் அதை தேர்தலில் நாறடித்து விடுவார்களே? எனவே மக்களின் கவனத்தை திசைதிருப்ப இப்படி ஒரு நாடகத்தை நடத்தியிருக்கிறார்களா? கலைஞரும், வெளிப்படையாக அசிங்கப்பட்டாலும் பரவாயில்லை, நமக்கு காரியமானால் சரி என்று கமுக்கமாக இருக்கிறாரா? இங்கேயும் சில லாஜிக் இடித்தாலும், காங்கிரஸ் எந்த ஒரு லாபமும் இல்லாமல் இறங்கி வந்ததன் காரணம் தெரியாத வரை, இப்படி இருக்குமா, அப்படி இருக்குமா என்று அனுமானிக்கத்தான் வேண்டியிருக்கிறது.             

ஆனால் ஒன்றை மட்டும் உறுதியாக சொல்லமுடியும். ஒவ்வொரு நிமிடமும் நாம் ஒரு புதிய உலகத்தை சந்தித்துக் கொண்டிருப்பதால், மாறிவரும் சூழ்நிலைகேற்ப நாமும் நமது முடிவை அடிக்கடி மாற்ற வேண்டி இருக்கும். காங்கிரசும் இதற்கு விதிவிலக்கல்ல.

இதுபோல் அடிக்கடி முடிவை மாற்றும் பழக்கம் எனக்கும் உண்டு. எனது பிரச்சினை தீர்ந்தால்தான் விடுதலை ஆக வேண்டும். இல்லையென்றால் விடுதலையே ஆகக்கூடாது என்ற முடிவோடு தான் நான் சிறைக்கு போனேன். எந்த அனுதாப அலை என்னை எனது பிரச்சினைகளிலிருந்து காப்பாற்றும் என்று நினைத்து இந்த கொலை முயற்சியில் இறங்கினேனோ, அதே அனுதாப அலை எனக்கு ஆப்பு வைத்தது. கோர்ட்டில் நானும் காங்கிரஸ் கட்சியை போல் சாத்தியமில்லாத கோரிக்கை எல்லாம் வைத்தேன். வழக்கு விசாரணை முடிந்து, சாட்சிகளின் வாக்குமூலத்தில் கையெழுத்திட்டால், நான் விடுதலை ஆகி விடுவேன் என்று தெரிந்தவுடன், எனக்கு `10 வருடம் தண்டனை கொடுக்கிறேன் ` என்று நீதிபதி வெளிப்படையாக சொன்னால் தான் கையெழுத்திடுவேன் என்று சொல்லி அடம்பிடித்தவன் நான். ஆனால் கடைசியில் நானும் எனது முடிவை மாற்றிக்கொண்டு விடுதலை ஆகி விட்டேன்.

விடுதலை ஆன பிறகு நான் எனது அடையாளத்தை மறைத்துக் கொண்டுதான் இந்த பதிவுகளை போட ஆரம்பித்தேன். அதன்பிறகு ஒரு நண்பருடனான ஈமெயில் தொடர்பில், `விரைவில் உங்களை சந்திக்க வாய்ப்பு வரும்` என்று மெயில் அனுப்பியிருந்தார். அவருக்கு, `எனது பிரச்சினைகள் தீர்ந்தவுடன் கவலை இல்லாத மனிதனாகதான் என்னை வெளிப்படுத்திக் கொள்ள ஆசை, அப்படி ஒரு வாய்ப்பு வந்தால் பார்ப்போம்`  என்று பதில் அனுப்பி இருந்தேன். ஆனால் அடுத்த சில தினங்களிலேயே நான் எனது முடிவை மாற்றிக் கொண்டு எனது புகைப்படத்தை பதிவில் ஏற்றினேன். காரணம், அடுத்து போட இருந்த பதிவு. சிலர் சிறைக்குள் இருந்துகொண்டே துணிச்சலாக போதை மருந்து கடத்தலை தொடர்ந்து செய்வது பற்றி பதிவு எழுதிக் கொண்டிருந்தேன். முகத்தை மறைத்துக்கொண்டு யார் வேண்டுமானாலும் பொய்யான செய்தியை பரப்பலாம். ஆனால், என்னை வெளிபடுத்திக் கொள்வதன் மூலம் இந்த செய்தியின் நம்பகத்தன்மை அதிகரிக்கும் என்பதால் நான் எனது முடிவை மாற்ற வேண்டியதாயிற்று.

ஒருவர் `நான் ரெட்டை இலைக்கே வோட்டு போட்டு பழகிவிட்டேன்` என்று சொன்னபோது, `நீங்களெல்லாம் திருந்தவே மாட்டீர்கள்`  என்று சபித்தவன் நான். ஆனால் இன்று அதே ரெட்டை இலைக்கு வோட்டு போடும் முடிவுக்கு வந்திருக்கிறேன் (இந்த கூட்டணி உடையாமல் இருந்தால்). வேறு வழி. வாழ்க்கைதான் விருப்பமில்லாத ஓன்று (எனக்கு)  என்றால், அரசியலும் அப்படித்தான் இருக்கிறது.

தமாகா ஆரம்பிக்கப்பட்டபோது, மூப்பனாருக்கு அப்போது உருவாகியிருந்த பிரபலத்தால் ஈர்க்கப்பட்டு அதில் உறுப்பினரானேன். ஆனால் அதன்பிறகு என் சொந்த கதையே சோகக் கதையாகிவிட, அதிலிருந்து தப்பிப்பதே என் முதல் குறிக்கோளாகிவிட்டது. எனவே எனது அரசியல் கனவு ஆரம்பத்திலேயே மண்ணாகிப் போனது. இருந்தாலும் ஆர்வம் காரணமாக அதை ஒரு பார்வையாளனாக கவனித்துக் கொண்டு, பெரும்பாலும் காங்கிரசுக்கு தான் ஓட்டு போட்டிருக்கிறேன். அந்த வகையில் நான் ஒரு காங்கிரஸ்காரன்தான். ஆனால் இந்த தேர்தலில் அதையெல்லாம் நான் பார்க்கபோவதில்லை. இந்த தேர்தலில் திமுக அணி ஜெயித்தால் அதன் விளைவுகள் கவலைப்பட வேண்டிய அளவுக்கு இருக்கும்.

தவறு செய்யும் அரசியல்வாதிகளை சட்டமும் தண்டிக்க வேண்டும், மக்களும் தண்டிக்க வேண்டும். ஜெயலலிதாவை சட்டம் இன்னும் தண்டிக்கவில்லை என்றாலும், தேர்தலில் மக்கள் தண்டித்து விட்டார்கள். எனவே குறைந்த பட்சம் அவருக்கு அந்த பயம் இருந்து, இனி ஊழல் ஓரளவாவது குறையும் என்று எதிர்பார்க்கலாம். ஆனால் வரலாறு காணாத ஊழல் செய்த ஒரு கட்சி மீண்டும் வெற்றி பெற்றால், மக்கள் மட்டுமில்லாமல், நேர்மையான நீதிபதிகளே வெறுத்து போய் ஊழலில் ஈடுபடும் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவார்கள். அது இந்தியாவின் எதிர்காலத்துக்கே ஆபத்து. எனவே கட்சி வேறுபாடுகளை கடந்து மக்கள் இந்த திமுக கூட்டணியை தோற்கடிக்க வேண்டும்.

இது கடைசி செய்தி.

ஒவ்வொரு நிமிடமும் நாம் ஒரு புதிய உலகத்தை புதிய பிரச்சினைகளை சந்தித்து கொண்டிருக்கிறோம். எனவே அதற்கு தகுந்தாற்போல் நாமும் நமது முடிவுகளை அடிக்கடி மாற்ற வேண்டி இருக்கும் என்று சொல்லியிருந்தேன். அதேபோல் இந்த பதிவை எழுதி முடிக்கும் முன் ஒரு திடீர் செய்தி. அதிமுக கூட்டணியில் பிளவு என்று.

ஒரு வேளை இந்த கூட்டணி கட்சிகள் எல்லாம் சேர்ந்து மூன்றாவது அணி அமைத்தால் அதற்குத்தான் என் ஓட்டு. இருந்தாலும், வோட்டுக்கள் சிதறுவதால் அது  திமுகவிற்கே சாதகமாகும் வாய்ப்பு அதிகம். எனவே இது இந்த கட்சிகளுக்கு கடைசிக்கட்ட குழப்பம் என்பதால்,  வரும் தேர்தலில் கலந்து கொள்ளாமல் மக்களை 49 ஓ வை பயன்படுத்தும்படி பிரச்சாரம் செய்யலாம். இவர்களுடைய வோட்டு வங்கி மட்டுமின்றி,  அதிமுக மற்றும் திமுகவை பிடிக்காத நடுநிலை வாக்காளர்களும் பெருமளவு 49 ஓ வை பயன்படுத்தி, பதிவாகும் வாக்குகளில் 50 சதவிகீதத்திற்கும் மேல் 49 ஓ ஆக  பதிவானால் இந்த தேர்தலே செல்லாததாகி விடும். குறைந்தபட்சம்  கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இதை செல்லாத ஒன்றாக ஆக்கி விடலாம். 6  மாதம் கவர்னர் ஆட்சி நடந்தால் ஒன்னும் குடிமுழுகிப் போய்விடாது.

ஆனால், அங்கீகரிக்கப்பட்ட தேர்தல் கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பது சாத்தியமா என்பதையெல்லாம் ஆராய்ந்து ஒரு முடிவை எடுக்க வேண்டும். மூணாவது அணிதான் வழி என்றால், துணிந்து இறங்குங்கள். நடுநிலையாளர்கள் ஓட்டு உங்களுக்குத்தான். நடப்பது நடக்கட்டும்.

   

5 comments:

சக்தி கல்வி மையம் said...

அரசியல் தலைவா.. அரசியல்...

http://sakthistudycentre.blogspot.com/2011/03/blog-post_17.html

Anonymous said...

தெளிவான அரசியல் பார்வை...பதிவு சூப்பர்

Anonymous said...

ஈழ எதிர்ப்புணர்வு, ஸ்பெக்ட்ரம் ஊழல், திமுகவினர் செய்யவிருக்கும் உள்குத்து, விஜயகாந்த சென்றதன் மூலம் பலமாகியிருக்கும் அதிமுக கூட்டணி என, இந்த திமுக கூட்டணி தோற்பதற்கான பல காரணங்கள் இருக்கும் நிலையில்,//
இப்போ இருக்கிற நிலமையில் காங்கிரஸ் ஜெயிச்சிடும் போலிருக்கே

Free Traffic said...

www.classiindia.com Best Free Classifieds Websites
Indian No 1 Free Classified website www.classiindia.com
No Need Registration . Just Post Your Articles Get Life time Income.
Life time traffic classified websites.Start to post Here ------ > www.classiindia.com

சிவானந்தம் said...

சுறுசுறுப்பு திலகங்கள் சதீஷ் குமார் மற்றும் கருணுக்கு நன்றி.

//இப்போ இருக்கிற நிலமையில் காங்கிரஸ் ஜெயிச்சிடும் போலிருக்கே//

தற்போதைய அரசியலில் எதையும் கணிக்க முடியவில்லை. சதீஷ் உங்களுக்கு விஜயகாந்தை அவ்வளவாக பிடிக்காது போலிருக்கிறது. நான் அவரை ஆதரிக்கவும் இல்லை அதே சமயம் எதிர்க்கவும் இல்லை. தற்போதைய சூழ்நிலைக்கு ஓட்டு வங்கியின் அடிப்படையில் அவர்தான் மூணாவது அணிக்கு தலைவர்.

கலைஞர் மற்றும் ஜெயலிதாவின் அரசியலை பார்த்து நாம் வெறுத்துவிட்டோம். அதைவிட மோசமாகவா இருக்கபோகிறது இவருடைய தலைமை. கூட்டணியில் தொடர்ந்தாலும் சரி. அல்லது மூன்றாவது அணிக்கு தலைமை வகித்தாலும் சரி. கேப்டன் வரட்டும். வெல்லட்டும்.

Post a Comment