!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Monday, November 28, 2011

முறையற்ற மதப் பிரச்சாரம்.


இந்த வாரம் எனக்கு கோபத்தை வரவழைத்தது சில கிறிஸ்துவ பிரச்சாரகர்களின் செயல்கள். ஒரு பள்ளிக் கூடத்தின் முன் சிறுவர்களிடம் மத புத்தகங்களை வினியோகித்துக் கொண்டிருந்தார்கள். மதப் புத்தகங்களை விநியோகிப்பதை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். ஆனால் சிறுவர்களிடம் இதை விநியோகிப்பதை நான் நேரடியாக பார்த்தது இப்போதுதான்.

ஆன்மீகத்தை பொறுத்த வரையில் நான் மதில் மேல் பூனை. நிச்சயம் தீவிர மத ஆர்வம் கிடையாது. ஆரம்பத்தில் கம்யுனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சியில் ஈடுபாடு காட்டி தீக்கதிரை சந்தா கட்டி வாங்கியும் படித்திருக்கிறேன், அப்படியே அந்த கட்சியின் ஒரு மாநில மாநாட்டில் தொண்டனாகவும் போயிருக்கிறேன். எனவே நாத்திகனாகத்தான் இருந்தேன். இருந்தாலும் கடலில் மூழ்குபவன் அந்த கடைசி நேர பயத்தில் `இறைவா` என்று கத்துவதில்லையா, அதுபோல் வந்ததுதான் பக்தி. அதன் பிறகு இப்படியும் அப்படியும் தடுமாறி நான் இப்போது எந்த பக்கம் என்றே தெரியாத நிலை.

அதே சமயம் இது மத ஆர்வத்தினாலோ அல்லது எது உயர்ந்த மதம் என்ற ஆராய்ச்சிக்கான பதிவோ இல்லை. நான் கண்ட ஒரு காட்சி லாஜிக்கோடு ஒட்டாமல் அயோக்கியத்தனம் என்ற எல்லையையும் தொடுவதால்தான் இந்த பதிவு.

உண்மையில் இப்போதைய மதமாற்றத்துக்கும் கட்சி மாறுவதற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. போய் சேரும் கட்சி ஏதாவது ஆசை காட்டி இருக்கும், அல்லது இருக்கும் கட்சியில் அவருக்கு மரியாதை இருந்திருக்காது. இதுதான் பலர் தாவுவதன் காரணம். உண்மையான புரிதலோடு மதம் மாறுவது அபூர்வம். இருந்தாலும் ஓரளவு படித்தவன் அல்லது சிந்திக்கும் வயதை அடைந்தவன் (காரணங்கள் எதுவாக இருந்தாலும்) மதம் மாறுகிறான் என்றால் அது அவனுடைய தனிப்பட்ட உரிமை என்று விடலாம்.

ஆனால் சிந்திக்கும் பக்குவம் அடையாத ஒருவனை மூளைச் சலவை செய்வதை எதில் சேர்ப்பது? நிச்சயம் அந்த சிறுவன் அதை படித்து புரிந்து கொண்டு உடனடியாக மதம் மாறிவிடப் போவதில்லை. அவன் அதை விளையாட்டாகத்தான் வாங்கி இருப்பான். இருந்தாலும் இது அயோக்கியத்தனம் இல்லையா?

மதம் என்பது வியாபாரமா, அதை கூவி கூவி விற்பதற்கு? அல்லது மதத்தை பரப்ப வேண்டும் என்ற நோக்கமிருந்தால், அதை முறையாக செய்யலாமே? . ஆனால் இந்தியாவில் அப்படி நடப்பது இல்லை. இங்கே கருத்து சுதந்திரத்தை முறைகேடாக பயன்படுத்துவதுதான் நடக்கிறது. விவரம் புரியாத மக்களிடம் பிரச்சாரம் என்பது ஒரு வகையான மூளைச்சலவைதான். 

மதங்களை பொறுத்த வரையில் எல்லா மதங்களும் குறைகளையும் கறைகளையும் கொண்டவைதான். வரலாற்றில் மிக மோசமான நிகழ்வுகளை பட்டியலிட்டால் அதில் எல்லா மதங்களுக்கும் இடம் உண்டு. மதங்களால் மனிதன் பக்குவபட்டிருப்பான் என்றால் அந்த மகான்கள்/மதங்கள் தோன்றிய சில நூற்றாண்டுகளிலேயே இவை நடந்திருக்க வேண்டும். ஆனால் வரலாறு அப்படி சொல்லவில்லை.

இதில் கிறிஸ்துவ மதம் தன்னை வேகமாக சுத்திகரித்துக் கொண்டது உண்மை. ஆனால் இதற்கான காரணம் நிச்சயம் கிறிஸ்துவாக இருக்க மாட்டார். ஒரு பக்குவப்பட்ட மனிதன், `நான் இந்தளவு வளர்ந்ததற்கு எனக்கு இரண்டாம் கிளாஸ் பாடம் எடுத்த வாத்தியார்தான் காரணம்` என்று சொன்னால் அது எவ்வளவு அபத்தமாக இருக்குமோ அதே போன்றதுதான் இதுவும்.

கிறிஸ்து பிறந்து பல நூற்றாண்டுகளுக்கு பிறகும் பிற நாடுகளை ஆக்கிரமித்தும், சூறையாடியும், வெள்ளையர் கறுப்பர் என நிற துவேஷம் காட்டியும், அடிமைத்தனத்தை ஆதரித்தும் வந்த ஒரு இனம், அதன் பிறகு திடீரென பக்குவப்பட்டதற்கு அன்றைய சூழ்நிலைகள்தான் காரணமாக இருக்குமே தவிர, நிச்சயம் 1800 ஆண்டுகளுக்கு முன் பிறந்த ஒரு மனிதரோ அல்லது அவருடைய கொள்கைகளோ காரணமாக இருக்க முடியாது.

இன்றைய மனிதன் நாகரீகமாக சிந்திப்பதற்கு முக்கிய காரணம் சில நூற்றாண்டுகளுக்கு முன் ஆரம்பித்த தொழில்நுட்ப புரட்சியும், மதம் சார்ந்த கல்வி பின்னுக்கு தள்ளப்பட்டு அறிவியல் சார்ந்த கல்வி முக்கியத்துவம் பெற்றதுதான்.

நாய் வித்த காசு குலைக்காது என்று சொல்வார்கள். அதாவது பணம் பணம்தான். அது எந்த வகையில் வந்தாலும் அதற்கு மதிப்புதான். கல்வியும் அப்படிதான். ஒரு கொள்ளைக்காரன் ஊர் முழுக்க கொள்ளையடித்து தன பிள்ளைகளை படிக்க வைத்தால், பிள்ளைகள் தந்தையை பின்பற்றி கொள்ளைக்காரனாகும் வாய்ப்பை விட, அவர்களுக்கு கிடைக்கும் கல்வி அவர்களை சிந்திக்கும் மனிதர்களாக மாற்றும் வாய்ப்புதான் அதிகம்.

அதுதான் மேலைநாடுகள் விஷயத்தில் நடந்திருகிறது. உலகம் முழுக்க சூறையாடப்பட்ட பணம் அவர்களுடைய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி இருக்கிறது. கல்வி அறிவு என்றால் என்ன என்பது ஒரு விவாதமாக இருந்தாலும், அதை இந்த ஐரோப்பிய நாடுகள் சில நூற்றாண்டுகளுக்கு முன்பே அடைந்து விட்டன. அப்படியே தகவல் தொழில்நுட்பமும் வளர, ஆரோக்கியமான சிந்தனைகள் வேகமாக பரவ ஆரம்பித்தன. இதன் மூலம்தான் கிறிஸ்துவமதம் தன்னை மிக வேகமாக சுத்திகரித்துக் கொண்டது. இந்த மிக வேகமாக என்பதே குறைந்தது 200 வருடங்கள்.

கடவுள்? 

கடவுள் இருக்கிறாரா இல்லையோ, ஆனால் உலகம் அவர்களை ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதுதான் உண்மை. `கடவுள் இருக்கிறார், அவர் தவறு செய்பவர்களை தண்டிப்பார்` என்று சொல்லிக்கொண்டே நீதி மன்றங்களை அமைத்தன. `அவர் நம்மை காப்பாற்றுவார்` என்று சொல்லிக்கொண்டே ராணுவத்தை அமைத்தன. புத்தரின் போதனைக்கு கட்டுபடாத ஜப்பான் அமெரிக்காவின் அணுகுண்டுக்கு கட்டுப்பட்டது. இதற்கு என்ன அர்த்தம்? `யோக்கியன் வரான், சொம்பை சொம்பை எடுத்து உள்ளே வை` என்ற கதைதான். அதாவது ஒரு செய்தியை மறைமுகமாக சொல்கிறார்கள்.

அதேசமயம் கடவுள் இருந்துவிட்டு போகட்டும். ஒரு மனிதனுக்கு அவர் கொடுக்கும் நம்பிக்கையை எந்த ஒரு மருந்தாலும் தர முடியாது. எனவே அவர் தேவைப்படலாம். ஆனால் அவரை நம்புபவர்கள் செய்யும் செய்யும் அட்டூழியங்கள்தான் பிரச்சினைகளை உருவாக்குகிறது. இதை தடுக்க சட்டங்கள் தேவை.

கிறிஸ்துவ மதத்திற்கு தன்னை சுத்திகரித்துக் கொள்ள வாய்ப்பு கிடைத்த அளவுக்கு இந்து மதத்திற்கு கிடைக்கவில்லை. ஐம்பது ஆண்டுகளில் இது சாத்தியம் இல்லை. அனைவருக்கும் கல்வி வழங்கும் அளவுக்கு பொருளாதாரம் இல்லை. அப்படியே கல்வி கொடுக்க முடிந்தாலும் முதல் தலைமுறை கல்வியால் மன மாற்றம் உடனே வராது. இதுதான் இன்னமும் மக்களிடையே (மதம் மாறிய கிறிஸ்துவர்களிடமும்)  ஜாதி உணர்வு மறையாததன் காரணம். இந்த யதார்த்தத்தை மறைத்துவிட்டு குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க நினைக்கும் இவர்களை என்ன செய்வது?  

இந்தியா முழுமையான கல்வி அறிவை அடையும் வரை, படித்த பட்டதாரிகளை தவிர்த்து மற்றவர்கள் மதம் மாற தடை விதிப்பதுதான் ஒரே வழி.

கூடங்குளம்

கூடங்குளம் ஹேங்ஓவர் இன்னும் முடியவில்லை. அதிலும் சில வாரங்களுக்கு முன் ஒருவர் `உங்களுக்கு லோ லெவல் நாலேட்ஜ்` என்று பின்னூட்டம் இட்டிருந்தார். அது வேறு மனதுக்கு கஷ்டத்தை உருவாக்கிவிட்டது. அவர் உண்மையைத்தான் சொல்லி இருக்கிறார். அதாவது `நீங்கள் கற்றது கையளவு` என்ற உண்மையை ஆங்கிலத்தில் சொல்லி இருக்கிறார். இருந்தாலும் இப்படியா உண்மையை போட்டு உடைப்பது?

என்னிடம் பலர் `ஏன் இளைச்சி போயிட்ட?` என்று அடிக்கடி கேட்பார்கள். அவர்கள் கேட்கும் அன்று சாப்பாடு எனக்கு ஓட்டல்தான். ஆனால் `உங்களுக்கு அறிவு குறைவாக இருக்கிறது` என்று ஒருவர் சொன்னால் இதற்கு என்ன செய்வது? படிப்பதுதானே அறிவை வளர்க்க சிறந்த வழி? எனவே மீண்டும் அணுசக்தி குறித்து இணையத்தில் மூழ்கினேன்.

இது குறித்து பல தளங்களை படித்தாலும், அது குறித்த பதிவு போட்டு உங்களை போரடிக்க மாட்டேன். வீட்டுக்கு வீடு வாசப்படி என்று சொல்வார்கள் இல்லையா. அது போல் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு பிரச்சினை. அதனடிப்படையில் முடிவுகள். இந்த யதார்த்தத்தை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். கீழே சில சுட்டிகளை கொடுத்திருக்கிறேன். நேரமிருப்பவர்கள் போய் படிக்கலாம்.7 comments:

Anonymous said...

மாற்ற மனங்கழிய நின்ற மறையோனை
நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனை காண
இந்த பக்கத்தில் இருக்கும் வீடியோவை பாருங்கள்.
ஐயா இரகசியங்களை தெளிவாக விளக்கி உள்ளார்.

இங்கே சொடுக்கவும்

ஆசைஉண்டேல் வம்மின் இங்கே அருட்சோதிப் பெருமான்
அம்மையுமாய் அப்பனுமாய் அருளும்அரு ளாளன்

அருட்பெரும் ஜோதி அருட்பெரும் ஜோதி
தனிப் பெரும் கருணை அருட்பெரும் ஜோதி

"என் ராஜபாட்டை"- ராஜா said...

சரியா சொன்னிங்க ..

அன்புடன் :
ராஜா
.. இன்று

பதிவர்களையும், அஜித் ரசிகர்களையும் கேவலப்படுத்திய "வினவு" தளம்

மாயன் : அகமும் புறமும் said...

இப்போது இருக்கிற கிறிஸ்தவ மதம் இந்தியாவைப் பொறுத்தவரை இந்து மதச் சடங்குகளை பின்பற்றலாம் ஆனால் வழிபடுவது இயேசுவை என்று ஒரு கருத்தை உருவாக்கிவிட்டு பின்பற்றுகிறார்கள். இதை இந்து மதத்தினர் எதிர்ப்பது அபத்தமே...கேரளாவில் ஒரு கிறிஸ்துவ திருமணத்துக்கு போனபோது அசந்து விட்டேன். அங்கே இந்து கோவிலைப் போன்ற 'கொடி மரம்' இருந்ததுதான். ஆனாலும் சோப் விற்கிறவன் மாதிரி சில நேரங்களில் நேரம் காலம் தெரியாமல் வற்புறுத்தும் நபர்களைப் பார்த்தால் எரிச்சல் வரத்தான் செய்தது. நல்ல கட்டுரை.

சிவானந்தம் said...

@ சிவம் ஜோதி

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

@ ராஜா

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

@ மாயன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

//சோப் விற்கிறவன் மாதிரி சில நேரங்களில் நேரம் காலம் தெரியாமல் வற்புறுத்தும் நபர்களைப் பார்த்தால் எரிச்சல் வரத்தான் செய்தது//

இதைத்தான் நான் சொல்ல நினைத்தேன். ஒரே வரியில் சொல்லிவிட்டீர்கள்.

J.P Josephine Baba said...

குழந்தைப்பருவத்தில் வாசிக்கும் திறன் இருக்கும் தானே. சிறுவயதிலே அவர்களும் வாசித்து தெரிந்து கொள்ளட்டுமே.

சிவானந்தம் said...

//குழந்தைப்பருவத்தில் வாசிக்கும் திறன் இருக்கும் தானே. சிறுவயதிலே அவர்களும் வாசித்து தெரிந்து கொள்ளட்டுமே.//

வாசிக்கும் திறன் மட்டும் போதாது. நாம் படிப்பது உண்மையா என்று அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டால் அவற்றிற்கு விடை தேடும் அளவிற்கு அறிவு வளர்ச்சியோ அல்லது மாற்று வாதங்களை கேட்கும் அளவுக்கு வாய்ப்பாவது இருக்க வேண்டும்.

level playing field என்று சொல்வார்களே அந்த சூழ்நிலை இருந்தால் உங்கள் வாதம் பொருந்தும். அப்படி இல்லாத சூழ்நிலையில் இது சிறுவர்களின் அறியாமையை பயன்படுத்திக் கொள்ளும் அயோகியத்தனம்தான்.

Vetrimagal said...

I appreciate your reply to JJ.J.Baba.
Level playing field is the word,and thought.It is taking advantage of the weak, and giving literature to youngsters is .... cheap.

If the literature is to be distributed, why not to the adults, or persons above age of 18?
It looks like, the agenda behind is about brain washing, subtly of course.

There are too many questions behind this act of distributing pamphlets.

Post a Comment