!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Friday, March 25, 2011

வைகோ, ஜெயலலிதா. யார் பாடம் கற்கவில்லை?




வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிக்கும் முடிவை வைகோ எடுத்திருக்கிறார். இதற்காக வைகோ ஆயிரம் காரணங்கள் சொன்னாலும், இது ஒரு முட்டாள்தனமான அரசியல் தற்கொலைதான். இனி இவரை காணாமல் போன தலைவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டியதுதான்.

இந்த முடிவை எடுத்ததற்கான காரணங்களை குறிப்பிடும்போது, `ஜெயலலிதா மாறியிருப்பார் என்று எதிர்பார்த்தோம். ஆனால் அவர் மாறவில்லை` என்று குற்றச்சாட்டுகளை சுமத்தியிருக்கிறார். இந்த குற்றச்சாட்டும் உண்மைதான். காலம் மனிதர்களுக்கு பல பாடங்களை கற்றுக்கொடுத்து அவர்களை பக்குவப்படுத்தும் என்பது யதார்த்தமான உண்மை. ஆனால் இங்கே ஜெயலலிதா மட்டுமின்றி வைகோவும் எதையும் கற்றுக்கொண்ட மாதிரி தெரியவில்லை.

மற்ற நடுநிலையாளர்களை போல் எனக்கும் வைகோ மீது மதிப்பு உண்டு. கடந்த காலங்களில் இவருக்கு ஆதரவாக பேசி சில நண்பர்களிடம் வாக்குவாதமும் செய்திருக்கிறேன். கடந்த பாராளுமன்ற தேர்தலிலேயே அதிமுக இவரை அலட்சியபடுத்திய போது, இவருடைய குறையை விமர்சித்து சிறையிலிருந்தே தினமணிக்கு வாசகர் கடிதம் எழுதி அனுப்பினேன். சிறைக்கைதிகள் அரசியல் கருத்துக்கள் தெரிவிக்கக் கூடாது என்றாலும், இந்த கடிதம் சென்சார் செய்யப்பட்டு சென்றது.

21/09/2009  தினமணியில் வெளியான அந்த கடிதம்.

``ஒருவழியாக வைகோ திருப்தியான தொகுதி உடன்பாடு கண்டுவிட்டார். இரண்டாம் நிலைத் தலைவர்கள் மதிமுகவை விட்டு விலகிப் போவதும், மிகத்தாமதமான அலைகழிக்கப்பட்ட தொகுதி உடன்பாடும், வைகோவின் செல்வாக்கு வேகமாக சரிந்து வருவதை காட்டுகிறது. ஆனால் இந்நிலைமைக்கு அவர்தான் காரணம்.அரசியல் ஆர்வம் இருப்பவர்களுக்கு இயற்கையாகவே பதவி ஆசையும் இருக்கும் என்பதை உணராமல் வாய்ப்புகள் இருந்தும் கட்சிக்காரர்களுக்கு அமைச்சர் பதவி வாங்கித்தராமல் கட்சி நடத்த முயற்சித்தது அவருடைய முதல் தவறு. இதன்மூலம் கட்சிக்காரர்களையும் திருப்திபடுத்தியிருக்க முடியும். அதேசமயம் திறமையான நிர்வாகத்தை கொடுத்து அதை சாதனையாக சொல்லி மக்களிடம் ஓட்டு கேட்கவும் முடியும்.``

ஆனால் கடந்த பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவத்திற்கு பிறகும் இவர் பாடம் எதுவும் கற்கவில்லை போலிருகிறது. இவர் எதிலும் பற்றட்டவ்ராக இருந்தால் அரசியலுக்கு வந்திருக்ககூடாது. அரசியல் என்ற விளையாட்டை விளையாடும் எண்ணம் வந்த பிறகு, அதற்குண்டான விதிமுறைகளை அனுசரித்து போகாதது யாருடைய தவறு? தவறை இவர் பக்கம் வைத்துக் கொண்டு இவர் மற்றவர்களை விமர்சித்து கொண்டிருக்கிறார்.

இவருடைய குறைகளில் முக்கியமானது பதவியையை நாடாதது. பதவிக்கு சுயநலவாதிகள் மட்டுமின்றி திறமைசாலிகளும் ஆசைப்படுபவார்கள். நம்மிடம் அதிகாரம் இருந்தால் நாம் விருப்பும் மாற்றத்தை வேகமாக கொண்டுவரலாம். அமைச்சர் ஆகவேண்டும் அல்லது எம் எல் ஏ ஆகவேண்டும் என்பதெல்லாம் அரசியல்வாதிகளின் நியாயமான கனவு. இது அவர்களின்  உழைப்புக்கான,திறமைக்கான அங்கீகாரம். எனவே கட்சியினரின் இந்த விருப்பத்தை பூர்த்திசெய்யாமல் எப்படி இவர் அரசியலில் ஜெயிக்க முடியும்?           

இன்னொருபக்கம்  இன்று உலகமே பிளாக்மெயில் அரசியலுக்கு வந்துவிட்டது. `என்னை புறக்கணித்தால் நான் உன் எதிரியிடம் போய்விடுவேன். அது உனக்குத்தான் நஷ்டம்` என்ற சூழ்நிலையை காரணம் காட்டியே பலர் காரியம் சாதித்து கொள்கிறார்கள். சீனாவை காரணம் காட்டி இந்தியாவிடம் உதவி பெற்ற இலங்கை, காங்கிரசுடன் சேர்ந்து மூன்றாவது அணி அமைப்பேன் என்று உதார்விட்டு அதிமுகவிடம் பேரம் பேசிய விஜயகாந்த், எப்போதும் பேரம் பேசும் ராமதாஸ் போன்றவர்களை பார்த்துமா இவருக்கு இன்னும் புத்தி வரவில்லை. பிளாக்மெயில் என்பது மட்டமான மனிதர்கள் செய்வது. வைகோ போன்றவர்கள் அந்த அளவுக்கு தரம்தாழ்ந்து இறங்க மாட்டார்கள் என்றாலும் மாற்று ஏற்பாட்டை கைவசம் வைத்திருந்தால், அவர் வேறு கூட்டணி அமைப்பார் அல்லது ஓட்டை பிரிப்பார் என்ற அச்சம் இந்த அவமானத்தை அவருக்கு உருவாக்கியிருக்காது.

பொதுவாக நாம் ஏமாந்து விட்டால், நான் ஒரு முட்டாள் என்பதை சொல்லமாட்டோம். `அந்த படுபாவி என்னை ஏமாத்திவிட்டான்` என்றுதான் புலம்புவோம். நாம் முட்டாளாக இருந்ததால்தானே எவனோ ஒருவன் நம்மை ஏமாற்றினான் என்பதை நாம் வசதியாக மறைத்து விடுவோம். அதேபோல்தான் இருக்கிறது வைகோவின் தற்போதைய புலம்பலும்.

திட்டமிடுதலில் தவறு நடந்துவிட்டது என்பதை உணர்ந்தவுடன், 15 தொகுதிகளுக்காவது ஒரு உடன்பாட்டுக்கு வந்திருக்க வேண்டும். தற்போது `தன்மானம் காப்போம்` என்று வசனம் பேசலாம். `கட்சியினரின் ஒப்புதலோடுதான் இந்த முடிவு` என்றும் சொல்லலாம். ஆனால் நடைமுறை உண்மை வேறு. இந்த தேர்தலில் கலைஞர் ஜெயித்தால் அது இவருடைய ஈழ கொள்கைக்கும் தோல்வி, அதேசமயம் ஒரு மிகப் பெரிய ஊழல்வாதி அதிகாரத்தை தொடர இவருடை முடிவும் ஒரு காரணம் என்றும் ஆகிவிடும்.   ஜெயலலிதா ஜெயித்தால், அரசியலை புரிந்து கொள்ளாத ஏமாளி இவர் என்ற பட்டப் பெயர்தான் மிஞ்சும். ஆக மக்கள் ஒட்டு போட ஆரம்பிக்கும் முன்னரே தோற்றுப்போன ஒரே அரசியல்வாதி இவர்தான்.

வைகோவின் இந்த முடிவு கட்சிக்காரர்களின் ஒப்புதலோடு எடுத்த முடிவு என்று சொல்ல முடியாது. நிஜம் என்னவென்றால் பொதுவாகவே நாம் வளர்ந்துவிட்ட பிறகு நம்மிடம் உள்ள குறையை பலர் நேரிடையாகவே சொல்லமாட்டார்கள். நாம் அதை தவறாக எடுத்துக் கொள்வோம் என்ற தயக்கம் அவர்களுக்கு இருக்கும். அதுவும் நம்மை விட உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள் என்றால் எதற்கு வம்பு என்று நாம் எதையும் பேசமாட்டோம்.

மதிமுகவினர் அதிமுகவுடன் கொஞ்சம் அனுசரித்து போகலாம் என்று நினைத்திருக்கலாம். ஆனால் மதிமுகவின் நிலை இந்தளவு பரபரப்பான பிறகு அவர்கள் வெளிப்படையாக தங்கள் கருத்தை வைகோவிடம் தெரிவிப்பார்களா? நாம் சிலர் வீட்டுக்கு போகும்போது, `சாப்ட்டுட்டா வந்தீர்கள்?` என்று எதேச்சையாக கேட்டு விடுவார்கள். இப்போது நாம் என்ன சொல்ல முடியும்!  `ஆமாம்` என்று தலையாட்ட வேண்டியதுதான். அதே போல் வைகோ மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், `என்னை அசிங்கப்படுத்தி விட்டார்கள்` என்று உணர்ச்சி பிழம்பாக பேசிவிட்டு, `இனி நீங்கள் உங்கள் முடிவை சொல்லுங்கள்` என்றால் அவர்கள் என்ன சொல்வார்கள்? ஒரு வேளை இவர்களிடம் ரகசிய வாக்கெடுப்பு நடத்தி இருந்தால் அவர்களுடைய உண்மையான மனநிலையை தெரிந்திருக்கும்.

கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணிக்கு போக சொன்ன தலைவர்கள் எல்லாம் தற்போது திமுகவிவிற்கே போய்விட்டார்கள் என்று இவரே சொல்லியிருகிறார். இன்று தேர்தலை புறக்கணிப்போம் என்று ஆலோசனை வழங்கிய இந்த குட்டித் தலைவர்களும் நாளை இதே முடிவை எடுக்கக் கூடும். மற்றக்கட்சி தலைவர்கள் என்ன, தன் கட்சித்தலைவர்களின் மனதையே புரிந்துகொள்ள முடியாத தலைவர் இவர்!   எப்படி இருந்தாலும் இனி தமிழ்நாட்டில் வைகோவுக்கு அரசியல் எதிர்காலம் இருக்கிறது என்று நம்பினால் அது பகல் கனவாகத்தான் இருக்கும்.

உலகத்திலேயே மிகப் பெரிய துரதிருஷ்டம் நம்மிடம் சில குறைகள் இருந்து அதை நாம் உணராமல் இருப்பதுதான். வெளிச்சத்துக்கு வராத சாதாரண மனிதர்களுக்குத்தான் இது ஒரு தலைவலி. காரணம், பலர் குறைகளை சுட்டிக் காட்ட மாட்டார்கள். அப்படி சுட்டி காட்டும் ஒரு சிலரும் நம்மை போல் சாதாரண மனிதர்களாக இருப்பதால் அதை ஒரு சிறந்த ஆலோசனையாக கருத முடியாது. ஆனால் வெளிச்சத்தில் இருப்பவர்களுக்கு பல தலைவலிகள் இருந்தாலும், ஆலோசனைக்கு பஞ்சம் இருக்காது. எதிரிகள் நமது குறைகளை சுட்டிக்காட்டுவார்கள். நடுநிலையாளர்கள், நலம் விரும்பிகள் நமது செயல்பாட்டை வெளிப்படையாக விமர்சிப்பார்கள். அந்த விமர்சனங்களை, விமர்சித்த நபரின் தகுதியை/ நோக்கங்களை ஆராய்ந்து, இவர்கள் தங்கள் குறைகளை விரைவாக திருத்திக் கொள்ள முடியும். 

வைகோ அவரது குறையை உணராததால் நஷ்டம் அவருக்கு மட்டுமில்லை, நாட்டுக்கும் தான்.

4 comments:

நிகழ்காலத்தில்... said...

வைகோவின் நிலையை நன்கு அலசி இருக்கிறீர்கள்.

ஆர்வத்தை பாராட்டுகிறேன்.

Bharathi Raja R said...

I am 99% in alignment with you, including your point on Vijayakanth. But, Vijayakanth also has a major problem. Every time I see him on TV, he is drunk. Even his party men who went close to him confirm this. He just blabbers in intoxication. It may not be a problem to worry about at this point, but it would surely prove to be a costly problem in the long run.

சிவானந்தம் said...

@நிகழ்காலத்தில்

நன்றி, சிவா

வைகோவின் மீது இப்போதும் வெறுப்பு வரவில்லை, கோவம்தான். ஆனால் அவருடைய நட்புவட்டத்தினர் அவருக்கு இதையெல்லாம் எடுத்து சொல்லமாட்டர்களா? ஏன் இவர் இப்படி இருக்கிறார் என்றே தெரியவில்லை.

சிவானந்தம் said...

thanks bharathiraja.

it is a reality that we will never have a leader with our liking. just we will have to settle `the best among the worst`. history has also shown that many leaders have contributed to the society despite their shortcomings. so let us hope for the better side. fortunately, whether we have a good leader or not but at least we have a established democracy. if vijayakanth also turns out to be another petty corrupt politician, then we can show him the door.

Post a Comment