!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Wednesday, December 11, 2013

மூன்று விஷயங்கள்


பதிவு எழுதி ரொம்ப நாளாகிவிட்டது. காரணத்தை சொன்னால் அது புலம்பலில் போய் முடியும். எனவே அது வேண்டாம். நேரடியாகவே பதிவுக்கு போய்விடுவோம்.

லைப்ரரி

இங்கே (அகமதாபாத்) வந்து ஓராண்டு முடிந்த பிறகுதான் லைப்ரரியை தேட ஆரம்பித்தேன். நேரத்தை கொலை செய்ய வேண்டுமே, அதுதான் காரணம். மனிதர்களுடன் பழகமுடியவில்லை. அரை மணி நேரம் பேசினால் 6 கேள்விகள் கேட்கிறார்கள். அதில் 5 கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை. புத்தகம்தான் நல்ல துணையாக இருக்கிறது. இணையம் கண் வலியை கொடுப்பதால், லைப்ரரிதான் சரி என அதை தேட ஆரம்பித்தேன்.

முதலில் கிடைத்தது தமிழ் லைப்ரரி. இந்த லைப்ரரி வழியாக பலமுறை போயிருந்தாலும் அதை நான் கவனிக்கவில்லை. தீவிரமாக தேடும்போதுதான் கண்டுபிடிக்க முடிந்தது. இண்டர்நெட்டும், டிவியும் லைப்ரரியை ஒழித்துவிட்டன. அதையும்தாண்டி சில இருப்பது அதிசயம்தான்.

200 ரூபாய் கட்டணம். ரூ.100 சந்தா.100 திரும்ப கிடைக்கும் டிபாசிட். சந்தா. ரூ. 100 க்கு ஒரு வருடம் புக் படிக்கலாம். எனக்கு ஒரே மாதத்தில் செரித்துவிடும்.

விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்தேன். கண்ணில் நீர் வராத குறைதான். அந்த படிவம் கி பி ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூறுகளில் அடிக்கப்பட்டது. இன்னும் காலியாகவில்லை. அந்த அளவுக்கு உறுப்பினர்கள் சேர்ந்திருக்கிறார்கள். 

உள்ளே புத்தகங்களை (நாவல்களை) காட்டினார் ஒருவர்.  ஒருகாலத்தில் ஆங்கில மோகம் தலைகேறியபோது, நின்றால், உட்கார்ந்தால், படுத்தால் ஆங்கில நாவல்தான் என நான் இருந்ததால், தமிழ் நாவல்களை தொடுவதில்லை. வருத்தம்தான். இப்போது எந்த நாவலும் தொடுவதில்லை. எனவே குற்ற உணர்ச்சி தேவை இல்லை.

தந்தி பேப்பர் மட்டும் போஸ்டல் மூலம் வருகிறதாம். `இந்திய பிரதமர் இலங்கை பயணம்` என்று செய்தி படித்தேன். இந்த செய்தியை நான் படிக்கும்போது அங்கே காரியம் எல்லாம் முடிந்து கேமரூன் கலக்கியதுதான் விவாதத்தில் இருந்தது.

முக்கியமான வார இதழ்கள் வருகிறது. நடப்பு இதழ்களை அங்கேயும், முந்தைய இதழ்களை எடுத்து வந்தும் படிக்கலாமாம். எனக்கு அது போதும். இந்த அளவுக்கு கிடைப்பதே சந்தோஷம்.

இருந்தாலும் ஒரு வருத்தம் (ஆலோசனை). மக்கள் நூலகங்களை ஆதரிக்காததற்கு வேறு சில காரணங்களும் உண்டு. இது இன்டர்நெட் உலகம். எல்லாம் வீட்டுக்கே வரவேண்டும் என்ற மனப்பான்மை. 

கடலூரில் நம் கடை பாடலீஸ்வரர் கோவில் தெருவில். அதிலேயே லைப்ரரியும். ஒரு பெண் சொன்னார்: `இது வசதியா இருக்குங்க. கோவிலுக்கு வந்தா அப்படியே புக் எடுத்துக்கலாம்`.

அறிவை தேடித்தான் பெறவேண்டும் என்பது எதார்த்தமாக இருந்தாலும், மக்கள் அதிகம் நடமாடும் இடத்தில் இருந்தால் நிச்சயம் கவனிக்கப்படும்.

அடுத்து கவனித்தது உள்ளூர் அரசு லைப்ரரி. பிரமாண்டமாக நீச்சல்குளம், ஜிம் என பல வசதிகளுடன் இருக்கிறது. அதில்தான் லைப்ரரியும். படிக்க வருபவர்கள் பெரும்பாலும் மாணவர்கள். வீட்டில் படிக்க முடியவில்லை போலிருக்கிறது. புத்தகத்தை எடுத்துவந்து இங்கே அமைதியாய் படிகிறார்கள். தினசரிகள் மட்டும் வருகிறது. டைம்ஸ் ஆப் இந்தியாவும், இண்டியன் எக்ஸ்பிரசும் கிடைக்க, எனக்கு திருப்தி.

ஆட்டோ 

தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணங்களை கேட்டால் கோவம் வரும். இங்கே ஆட்டோக்களின் எண்ணிக்கையை பார்த்தால் கோவம் வரும். அந்த அளவுக்கு ஆட்டோக்கள்.

ஊரிலிருந்து வந்திருந்த ஒருவருடன் ஆட்டோவில் பயணிக்க நேர்ந்தது. கூடவே அவர் மனைவியும். வீட்டிலிருந்து ஒரு இடத்துக்கு பயணம். அங்கே அவர் மனைவியை இறக்கிவிட்டு அப்படியே யூ டர்ன் அடித்து வேறு திசையில் பயணம். அந்த இரண்டு பயணத்துக்கும் அந்த ஆட்டோக்காரர் 35 ரூபாய் கேட்க...வந்த உறவினருக்கு மயக்கம் வராத குறை. ஊருக்கு திரும்பி போகும் வரை, `நாங்க ஆட்டோவில போனோமா, அப்படியே திரும்பி வந்தோமா....` என்று அந்த எட்டாவது அதிசயத்தை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருந்தார். 

வந்த புதிதில் நானும் இப்படிதான் இருந்தேன். 10 ரூபாய்க்கு இளநீர் குடித்துவிட்டு அதை ஆச்சர்யமாய் 10 பேரிடம் சொன்னேன். ஆட்டோ என்றில்லை பல விஷயங்களில் இங்கே ஆரோக்யமான போட்டி இருக்கிறது. 

ஆட்டோக்களில் மினிமம் கட்டணம் 15 ரூபாய். ஆனால் அதைவிட அவர்கள் ஷட்டல் (ஷேர் ஆட்டோ) முறையை விரும்புகிறார்கள். ஆட்டோவில் சாதாரணமாக பின்னால் 4, முன்னே டிரைவரை சேர்த்து 3 பேர் என பார்க்கமுடியும். இதற்கு கட்டணம் 5 ரூபாய் என்பதால் இந்த முறையில் 15 க்கு பதில் 30 ரூபாய் சம்பாதித்துவிடலாம். எனவே எங்கு பார்த்தாலும் ஷட்டல் ஆட்டோமயம். 

இந்த பதிவை எழுதிவிட்டு வெளியில் வாக்கிங் போக, அங்கே ஒரு ஆட்டோக்காரர், அவருடைய இரண்டு பக்கமும் ஏற்கனவே இரண்டு பேர் இருக்க இன்னும் ஒரு பயணியை ஏற்றினார். அதாவது ஒரு ஆட்டோவில் 8 பேர். என்ன பயணமோ? 

இத்தனைக்கும் அது ஹைவே ரோட். போலீசாரின் மாமூலும் குறைவுதான் போலிருக்கிறது. 10, 20 கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறார்கள். எனவே யாருக்கும் பயம் இல்லை. சில ஆட்டோக்களில் குழந்தைகளை பின்னே உட்காரவைக்கும் முறையை பார்த்தால் உங்களுக்கு மயக்கம் வரும். ஆனால் எப்படியோ விபத்து ஏற்படாமல் ஓட்டுகிறார்கள். அதுவரை பிரச்சினை இல்லை. 

ஆட்டோக்களில் பயணிகளை ஏற்றுவதிலும் போட்டி. ஏற்கனவே ஒரு ஆட்டோ பயணிகளை ஏற்ற, அதற்கு முன்னே பின்னே என எங்கேயாவது ஆட்டோவை நிறுத்தி மற்றவர்களும் கையை பிடித்து இழுக்காத குறையாய் கூப்பிடுகிறார்கள். இதுவே தமிழ்நாடாக இருந்தால் அவர்களுக்குள் கலவரம் வெடிக்கும். தமிழ்நாட்டில் ஆட்டோக்காரர்கள் சங்கம் வைத்து அவர்களின் ஒற்றுமையை நிலைநாட்டி மக்களின் சங்கை அறுத்துவிடுகிறார்கள். அவ்வளவு நல்லவர்கள். 

இங்கே நான் சொல்லவரும் விஷயம் வேறு. இந்த அளவுக்கு ஆட்டோக்கள் பெருக காரணம் என்ன? முறையான போக்குவரத்து வசதியை அரசு செய்து தராததுதான். 

தமிழ்நாட்டில் மக்கள் ஆட்டோக்களுக்காக அதிக கட்டணங்களை அழுகிறார்கள். இங்கே குறைவாக இருந்தாலும் மறைமுகமாக நாட்டுக்கு இதுவும் தலைவலிதான்.

போக்குவரத்து நெருக்கடி, சுற்றுச்சூழல் சீரழிவு, எரிபொருள் பயன்பாடு அதிகமாவது... இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் இவையெல்லாம் அரசின் செயலற்ற தன்மையால் வருவதுதான்.

இப்போதைக்கு இரண்டு கேள்விகளுக்கு பதில் வேண்டும். போக்குவரத்து கழகங்கள் அரசுக்கு லாபத்தை தருகின்றனவா? அல்லது கட்டணங்கள் குறைவாக இருந்து மக்கள் திருப்தியாய் இருக்கிறார்களா? இரண்டும் இல்லை. அப்புறம் எதற்கு இந்த உளுத்துப்போன சிஸ்டம். எவ்வளவோ துறையில் தனியாரின் பங்களிப்பு இருக்க இங்கேயும் அனுமதித்தால் என்ன? ஒன்றும் குடிமுழுகிப் போகாது. 

வைக்கப்போர் நாய் என்று ஒரு பதம் உண்டு. அது இன்றைய அரசுகளுக்கு சரியாகப் பொருந்தும். தானும் திங்காதாம்  மற்றவர்களையும் திங்க விடாதாம். அப்படிதான் அரசுகள் இருக்கின்றன.

ATM 

ATM செண்டர் குறித்து பல விஷயங்களில் எனக்கு அதிருப்தி. சில காலம் நான் நடத்திய (சுமார் மூஞ்சி ) பத்திரிகையில் இது குறித்து ஒரு கருத்தையும் எழுதி இருந்தேன். தற்போதைய சூழ்நிலையில் மேலும் பல விஷயங்களை பார்க்கலாம்.

சில இடங்களில் ATM மானாவாரியாக இருக்கும். சில இடங்களிலோ ஆட்டோ வைத்து அலைந்து கண்டுபிடிக்க வேண்டும். அவ்வளவு முரண்பாடு. தற்போது ATM மிஷினில் கொள்ளை, பெண் தாக்குதல் என மேலும் பல பிரச்சினைகள். இந்த பிரச்சினைக்கு இரண்டு தீர்வுகள்தான் பொருத்தமாக இருக்கக்கூடும். 

ஓன்று: அரசே (ரிசர்வ் பேங்க்) தேவைப்படும் இடங்களில் ATM செண்டர் அமைப்பது. இடம், நிர்வாகம், பாதுகாப்பு போன்றவற்றை அவர்களே கவனிக்க, வங்கிகள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம். அதாவது மிஷின் வைத்து பணம் வைக்கவேண்டியது மட்டும் அந்த வங்கியுடையது.

இப்படி செய்வதன் மூலம் ஒரே இடத்தில் 7,8, வங்கிகள் தங்களின் மிஷினை வைக்கலாம். கிராமங்களில் 2,3 என தேவையை பொறுத்து... இட வாடகை, செக்யுரிட்டி செலவு வங்கிகளுக்கு மிச்சம். பண பரிமாற்றத்தின் அடிப்படையில் வங்கிகள் கட்டணத்தை செலுத்தலாம். இது ஷேர் ஆட்டோதான். ஆனால் யாரவது ஒருவர் ஷேர் ஆட்டோ விட வேண்டுமே? அந்த வேலையைத்தான் ரிசர்வ் வங்கி/அரசு செய்யவேண்டும்.

இதன் மூலம் 5 ATM - 5 காவலர்கள் என்ற நிலை போய் 5 ATM 2-3 காவலர் என குறையலாம். எல்லா சென்டர்களிலும் காவலர் என்ற நிலையும் உருவாகும். கண்காணிப்பு கேமரா பொருத்தி ஒரு மைய நிலையத்திலிருந்தும் கண்காணிக்கலாம். ஒவ்வொரு வங்கியுமா இதை செய்யமுடியும்? நிச்சயம் ஏதாவது ஒரு பொது அமைப்பு தேவை. 

வங்கிகள் நிறைய ATM திறக்கவேண்டும், அங்கே பாதுகாப்பையும் வழங்க வேண்டும் என வலியுறுத்துவது நியாமாக இருந்தாலும், வங்கிகளுக்கு இது நிதிசுமையைதான் உருவாக்கும். அது மறைமுகமாக ஏதாவது ஒரு கட்டணம் என நம் தலையில்தான் வந்து விடியும்.

இந்த பதிவை எழுதிய பிறகுதான் கவனித்தேன். ஒரு முறை ATM பயன்படுத்தினால் ரூ.6  கட்டணமாம். தேவையா இது? அதேசமயம்  நல்லதுதான். அனாவசியமாக பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறையும். மாதம் இவ்வளவு என லிமிட் வைத்தால் போதும்.    

மேலே சொன்னதுதான் சரியான வழி. அல்லது அடுத்த மாற்று வழியாக, இனி ATM திறப்பவர்கள் அதை பிற வங்கிகளுக்கு உள் வாடகைக்கு விட வேண்டும் என வலியுறுத்தலாம். அதாவது ஒரு வங்கி ATM சென்டரை தன் முழு கட்டுபாட்டில் நடத்தினாலும், வேறு சில வங்கிகளுக்கும் இடம் ஒதுக்க வேண்டும் என நிர்பந்திக்கலாம். நிர்வாகத்தில் தலையிடாமல் மிஷினையும் பணத்தையும் மட்டும் வைத்துக் கொள்ளும் உரிமை. வாடகையில் பங்கு, பண பரிமாற்றத்தின் அடிபடையில் கட்டணம், `ஒரு ஷிப்டுக்கு என் எஸ்கார்ட் அடுத்த ஷிப்டுக்கு உன் எஸ்கார்ட்` என ஏதாவது ஒரு திட்டத்துக்கு வரலாம். 

ATM இனி காலத்தின் கட்டாயம். ஏதாவது செய்து மக்களின் பாதுகாப்புக்கு வழி செய்யுங்கள்.

8 comments:

Rajaaaaa said...

Welcome Back!!!

Anonymous said...

nice

வவ்வால் said...

சிவானந்தம்,

மீண்டும் பதிவுலகம் வந்தமைக்கு வாழ்த்துக்கள்!

# கலவையாக அனுபவங்களை பகிர்ந்துள்ளீர்கள் ,ஒவ்வொன்றும் ஒரு விதம்.

# //இப்போதைக்கு இரண்டு கேள்விகளுக்கு பதில் வேண்டும். போக்குவரத்து கழகங்கள் அரசுக்கு லாபத்தை தருகின்றனவா? அல்லது கட்டணங்கள் குறைவாக இருந்து மக்கள் திருப்தியாய் இருக்கிறார்களா? இரண்டும் இல்லை. அப்புறம் எதற்கு இந்த உளுத்துப்போன சிஸ்டம். எவ்வளவோ துறையில் தனியாரின் பங்களிப்பு இருக்க இங்கேயும் அனுமதித்தால் என்ன? ஒன்றும் குடிமுழுகிப் போகாது. //

இதனை குஜராத்துக்கு தானே சொல்றிங்க?
தமிழ்நாட்டை பொறுத்து,சென்னை தவிர மற்ற எல்லா இடத்திலும் தனியார் பேருந்துகள் இயங்கிட்டு தானே இருக்கு, அவர்கள் கூட்டம் அதிகம் உள்ள ரூட் தவிர மற்ற பகுதிகளுக்கு இயக்கவே மாட்டாங்க, எனவே அரசு பேருந்துகளை இயக்கலைனா ,இன்னும் மோசமாகத்தான் ஆகும்.

# ஏ.டி.எம் பற்றிய ஆலோசனைகள் நடைமுறைக்கு வருவதால் என்ன பயனளிக்க போவதில்லை.

ஏ.டி.எம் என்பதே ஆட்களின் தேவையை குறைத்து விட்டு தானாக "பணம் எடுக்க" வசதி செய்யும் நோக்கில் தான் உருவாக்கப்பட்டது.

மேலை நாடுகளில் ஏடிஎம்க்குனு தனியறை,காவலாளீகள் எல்லாம் இல்லை, எதாவது கட்டிடத்தில் வாசல் ஓரம் வச்சிடுவாங்க. ஆட் தேவையை குறைக்க தானே ஏ.டி.எம் என்பது தான் அவங்க பாலிசி.

நம்ம நாட்டில் தான் ஏ.டி.எம் க்கு தனி அறை ,காவலாளிலாம். இது மீண்டும் ஆட்களின் தேவையை அதிகரிக்க தான் செய்கிறது.

ஏ.டி.எம் எல் பணம் எடுக்கும் போதே தாக்கியதால் இப்போ எல்லாம் பெருசா பேசுறாங்க, இதுக்கு முன்னர் எத்தனையோ முறை ஏடிஎம்மில் பணம் எடுத்து வந்தவரிடம் பணம் பறிப்பு, வங்கியில் பணம் எடுத்து வந்தவரிடம் பணம் பறிப்பு என சம்பவங்கள் நடந்துள்ளன. அப்போ பணம் எடுத்துட்டு வீட்டுக்கு திரும்ப போய் சேரும் வரை பாதுகாப்பு கொடுக்கணுமா?

ஏ.டி.எம் ல காவலாளி இருந்தால் திருடனும்னு நினைக்கிறவன் , வர வழியில் அதை செய்யத்தானே போறான்?

எனவே ஏடி.எம் இருக்குனு ஆட்கள் நடமாட்டம் அற்ற இரவுல எல்லாம் போய் தனியாக பணம் எடுக்காமல் இருக்கணும். ஏடிஎம்மே இல்லாத காலத்தில் பணம் தேவைனா , காலையில வங்கிக்கு போய் தானே பணம் எடுத்தாங்க?

இப்போ ஏடி.எம் இருக்குனு கண்ட நேரத்திலும் போய் பணம் எடுத்தால் , திருடனுக்கு வசதியா போயிடுது.

ஏடிஎம்க்கு பாதுகாப்பு கொடுப்பதால் எல்லாம் திருட்டை ஒழிக்க முடியாது, எல்லா இடத்திலும் "பிளாஸ்டிக் மணி" எனப்படும் டெபிட் கார்டு /கிரெடிட் கார்டு மூலம் எளிதாக பணம் செலுத்தி சேவை பெறும் வசதிய கொண்டு வரணும், கையில தேவை இல்லாமல் அதிகமா பணம் எடுத்துக்கொண்டு அலைவது,எடுப்பது என்பது தான் குற்றவாளிகளுக்கு வசதியாக போயிடுது.

வெளிநாட்டில் சர்வசாதாரணமாக ரோட்டில் நடந்து போறவன் மூக்கில் ஒரு குத்து விட்டு கையில இருக்க பணத்தை பிடுங்கிட்டு போயிருவாங்க, அப்படி பணம் புடுங்குறதுக்கு பேரு "மக்கிங்க்".இதுக்கே அங்கேலாம் கடுமையான சட்டங்களும் இருக்கு. முன்னால் குத்துசண்டை வீரர் "மைக் டைசன்" ஒரு மக்கிங்க் ஸ்பெஷலிஸ்ட் , அப்படி ஒரு முறை "குத்துசண்டை" பயிற்சியாளரை ஒரே அடியில் அடிச்சி வீழ்த்திட்டு "பணம்" புடுங்கவே" பணம் போனாலும் நல்லா அடிக்கிறான்டானு , கூப்பிட்டு பயிற்சிக்கொடுத்தாராம் அவ்வ்.

கையில பணம் குறைவாக வைத்திருப்பதே பாதுகாப்பு , இருக்கும் பணத்தையும் திருடன் மிரட்டினால் கொடுத்துவிடுவதே உயிருக்கு பாதுகாப்பு. பின்னர் புகார் கொடுத்துக்கொள்ள வேண்டும்.ஆனால் புகார் கொடுத்தால் காவல் துறை விரைந்து நடவடிக்கை எடுக்கனும். அப்படி சட்டம் விரைவாக செயல்படும் சூழல் வந்தால் தான் பொதுவான பாதுகாப்பு கிடைக்கும்.

ஜோதிஜி திருப்பூர் said...

நீங்க ஏன் எழுத மாட்டுறீங்க என்று பலமுறை நொந்து போனதுண்டு. இது போன்ற அனுபவ பதிவுகளைத்தான் அதிகம் விரும்புகின்றேன். எந்த பத்திரிக்கையிலும் இது போன்ற நுணுக்கமான உண்மையான பார்வையை எடுத்து வைப்பதில்லை.

ஒரு நண்பர் என் பழைய பதிவில் எழுதிய வரிகள் இது.

ஏன் மக்களுக்கு அவர்களின் தேவையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்? நிறைவேற்றினால் அரசியல்வாதிகளை சுற்றலில் விட்டுவிடுவார்கள்? நிறைய கேள்விகள் கேட்பார்கள். அடிப்படை வசதிகளுக்கே அல்லாட விட்டால் இயல்பாக அரசியல்வாதிகளால் இப்போது போல எப்போதும் சுகவாழ்வு வாழ முடியும்.

இந்திய ஜனநாயகம்.

சிவானந்தம் said...

ராஜா, அனானி,

வருகைக்கு நன்றி.

சிவானந்தம் said...

வாங்க வவ்வால்,

>>மீண்டும் பதிவுலகம் வந்தமைக்கு வாழ்த்துக்கள்!>>>

இது விட்டகுறை தொட்ட குறை. பாப்போம் எவ்வளவு நாள் என்று

<<< இதனை குஜராத்துக்கு தானே சொல்றிங்க?>>>

இந்தியா முழுக்கவே..

<<< தமிழ்நாட்டை பொறுத்து,சென்னை தவிர மற்ற எல்லா இடத்திலும் தனியார் பேருந்துகள் இயங்கிட்டு தானே இருக்கு, அவர்கள் கூட்டம் அதிகம் உள்ள ரூட் தவிர மற்ற பகுதிகளுக்கு இயக்கவே மாட்டாங்க, எனவே அரசு பேருந்துகளை இயக்கலைனா ,இன்னும் மோசமாகத்தான் ஆகும்.>>>

நாம் இது குறித்து ஒரு பதிவில் விவாதித்து இருக்கோம். தமிழ்நாட்டில் தனியார் பஸ்கள் ஆட்டோ பர்மிட் கணக்காய் உதிரியாய் இருக்கின்றன. எனவே நல்ல சேவை கொடுத்து நிரந்தர வாடிக்கையாளர்களை ஈர்க்க வேண்டும் என்ற அவசியம் அவர்களுக்கு இல்லை. பெரிய நிறுவனமாக அனுமதித்தால் தங்களுக்கென ஒரு பிராண்ட் உருவாக்க தரத்தை கொடுக்க முயற்சிப்பார்கள்.

கூட்டம் இல்லாத பகுதிகளுக்கு அவர்கள் இயக்கமாட்டர்கள் என்பது உண்மைதான். அதற்கு வேறு தீர்வுகள் வரலாம்.

<<<< ஏ.டி.எம் என்பதே ஆட்களின் தேவையை குறைத்து விட்டு தானாக "பணம் எடுக்க" வசதி செய்யும் நோக்கில் தான் உருவாக்கப்பட்டது. >>>

ATM -ல் தற்போது சராசரியாக 200 டிரான்சக்ஷன் நடக்கிறதாம். அந்த வகையில் மனித தேவையை இது பெருமளவில் குறைகிறது. இருந்தாலும் சுத்தமாக துடைக்க முடியுமா? ஓரளவு தேவைதான்.

<<< நம்ம நாட்டில் தான் ஏ.டி.எம் க்கு தனி அறை ,காவலாளிலாம். இது மீண்டும் ஆட்களின் தேவையை அதிகரிக்க தான் செய்கிறது. >>>

என்ன பண்றது? இந்தியா இன்னும் வளரனும்தான். அதுவரை பாதுகாப்பு தேவையாயிற்றே.

>>ஏ.டி.எம் ல காவலாளி இருந்தால் திருடனும்னு நினைக்கிறவன் , வர வழியில் அதை செய்யத்தானே போறான்?>>>

வீட்டில் மற்ற இடங்களை விட பீரோவுக்கு கூடுதலாக பாதுகாப்பு கொடுக்கிறோம் அல்லவா. அதேதான் ATM கதையும்

<<<<"பிளாஸ்டிக் மணி" எனப்படும் டெபிட் கார்டு /கிரெடிட் கார்டு மூலம் எளிதாக பணம் செலுத்தி சேவை பெறும் வசதிய கொண்டு வரணும்.>>>

நானும் இதைதான் விரும்புகிறேன். ஆனால் இந்தியாதான் எல்லாவற்றிலும் ஸ்லோவாயிற்றே. சிறு தொகைகளை மொபைல் மூலம் பரிமாறிக் கொள்ளும் வசதி வரும் என்று நினைத்தேன். அதுவும் இன்னும் பரவக் காணோம்.

>>பணம் குறைவாக வைத்திருப்பதுதான் பாதுகாப்பு...>>>

நல்ல ஆலோசனை. அப்ப பணம் இல்லாம நான் ரொம்ப பாதுகாப்பா இருக்கிறேனா? எனக்கு வேணாம்பா இந்த பாதுகாப்பு

சிவானந்தம் said...

வாங்க ஜோதிஜி,

>>> நீங்க ஏன் எழுத மாட்டுறீங்க என்று பலமுறை நொந்து போனதுண்டு. >>>>

பதிவு எழுதுவதை பொழுதுபோக்காகவோ அல்லது ஆத்ம திருப்தி என்ற அடிப்படையிலோ எழுதவில்லை. ஆங்கிலத்தில் பிளாக் எழுதி வருமானம் பார்பதுபோல் இங்கேயும் சாத்தியமா என்ற நோக்கிலேயே வந்தேன். அதற்கு சாத்தியம் இல்லாத நிலையில் ஆர்வம் குறைந்துவிட்டது. சில வழிகள் யோசித்திருக்கிறேன். பாப்போம்.

<<< ஏன் மக்களுக்கு அவர்களின் தேவையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்? நிறைவேற்றினால் அரசியல்வாதிகளை சுற்றலில் விட்டுவிடுவார்கள்? நிறைய கேள்விகள் கேட்பார்கள். அடிப்படை வசதிகளுக்கே அல்லாட விட்டால் இயல்பாக அரசியல்வாதிகளால் இப்போது போல எப்போதும் சுகவாழ்வு வாழ முடியும். >>>

நான் இதுவரை அரசியலை கவனித்த , அதை புரிந்து கொண்ட வகையில் அப்படி ஒட்டு மொத்தமாக அவர்களை குறை சொல்ல மாட்டேன். இந்திய அரசியல் இடியாப்ப சிக்கல் நிறைந்தது. இங்கே நேர்மையான அரசியல்வாதிகள் கூட ஒன்னும் செய்ய முடியாத நிலையில் இருக்கிறது. இதுமெல்ல மெல்லத்தான் மாறும்.

Anonymous said...

நேற்று தான் உங்களை பற்றி நினைத்தேன் , எங்கே ஆளையே காணோம் என்று. -//மனிதர்களுடன் பழகமுடியவில்லை. அரை மணி நேரம் பேசினால் 6 கேள்விகள் கேட்கிறார்கள். அதில் 5 கேள்விக்கு என்னால் பதில் சொல்ல முடியவில்லை//-- நல்ல ரைடிங் ஸ்டைல் .

Post a Comment