!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Thursday, March 22, 2012

சந்தர்ப்பவாத தமிழன்!

தற்போதைய பரபரப்பு செய்தி இலங்கை அரசு மீதான மனித உரிமை குற்றச்சாட்டுதான். இந்த விஷயத்தில் தமிழக அரசியல் கட்சிகளின் ஒட்டு மொத்த ஆவேசம் இலங்கைத் தமிழனுக்கு ஆச்சர்யத்தையும், ஆவேசத்தையும் ஏற்படுத்தி இருக்கும். ஆனால் எனக்கோ ஒரு சொந்த அனுபவத்தை நினைவுபடுத்தியது.

(இது சொந்த கதை. தெரிந்தவர்கள் யாராவது படிக்கலாம். எனவே உள்ளதை உள்ளபடியே சொல்லமுடியாது. முத்துசாமியை முத்துலட்சுமியாக மாற்றி இருப்பேன். சில சம்பவங்களையும் இடம் மாற்றி இருப்பேன்.)

ஒரு உறவினர் கடைக்கு வந்தார். பேச்சலராக இருந்தேன். வந்தவர், `கல்யாணம் பண்ணிக்க.. வயசிருந்தாலும் ஏன் தனியா கஷ்டப்படனும்?... குடும்பம் பண்ணாலும் அதே செலவுதான் ஆகும்...` என்றார். இது அவ்வப்போது கிடைக்கும் உபதேசங்கள்தான். எனவே நான் பொருட்படுத்தவில்லை.

ஆனால் இந்த உபதேசமும், உபதேசம் செய்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டிருந்தது. இது எனக்கு புதுசு. அதிலும் ஒருவர் கொஞ்சம் உரிமையாகவே திட்டினார். எனக்கு ஒன்னும் புரியல. அப்போது அண்ணன் உயிரோடு இருந்தான். நியாயமாக பார்த்தால் முதலில் அங்கேதான் ஆரம்பிக்க வேண்டும். என் தலையை உருட்ட வேண்டிய அவசியம் இல்லை. ஏதோ இடித்தது. இருந்தாலும் ஏதோ ஒரு சந்தர்பத்தில் அவர்களின் பேச்சுக்கு மயங்கி பெண் பார்க்கவும் போயிருக்கிறேன்.

இங்கேதான் என் நினைவுகளில் கொஞ்சம் சிக்கல். எது முன்னே எது பின்னே நடந்தது என்று நினைவில்லை.

இந்த திடீர் பாசத்துக்கான பதில் கொஞ்ச நாள் கழித்து கிடைத்தது. அப்போது நான் ஒரு சீட்டு கட்டிக் கொண்டிருந்தேன். அந்த வயதில் தனியாக இருந்துக்கொண்டு, எந்தவித வழிகாட்டலும் இல்லாமல், நான் சீட்டு கட்டிவந்தது ஒரு அங்கீகாரம்தான். பொருளாதார ரீதியாக நான் ஒழுங்காக இருக்கிறேன் என்பதையும், தடம் மாறாமல் இருக்கிறேன் என்பதையும் சொல்லியது.

இந்த நேரத்தில்தான் ஒருவர் சொன்னார். `சீட்டை எடுத்து வேற எதிலையும் செலவு பண்ணிடாத. கல்யாண செலவுக்கு வச்சிக்க... அதுவே போதும்.. பத்தலன்னா நான் தர்றேன். அவசரமில்லை. பொறுமையா கொடு` என்றார். (இவர் `பொறுமையா கொடு` என்று சொன்னால் அதற்கு தாலி கட்டி பத்து நிமிடம் கழித்து தரலாம் என்று அர்த்தம். இல்லைஎன்றால் `மொய் வசூல் நானே பண்ணுகிறேன்`என்று உட்கார்ந்துவிடுவார்)

எனக்கு புரிந்து போனது. இவர்கள் கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்க பார்கிறார்கள். எனக்கு ஜாமீன் கொடுப்பதில் பிரச்சினை இல்லை. கல்யாண செலவும் பிரச்சினை இல்லை. ஆனால் அண்ணன் விஷயத்தில் அப்படி இல்லை. எனவேதான் எனக்கு கல்யாணம் பண்ணி வைத்து புண்ணியம் தேட கிளம்பிவிட்டார்கள்.

இங்கே ஒரு விஷயத்தை நான் சொல்லியாக வேண்டும். நமக்கு ஆதரவாக/ எதிராக பல வார்த்தைகள் சொல்லப்படலாம். ஆனால் அதை சொல்லும் நேரம்தான் அதை முக்கியமானதாக மாற்றுகிறது. `எடுக்கவா, கோர்க்கவா` என்பதும் மிக சாதாரணமான ஒரு வார்த்தை. ஆனால் அந்த வார்த்தையை துரியோதனன் சொன்ன போது, அது சொல்லப்பட்ட நேரத்தின் சூழ்நிலை காரணமாக அது வரலாற்றில் பதிந்து போனது.

`நான் இருக்கிறேன்..கவலைபடாதே!` என்ற வார்த்தையும் அப்படிப்பட்ட ஒன்றுதான். சரியான நேரத்தில் சொன்னால் நீங்கள் கடவுள். இடம் மாறி சொன்னால் நீங்கள் சந்தர்ப்பவாதி.

இவர்கள் என் மீது காட்டிய அக்கறையை சிறு வயதிலேயே காட்டி இருந்தால், தங்கை தற்கொலை செய்திருக்க மாட்டாள். ஒருவேளை அண்ணனும் (பின்னர்) அந்த முடிவை எடுத்திருக்க மாட்டான். எனவே இந்த திடீர் பாசம் எனக்கு அவர்கள் மீது கோவத்தைதான் வரவழைத்தது. ஆனால் இப்போது, அதுவும் என்மீது மட்டும் காட்ட வேண்டிய அவசியம் என்ன? வேறொன்றும் இல்லை. புண்ணியம் தேட வேண்டும், ஆனால் அதில் செலவு / ரிஸ்க் இருக்கக்  கூடாது.

இதற்கிடையில் நானும் கொஞ்சம் யதார்தவாதியாகி விட்டேன். அதாவது யாரையும் குறை சொல்வது நியாயமில்லை என்பதை புரிந்து கொண்டேன். ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் ஒருவர் தன் குடும்பத்தை காப்பாற்றுவதே ஒரு போராட்டம். அப்படி இருக்கையில் மற்றவர்களின் குழந்தையை ஆதரிப்பது என்பது சிரமமான காரியம். எனவே எந்தவித வருத்தமும் இல்லாமல் எல்லோரிடமும் பழகினேன்.

ஆனால் நோகாமல் நொங்கு சாப்பிடும் வாய்ப்பு கிடைத்தவுடன், அதற்கு இவர்கள் போட்ட போட்டி இருக்கே... அடடடடா... இதை என்னால் சில வார்த்தைகளில் விவரிக்க முடியாது. தனியாக ஒரு பதிவு போட்டுதான் சாட்டையை சுழற்றனும். காரணம் அந்த அளவுக்கு நான் நொந்து நூலாகி இருக்கிறேன்.

அதிலும் ஒருவர் சொன்ன வார்த்தை.... இலங்கை தமிழர்களுக்காக கலைஞர் 3 மணிநேர உண்ணாவிரதம் இருந்தாரே, அது போன்ற போலி பாசத்தை காட்டிய வார்த்தை. அதன் பிறகுதான் எனக்கு இவர்கள் மீது வெறுப்பு வந்தது.

அக்கறை என்பது ஒருவன் நடுத்தெருவில் இருக்கும்போது வரவேண்டும். நேரம்கெட்ட நேரத்தில் வந்தால் அதற்கு மரியாதை இல்லை. இது அவருக்கு தெரியவில்லை. பாசத்தை காட்டுகிறேன் என்று அவர் பாசத்தை கொட்டோ கொட்டென்று கொட்ட, அது அப்படியே வெறுப்பாக மாறியதை அவர் உணரவில்லை.

இந்த வெறுப்பு எந்த அளவுக்கு போனதென்றால், நீங்களெல்லாம் கல்யாணத்துக்கு யாருக்கு பத்திரிக்கை வைக்க வேண்டும் என்று லிஸ்ட் போடுவீர்கள். நானோ யாருக்கெல்லாம் வைக்கக் கூடாது என்று லிஸ்ட் போட்டேன்.

அடுத்து சில வருடங்களுக்கு பிறகு அண்ணனும் கதையை முடித்துக் கொள்ள, மீண்டும் என் தலை உருண்டது. `ரெண்டு பேரும் போய்ட்டாங்க. நீயும் இப்படியே இருந்தா வம்சம் அழிஞ்சிரும்` என்று கடுமையான உபதேசம். நானோ வைராக்கியமே எடுத்துவிட்டேன். கல்யாணம் பண்ணாம குட்டிச் சுவரா போனாலும் சரி, அந்த புண்ணியத்தை மட்டும் இவங்களுக்கு கொடுக்கக் கூடாது என்று. இதை படிக்கும் உங்களுக்கு இது விநோதமாக தெரியலாம். ஆனால் கோபம் வந்துவிட்டால் அப்போது நாம் எடுக்கும் முடிவுக்கு லாஜிக் பார்க்க முடியாது.

ஒரு பதிவில் ஒரு ஈழத்தமிழர் பின்னோட்டம் இட்டிருந்தார். `இந்தியா எனும் நாசகாரி நாட்டின் உதவி இல்லாமல் நாங்கள் உயிர்த்தெழுவோம்` என்று சவால் விட்டிருந்தார். இது சாத்தியமே இல்லை. இருந்தாலும் இதை படித்தவுடன் எனக்கு என்னுடைய இந்த சபதம்தான் நினைவுக்கு வந்தது. நமக்கு யார் மீதாவது கோபம் வந்தால் அவர்களின் உதவி இல்லாமலே சாதிக்க வேண்டும் என்ற வெறி வரும்.

அதன் பிறகு வேறு ஒரு வாடிக்கையாளர்/நண்பர் வந்தார். இவருக்கும் புண்ணியம் தேட வேண்டும் என ஆசை. சரி போனால் போகிறது அந்த புண்ணியத்தை இவருக்கு கொடுப்போம் என நினைத்து, நீங்க `முதலியார் இல்லையே?` என்று கேட்டு உறுதிபடுத்திக் கொண்டு, இவருக்கு மட்டும் தலையாட்டினேன்.

இவர் விடிய விடிய கதையை கேட்டுட்டு, `நீங்க உங்க பேரண்ட்சை கூட்டுகிட்டு அடுத்த வாரம் வந்துடுங்க. போய் பாக்கலாம்` என்றார். நான் ஙே என்று முழித்தேன். `யாரும் எந்த ஆணியையும் பிடுங்க வேணாம். நானே பாத்துகிறேன்` என்று மனதுக்குள் கறுவிக் கொண்டு அந்த சப்ஜட்டுக்கு அதோடு முற்றுப்புள்ளி வைத்தேன்.

அந்த சமயம் லாட்டரி வியாபாரம். அதன் பிறகு சில மாதம் நான் தமிழக அரசின் பம்பர் டிக்கட்டை விற்காமல் நானே வைத்து பார்த்தேன். கோடீஸ்வரன் ஆகிவிட்டால் என்னுடைய சபதம் நிறைவேறும் என்ற ஆசை.

அதன் பிறகு ஷேர் மார்கெட்டும், அரசியலும் என் சிந்தனையை ஆக்கிரமித்து, அது கலர் கலராய் கனவுகளை காட்ட, என்னுடைய இலக்கு திசை மாறிப்போனது.

இலங்கை

இலங்கை கதையும் இப்படித்தான். தமிழக அரசியல் கட்சிகளின் தற்போதைய பாசம் நேரங்கெட்ட பாசம். சரியான பச்சை சந்தர்பவாதம். இதை பார்த்து இலங்கைத்தமிழன் என்ன நினைப்பானோ?

அதேசமயம் இலங்கைத் தமிழனை நடுதெருவுக்கு கொண்டுவந்ததில் எல்லோருக்கும் பங்கிருக்கலாம். ஆனால் இங்கே நான் திட்டப் போவது தமிழக அரசியல் கட்சிகளை மட்டும்தான். புலிகளை திட்ட முடியாது. இந்தியாவோ பல மாநிலங்களை கொண்ட ஒரு பெரிய நாடு. இன்று ஒரு தகவல் மாதிரி, அதற்கு தினம் ஒரு தலைவலி.

எனவே தமிழக தலைவர்கள்தான் இந்திய தமிழர்களுக்கு மட்டுமின்றி மற்ற நாடுகளில் உள்ள தமிழர்களுக்கும் வழிகாட்டியாக இருக்க வேண்டும். அவர்களின் பிரச்சினைகளை புரிந்து கொண்டு அதை மத்திய அரசுக்கு புரிய வைக்க வேண்டிய விதத்தில், கவனிக்கவும், `புரியவைக்க` வேண்டிய விதத்தில் பேசி இருக்க வேண்டும். ஆனால் நிஜத்தில் தமிழக மக்களுக்கே சரியான தலைமையை தராதவர்களிடம் எதை எதிர்பார்ப்பது?

`நூலகத்துக்காக தீக்குளிப்பேன்`என்றார் கலைஞர். ஆனால் இலங்கைத் தமிழர்களுக்காக 3 மணி நேர உண்ணாவிரதம் இருந்தார். இரண்டும் நாடகம்தான். ஆனால் அந்த நாடகத்தில் கூட அவர் பயன்படுத்திய வார்த்தை, அவர் எதை சீரியசாக பார்கிறார் என்பது தெரிகிறது. 

இங்கே கூடங்குளம் பிரச்சினையை அம்மா கையாண்ட விதம், இவர் எப்பேர்பட்ட நிர்வாகி என்பதை காட்டியது. சரியான முடிவை அவர் எடுத்திருந்தாலும், நான் உங்களை (அணு உலை எதிர்பாளர்களை) ஆதரிக்கிறேன் என்ற தோற்றத்தை ஏற்படுத்தி அவர்களை நம்ப வைத்து கழுத்தறுத்திருக்கிறார். இதே தவறைத்தானே இந்தியா இலங்கை விஷயத்தில் செய்தது. கடைசியில் அதற்கு மிகப் பெரிய விலையையும் கொடுத்தது.

நமக்கு ஆதரவாக பலம் பொருந்தியவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கை எந்த ஒரு போராட்டத்தையும் பலமாக்கும். இலங்கை தமிழர்கள் மத்தியிலும், அணு எதிர்பாளர்கள் மத்தியிலும் அந்த தவறைத்தான் இந்தியத் தலைவர்கள் செய்தார்கள். இவர்களின் ஆதரவு நமது போராட்டம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையை அவர்களுக்குள் விதைத்து, அது கைவிட முடியாத கனவாக மாறிய பிறகு, கடைசியில் நம்பியவர்களே யதார்த்தமாக முடிவெடுக்கும் போதுதான் அது துரோகமாக பார்க்கபடுகிறது.

எந்த ஒரு போராட்டமும் யதார்த்தத்துக்கு பலியாகும் என்ற யதார்த்தத்தை மக்கள் புரிந்து கொள்வதில்லை. தலைவர்களுக்கு தெரியும். ஆனால் சுயநல அரசியல் அதை வெளிப்படையாக பேசவிடாமல் தடுகிறது.

`வெகுண்டெழுந்தது தமிழினம். பணிந்தது மத்திய அரசு.` நக்கீரனில் இதுதான் வால் போஸ்டர். சிரிப்பாக இல்லை. மத்திய அரசை மிரட்டுவதாகட்டும், பிரபாகரனுக்கு நிலைமையை புரியவைப்பதாகட்டும், செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாமல் இப்போது இலங்கை தமிழர்கள் மீது போலி பாசம் காட்டுவதால் என்ன பயன்?

பொய்ப் பாசம் காட்டும் மனிதர்களை பார்த்தால் எனக்கு வெறுப்புதான் வருகிறது. எனது இந்த அனுபவங்களுக்கு பிறகு நான் மனிதர்களை படிக்க ஆரம்பித்தேன். விதிவிலக்காக சில நல்ல மனிதர்களை சந்தித்திருக்கலாம். ஆனால் தமிழனே இப்படிப்பட்டவன்தானோ என்ற சந்தேகம் எனக்குள் கேள்வியாகவே மாறிவிட்டது.

10 comments:

Anonymous said...

vanakkam thiru ra.sivaanandham avargale migavum nerththiyaana padhivu. thamizhargale sindhanai seiveer aavesem veendaam edhai seiyya vendumo adhai urudhiyaaga seivom nandri
surendran

வவ்வால் said...

சிவானந்தம்,

வணக்கம்,

மிகத்தெளிவாக யதார்த்தம் என்ன என்பதை சொல்லிவிட்டீர்கள்.உங்கள் வாழ்கை அனுபவம், நீங்கள் எந்த அளவுக்கு அனுபவப்பட்டு வாழ்க்கையை எதிர்க்கொண்டீர்கள் என்பதைக்காட்டுகிறது.மனம் தளராதீர்கல் என்பதை தவிர வேறு எதுவும் சொல்ல தெரியவில்லை.

அமெரிக்காவே பெரும் போர்க்குற்றவாளி அது இன்னொரு போர்க்குற்றவாளியை விசாரிக்க ,தமிழகஅரசியல்வாதிகள் பொங்குவது எல்லாமே பச்சை சந்தர்ப்பவாதமே.

கூடங்குளத்தில் இது தான் நடக்கும் என கடந்தாண்டு எழுதியப்பதிவில் சொன்னதற்கு என்னை துரோகி போல பார்த்தார்கள் மக்கள் :-))

Anonymous said...

I totally agree with you.

Eezhathan

Sankar Gurusamy said...

சந்தர்ப்பவாதமே யதார்த்தம் என உணர்த்தும் பதிவு.. தங்கள் அனுபவங்கள் கண்ணீரை வரவழைத்தாலும் நம் எல்லோருடைய வாழ்விலும் இந்த சந்தர்ப்பவாத யதார்த்தம் என்றாவது ஒருநாள் கதவு தட்டி இருக்கும். இதுதான் நிதர்சனம்.

பகிர்வுக்கு மிக்க நன்றி..

http://anubhudhi.blogspot.in/

சிவானந்தம் said...

@ Anonymous said...

//vanakkam thiru ra.sivaanandham avargale migavum nerththiyaana padhivu. thamizhargale sindhanai seiveer aavesem veendaam edhai seiyya vendumo adhai urudhiyaaga seivom nandri
surendran///

வாங்க சுரேந்தரன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிவானந்தம் said...

@ வவ்வால் said...

வாங்க வவ்வால்.

இந்த டென்ஷனான வாழ்க்கையிலும் உங்களின் சிட்டுக் குருவி , எலி லேகியம் கருத்தை படித்து சிரித்தேன். பதிவில் கவனமாக இருந்ததால் எங்கேயும் பின்னூட்டம் பக்கம் வரமுடியவில்லை.

//அமெரிக்காவே பெரும் போர்க்குற்றவாளி அது இன்னொரு போர்க்குற்றவாளியை விசாரிக்க ,தமிழகஅரசியல்வாதிகள் பொங்குவது எல்லாமே பச்சை சந்தர்ப்பவாதமே.//

இது எல்லாம் நாடகமாக இருந்தாலும், இந்த தீர்மானம் குறைந்தபட்ச லாபத்தை கொடுத்தாலும் நல்லதுதான். அதேசமயம் இது என்கவுண்டர் மாதிரி. நல்ல போலீஸ்தான் அந்த காரியத்தை செய்யனும்ன்னு எதிர்பார்க்க முடியாது. எனவே அமெரிக்காவை விட்டுவிடுவோம். ஆனால் இதில் தமிழக அரசியல்வாதிகளின் காமெடிதான் சகிக்கமுடியவில்லை.

//கூடங்குளத்தில் இது தான் நடக்கும் என கடந்தாண்டு எழுதியப்பதிவில் சொன்னதற்கு என்னை துரோகி போல பார்த்தார்கள் மக்கள் //

வவ்வால், அரசியலே இப்படித்தான். நாட்டின் விடுதலைக்காக காந்தியும், நேதாஜியும் போராடினார்கள். பாதைகள்தான் வேறு, நோக்கம் ஒன்றுதான். கூடங்குளம் பிரச்சினையும் அப்படிதான்.

ஒருவகையில் பார்த்தால் இந்த ஆபத்துக்களை உணர்ந்த பிறகும், உலக அளவில் (சதவிகித அடிப்படையில்) அணுமின் நிலையங்களை ஆதரிப்பவர்கள்தான் அதிகம். எனவே நாம் நமது மனசாட்சிக்கு மட்டும் பயப்படுவோம்.

சிவானந்தம் said...

@ Anonymous said...
//I totally agree with you. Eezhathan //

வாங்க நண்பரே உங்கள் கருத்துக்கு நன்றி.

@ Sankar Gurusamy said...

//சந்தர்ப்பவாதமே யதார்த்தம் என உணர்த்தும் பதிவு.. தங்கள் அனுபவங்கள் கண்ணீரை வரவழைத்தாலும் நம் எல்லோருடைய வாழ்விலும் இந்த சந்தர்ப்பவாத யதார்த்தம் என்றாவது ஒருநாள் கதவு தட்டி இருக்கும். இதுதான் நிதர்சனம்.//

வாங்க சங்கர். வாழ்க்கையில் ஒவ்வொரு அனுபவமும் பாடம்தான். நல்ல மனிதனாக மாற மோசமான அனுபவங்களும் தேவை என்ற யதார்த்தத்தை இவை நமக்கு கற்றுக் கொடுகின்றன.இது அன்று வலித்தாலும் இன்று நான் அதை பாடமாக ஏற்றுக்கொண்டேன்.

bandhu said...

//நமது போராட்டம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கையை அவர்களுக்குள் விதைத்து, அது கைவிட முடியாத கனவாக மாறிய பிறகு, கடைசியில் நம்பியவர்களே யதார்த்தமாக முடிவெடுக்கும் போதுதான் அது துரோகமாக பார்க்கபடுகிறது.//
மிக அழகாக எழுதியிருக்கிறீர்கள்! 100% True!

Vetirmagal said...

In this young age, you have understood lots of realities of life. With this experience you can only go forward.
Clear, and true words. The society is becoming more and more selfish. I wonder where it will go?

சிவானந்தம் said...

வாங்க வெற்றிமகள். உங்கள் கருத்துக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

அறிவை வளர்ப்பதில் புத்தகங்களின் பங்குதான் அதிகம் என நான் நினைக்கிறன். அந்த வகையில் நான் தொடர்ந்து வாசித்து வருகிறேன். ஆனால் ஒரு ஆரோக்கியமான குடும்ப அமைப்பில் வாழ்பவர்களுக்கு வாழ்கையை அனுபவிப்பதிலும், கடமைகளை செய்வதிலுமே பெரும்பாலான நேரம் விரயமாவதால் அவர்களுக்கு வாசிக்க நேரம் இருப்பதில்லை. இங்கேதான் நான் மற்றவைகளை ஓவர்டேக் செய்திருக்கலாம்.

அதேசமயம் எனக்கு படிக்க நிறைய நேரம் இருக்கிறது என்பது, அதிர்ஷ்டம் துரதிருஷ்டம் இரண்டும் கலந்த ஓன்று.

Post a Comment