!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, September 17, 2012

கூடங்குளம்: திரிக்கப்பட்ட உண்மைகள்

கூடங்குளம் மீண்டும் பரபரப்பாகிவிட்டது. இது குறித்து சில பதிவுகள் எழுதி இருக்கிறேன். இருந்தாலும் செய்திகளில் சிலவற்றை மட்டுமே உண்மையாக இதன் எதிர்பாளர்கள் பரப்புரை செய்யும்போது, அதற்கு பதில் எழுத வேண்டிய அவசியம் வந்துவிடுகிறது.

அணுஉலை விற்கும் நாடுகள் தங்களுக்கு ஒரு கொள்கை மற்றவர்களுக்கு ஒரு கொள்கை என ஓரவஞ்சனை  செய்யவில்லை. எந்த ரிஸ்கை அவர்கள்  எடுக்கிறார்களோ அதேதான் நமக்கும். அதுமட்டுமின்றி இந்த திட்டத்தை நாட்டின் முன்னணி கட்சிகள் அனைத்தும் ஆதரிக்கின்றன. எனவே நாடு இந்த யதார்த்தமான பாதையிலிருந்து விலக முடியாது.

ஆனால் இதுவரை இல்லாத அளவு இந்தியா ஊழல் செய்திகளால் திக்கி திணறுகிறது. அரசியல்வாதிகளின் மீதான நம்பிக்கையோ அதலபாதாளத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் அவர்கள் நல்லதே சொன்னாலும்  மக்கள் அதை சந்தேகத்தோடுதான் பார்பார்கள். அதுதான் இங்கே சிக்கல்.

இன்னொரு பக்கம், நாம் யார் மீதாவது நம்பிக்கை வைத்துவிட்டால் அவர்கள் வார்த்தையை அப்படியே நம்புவோம். அந்த யதார்த்தமும் இங்கே அரசுக்கு எதிராக இருக்கிறது. இந்த யதார்த்தத்தை தாண்டி அந்த மக்களுக்கு நிஜத்தை புரியவைக்க சரியான நபர்கள் இன்று இல்லை. இதுதான் நாட்டின் துரதிரிஷ்டம்.

இனி நான் படித்த சில கருத்துக்களும் அதற்கு பதிலும்

ஒரு பதிவில், `உலகமே கைவிட்டுவிட்ட இந்த விஷயத்தில் நாம் ஏன் இறங்கவேண்டும்` என்ற வார்த்தைகள் இருந்தது. இது ஒன்றே நிரூபிக்கும், அவர்கள் எதையும் (உண்மைகளை) தேடி படிக்கும் மனநிலையில் இல்லை என்பதை.

உலகம்?

உலகம் என்றால் அது ஜப்பானும் ஜெர்மனியும் மட்டும்தானா? மற்ற நாடுகளெல்லாம் இந்த லிஸ்டில் வராதா? என்ன அபத்தம் இது? இன்றைய நிலவரப்படி 30 க்கும் மேற்பட்ட நாடுகள் அணுஉலைகள் வைத்திருகின்றன. அதில் இரண்டு நாடுகள் விலகப்போவதாக கொள்கை முடிவு எடுத்திருக்கின்றன.

இந்த கொள்கை முடிவும் அரசியல் கட்சிகளின் கொள்கை போன்றதே. கொஞ்சம் பலவீனமாகிவிட்டால் கொள்கையை கைவிட்டு முரண்பட்ட கூட்டணி எல்லாம் வைப்பார்கள். இன்னும் பத்து ஆண்டுகளில் மாற்று எரிபொருள் நம்பிக்கை தரவில்லை என்றால், இங்கேயும்  பழைய கிழவி கதவை திறடி கதைதான். 

ஒரு வாதத்துக்கு இந்த நாடுகள் தங்கள் கொள்கையில் உறுதியாக இருக்கிறார்கள் என்று பார்த்தாலும், கணக்குப்படி மற்ற 90 சதவிகித நாடுகள் இதை இன்னும் கைவிட தயாராக இல்லை. இதுதான் யதார்த்தம்.

ஆனால், `யானை அசுவத்தாமா மரணம்` என்ற செய்தியில் யானை என்ற வார்த்தை லாவகமாக மறைக்கப்பட்டதைப் போல், இவர்களும் மக்களிடம், `இரண்டு நாடுகள் கைவிடும் முடிவை எடுத்திருகின்றன என்ற செய்தியை மட்டும் சொல்கிறார்கள். பெரும்பான்மையான நாடுகள் அதை கைவிடும் நிலையில் இல்லை என்ற உண்மை இங்கே மறைக்கபடுகிறது.

லாபம்?

இந்த திட்டத்தில் லாபம்தாம் முக்கியமாம். இது இவர்களின் அடுத்த பொய். வியாபாரம் என்று வந்துவிட்டால் அங்கே லாபம் இருக்கும். இருந்தாலும் வெறும் பணத்துக்காகவா அரசு இந்த பாதையில் போகிறது?

சரி.. இங்கே வியாபார யதார்த்தம் என்ன? லாபம் மட்டுமே குறிகோளாக கொண்ட  வியாபாரிகள் மக்களை ஏமாற்ற நேரம் காலம் பார்ப்பதில்லை. மஞ்ச சட்டை போட்டவனத்தான் ஏமாத்தணும், வெள்ளை சட்டை போட்டவனை ஏமாத்தக்கூடாது என்றும் நினைப்பதில்லை. அவர்களுக்கு லாபம்தான் முக்கியம். எவன் கிடைத்தாலும் சரி எப்போது கிடைத்தாலும் சரி, உடனடியாக அறுத்துவிடுவார்கள்.

அணுஉலை விற்பவர்களுக்கும் லாபம் மட்டுமே குறிகோளாக இருந்தால், இந்த வியாபாரத்தை இந்தியாவுக்கு இவ்வளவு நாள் தராமல் ஏன் இழுக்க வேண்டும்? அதிலும் இந்தியாவுக்கு மட்டும் ஏன்? கேட்கும் நாடுகளுக்கெல்லாம் கொடுத்து பெட்டியை நிரப்ப வேண்டியதுதானே? 

ஒரு விஷயம் ஆபத்து என தெரிந்தும் நாம் ஏன் அதை தேர்ந்தெடுக்க வேண்டும்?

இதை புரிந்துகொள்ளத்தான் ஆறறிவு வேண்டும். நாம் எடுக்கும் முடிவுகள் முட்டாள்தனமானதா யதார்த்தமானதா என்பதை நாம் அந்த முடிவை எடுக்கும் சூழ்நிலைகள்தான் தீர்மானிக்கிறது.

ஓடும் பஸ்ஸில் ஏறாதே என்று உபதேசிக்கிறோம். ஆனால் ஓடும் டிரைனிலிருந்தே மக்கள் குதித்ததை கேள்விப்பட்டீர்களா? தற்கொலை முயற்சி அல்ல. உயிரை காப்பாற்றவே குதித்திருக்கிறார்கள். அதுவும் இந்தியாவில்தான். இது எப்படி இருக்கு?

ஒரு டிரைன் தீப்பிடித்து எரிகிறது. வண்டியும் நிற்பதுபோல் தெரியவில்லை. இந்த சூழ்நிலையில் எது புத்திசாலித்தனம்? வண்டி போன வேகத்தை கணக்கிட்டவர்கள் இங்கே இருந்து சாவதை விட குதிப்பது புத்திசாலித்தனம் என குதித்திருகிறார்கள். அதேபோல் பெங்களூருவில் ஒரு பில்டிங் தீப்பிடித்தபோது மாடியிலிருந்து சிலர் குதித்த செய்தியையும் படித்தேன்.

வேறு வழி இல்லாத போது, எதில் ரிஸ்க் குறைவு என்ற அடிப்படையில் நாம் முடிவெடுக்கிறோம். கடந்த சட்டமன்ற தேர்தலிலும் அதே தியரியின் அடிப்படையில்தான் மக்கள் ஜெயலலிதாவை ஆதரித்தார்கள்.

நெருங்கி வரும் ஆபத்து 

தொடர்ந்து எரிபொருளை நாம் பயன்படுத்துவதாலும், அதன் பக்கவிளைவாக பூமி வெப்பமாகுவதாலும், ஒரு நிச்சயமான அழிவை நோக்கி நாம் போய்கொண்டிருகிறோம். அந்த ஆபத்தோடு ஒப்பிடும்போது அணு உலைகள் ஏற்படுத்தக்கூடிய ஆபத்து குறைவு என்று உலக நாடுகள் நினைக்கின்றன.

இந்தியாவில் மக்கள் தொகை அதிகமாகவும், வளரும் நாடாகவும் இருப்பதால் எரிபொருள் இங்கே மிக அதிக அளவில் தேவைப்படும். அந்த வகையில் அதன் விலை ஏற்றத்திற்கும், புவி வெப்பமயமாவதிலும் இந்தியாவின் பங்கு அதிகமாக இருக்கும் என்பதால், இந்தியாவுக்கு மட்டும் யுரேனியம் தர விதிவிலக்கு அளித்திருகின்றன. இதுதான் உலக நாடுகள் இந்தியா மீது கரிசனம் காட்டுவதன் காரணம். 

இதில் புவி வெப்பமயமாதல்  கூட உலகளாவிய தலைவலி. யாருக்கு பாதிப்பு அதிகம் என தெரியாது. ஆனால் எரிபொருள் பற்றாக்குறையாலும் அதன் விலை ஏற்றத்தாலும் இந்தியா திண்டாடப்போவது நிச்சயம்.

சமீபத்தில் ஒரு விவாதத்தில் மாட்டிகொண்டு, தங்கம் விலை ஏற்றம் குறித்து ஆராய்ந்தேன். கடந்த பத்து  ஆண்டுகளில்தான் இது அபார வளர்ச்சி கண்டிருக்கிறது. நிலங்களின் விலை ஏற்றமும் அப்படித்தான்.  பெட்ரோலியப் பொருட்களும் விலை ஏறிக்கொண்டிருகின்றன. நாளை இன்னும் வேகமாக ஏறலாம். அப்படி ஏறினால் இந்தியாவின் கதி? 

மற்ற நாடுகளின் எரிபொருள் கொள்கை பல ஆதாரங்களை சார்ந்திருகிறது. பொருளாதார உச்சத்தையும் அவர்கள் எட்டிவிட்டார்கள். தேவைகள் இலக்குகள் எல்லாம் அவர்களுக்கு தெரிந்துவிட்டது. பலவிதமான ஆதாரங்களில் ஓன்று போனாலும் மற்றவை  ஓரளவு சமாளிக்கும் என்ற நிலையில் அவர்கள் இருக்கிறார்கள். இந்த நிலைமையிலும் அவர்கள் கவலைப்படுகிறார்கள்.

ஆனால் நாமோ எரிபொருளுக்காக அநியாயத்துக்கு நிலக்கரி மற்றும் கச்சா எண்ணெயை சார்ந்திருக்கிறோம். இது எவ்வளவு நாளைக்கு நம்மை காப்பாற்றும்? இங்கே நமக்கு நாலுவித ஆதாரம் இல்லை. ஆதாரமே நிலக்கரியும் கச்சா எண்ணெயும்தான். எனவேதான் அரசு விழித்துக்கொண்டு இந்தியாவின் எரிபொருள் தேவை பலவித ஆதாரங்களை சார்ந்திருக்க வேண்டும் என முடிவெடுத்திருக்கிறது

வில்லன் யார்?

அப்படி யாரையும் அடையாளப்படுத்த முடியாது. அரசு தரப்பில் அலட்சியம். மக்கள் தரப்பில் அறியாமை. இவைதான் இங்கே வில்லனாக இருகின்றன.

அரசு தரப்பில் இரண்டு குறைகள் தெரிகிறது. ஓன்று: சாதாரண நோயாக இருந்தால் டாக்டர் நமக்கு விளக்கம் அளிப்பதில்லை. மருந்து மாத்திரை மட்டும் கொடுத்து அனுப்பிவிடுவார். ஆனால் ஆபரேஷன் செய்யும் சூழ்நிலை என்றால், இங்கே பேஷண்டுக்கு அதன் அவசியத்தை புரியவைக்க வேண்டும். அரசு இங்கேதான் அலட்சியமாக இருந்துவிட்டது.

அதேசமயம் இந்தியா இன்று தினம் ஒரு தலைவலியை சந்திக்கிறது. இதில் அரசியல்வாதிகளின் சிந்தனையும் சிதறிப்போகிறது. எதற்கு முக்கியத்துவம் கொடுப்பது என தெரியாமல் அவர்கள் விழி பிதுங்கி இருக்கிறார்கள்.

அரசின் இரண்டாவது குறை, அதன் அணுஉலை கொள்கை. இந்தியா இந்த ஆபத்தான பாதையில் போக வேண்டிய நிர்பந்தத்துக்கு வந்த பிறகு, அந்த ரிஸ்கை அனைத்து (கடற்கரை )மாநிலங்களும் எடுக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்க வேண்டும். ஒரு மாநிலம் மறுக்க, இன்னொரு மாநிலம் ஏற்க வேண்டும் என்பது முரண்பாடாக இருக்கிறது. விகிதாச்சாரப்படி எல்லா மாநிலங்களில் அணுஉலைகள் அமைத்தால் இதன் வீரியம் குறைந்துவிடும்.

அதேசமயம் சில விஷயங்களை ஆளுக்கு இரண்டு இட்லி என பங்கு போடமுடியாது. ஆனால் `பக்கத்து மாநிலம் மறுக்க, எங்களுக்கு மட்டும் ஏன்?` என மக்கள் கேள்வி கேட்கும்போது அதற்கு நியாயமான பதில் தேவை.   

கூடங்குளம் மக்கள் 

இதில் மக்களையும் குறை சொல்ல முடியாது. நாட்டின் கஷ்டத்தை பங்கு போட மக்கள் தயாராகவே இருப்பார்கள். கூடங்குளம் மக்களும் அப்படித்தான். ஆனால் நாடு சந்தித்துகொண்டிருக்கும் நிர்பந்தங்களும் இதன் அவசியமும் அவர்களுக்கு புரியவில்லை. 

இங்கே இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. இரண்டு ஆபத்துக்களை கண்கூடாக பார்த்த பிறகு இதில் எது பரவாயில்லை என்று மக்கள் முடிவெடுக்கலாம். அணு விபத்துக்களை உலகம் பார்த்துவிட்டது. எனவே மக்கள் அதன் மீதான பயத்தில் இருக்கிறார்கள்.

ஆனால் புவி வெப்பமயமாதல் மற்றும் எரி பொருள் பற்றாகுறையால் நாம் சந்திக்க இருப்பவை எதிர்கால பிரச்சினைகள். அரசுகளால் உணரப்படுகிறது. மக்களை பொறுத்த வரையில் அது இன்னும் பேப்பர் அளவில் இருக்கிறது. அதை நாம் நேரடியாக உணருவோம்,அப்போது இரண்டில் எது பெரிய ஆபத்து என முடிவு பண்ணுவோம் என்று மக்கள் நினைக்கலாம்.

அப்படி ஒரு நிலை வரும்போது, மீளமுடியாத ஒரு புதைக் குழியில் நாம் சிக்கி இருப்போம். அது மக்களுக்கு தெரியவில்லை. அதை எப்படி அவர்களுக்கு உணர்த்துவது என்பதும் புரியவில்லை.


18 comments:

சாய்ரோஸ் said...


ஆனால் இதுவரை இல்லாத அளவு இந்தியா ஊழல் செய்திகளால் திக்கி திணறுகிறது. அரசியல்வாதிகளின் மீதான நம்பிக்கையோ அதலபாதாளத்தில் இருக்கிறது. இப்படிப்பட்ட நிலையில் அவர்கள் நல்லதே சொன்னாலும் மக்கள் அதை சந்தேகத்தோடுதான் பார்பார்கள். அதுதான் இங்கே சிக்கல்
அரசின் இரண்டாவது குறை, அதன் அணுஉலை கொள்கை. இந்தியா இந்த ஆபத்தான பாதையில் போக வேண்டிய நிர்பந்தத்துக்கு வந்த பிறகு, அந்த ரிஸ்கை அனைத்து (கடற்கரை )மாநிலங்களும் எடுக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக இருக்க வேண்டும். ஒரு மாநிலம் மறுக்க, இன்னொரு மாநிலம் ஏற்க வேண்டும் என்பது முரண்பாடாக இருக்கிறது.

Really a very good balanced approach..நிறைய கட்டுரைகள் படித்திருக்கிறேன்... சிலது எதிர்ப்பாகவும்... சிலது ஆதரவாகவும்... இரண்டுமே கண்மூடித்தனமாக எழுதப்பட்டிருக்கும்... ஆனால் உங்களுடைய கட்டுரை மிகத்தெளிவான விவாதங்களோடு எழுதப்பட்டிருக்கிறது... மிக அருமை தோழரே... தரமான கட்டுரை இது... நிறையபேரைச்சென்று சேரவேண்டிய கட்டுரையிது...

வவ்வால் said...

சிவானந்தம்,

நடுநிலைமைவாதின்னு ஒரு நிலையில் இருந்து கொண்டு எழுதுவதாகப்படுகிறது.

அணு கொள்கையும் தவறு, மக்களின் போராட்டமும் தவறு!!!

அரசை பற்றி அப்புறம் சொல்கிறேன், இங்கே அணு உலைக்கெதிரான போராட்டமாக இது தோன்றவில்லை, இதன் பின் ஒரு மறைமுக கோரிக்கை இருக்கிறது, அது நிறைவேறினால் போராட்டம் நின்றுவிடும்.

அரசு 20 ஆண்டுகளாக கட்டிக்கொண்டே தான் இருக்கிறது இன்னும் உற்பத்தி ஆகவில்லை,அப்படியே ஆனாலும் 2000 மெகாவாட் தான் ஆகும்.

ஆண்டுக்கு 100 மெகாவாட் என சூர்ய மின்சாரம் தயாரிக்க ஆரம்பித்து இருந்தாலே 2000 மெகாவாட் நமக்கு இப்போது கிடைத்து கொண்டிருக்கும்.

நம் நாட்டில் ஆண்டுக்கு ன்300 நாட்களுக்கு நல்ல வெயில் அடிக்கிறது, ஒரு மெகாவாட் சூரிய மின்சாரம் தயாரிக்க 5 கோடி முதல் 10 கோடி ஆகும். முறையைப்பொறுத்து.

இப்போது குஜராத்தில் தான் நாட்டிலேயெ பெரிய சூர்ய சக்தி மிந்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, அதனை வேலை துவங்கியதே கடந்த ஆண்டு தான் இப்போ செயல்பட துவங்கிவிட்டது.

20 வருஷத்திற்கு செயல்படுத்த முடியாமல் கட்டுமானத்திற்கே செலவிட்டு அணு மின்சாரம் உற்பத்தி செய்யணுமா?

ராஜ நடராஜன் said...

சிவானந்தம்!30 நாடுகள் அணு உலைகள் வைத்திருக்கின்றன.அதில் இரண்டு நாடுகள் மூடத்துவங்கியுள்ளன.மூன்றாவது நாடான ரஷ்யா செர்னபில் நிகழ்ந்தும் கூட அதன் தொழில் நுட்பங்களை இந்தியாவுக்கு தாரை வார்த்துள்ளது.ஏனைய நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் உள்ள ஒரே வித்தியாசம் தரக்கட்டுப்பாடும்,செயல்முறை திறன் வேறுபாடுகளும்.

நம்மிடம் தொழில் நுட்ப மூளை நிறையவே இருக்கின்றன.ஆனால் தொழில் கட்டமைப்புக்களை நிர்வகிக்கும் திறன் இல்லை.சின்ன உதாரணமாக பட்டாசு தொழிற்சாலை,திருப்பூர் ஆடை நெய்தல் போன்றவற்றைக் கூறலாம்.

சிவானந்தம் said...

வாங்க சாய்ரோஸ்,

///சிலது எதிர்ப்பாகவும்... சிலது ஆதரவாகவும்... இரண்டுமே கண்மூடித்தனமாக எழுதப்பட்டிருக்கும்... ////

இது குறித்து பல பதிவுகளை படித்தபோது இந்த குறையைத்தான் உணர்ந்தேன். நாம் ஒரு விஷயத்தை ஆதரிக்கிறோம் என்றால் எதிர்பவர்களை கண்மூடித்தனமாக தாக்கவேண்டும் என்று நான் நினைக்கவில்லை.

இங்கே அரசியல்வாதிகள் சொந்த நாட்டு மக்களையே பலி கொடுக்கும் அளவுக்கு கல்நெஞ்சக்காரர்கள் இல்லை. கூடங்குளம் மக்களும் நாடு எக்கேடாவது கேட்டு போகட்டும் நாம் நிம்மதியாக இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் இல்லை.

புரிதலில் உள்ள குழப்பம்தான் இது.

சிவானந்தம் said...

வாங்க வவ்வால்,

///நடுநிலைமைவாதின்னு ஒரு நிலையில் இருந்து கொண்டு எழுதுவதாகப்படுகிறது.///

அப்படி இல்லை. நான் அணு உலைகளை ஆதரிக்கிறேன் (வேறு வழி இல்லாத நிலையில்). அதே கருத்தோடு சில பதிவுகளும் போட்டிருக்கிறேன்.

அதேசமயம் நாம் ஒன்றை ஆதரித்தால் அதை எதிர்பவர்களை கடுமையாக விமர்சிக்கவேண்டும் என்ற நிலை என்னிடம் இல்லை.

///அரசை பற்றி அப்புறம் சொல்கிறேன், இங்கே அணு உலைக்கெதிரான போராட்டமாக இது தோன்றவில்லை, இதன் பின் ஒரு மறைமுக கோரிக்கை இருக்கிறது, அது நிறைவேறினால் போராட்டம் நின்றுவிடும்.///

இந்த விவரம் எனக்கு புரியவில்லை. அந்த மறைமுக கோரிக்கை பற்றி எனக்கு மெயில் அனுப்புங்களேன். நானும் தெரிந்துகொள்கிறேன்.

///20 வருஷத்திற்கு செயல்படுத்த முடியாமல் கட்டுமானத்திற்கே செலவிட்டு அணு மின்சாரம் உற்பத்தி செய்யணுமா?///

இந்த திட்டம் 20 ஆண்டுகளாக இழுக்கப்படுவதற்கு இந்திய அரசு காரணமில்லை.

ரஷ்ய ஆதரவில் நாம் இருந்ததால் அமெரிக்க நாடுகளின் எதிர்ப்பை மீறி ரஷ்யா உதவ முன் வந்தது. ஆனால் அதன்பிறகு அவர்களே உடைந்து, பொருளாதாரமும் நசிந்துவிட, மேலைநாடுகளை மீறி ரஷ்யாவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. `தர்றேன்... ஆனா தரமாட்டேன்` என்று இழுத்தார்கள். கடைசியில் அமெரிக்க அண்ணனே நம் பக்கம் கருணை காட்டிய பிறகுதான் இது வேகம் பிடித்தது. எனவே இது இயற்கையான இடர்பாடு.

///அரசு 20 ஆண்டுகளாக கட்டிக்கொண்டே தான் இருக்கிறது இன்னும் உற்பத்தி ஆகவில்லை,அப்படியே ஆனாலும் 2000 மெகாவாட் தான் ஆகும்.///

பிரச்சினை 2000 மெகாவாட் அல்ல. அதுதான் பிரச்சினை என்றால் ஏழுமலையானுக்காக ஒரு நாள் கறி சாப்பிடாததை போல் கூடங்குளம் மக்களுக்காகவும் ஒரு நாள் மின்சாரத்தை தியாகம் பண்ணலாம்.

ஆனால் நம்முடைய இலக்கு அதிகம். 2050 ல் நம் மின் தேவை அபிரிதமாக இருக்கும். அதில் அனுமின்சாரமும் குறைந்தது 20 சதவிகிதமா இருக்க வேண்டும் எனபது எதிர்பார்ப்பு.

///நம் நாட்டில் ஆண்டுக்கு ன்300 நாட்களுக்கு நல்ல வெயில் அடிக்கிறது, ஒரு மெகாவாட் சூரிய மின்சாரம் தயாரிக்க 5 கோடி முதல் 10 கோடி ஆகும். முறையைப்பொறுத்து.///

இது வாதம். ஆனால் சாத்தியம்?

இன்று அரசு விற்கும் அதிகபட்ச விலையில் சூரிய மின்சாரம் சாத்தியம் என்றால், இத்துறையில் 100 சதவிகித அன்னிய முதலீட்டுடன் வரியே வேண்டாம் என்று வெளிநாட்டினருக்கு கதவை திறந்து விட்டிருக்கும்.

இது சாத்தியமாக இருந்தால், உலக நாடுகள் எண்ணெய் கிணறுகளை தேடுவதுபோல், ஆப்பிரிக்கா முழுக்க தகடுகளை பதித்திருப்பார்கள். அங்கே இல்லாத வெப்பமா?

///இப்போது குஜராத்தில் தான் நாட்டிலேயெ பெரிய சூர்ய சக்தி மிந்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது, அதனை வேலை துவங்கியதே கடந்த ஆண்டு தான் இப்போ செயல்பட துவங்கிவிட்டது.//

எல்லா மாநிலங்களும் குஜராத்தை போல் செயல்படட்டும். முடிந்த வரை அப்படியும் மின்சாரம் தயாரிப்போம். அதன் மூலம் இந்தியா கட்டவிருக்கும் அணு உலைகளில் ஏதாவது ஓன்று குறைந்தாலும் சந்தோஷமே.

ஆனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்று ஓன்று இருக்கே. சூரிய மின்சாரத்தின் விலை என்ன? போர்க்கால நடவடிக்கையில் அதை செய்தாலும் அது எவ்வளவு சதவிகிதம் நமக்கு மின்சாரத்தை தரும் என்ற கேள்விகெல்லாம் விடை தேவை. அதற்கு திருப்தியான பதில் கிடைக்கும் வரையில், அது ஒரு பக்கம் இது ஒரு பக்கம் என்று நாம் போகவேண்டியதுதான்.

சிவானந்தம் said...

வாங்க நடராஜன்,

///நம்மிடம் தொழில் நுட்ப மூளை நிறையவே இருக்கின்றன.ஆனால் தொழில் கட்டமைப்புக்களை நிர்வகிக்கும் திறன் இல்லை.சின்ன உதாரணமாக பட்டாசு தொழிற்சாலை,திருப்பூர் ஆடை நெய்தல் போன்றவற்றைக் கூறலாம்.///

இந்த ஒரு குறைபாடுதான் கவலை அளிக்கிறது. மக்கள் தொகை நெருக்கம், நிர்வாகத் திறமையின்மை போன்றவற்றால் சாதாரண விபத்துக்கே இங்கே உயிர் பலி அதிகமாக இருக்கிறது. இந்த குறைக்கு தீர்வு தேவை.

//மூன்றாவது நாடான ரஷ்யா செர்னபில் நிகழ்ந்தும் கூட அதன் தொழில் நுட்பங்களை இந்தியாவுக்கு தாரை வார்த்துள்ளது.///

அணுகுண்டை வாங்கி லட்சகணக்கில் மக்களை பலி கொடுத்த ஜப்பானே இதை ஆதரித்தது. எனவே மற்ற நாடுகளை என்ன சொல்வது? புலி பசித்தால் புல்லையும் தின்னும்

NKS.ஹாஜா மைதீன் said...

#உலகம் என்றால் அது ஜப்பானும் ஜெர்மனியும் மட்டும்தானா? மற்ற நாடுகளெல்லாம் இந்த லிஸ்டில் வராதா? என்ன அபத்தம் இது#

இந்த வாதத்தை ஏற்று கொள்ளலாம்....மொத்தத்தில் இனி அணுஉலை செயல்பட போவதை தடுக்க முடியாது என்பதே யதார்த்தம்....நன்மை நடந்தால் சரி

வவ்வால் said...

சிவானந்தம்,

என்னன்னு சொல்ல உங்களுக்கு ஆரம்பத்தில இருந்தே கதைய சொல்லணும் போல இருக்கே :-))

அமெரிக்க அண்ணன் எல்லாம் இப்போ தான் கருணை காட்டினான் , அணு உலை வேலை நடந்து கொண்டு தான் இருந்துச்சு, காரணம் நம்மால பட்ஜெட்டில் ஒதுக்க முடிஞ்ச பணம் அவ்ளோ தான்.

100 கி.மி ரயில்வே டிராக் ஐ கூட 10 வருடம் போடுவோமே அது போல.

கூடவே சில அரசியல் பிரச்சினைகள் ரஷ்யாவில் ஓடினாலும் , நாம் தவணையில் பொருள் வாங்கியதால் ரொம்ப அவசரமா கொடுண்னு கேட்க முடியாதே.

# கூடங்குளம் போராட்டம் அவ்வப்போது கடந்த 20 ஆண்டுகளாக நடக்கிறது ,அப்போது போராடியவர்கள் இன்றும் உயிருடன் தான் இருக்கிறார்கள் ஏன் அவர்கள் இப்போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை, என்பதில் இருக்கு ஒரு ரகசியம்.

இப்போதைய போராட்ட குழு கடந்த ஒரு ஆண்டாகத்தான் போராடுகிறது, அதுவும் குறிப்பிட்ட ஒரு பகுதி மக்கள், மட்டும், முன்னிலைப்படுத்துவதும் ஒரு சிலரை மட்டுமே.

தூத்துக்குடி , திருநெல்வேலி மாவட்டமே கொதிச்சு கலக்க வேண்டாமா?

இத்தனைக்கும் கூடங்குளம் அணு உலை வரப்போகுதுன்னு சொல்லி அங்கே ஜோரா ரியல் எஸ்டேட் ஓடுது.

ஞாயிற்றுக்கிழமை தினத்தந்தியில் வரி விளம்பரம் பாருங்க, வள்ளியூர் ,சாத்தன்குளம், இன்ன பிற ஏரியாக்களில் கூடங்குளம் அருகே அருமையான வீட்டு மனை வாங்க ஓடி வாருங்கள் என கூவும் விளம்பரங்கள் நிறைய காணலாம் :-))

மாவட்டத்தின் பிற பகுதி மக்கள் அணு உலை வந்தா ஊர் டெவலப் ஆகும்னு அமைதியா வேடிக்கை பார்க்கிறாங்க.

500 கி.மீ அப்பால் இருந்துக்கிட்டு நாம தான் வெட்டி விவாதம் செய்கிறோம்.

சிவானந்தம் said...

//என்னன்னு சொல்ல உங்களுக்கு ஆரம்பத்தில இருந்தே கதைய சொல்லணும் போல இருக்கே :-))

அமெரிக்க அண்ணன் எல்லாம் இப்போ தான் கருணை காட்டினான் , அணு உலை வேலை நடந்து கொண்டு தான் இருந்துச்சு, காரணம் நம்மால பட்ஜெட்டில் ஒதுக்க முடிஞ்ச பணம் அவ்ளோ தான்.//

தமிழ்நாட்டுல எல்லாம் தெரிஞ்ச வவ்வால்ன்னு ஒருத்தர் இருக்கார், அவர் நிறைய கேள்வி கேட்பார்ன்னு எனக்கு தெரியாதா?

இவை ஏற்கனவே பல உலக பத்திரிக்கைகளில் படித்ததுதான். மீண்டும் சமீபத்தில் பதிவு எழுதும் முன் படித்தேன்.

An Inter-Governmental Agreement on the project was signed on November 20, 1988 by then Prime Minister Rajiv Gandhi and Soviet President Mikhail Gorbachev, for the construction of two reactors. The project remained in limbo for a decade due to the political and economic upheaval in Russia after the post-1991 Soviet breakup. There were also objections from the United States, on the grounds that the agreement does not meet the 1992 terms of the Nuclear Suppliers Group (NSG).[3]. Construction began only in September 2001 and the cost was estimated to be US$ 3 billion (Rs.13,615 Crores).[4]

பட்ஜெட்டுல பணம் பத்தலையா? அது மத்த திட்டங்களுக்கு பொருந்தும். உலகம் மறுக்கும் ஒரு பொருள் நமக்கு கிடைக்கும் போது, கடனை வாங்கியாவது நாம் அதை வாங்க மாட்டோம்? நான் படித்த வரையில் ரஷ்யா திவாலானதும் அமெரிக்க நெருக்கடியும்தான் இந்த திட்டம் தாமதமானதன் காரணம்.

ரெண்டு பெரும் வேற வேற ஸ்கூல்ல படிக்கிறோம் போலிருக்கு :-))

சிவானந்தம் said...

வாங்க ஹாஜா மைதீன்

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ஒரு பிரச்சினையில் ஆரம்பத்திலிருந்தே கவனமாக இருக்க வேண்டும் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

Unknown said...

நியாயமான கருத்துக்கள்! பிரச்சனையை உணர்வுபூர்வமாக அணுகினால் தெளியாது என்பது திண்ணம்!

நன்று!
மேலும் தொடர வாழ்த்துக்கள்!

Anonymous said...

இந்த பிரச்சனையை தூண்டி விடுவது அமெரிக்கா, காரணம் இந்தியா ரஷ்யாவிடம் அனு உலை வாங்குவது. அமெரிக்க இந்திய அனு ஒப்பந்தம் ஆகி பல வருடங்கள் ஆன பின்பும் இந்தியா அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து எந்த விய வியாபரம் இது வரை செய்யவில்லை. அனு உலை தொடர்பாக இது வரை பிரான்ஸ் ரஷ்யாவிடம் மட்டுமே இந்தியா தொடர்பில் இருக்கிறது. ஜெகாதபூர் அனு உலை திட்டம் தொடங்கும் போதே போராட்டம் , தூண்டி விடுவதும் இதே அமெரிக்காதான்

என்ன இந்தியா அமெரிக்க நாட்டிடம் ஏதாவது ஒரு அனு உலை ஒப்பந்தம் போட்டால் கூட போதும் பிரச்சனை முடிந்து விடும்.

சென்னையில்அமெரிக்க தூதரகம் முன்னர் நடக்கும் போராட்டம் நாளுக்கு நாள் அதிகமாவதன் காரணமும் கூட மறைமுகமாக உணர்த்துகிறது

வவ்வால் said...

சிவானந்தம்,

//பட்ஜெட்டுல பணம் பத்தலையா? அது மத்த திட்டங்களுக்கு பொருந்தும். உலகம் மறுக்கும் ஒரு பொருள் நமக்கு கிடைக்கும் போது, கடனை வாங்கியாவது நாம் அதை வாங்க மாட்டோம்? நான் படித்த வரையில் ரஷ்யா திவாலானதும் அமெரிக்க நெருக்கடியும்தான் இந்த திட்டம் தாமதமானதன் காரணம்.
//

சிவானந்தம் என்பவர் இங்கே உலக செய்தித்தாள் ,பத்திரிக்கை எல்லாம் படிச்சுட்டு தான் பதிவு போடுவார்னு எனக்கு தெரியாதா? :-))

அமெரிக்க நிர்பந்தம் என்றால் , இந்தியாவில் கூடங்குளத்திற்கு முன்னரே பல அணு உலைத்திட்டம் செயல்ப்பாட்டில் இருப்பதை எதிர்க்கலையா?

அமெரிக்க எதிர்ப்பினை எல்லாம் பேசிக்கொண்டே இங்கே வேலை செய்தார்கள்.

1998-BJP காலக்கட்டத்தில் அணு குண்டு வெடிப்பு செய்ததால் பெரிய அளவில் தடை உருவாச்சு.

2001 இல் வேலை ஆரம்பிக்கப்பட்டது என சொல்வது அணு உலையின் மைய கட்டிட வேலைக்கானதாக இருக்கலாம்.

மேலும் நாம் கடன் வாங்கியாவது என நீங்க சொல்றிங்க, நானும் அதே தான் சொன்னேன் இந்தியா ராஷ்யாவிடம் கடனுக்கு அணு உலை வாங்குவதால் அவசரமா கொடுன்னு கேட்க முடியாது என. அணு உலைத்திட்டத்தில் 2 பில்லியன் டாலர்கள் மதிப்புக்கு ரஷ்யா கடனாக தரும் ஆண்டுக்கு12% வட்டியுடன் நாம் திருப்பி தரணும்.

இதில் பெரிய மோசடி என்னவெனில் நாம் அப்போதில இருந்தே வட்டிக்கட்டிக்கிட்டு இருக்கோம்.சரியான காலம் தெரியவில்லை.

இந்திய -ரஷிய அணு உலை ஒப்பந்தம் என்னனு படித்தால் தெரியும்.

ரஷ்யா நமக்கு அணு உலை தரணும் எனில் , அவர்களிடம் ஆயுதம், போர்க்கப்பல்,விமானம், எல்லாம் வாங்கணும் என ஒப்பந்தம்.

அப்படித்தான் சுகோய் விமானங்கள், கோர்ஸ்கோவ் என்ற விமான தங்கிக்கப்பல், ராணுவ டேங்க் எல்லாம் ஆண்டுக்கு கொஞ்சம் என பணம் கொடுத்து வாங்கிக்கொண்டு உள்ளோம், அதற்கு ஏற்ப தவணையில் அணு உலை ,மற்றும் தொழில்நுட்பம் கொடுத்தார்கள்.


இந்த திட்டம் ஒரு சிக்கலானது ,எனவே தான் அப்போ அப்போ ஆட்சி மாறும் போது சிக்கிட்டு நின்றது.

இந்தியாவில் ஏற்கனவே சுமார் 20 அணு உலைகள் இயங்கி , 3000 சொச்சம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தியாகிட்டு இருக்கும் போது அதை எல்லாம் அமெரிக்க எதிர்க்காமல் ரஷ்யாவை மட்டும் எதிர்ப்பதன் அரசியல் வேறு(இதனூடாக ராணுவ ஒப்பந்தமும் இருப்பதே), எனவே அமெரிக்க எதிர்ப்பால் இந்தியா வேலை செய்யாமல் நிறுத்தவில்லை.

Oreynaadu said...

நல்ல தெளிவான கருத்துக்களை !
நன்று!
எழுத்துப் பணி
மேலும் தொடர வாழ்த்துக்கள்!

அமரன்

சிவானந்தம் said...

anonymous

///இஅமெரிக்க இந்திய அனு ஒப்பந்தம் ஆகி பல வருடங்கள் ஆன பின்பும் இந்தியா அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து எந்த வியாபரம் இது வரை செய்யவில்லை. அனு உலை தொடர்பாக இது வரை பிரான்ஸ் ரஷ்யாவிடம் மட்டுமே இந்தியா தொடர்பில் இருக்கிறது. ஜெகாதபூர் அனு உலை திட்டம் தொடங்கும் போதே போராட்டம் , தூண்டி விடுவதும் இதே அமெரிக்காதான்//

வாங்க அனானிமஸ்,

என்ன இருந்தாலும் அமெரிக்க உதவி இல்லாமல் NSG தடை நீங்கி இருக்காது. அப்படி ஒரு உதவியை அமெரிக்கா செய்திருக்க, அதற்கு பலன் எதிர்பார்ப்பதும் தவறில்லை. இந்தியாவும் ஏதாவது செய்யும்.

அதேசமயம் அமெரிக்காவுடன் அணு உலை ஒப்பந்தம் இதுவரை போடாததற்கு வேறு காரணங்களும் இருக்கலாம். ஆனால் நீங்கள் சொல்வதும் சாத்தியம்தான்.

----------------------------------------
//நியாயமான கருத்துக்கள்! பிரச்சனையை உணர்வுபூர்வமாக அணுகினால் தெளியாது என்பது திண்ணம்!///

வாங்க ரமேஷ் கருத்துக்கு நன்றி

சிவானந்தம் said...

@ வவ்வால்

//சிவானந்தம் என்பவர் இங்கே உலக செய்தித்தாள் ,பத்திரிக்கை எல்லாம் படிச்சுட்டு தான் பதிவு போடுவார்னு எனக்கு தெரியாதா? :-))///

என்ன இருந்தாலும் நான் எல்லா துறைகளையும் மேய்பவன் அல்ல. நீங்கள் பல்துறை வல்லுநர் ஆயிற்றே!

//அமெரிக்க நிர்பந்தம் என்றால் , இந்தியாவில் கூடங்குளத்திற்கு முன்னரே பல அணு உலைத்திட்டம் செயல்ப்பாட்டில் இருப்பதை எதிர்க்கலையா?///

2005, 06 இந்த அணு ஒப்பந்தம் ஒரு ஆர்வத்தை ஏற்படுத்திவிட, இந்த ஒரு துறையை மட்டும் கவனித்தேன். இப்போது நேரம் இல்லை. எனவே அந்த நினைவின் அடிப்படையில் சொல்கிறேன்.

1974 ல் கனடா நாட்டு அணுஉலையில் கைவைத்துதான் இந்தியா அணுகுண்டு வெடித்தது என்று புகார். அதை காரணம் காட்டி இந்தியாவுடன் போடப்பட்ட பல அணுஉலை திட்டங்களுக்கு அமெரிக்கா தடை போட்டது. எல்லா நாடுகளும் இந்தியாவை புறக்கணித்தன.

உதவிக்கு வந்தது ரஷ்யாதான். ஆனால் அவர்களாலும் ஓரளவுக்கு மேல் முடியவில்லை. பல திட்டங்கள் நடந்து கொண்டிருந்தாலும், அதன் உற்பத்தி திறன் என்ன, நம்மால் உற்பத்தி செய்ய முடிந்தது என்ன என்று பார்த்தால் அமெரிக்க தடையின் பாதிப்பு தெரியும்.

///1998-BJP காலக்கட்டத்தில் அணு குண்டு வெடிப்பு செய்ததால் பெரிய அளவில் தடை உருவாச்சு.///

அப்படி ஒரு தோற்றம்தான் வந்தது. ஆனால் அதன் பிறகுதான் இந்த விஷயத்தில் இந்தியாவின் முடிவை மாற்றமுடியாது என்பது அவர்களுக்கு தெரிந்துவிட்டது. அப்புறம் இந்தியா அமெரிக்கா பக்கம் நெருங்கியது, புவி வெப்பமயமாதல் போன்றவை அந்த தடையை முடிவுக்கு கொண்டுவந்தது.

இந்த விவாதம் முடிவுக்கு வராது. சுருக்கமாக முடித்துகொள்கிறேன் இந்தியாவின் பல அணுஉலை திட்டங்கள் தாமதமானதற்கும், திட்ட இலக்குகளை அடையமுடியாமல் போனதற்கு, சர்வேதேச தடைதான் காரணம். இதுதான் நான் புரிந்து கொண்டது.

வவ்வால் said...

சிவானந்தம்,

நான் செய்த்தித்தாள் எல்லாம் எப்போவது தான் படிப்பேன் ,எனக்கு எதுவும் தெரியாது, நீங்கள் சொல்வது சரியே!!!!

lakshmanaperumal said...

http://lakshmanaperumal.com/2012/09/18/%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d%e0%ae%9a%e0%ae%95%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%a3%e0%af%81-%e0%ae%86%e0%ae%b2%e0%af%88%e0%ae%95/

Post a Comment