!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Wednesday, October 24, 2012

அரவிந்த் கேஜ்ரிவாலும், `சவுக்கு` சங்கரும்

அர்விந்த் கேஜ்ரிவால் புதிய அவதாரம் எடுத்திருக்கிறார். பல ஊழல் செய்திகளை வெளியிடுகிறார். இவர்களுடைய லோக்பால் போராட்டத்தில்  எனக்கு உடன்பாடில்லை. ஆனால் இந்த  போராட்ட முறை எனக்கு பிடித்திருக்கிறது.

லோக்பால் போராட்டம் தோற்றதன் காரணம் அதில் யதார்த்தம் இல்லை. இருந்தாலும் அந்த சமயத்தில் அரசியல்வாதிகள் பயந்துவிட்டார்கள். அதற்கான அறிகுறி தெரிந்தது. அந்த பயத்தை பயன்படுத்திக் கொண்டு, இருக்கும் ஓட்டைகளில் சிலவற்றையாவது சரி செய்திருக்க முடியும். ஆனால், `முழுதாக வேண்டும்` என்ற இவர்களின் பிடிவாதத்தால், அது பரணுக்கு போனதுதான் மிச்சம்.

கேஜ்ரிவாலின் இப்போதைய போராட்டத்தில் யதார்த்தம் இருக்கிறது. குற்றவாளிகளை இன்றைய சட்ட முறைகளின் மூலம் தண்டிக்க முடியவில்லை. எனவே இப்போதைக்கு நம்மால் முடிந்தது, திருடு நடக்க வாய்ப்புள்ள இடத்தில் விளக்கை போடுவதும் அல்லது `யோக்கியன் வரான் உஷார்...` என்று மக்களை எச்சரிப்பதும்தான். கேஜ்ரிவாலின் இந்த போராட்டம் அந்த வகை. 

முக்கியமாக ஜனநாயகத்தில் மக்கள்தான் நீதிபதிகள். குற்றவாளிகள் யார் என்பதை அவர்களுக்கு அடையாளம் காட்டினால், அவர்கள் தேர்தலில் தண்டிப்பார்கள்.

மக்கள் தண்டித்தால் அதற்கு பலமே தனி. முதல் லாபம் இவர்கள் அதிகாரத்திலிருந்து அப்புறப்படுத்தப்படுவது. இரண்டாவது லாபம்,  பதவியில் உள்ள அரசியவாதிகளை விட, பதவியில் இல்லாத அரசியல்வாதிகள் தண்டிக்கப்படும் வாய்ப்பு அதிகம். எனவே இவர்கள் முதலில் தேர்தலில் தோற்கடிக்கப்பட வேண்டும். அதன் பிறகு இந்த பல் பிடுங்கப்பட்ட பாம்புகளை அடிக்க நீதிபதிகளுக்கும் வீரம் வந்துவிடும்.

வழக்கு என்றால் புன்னகையோடு  எதிர்கொள்பவர்கள், மக்கள் மன்றத்தில் ஊழலை வெளிபடுத்தினால், கேமராவை உடைப்பேன் என்று பொங்குகிறார்கள். இதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம் அரசியல்வாதிகள் எதற்கு பயப்படுகிறார்கள் என்று. அந்த வகையில் கேஜ்ரிவாலின் இந்த போராட்டம் ஓரளவு பலன் தரும். 

`சவுக்கு` சங்கரும், கேஜ்ரிவாலும்

கேஜ்ரிவாலின் தற்போதைய போராட்ட முறை  சவுக்கு சங்கரை நினைவுபடுத்துகிறது. இவரும் பல அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் செய்திகளை வெளியிட்டார். இந்தியாவின் விக்கிலீக்ஸ் என்று பட்டப்பெயர் வாங்கினார். இவருக்கு பண பலமோ அல்லது உளவுப் (நிருபர்) படையோ இல்லை. பிறகு செய்திகள் எப்படி?

ஊழல் எப்படியும் யார் கண்ணிலோவது நிச்சயம் படும். உங்களின் செயல் பிடிக்காமல் உங்களை போட்டுக் கொடுக்க இவர்கள் தயாராக இருப்பார்கள்.

யாரிடம் சொல்வது?

அரசியல் கட்சிகள் சரிபடாது. பத்திரிகைகளிடம் போகலாம். ஆனால் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகள் அடக்குமுறை மனப்பான்மை கொண்டவை. பத்திரிகைகளும் அதற்கு அடங்கி போகக் கூடியவை. எனவே அதுவும் சரிபடாது.

இந்த சமயத்தில் சவுக்கு சங்கர் வர, ஊழல் குறித்த தகவல்கள் இவருக்கு வந்திருக்கின்றன. பல நிருபர்களும் இருக்கிறார்கள். அவர்களுடைய பத்திரிகை வெளியிடாது என நினைக்கும் செய்திகளை அந்த நிருபர்கள் இவருக்கு எழுதியே கொடுக்க, அது இவருடைய பெயரில் வந்திருக்கும். அந்த வகையில் இவர் பலருக்கு முகமூடியாக இருக்கிறார்.

இதுதான் தேசிய அளவில் நடக்கப்போகிறது. அரவிந்த் கேஜ்ரிவால் அந்த வேலையை செய்வார்.

இங்கே இன்னொரு யதார்த்தமும் இருக்கிறது. ஊழல் குறித்த செய்திகளை வெளியிடுவதிலும் அரசியல் கட்சிகளுக்கும் சில தர்மசங்கடங்கள் இருக்கின்றன.

மற்றவர்கள் பார்வையில் ஊழலாக தெரிவது அரசியல் கட்சிகளுக்கு யதார்த்தமாக /அவசியமாக தெரியலாம். அதிலும் பிசினஸ்மேன்கள் புத்திசாலிகள். அனைவரையும் கவனிப்பார்கள். எனவே ஒரு அரசியல் கட்சி இன்னொரு கட்சியை காட்டிக் கொடுக்கும் வாய்ப்பு குறைவு.

தமிழக மீடியாவுக்கு இருப்பது போன்ற பயம் தேசிய மீடியாவுக்கு இல்லை என்றாலும், இமேஜ் (பொறாமை)  என்ற ஒரு தலைவலி இருக்கிறது. ஒரு சேனல்/ பத்திரிக்கை ஏதாவது செய்தால், பேரை அவர்கள் தட்டி செல்வார்கள் என்பதால் மற்ற மீடியாக்கள் அந்த விஷயங்களில் ஆர்வம் காட்டாது. எனவே அப்படிப்பட்ட ஊழல்கள் முறையான அளவில் வெளிச்சத்துக்கு வருவதில்லை.

ஊழல் செய்திகளை அரசியல் கட்சிகளிடமும் கொடுக்கமுடியாமல், மீடியாவும் சரிவராத நிலையில், அதை வெளிபடுத்த ஒரு பொது நபர் தேவை. அப்போதுதான் ஊழல்களுக்கு நல்ல பப்ளிசிட்டி கிடைக்கும்.

இப்படி பல தேவைகளுக்கு கேஜ்ரிவால் பொருந்திப் போவதால், இனி அவருக்கு நிறைய `விஷயங்கள்` கிடைக்கும். அவர் போஸ்ட்மேனாக இருந்தாலே போதும். தகவல்களை வடிகட்டுவதில் மட்டும் கவனம் தேவை.

இந்த படம் எவ்வளவு நாள் ஓடும்?

சந்தேகம்தான். கிரிக்கெட்டில் சிலசமயம் முக்கியமான பேட்ஸ்மேன்கள் சொதப்புவார்கள். அந்த சமயம் கடைசியில் வரும் சில பேட்ஸ்மேன்களுக்கு அன்று மட்டை பேசும். சிக்சராக பவுண்டரியாக பறக்கும். அணியை ஜெயிக்க வைப்பார்கள். ரசிகர்களை உற்சாகப்படுத்துவார்கள். அவர்களுடைய ஆட்டத்தில் திறமை இருக்காது. குருட்டு ஷாட்தான் இருக்கும். இப்படிப்பட்ட திடீர் ஹீரோக்கள் அணியில் நிலைப்பதில்லை. 

கேஜ்ரிவாலும் அப்படித்தான். இவரால் சில பல  ஊழல்கள் வெளிச்சத்துக்கு வரலாம். கொஞ்ச நாள் புகழில் திளைத்து பின்னர் காணாமல் போகும் வாய்ப்பே அதிகம். இவர் ஸ்ட்ரீட் பைட்டர். நிர்வாகத் திறமை இல்லை. லோக்பாலில் அடம் பிடித்த போதே இவர் தேறமாட்டார் என்பது தெரிந்துவிட்டது.

வியாபாரிகளுக்கு லாபம்தான் குறிக்கோள். ஆனால் வியாபாரம் படியாத சூழ்நிலையில் குறைந்தபட்ச லாபத்துக்கு கூட இவர்கள் ஒப்புக்கொள்வார்கள். அப்படிப்பட்டவர்கள்தான் வெற்றிகரமான வியாபாரியாக இருக்கமுடியும். அந்த யதார்த்தம் இவரிடம் இல்லை.  

தற்போது மக்கள் இவருக்கு ஓரளவு பண உதவி செய்யலாம். கூட்டமும் கூடும். ஆனால் இது புது பொண்டாட்டியின் மீதான காமம் போன்றதுதான். கொஞ்ச நாள் கழித்து காணாமல் போய்விடும். (இது உதாரணம்தான்)  அப்போது இவர் பணத்துக்காக துடிப்பார். சொந்த தேவைக்காக அல்ல. இவர் ஆரம்பிக்கும் கட்சியின் நிர்வாக செலவுக்கே பணம் தேவை. அரசும்  தரப்போவதில்லை. மக்களும் கொடுக்கமாட்டார்கள்.

அப்போது பணக்கார தனிநபர்களின் நிதியை சார்ந்திருக்க வேண்டும். அவர்களின் மனம் கோணாமல் நடக்க வேண்டும். அவர்கள் தவறு செய்பவர்களாக இருந்தால், அதை கண்டிக்க முடியாமல் தடுமாறும் சூழ்நிலையும் வரும். (பிஜேபிக்கு தற்போது கட்காரி) 

ஒருகட்டத்தில், மனஸ்தாபம் ஏற்பட்டால், என் பணத்தால்தான் கட்சியே நடக்கிறது என்று அவர்கள் வார்த்தைகளை கொட்டலாம். அப்போது இவர் என்ன செய்வார்?

இதில் இன்னொரு தலைவலியும் இருக்கு. இந்தியாவில் விகிதாச்சார வாக்குகள் இல்லை. ஒருவேளை இவர் பிரபலமாகி, நாடு முழுக்க 5-10 சதவிகித ஓட்டை வாங்கினாலும் அது எம்பியாக மாறாது. பலமில்லாத ஓட்டு வங்கியாகத்தான் இருக்கும்.

சில தேர்தலுக்கு பிறகு இந்த படம் ஓடாது என புரியும். ஓரளவு கருத்துகளுடன் உடன்படும் கட்சிகளுடன் கூட்டணி வைக்கலாம் என்று யாராவது ஆலோசனை சொல்வார்கள். இவர்களும் இறங்கி வருவார்கள். அப்புறமென்ன... இந்தியாவில் இன்னொரு அரசியல் கட்சி வந்திருக்கும். பத்தோடு பதினொன்னாக.

இது கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு.

இவர்கள் ஊழலை எதிர்த்து போராடுகிறார்கள். வரவேற்கலாம். ஆனால் அரசியல்வாதிகள் அனைவரும் அயோக்கியர்கள் என்ற பேச்சும், சில சமயம், நாங்கள்தான்  யோகியசிகாமணிகள் என்ற வகையிலான இவர்களின் பேச்சும்தான் எரிச்சலை கிளப்புகிறது.

ஒரு முறை அவ்வையார்  ஒரு மன்னனின் ஆயுதங்களை பார்வையிட்டாராம். அந்த மன்னனிடம், `உன்னுடைய ஆயுதங்கள் பளபள என மின்னுகின்றன. எதிரி மன்னனிடம் இருப்பவை  மழுங்கி இருக்கின்றன ` என்று சொல்லி இருக்கிறார்.

அதன் உள் அர்த்தம் உங்களுக்கு தெரியும். அதேகதைதான் இவர்களுடையதும். இவர்களுடைய (IAC) கை சுத்தமாக,பளபளப்பாக இருக்கலாம். அதற்கு காரணம் இவர்கள் யோக்கியர்கள் என்பதால் இல்லை, இவர்கள் இதுவரை  எந்த போரிலும் (அதிகாரத்திலும்) கலந்து கொள்ளவில்லை என்பதால்தான் அந்த பளபளப்பு.

இவர் முதலில் கட்சி ஆரம்பிக்கட்டும். பணத்தேவையை எந்த முறைகேடும் செய்யாமல் பூர்த்தி செய்யட்டும். கூட்டணி என்ற அவசியத்தை உணரட்டும். அப்போது கூட்டணியில் உள்ளவர்கள்  தவறு செய்யும்போது இவர் என்ன செய்கிறார் என்று பார்ப்போம்.

கடுமையான பிரச்சினைகளை சந்தித்து அப்போதும் ஒரு மனிதன் தன் நாணயத்தை காப்பாற்றினால் அது சாதனை. நான் எந்த தவறும் செய்யவில்லை, ஏனேன்றால் நான் எந்த முடிவும் எடுப்பதில்லை என்ற வகைதான் இருக்கிறது இவர்களுடைய இப்போதைய பில்டப்

இது இது இதுதான் இன்றைய தேவை 

இந்த பக்கம் அன்னா ஹசாரே அவ்வளவாக செய்திகளில் இல்லை. சமீபத்தில் ஒரு செய்தி. தேர்தல் செலவுக்காக அரசே கட்சிகளுக்கு நிதி உதவி செய்ய வேண்டுமாம். அன்னா சொல்லி இருக்கிறார்.

நல்ல விஷயம். இதுதான் இன்றைய தலையாய தேவை. நோயை அழிக்க மருந்தும் தேவை, அதேசமயம் நோய் வருவதற்கான காரணிகளை கணடறிந்து அதை களையும் தீர்வுகளும் தேவை. எனவே முதலில் செய்யவேண்டியது கட்சிகளுக்கு அரசே நிதி உதவி செய்வதுதான். அது வந்தாலே இந்தியாவில் பாதி ஊழல்கள் குறைந்துவிடும்.

ஒருவேளை இந்த `தேர்தல் நிதி` கோரிக்கையை வலியுறுத்தி அண்ணா ஹசாரே உண்ணாவிரதம் இருந்தால், நானும் பேரை கொடுத்துவிடுவேன்.

  

5 comments:

சாய்ரோஸ் said...

கடுமையான பிரச்சினைகளை சந்தித்து அப்போதும் ஒரு மனிதன் தன் நாணயத்தை காப்பாற்றினால் அது சாதனை. நான் எந்த தவறும் செய்யவில்லை, ஏனேன்றால் நான் எந்த முடிவும் எடுப்பதில்லை என்ற வகைதான் இருக்கிறது இவர்களுடைய இப்போதைய பில்டப...////
சூப்பர் பாயிண்ட் சிவா...
நல்ல கட்டுரையை தந்திருக்கிறீர்கள்... ஆழமான எழுத்து. இதுவரை தமிழ்மணத்தில் யாருக்கும் வாக்கிடுவதில்லை. முதன்முறையாக இந்தக்கட்டுரைக்கு வாக்களிக்கிறேன்.

ஆனால் உங்களுடைய இறுதிக்கருத்தில் எனக்கு உடன்பாடில்லை... தேர்தல் செலவே அரசே ஏற்கும் என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாத விஷயம். அதில் நிறைய சிக்கல்கள் இருப்பதை நீங்கள் உணராதவர் இல்லை என்று நம்புகிறேன். எந்தக்கட்சிக்கு எவ்வளவு செலவு என்பதை எப்படி நிர்மாணிப்பார்கள்?... எல்லா கட்சிகளுக்கும் ஒரே அளவிலான முறையா?... அரசு செலவு செய்தாலும் அதைத்தவிர எக்ஸ்ட்ராவாக எந்தக்கட்சியும் செலவு செய்யாது என்பது உத்திரவாதமா?... அன்னா ஹசாரேவின் உண்ணாவிரதங்கள் பத்திரிக்கைகளுக்கு வேண்டுமானால் பரபரப்பு செய்திகளைத்தரலாமே தவிர இன்றைய காலகட்டத்தில் உண்ணாவிரதத்தால் சாதிக்கப்போவது எதுவுமில்லை என்பதே நிதர்சனம் நண்பா...

சிவானந்தம் said...

வாங்க சாய்ரோஸ்,

உங்களின் கருத்துக்கும், வாக்குக்கும் நன்றி.

தேர்தல் செலவுக்காக அரசு நிதி உதவி பற்றி சில பதிவுகளில் குறிப்பிட்டிருக்கிறேன். இங்கே சுருக்கமாக...

கட்சிகளுக்கு நிதி தேவை என்பது யதார்த்தம். அதற்கான வழிதான் சிக்கலை உருவாக்குகிறது. இந்தியா ஏழை நாடு என்பதால் மக்களிடமிருந்து அதிகம் கிடைக்காது. கட்சிகளும் பெருத்துவிட்டதால் அது இன்னும் சிக்கல்.

அடுத்த சாத்தியம் தொழில் அதிபர்களிடமிருந்து நிதி பெறுவது. அவர்களும் வியாபாரிகளாயிற்றே? எதிர்பார்பார்கள். அதுவும் சிக்கல்.

இன்னொரு தலைவலியும் இருக்கிறது. ஒரு முறை உதவி செய்துவிட்டால், அதை சொல்லியே பல முறை பிரதிபலன் எதிர்பார்ப்பது மனித குணம். எனவே தொழில் அதிபர்களிடம் பணம் வாங்குவது அரசியல்வாதிகளுக்கு நிரந்தர தலைவலி. இதற்கு மாற்றாக அரசியல்வாதிகளுக்கு தெரிவது, திட்டங்களில் கமிஷன் அடிப்பதுதான்.

இப்படி அவசியத்துக்கு வாங்க ஆரம்பித்தவர்கள், இன்று ஊழல் பெருச்சாளிகளாக மாறி இருக்கிறார்கள். இதுதான் இந்தியாவின் இன்றைய தலைவலி

இதற்கு தீர்வுதான் அரசே நிதி உதவி செய்வது. ஒரு சட்டமன்ற தொகுதிக்கு (தோரயமாக) 1 கோடி என 234 கோடி அரசே ஒதுக்கலாம். கடைசியாக நடந்த தேர்தலில் ஒரு கட்சி பெற்ற வாக்குகளின் அடிப்படையில் அந்த கட்சிக்கு கொடுக்கலாம். 5 சதவிகிதத்திற்கு மேல் வாக்குகளை கொண்ட கட்சிகளுக்கு மட்டும் வழங்கலாம். இந்த வகையில் அதிமுக 30 சதவிகித வாக்குகளை கொண்டிருந்தால் 80 கோடி அந்த கட்சிக்கு கிடைக்கலாம்.

இதைகூட அப்படியே கொடுத்துவிடுவதுதான் நல்லது. கணக்கு பார்ப்பது சரிவராது.

இந்த பணம் பத்துமா அல்லது அதிகமாக இருந்தால்?

இவை விவாதித்து சரி செய்யக்கூடியவை. பணம் உபரியாக இருந்தால், அது கட்சியின் நிதியாக, நிர்வாக செலவுக்கு பயன்படும்.

இன்றைய திமுக அதிமுக என்ற ஊழல் கட்சிகள், அரசு பணம் தேவைபடாத அளவுக்கு பணம் சேர்த்து இருக்கலாம். இந்த காளான்கள் கால ஓட்டத்தில் காணாமல் போய்விடும்.

ஆனால், நாளை ஒரு நல்ல தலைவர் வந்தால், அவர் வேட்பாளரை நிறுத்தும் போது, `அரசு கொடுத்த பணம் நம்மிடம் இருக்கிறது, எனவே பணம் ஒரு தகுதி அல்ல. நல்ல வேட்பாளரை நிறுத்துவோம்` என்று சொல்லும் நிலை வரவேண்டும்.

இப்போதைய சூழ்நிலையில் அது சாத்தியமில்லை.

சாய்ரோஸ் said...

நல்லது நண்பா... நம்மைப்போன்ற எதிர்பார்ப்பாளர்களுக்கெல்லாம் நாளை நல்லதொரு அப்பழுக்கற்ற அரசியல் அமைந்தால் நிச்சயம் சந்தோஷமே... பார்க்கலாம்... வளர்ந்து வரும் கல்வியறிவாவது நமது நாளைய அரசியலில் ஏதாவது மாற்றங்களை ஏற்படுத்துகிறதா என்று...

ராஜ் said...

நல்ல பதிவு...

Anonymous said...

மிகவும் அருமையான பதிவு, யதார்த்த சிக்கல்களையும், தொலைநோக்கு பார்வையோடு பார்த்துள்ளீர்கள் .. ! ட்விட்டரில் பகிர்ந்துக் கொண்டுள்ளேன் ,.. :)

Post a Comment