அண்ணாமலை மீண்டும் பேசுபொருளாகிவிட்டார். நானும் அவரைப்பற்றி அவ்வப்போது கவனிப்பதுண்டு. இவர் அதுக்கு (அரசியலுக்கு) சரிப்பட்டு வருவாரா வரமாட்டாரா என சில சமயம் சந்தேகம் வரும். அதற்கு சில காரணங்கள் இருக்கிறது.
சமீபத்தில் ஷேர் மார்க்கட்டில் டிரேட் செய்யும்போது ஒரு ஷேர் கொஞ்சம் துள்ளியது. நான் நிறைய படிக்கிறேன், எனவே எனக்கு ஏழாம் அறிவு, எட்டாம் அறிவு என அறிவு கணக்கில்லாமல் வளர்ந்துகொண்டே போகிறது. கவனிக்கவும், அறிவு மட்டும்தான்.
அந்த அடிப்படையில் ஏழாம் அறிவு `இந்த ஷேரை வாங்கு, இது ஏறப்போகிறது` என எனக்கு அறிவுறுத்த, நானும் ஆர்வக்கோளாறில் வாங்கிவிட்டேன். ஆனால் அதேநேரம் எட்டாம் அறிவு, `டேய்... சில ஷேர்கள் இப்படித்தான் சீன் போடும், ஆனால் ஏறாது` என எச்சரிக்கை மணி அடிக்க, சில நிமிடங்களில் அதை நஷ்டமில்லாமல் விற்றும்விட்டேன். அரைமணி நேரத்தில் அது கணிசமாக இறங்கிவிட்டது. தப்பித்தேன். இது ஷேர் மார்க்கெட் அனுபவம்.
அரசியலும் அப்படித்தான். இங்கேயும் சிலர் ஜெயிப்பது போல் தோற்றத்தை தருவார்கள் ஆனால் காணாமல் போய்விடுவார்கள். சமகால அரசியலில் வைகோ, விஜயகாந்த், திருமாவளவன், சீமான் என உதாரணங்கள் வரிசையாக இருக்கிறது.
மேலே சொல்லப்பட்ட அனைவரும், திருமாவளவன் அவர்களை தவிர்த்து, ஏதோ ஒரு நம்பிக்கையை கொடுத்து பின்னர் காணாமல் போனவர்கள், வைகோ, திருமாவளவன் போன்றவர்களின் கதை கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. சீமான் இப்போதுதான் டாக்டரை பார்க்க போயிருக்கிறார். விரைவில் அவருக்கும் அதே கதைதான். இவர் அரசியலுக்கு லேட் என்ட்ரி என்பதால் காணாமல் போவதற்கும் கொஞ்சம் லேட்டாகும் அவ்வளவுதான்.
இவர்களிடம் உள்ள முக்கியமான கோளாறாக நான் கவனிப்பது இவர்களின் வாய்தான். இவர்கள் நன்றாக பேசுகிறார்கள். மூணு மணிநேரம் பேச சொன்னால் ஆறு மணிநேரம் பேசுவார்கள் போலிருக்கிறது. அதுவும் சுவாரசியமாக பேசுவார்கள். அதைதான் இவர்கள் மிகப்பெரிய தகுதி என நினைத்துக் கொண்டு மக்களை மட்டுமில்லாமல் தங்களையே ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். கூடுதலாக இவர்கள் அனைவரும் காதல் (தலைவர் பிரபாகரன் உட்பட) திருமணம் செய்திருக்கிறார்கள். வாயால் பெண்களை மயக்க தெரிந்த இவர்களுக்கு அவர்கள் நிர்ணயித்த வெற்றியைத்தான் அடையமுடியவில்லை.
நம் முன்னோர்களிடமும் பல அனுபவங்கள் இருந்திருக்கிறது. பல விஷயங்களை கவனித்து `வாயுள்ள பிள்ளை பிழைத்துக்கொள்ளும்` என ஒரு வார்த்தையை ஜாடைமாடையாக சொல்லவிட்டார்கள். அதாவது வாயுள்ள பிள்ளை உருப்படும் /முன்னேறும் என சொல்லவில்லை. பிழைத்துக்கொள்ளும் என்றுதான் சொல்லியிருக்கிறார்கள். அதன் அர்த்தம் என்ன? இவர்கள் எப்படியாவது பிழைத்துக்கொள்வார்கள். குடும்ப வாழ்க்கை எனும் வண்டியை வாயை வைத்து எப்படியாவது ஓட்டிவிடுவார்கள். தெனாலிராமனும், பீர்பாலும் தங்கள் பேச்சால் மக்களை கவர்ந்தார்களே தவிர அவர்களால் ஒருபோதும் மன்னராக முடியவில்லை என்பதுதானே வரலாறு.
அண்ணாமலையும் அப்படித்தான் இருக்கிறார். நிறைய பேசுகிறார். எந்த கேள்வி கேட்டாலும் சளைக்காமல் பதில் சொல்கிறார். இவரும் காதல் திருமணம் செய்திருக்கிறார். அதனாலதான் எனக்கு இவர்மீதும் சந்தேகம் வருகிறது. வைகோ, கேப்டன், திருமாவளவன்,சீமான் என எல்லாருக்குமே அப்படி ஒரு பிம்பம் அவர்களின் ஆரம்பகால ஆரசியலில் கிடைத்ததோ அதேபோல்தான் இவருக்கும் அந்த பிம்பம் தற்போது கிடைத்திருக்கிறது. ஆனால் இன்னும் பத்து ஆண்டுகளில் இவரும் அந்த வரிசையில் போய்சேருவாரோ என்ற சந்தேகம் எனக்கு வருகிறது. இது ஏழாம் அறிவின் கணக்கு.
ஆனால் எட்டாம் அறிவு, இங்கே வேறு ஒரு தியரி இருக்கிறது அதையும் கவனி என சொல்கிறது. அது என்ன?
மற்ற மூன்று பேரும் தங்களை அதிமேதாவி என நினைத்துக்கொண்டு கட்சி ஆரம்பித்தவர்கள். தவறுகளை சுட்டிக்காட்ட இவர்களுக்கு மேல் தலைகள் எதுவும் இல்லை. அது இவர்களுக்கு மிகப்பெரிய பலவீனமாக அமைந்துவிட்டது. ஆனால் அண்ணாமலை பிஜேபியில் இருக்கிறார். இவருக்கு மேல் பல அனுபவம் நிறைந்த தலைகள் இருக்கிறது. அது இவருக்கு பலமாக இருக்கும்.
அதுமட்டுமின்றி பிஜேபி ஒரு M N C போன்றது. அதாவது மல்டி ஸ்டேட் பார்ட்டி. இவர்களுடைய செயல்பாடும் அவர்களைப்போல்தான் இருக்கும். இந்த பெரிய நிறுவனங்கள் அவ்வப்போது ஏதாவது ஒரு பிராண்டை சந்தையில் அறிமுகப்படுத்தும். நான்கை அறிமுகப்படுத்தினால் ஓன்று மொக்கையாக போய்விடும். ஓன்று மக்களிடையே வரவேற்பை பெற்றுவிடும். அதைத்தான் பிஜேபி செய்கிறது, செய்துகொண்டிருக்கும். இப்படி அறிமுகப்படுத்தியதில் அண்ணாமலை கொஞ்சம் பேர் வாங்கிவிட்டார்.
இங்கே அண்ணாமலையால் பிஜேபிக்கு நிச்சயம் லாபம்தான். பிஜேபி என்றால் பிராமண கட்சி என்ற மனப்பான்மையை தேசிய அளவில் மோடி உடைத்துவிட்டாலும், தமிழகத்தில் அவர்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. மற்ற மாநிலங்களில் எப்படியோ தமிழ்நாட்டில் பிராமண முகத்தை காட்டினால் ஒட்டு விழாது என்ற உண்மை அவர்களுக்கு லேட்டாக புரியவரே, இங்கேயும் ஒரு அக்மார்க் திராவிட முகம் தேவைப்பட்டது. தற்போது அந்த முயற்சி பலனளிக்க ஆரம்பித்திருக்கிறது. அவருடைய பேச்சுத்திறமை மட்டுமின்றி இந்த தகுதியும் அவருக்கு கூடுதல் பலம்.
இந்த பெரிய நிறுவனங்கள் இன்னொரு உத்தியையும் கடைபிடிப்பார்கள். இவர்களுக்கு தங்களுடைய பொருளை விற்க, நன்கு வாயை வளர்த்தவர்களைத்தான் சேல்ஸ்மேனாக நியமிப்பார்கள். (இங்கேயும் ஒரு உண்மையை கவனிக்கவும், வாயை வளர்த்தவர்கள் சேல்ஸ்மேனாகத்தான் இருப்பார்கள் தலைமை நிர்வாகியாக அல்ல.) அவர்கள் தங்கள் பேச்சு திறமையால் கம்பெனிக்கே தெரியாத பல தகுதிகள் அந்த பொருளுக்கு இருப்பதாக உதார் விட்டு வியாபாரத்தை வளர்ப்பார்கள்.
ஆனால் காலப்போக்கில் குறைகள்/ கோளாறுகள் கண்ணில்பட்டு வியாபாரிகள் கோபம் அடையும்போது, நிர்வாகம் அவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளித்து அந்த சேல்ஸ்மேனை மாற்றிவிடும். இப்போது வியாபாரிகளுக்கு கோபம் அடங்கிவிடும், அதே சமயம் நிறுவனம் தங்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பு கொடுத்ததால் அவர்களும் அந்த நிறுவனத்தை தொடர்ந்து ஆதரிப்பார்கள். இது வியாபார நடைமுறை.
இதேதான் அண்ணாமலை விஷயத்திலும் நடக்கக்கூடும். மற்ற நான்கு தலைவர்களும் அவர்கள் பேச்சால் மக்களை ஈர்த்தார்கள். அதேசமயம் அதிருப்தி ஏற்பட்டால் வெளியே போய்விட்டார்கள்/விடுவார்கள். ஆனால் அண்ணாமலையால் ஈர்க்கப்பட்டு வருபவர்கள், நாளை அவர்மீது அதிருப்தி ஏற்பட்டால், கட்சி அவரை சாமர்த்தியமாக டெல்லிக்கு தள்ளிவிடும், அல்லது தவிர்த்துவிடும். எப்படி இருந்தாலும் அவர் காணாமல் போகமாட்டார், ஏதோ ஒரு வகையில் இருப்பார். ஆனால் அவரால் கட்சிக்கு வந்தவர்கள் தொடர்ந்து கட்சியில்தான் இருப்பார்கள். இதுதான் பிஜேபிக்கு மிகப்பெரிய லாபம்.
இந்த வாய் வளர்த்த தலைவர்கள் துடுக்காக பேசுகிறார்கள். அது பத்திரிகையாளர்களுக்கு தீனி போடுகிறது. எனவே அவர்கள் இவர்களது முகத்தை அடிக்கடி காட்டி ஒரு பிம்பத்தை உருவாக்குவார்கள்.
இள ரத்தங்களுக்கு இப்படி சூடாக பேசுவது பிடிக்கிறது. எனவே அவர்களும் இவர்களை ரசிக்கிறார்கள். ஆனால் அது என்ன மாயமோ தெரியவில்லை இவர்களால் வெற்றியை மட்டும் சுவைக்க முடியவில்லை. அந்த மிஸ்ஸிங் பாயிண்ட் என்பது மற்றவர்களை கொஞ்சம் அனுசரித்து போவது என்பது. அது அண்ணாமலையிடம் இல்லை. அல்லது குனிய வேண்டிய நேரத்தில் குனியாமல் படுத்தேவிடுவது. இது வைகோ மற்றும் திருமா ஸ்டைல்.
அண்ணாமலைக்கு இதில் எந்த தியரி வேலை செய்யப்போவது என்பதை காலம்தான் சொல்லும்.
0 comments:
Post a Comment