!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, July 30, 2011

எரிபொருள் சிக்கனம் - சிறை மற்றும் நீதித் துறை அமைச்சர்கள் கவனத்திற்கு...


இந்த வாரம் ஒரு காது குத்தும் நிகழ்சிக்காக வைத்தீஸ்வரன் கோவிலுக்கு போக வேண்டி இருந்தது. ஆனால் நான் கோவிலுக்கு போவதில்லை என்ற முடிவோடு இருக்கிறேன்.

அறிவியல் சார்ந்த புத்தகங்களையும், பிரபஞ்சம் மற்றும் பல தியரிகளையும் படிக்கும் போது கடவுள் இருக்கிறார் என்று சொல்வதற்கான காரணங்கள் தெரியவில்லை. அதேசமயம், `நீ என்ன செய்தாய் எனக்கு, நான் உன்னை மதிப்பதற்கு` என்ற எனது கோவமும் ஒரு காரணமாய் இருக்கலாம்.

ஆன்மீகமா, நாத்திகமா என்ற ஊசலாட்டத்தில் நான் மதில் மேல் பூனைதான். கோவம் வரும்போது முறைத்துக் கொள்வதும், வேறு வழி இல்லைஎன்றால் தஞ்சம் அடைவதுமாக என் நிலைமை இருந்தது. கடைசியாக ஜெயிலுக்கு போவது என்ற முடிவுக்கு வந்த பிறகு அதற்கு முன் திருப்பதிக்கு போய் கடைசி பெட்டிஷன் போட்டுவிட்டு வந்தேன். அந்த பெட்டிஷனுக்கான பதில் முடிவே தெரியாமல் அந்தரத்தில் நிற்கிறது. எனவே இப்போதைக்கு நான் அவருடன் `கா` தான்.

இப்போதைய விசேஷத்தை தவிர்க்க முடியாது என்பதால் இந்த பயணம்.

இனி இந்த பயணத்தில் நான் கவனித்தவை.

கோயம்பேடு பஸ் ஸ்டாண்டுக்கு மாநகர பஸ்ஸில் போகும் போதே எனக்கு சிறை அனுபவம் ஞாபகம் வந்தது. எனக்கு முன்னால் உட்கார்ந்திருந்த ஒருவர் போன் பேசிக் கொண்டிருந்தார். பக்கத்தில் காவலர்கள்.

சிறையில், வெளியூர் கோர்ட்டுக்கு யாராவது போனால் பலருக்கு அவர்தான் போஸ்ட்மேன். யார்யாருக்கு என்னன்ன தகவல் சொல்லவேண்டும் என்று தகவல்களை அவரிடம் சொல்லிவிடுவார்கள். உள்ளே `அது` இருந்தாலும், இப்படியும் தகவல் போகும். கைதிகளும் உள்ளூர் கோர்ட்டை விட இது போன்ற வெளியூர் கோர்ட்டைத்தான் விரும்புவார்கள். காரணம், சாப்பாடு முதல் போன் வரை ப்ரீயாக கிடைக்கும். நீங்கள் பணத்தை இறைக்க வேண்டும். அவ்வளவுதான்.

சிறையில் சில கைதிகள் இது போல் வெளியூர் கோர்ட்டுக்கு போகும் செலவுகளையும் பார்த்துகொண்டு, உள்ளேயும் செலவு செய்து கொண்டு, அதிலும் சிலர், குடும்பத்திற்கும் பணம் அனுப்புவார்கள். எப்படி என்றெல்லாம் கேள்வி கேட்காதீர்கள்? எனக்கும் சிறையை பற்றி எழுத போரடிக்கிறது. இங்கே ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறப் போவதில்லை.

ஆனால் ஒரு அபத்தத்தை நான் அவசியம் குறிப்பிட்டாக வேண்டும்.

சில கைதிகளுக்கு பல கோர்ட்டுகளில் (நகரங்களில்) வழக்கு இருக்கும். ஒரு வழக்கில் பெயில் கிடைக்காது என்று தெரிந்தால் மற்ற வழக்குகளிலும் பெயில் எடுக்க மாட்டார்கள். கைதாவதற்கு முன் வேறு ஏதாவது வழக்கில் கைதாகி பெயிலில் இருந்தால், அந்த வழக்கு சார்ந்த போலீசுக்கு தகவல் சொல்லி, மாமுலும் கொடுத்து, அதற்கும் உடனடியாக வாரன்ட் வாங்கி விடுவார்கள். அதாவது அந்த வழக்கின் பெயில் ரத்தாகி அதிலும் ரிமாண்டில் வந்துவார்கள். ஏன் இவர்கள் மாமுல் கொடுந்து வாரன்ட் வாங்க துடிக்கிறார்கள் என்று ஆராய்ந்த போதுதான், அவர்கள் உண்மையிலேயே கிரிமினல்கள் என்பதையும், சட்டத்தில் உள்ள ஒரு அபத்தமான ஓட்டையையும் கவனித்தேன். (சிறைகளில் செல்போன் - அபத்தமான தண்டனை - part 2 )

ஆனால் மீண்டும் கைது செய்யப்பட்ட பிறகு ஏதோ ஒரு கணக்கில் ஒரு நகரத்தில் அடைபட்டிருப்பார். எனவே மற்ற கோர்ட்களில் ஆஜராக இவர் அங்கேயும் போகவேண்டும். வழக்கு முடியும் வரை இவர் இருப்பது ரிமாண்டில் என்பதால், 15 நாட்களுக்கு (சில சமயம் ஒரு மாதம்) ஒரு முறை இவரை அந்த கோர்ட்டுக்கு அழைத்துப் போகவேண்டும்.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் ஒருவர் இருந்தார். இவருக்கு சென்னை மற்றும் வேறு சில (நீண்ட தூர) நகரங்களிலும் வழக்கு உள்ளது. இவருக்கு பெயில் மறுக்கப்பட்டதால், சென்னையிலேயே இருக்கிறார். அதுவும் ஏழு வருடமாக. எனவே மற்ற நகரங்களில் உள்ள வழக்குக்காக, மாதம் இரு முறை வெளியூர் செல்வார். ஒரு கைதியை மட்டும் என்றால், இரண்டு அல்லது மூன்று போலீசார் வருவார்கள். இந்த பயணத்துக்கு போலீசாரின் சம்பளம், போக்குவரத்து மற்றும் இதர செலவு என்று கணக்கிட்டால் இதற்கே மாதம் பத்தாயிரம் ஆகும். சில தீவிர குற்றவாளிகளை  கடுமையான பாதுகாப்போடு தனி வண்டியில் அழைத்துப் போவார்கள். அதற்கான செலவு இன்னும் கூடுதலாக இருக்கும்.

இவ்வளவு செலவு செய்து அங்கு அழைத்து போய் உருப்படியாக வழக்கையாவது நடத்துகிறார்களா? அதுவும் கிடையாது. `உங்கள் காவல் மேலும் 15 நாள் நீட்டிக்கபடுகிறது` என்று அங்கு நீதிபதி சொல்வார். அந்த ஒரு வார்த்தையை கேட்கத்தான் இந்த காமெடி. 10 முறை நீங்கள் கோர்ட்டுக்கு போனால் ஒரு முறை சாட்சி ஏறும்.  

இயற்கையான, நியாயமான கால தாமதத்தை நாம் ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் குற்றவாளிகள், இருதரப்பு வழக்கறிஞ்சர்கள், போலீசார் மட்டுமின்றி சில வழக்குகளில் நீதிபதிகள் கூட அனாவசியமாக வழக்கை இழுக்கிறார்கள் என்பது வெளிப்படையாகவே தெரிகிறது.


  • ஒரு வழக்கில், ஏதாவது ஒரு வகையில் தொடர்புடையவர், இத்தனை முறைதான் வாய்தா கேட்கலாம் என்று கட்டுப்பாடு வர வேண்டும். அல்லது அதற்கும் மேல் வாய்தா கேட்டால், மீட்டர் வட்டியைப் போல் ஒரு நாளைக்கு இவ்வளவு என்று கட்டணம் நிர்ணயித்து வசூலிக்க வேண்டும். இப்படி கட்டுப்பாடுகள் வராதவரையில் இதற்கு விடிவு காலம் வராது     

இந்த ஏழு வருடத்தில் மாதம் இரு முறை என்றால் அவர் எத்தனை முறை வெளி ஊர் கோர்ட்டுக்கு போயிருப்பார் என்று கணக்கு போட்டு பாருங்கள். அவர் மட்டுமில்லை, புழலில் தினம் 5 முதல் 10 ௦ பேர் வரை வெளிக் (நகர) கோர்ட்டுக்கு போவதாக கேள்விபட்டேன். அதேபோல் தமிழகம் (இந்தியா) முழுக்க உள்ள சிறைகளிலும் இதே நிலைமைதான்.

வெளி ஊர் கோர்ட் என்றில்லை, புழல் சிறையில் ஒரு நாளைக்கு சராசரியாக 250 பேர் சென்னையில் உள்ள கோர்ட்டுக்கே போகிறார்கள் என்றால், அதில் 50 பேருக்குத்தான் வழக்குத் தொடர்பான விசாரணை நடக்கும். மற்றவர்கள் எல்லாம் `உங்களுக்கு மேலும் 15 நாள் காவல் நீட்டிக்கப் படுகிறது` என்ற ஒரு வரி வசனத்தை கேட்கத்தான் போகிறார்கள்.

சில கைதிகளுக்கு பெயில் மறுக்கப்படுவதும்,அதேபோல் அந்தந்த கோர்ட்டுகளுக்கு கைதியை விசாரணைக்கு அழைத்துப் போகவேண்டியதும் அவசியமானதுதான். ஆனால் `இன்று விசாரணை எதுவும் இல்லை, காவல் நீட்டிப்பு மட்டும்தான்` என்றால், அதற்கு ஏன் இந்த அனாவசிய பிரயாணம்?

சில சமயம் தாம்பரம் (செஷன்ஸ்) கோர்ட் நீதிபதி வரவில்லை என்றால் எங்களை செங்கல்பட்டு கோர்ட்டுக்கு அழைத்துப் போய் வாய்தாவை  நீட்டித்திருக்கிறார்கள். தாம்பரம் மாஜிஸ்ட்ரேட் கூட ஒரு முறை எங்களுக்கு வாய்தா கொடுத்திருக்கிறார்.

போராட்டங்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் வரும்போது, காவலர் பற்றாகுறையால் சில சமயம் கைதிகளை அழைத்துப் போகாமல் வாரன்ட்களை மற்றும் கோர்ட்டுக்கு எடுத்து சென்று காவல் நீட்டிப்பும் பெற்றிருக்கிறார்கள். ஆக, இது போல் சூழ்நிலைகளை அனுசரித்து முடிவெடுக்கும் போது, இந்த அபத்தங்களுக்கும் ஒரு முடிவு கட்டலாமே?

இன்றைய தொலை தொடர்பு புரட்சியில், வாய்தா வாங்க ஒரு கைதி கோர்ட்டுக்கு போக வேண்டிய அவசியமில்லை. டெலி கான்பரன்ஸ் பயன்படுத்தலாம் (சிறையில் இருக்கிறது. ஆனால் சில விஷயங்களில் மட்டும்).

அரசு என்ன செய்யலாம்?

குறைந்தபட்சம் இந்த 15 நாள் ரிமாண்டை 30 நாட்களாக மாற்றுவது

இந்த கைதிக்கு இன்று வாய்தாதான் என்று சம்பந்தபட்ட கோர்ட்டில் இருந்து தகவல் தந்தால், `சிறை அதிகாரிகளே காவல் நீட்டிப்பை வழங்கலாம` என்று சொல்லிவிடலாம். அதிகார பரவலாக்கல் பல விரயங்களை தவிர்க்கும். (இதில் சில சிக்கல் இருக்கிறது. அதை பின்னர் பார்ப்போம்)

மத்திய சிறைகளுக்கு ஏதாவது ஒரு நீதிபதியை வரவழைத்து, வாய்தா மட்டும் வழங்க வேண்டியே அனைத்துக் கோர்ட்டு கைதிகளுக்கும் அவரே வாய்தா வழங்கி விடுவது.

எரிபொருள் பற்றாகுறையால் நாம் இன்று அணு மின்சாரம் என்ற எமனுக்கே காவடி தூக்கிக் கொண்டிருக்கிறோம். எனவே எரிபொருள் சிக்கனத்தை பற்றி மக்களுக்கு உபதேசிக்கும் அரசு, அரசுத் துறைகளில் இருக்கும் பல அபத்தங்களையும் கண்டறிந்து விரைவில் சரி செய்யவேண்டும்.




பயணம் தொடரும்.



5 comments:

Anonymous said...

நீதி துறையில் நிறைய மாற்றங்கள் வேண்டும்

பன்னிக்குட்டி ராம்சாமி said...

பிரச்சனைகளைச் சொல்லி தீர்வும் சொல்லி இருக்கிறீர்கள், அருமையான கட்டுரை, நன்றி!

Rathnavel Natarajan said...

நல்ல பதிவு.
நிறைய விஷயங்கள். கேட்க வேண்டியவர்கள் காதுகளுக்கு எட்ட வேண்டும்.
நன்றி.

சிவானந்தம் said...

@ ரத்தினவேல்

நன்றி, ரத்தினவேல் சார். எனக்கும் இந்த செய்தி முக்கியமானவர்களின் பார்வையில் பட்டு, இவை சரி செய்யப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது.

சிவானந்தம் said...

@சதீஷ்

///நீதி துறையில் நிறைய மாற்றங்கள் வேண்டும்///

உண்மைதான் சதீஷ்.

நீதித்துறையில் மிகப் பெரிய அளவில் சீர்த்திருத்தங்கள் தேவை.

@ பன்னிகுட்டி ராமசாமி

///பிரச்சனைகளைச் சொல்லி தீர்வும் சொல்லி இருக்கிறீர்கள், அருமையான கட்டுரை, நன்றி!///

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் நன்றி நண்பரே.

Post a Comment