பெரியார் குறித்த ஒரு பதிவு எழுத ஆரம்பித்த போது அவ்ருக்கு ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் வந்த பல விஷயங்களை கவனித்தேன். ஒவ்வொன்றும் ஒரு ரகம். அதில் பெரியார் ஆதரவாளர்கள், தற்குறிகள் என பல விதமாக இருக்கிறார்கள். தற்குறிகள் என்றால், ஒருவரை ஆதரிக்க ஆரம்பித்துவிட்டால் அவர் தவறே செய்யவில்லை என மூடி மறைக்கும் மனப்பான்மை கொண்டவர்கள்.
நான் அப்படி அல்ல. இந்த வியாதி எல்லா சித்தாந்தத்தை பின்பற்றுபவர்களிடமும் இருக்கிறது. எனக்குத்தான் அதில் எதை நம்புவது என தெரியாமல் மண்டை காய்ந்தது. இருந்தாலும் தொடர்ந்து பல விஷயங்களை கவனித்ததில் முக்கியமாக எனக்கும் உறுத்தியது, முதிய வயதில் பெரியார் மணியம்மையை திருமணம் செய்ததுதான்.
தற்போது நாம் பாதுகாப்பான, நாகரீகமான சமுதாயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். நமக்கு அந்த திருமணம் அநாகரிகமாக தெரியலாம். ஆனால் நாம் பல விஷயங்களை எதார்த்தமாக கவனிப்பதில்லை. இங்கே நாம் கடந்தகால மனிதர்களின் வாழ்க்கையை ஆராயவேண்டும்.
இங்கே இரண்டு விஷயங்களாக இதை பிரிக்கலாம். அதில் ஓன்று கடந்தகால போர்க்கால வாழ்க்கை முறை. நமக்கு தெரிந்ததெல்லாம் பிரபலமான வரலாற்றில் பதியப்பட்ட போர்கள்தான். அதை மட்டுமே படித்திருப்போம். ஆனால் அதை தாண்டி உலகம் முழுக்க அவ்வப்போது எங்கேயாவது ஒரு போர் என நடந்த காலம் அது. போர் என்றால் என்ன நடக்கும். மரணம், கணக்கிடமுடியாத மரணம். அதில் பலியாவது ஆண்கள்தான்.
இந்து மதமும் இப்படிப்பட்ட உக்கிரத்துடன் ஒரு காலத்தில் இருந்திருக்கக்கூடும். அதன்பின் புத்தர் வந்தார். அவர்தான் இந்து மதத்திற்கு முதல் வேக்சின் கொடுத்தார். அப்போது இருந்த மக்களும் அந்தகால மன்னர்களின் பேராசையால், அதன் காரணமாக உருவான போர்களாலும் வெறுத்துபோனவர்கள், புத்தரின் போதனைகளை ஏற்றார்கள். புத்தர் அந்த கால சூப்பர் ஸ்டாராக மாறினார்.
இன்னொருபக்கம் இங்கே காமராஜர் பள்ளிகளில் மதிய உணவு திட்டம் ஆரம்பித்து நல்லபேர் எடுத்தார். அதை பார்த்தவுடன் எல்லோருக்கும் காதில் புகை வந்தது. அதன்பின் எல்லா மாநிலங்களிலும் அந்த நடைமுறை கொஞ்சம் கொஞ்சமாக வந்தது. அதேபோல் அந்தக்காலத்தில் புத்தருக்கு கிடைத்த புகழை பார்த்தவுடன் ஏகப்பட்ட துறவிகள, மன்னர்கள் நானும் சூப்பர் ஸ்டாராக போகிறேன் என நாலாபக்கமும் கிளப்பியிருக்கிறார்கள். அவர்களும் இந்து மதத்திற்கு அகிம்சை எனும் வேக்சினை அவ்வப்போது கொடுக்க ஆரம்பித்தனர். கிமு 500- கிபி 500 வரை வரலாற்றை பார்த்தால் இந்து மத்தில் இப்படி ஏகப்பட்ட அகிம்சை ஆர்வலர்கள் இருந்திருக்கிறார்கள். அவர்கள் இந்து மதத்திற்கு இப்படி உபதேசம் செய்து, செய்து, புலியை சாந்தப்படுத்துகிறேன் என்று அதை பூனையாக மாற்றிவிட்டார்கள்.
இந்து மதமும் லிபரல்தான். நான்தான் தலை, என் பேச்சைத்தான் கேட்க வேண்டும் என்ற இறுமாப்பு சிவனுக்கோ பெருமாளுக்கோ இருந்ததில்லை. இது ஒரு கடவுள்கள் நிறைந்த கூட்டு குடும்பமாக இருந்திருக்கிறது. `பாவிகள் மன்னிக்கப்படுவார்கள், என் பின் வந்தால்தான் மன்னிக்கப்படுவீர்கள். அதற்கான காப்பிரைட் என்னிடம்தான் உள்ளது` என்ற சித்தாந்தம் இங்கே கிடையாது. `என் பேச்சை கேட்காவிட்டால் தலையை துண்டித்துவிடுவேன்` என மிரட்டும் கடவுளும் இங்கில்லை.
கூட்டு குடும்பங்களில் அவ்வப்போது ஒரு குழந்தை வந்துவிடுவதை போல், இந்து மதத்திலும் ஒரு நூற்றாண்டுக்கு யாராவது ஒரு கடவுள் எதற்கும் பயப்படாமல் உருவாகிவிடுவார். சிலர் காலப்போக்கில் காணாமல் போய்விடுவார். சிலர் விஸ்வரூபம் எடுத்துவிடுவார்கள்.
அந்த வகையில்தான் புத்தரும் வந்தார். அவரும் இந்து மன்னருக்கு பிறந்தவர் என்பதால், இவர் நம்மாளுதானே, இவர் பேச்சை கேட்பதில் என்ன தப்பு என்று அப்போதைய மக்களும், இந்துக்களாகவே இருந்துகொண்டு, அகிம்சையை பின்பற்ற ஆரம்பித்தார்கள். அதாவது கொஞ்சம் ஓவராகவே அகிம்சைவாதிகளாக மாறிவிட்டார்கள்.
அதன்பின் இஸ்லாமியர்களும், கிறிஸ்துவர்களும் வந்து `உன் அகிம்சையை நீயே வச்சிக்க` என்று இந்துக்களுக்கு ஒரு மறக்கமுடியாத பாடத்தை கொடுத்துவிட்டார்கள். இது எல்லோருக்கும் தெரிந்த கடந்த காலம். பெரியாரை பற்றி ஒரு கருத்தை சொல்லப்போக இப்படி ஒரு கிளை கதையும் வருகிறது.
எதற்காக இப்படி ஒரு நீண்ட விளக்கம் என்றால், இங்கே புத்தரை போன்ற ஒருவர் வந்து சைலன்ஸ என்று கத்துகிறார் என்றால் சத்தம் (போர்) அந்த காலத்தில் எந்த அளவுக்கு இருந்திருக்கும் என்பதை புரிந்துகொள்வதற்காகத்தான்.
பல ஆயிரம் வருடங்களாக போர் என்பது வருடத்திற்கு 1-3 என்ற அளவில் இருந்திருக்கக்கூடும். ஆண்கள் கணிசமாக இறந்திருக்கிறார்கள். 30-50 சதவிகிதம் கூட இருக்கலாம். அதுமட்டுமின்றி 100-ல் 10 சதவிகித ஆண்கள் குடிகாரர்களாக சோம்பேறிகளாக இருப்பார்கள். இன்னும் பத்து சதவிகிதம் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு சிவன் /பெருமாள் அல்லது வேறு ஒரு அந்தக்கால அல்டிமேட் ஸ்டாரின் ரசிகராக இருந்து திருமண வாழ்க்கையில் விருப்பம் இல்லாமல் இருப்பார்கள். இவையெல்லாம் இயற்கை.
100 ஆண்களில் 50 சதவிகிதம் இப்படி காணாமல் போய்விட்டால் உபரியாக இருக்கும் 50 சதவிகித பெண்களை என்ன செய்வது? சரி மீதி இருக்கும் 50 ஆண்களுக்கு ஆளுக்கு இரண்டு மனைவிகள் என சமமாக பிரித்து கொடுக்கவா முடியும்? அங்கேயும் ஒருவன் ராமனாக இருப்பான். `என் மனைவியை தவிர யாரையும் நிமிர்ந்து பார்க்கமாட்டேன்` என்ற கொள்கையில் இருப்பான். இன்னொருவன் `எனக்கும் ஆசைதான் ஆனா என் வருமானத்துல ஒருத்தியை சமாளிப்பதே கஷ்டம், எனவே வேண்டாம்` என மறுப்பான்.
ஆக மீதி இருக்கும் 50 சதவிகித ஆண்களிலும் இப்படி குறிப்பிட்ட சதவிகிதத்தை கழித்தால் மீதி எவ்வளவு பேர் தேறுவார்கள். உத்தேசமாக 20-30 தான் இருக்கும். இந்த ஆண்களுக்குத்தான் இங்கே டிமாண்ட். அவர்கள் பண பலம் படைத்தவர்களாக ஏற்கனவே பல திருமணங்கள் செய்தவர்களாக இருக்கலாம். இதில் முதியவர்களும் அடக்கம்.
அந்தக்கால பெற்றோர்களுக்கு இந்த சூழ்நிலை மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியிருக்கும். `உனக்கு மாப்பிள்ளை கிடைக்கவில்லை எனவே கன்னி கழியாமல் இப்படியே இரு` என்று பெண்களை விட்டுவிட முடியாது. அப்படியே விட்டாலும் கடைசிவரை அவர்களை பாதுகாப்பது யார்? பெற்றோர்களால் நிச்சயம் முடியாது. ஆண் வாரிசுகள் போர்களில் பலியாகியிருக்கலாம். மீதி இருக்கும் ஆண்களும் எவ்வளவு காலம் சகோதரிகளை சமாளிப்பார்கள்.
இந்த சிக்கல்கள் அந்தக்கால பெற்றோர்களை சிந்திக்க வைத்திருக்கிறது. இதற்கான தீர்வை தேட ஆரம்பித்திருக்கிறார்கள். பெண்களுக்கு சுகம் கிடைக்கிறதோ இல்லையோ அவர்களுக்கு குறைந்தபட்சம் நிழலாவது /பாதுகாப்பாவது வேண்டும். இதுதான் அந்தகால பெற்றோர்களின் கவலை.
இங்கே தவிர்க்க முடியாத தீர்வு ஒன்றுதான். ஏற்கனவே திருமணமானவர்களுக்கு கட்டிவைப்பது, அதுவும் சாத்தியமில்லை என்றால் முதியவர்களுக்கு கட்டிவைப்பது. அதாவது ஒரு மோசமான வியாதி, அதற்கு மனம் உடன்படாத ஒரு தீர்வு. வேறு வழியில்லை. இங்கே அந்த பெண்களுக்கு நிழல் நிச்சயம். இதில் இந்து மத்தை குறை சொல்வதில் என்ன அர்த்தம்?
பெண்ணடிமை என்றில்லை, இந்து மதத்தின் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டுகளான சாதிகள், தீண்டாமை என எதை பார்த்தாலும் அதன் பின்னால் ஒரு நிர்பந்தம் தியரி என ஓன்று இருப்பது என் கண்ணுக்கு தெரிகிறது.
இன்றைய காலம் அப்படியில்லை. நாம் நாகரிகமாக இருக்கிறோம், அல்லது அப்படி இருப்பதாக நம்பிக்கொண்டிருக்கிறோம். அதற்காக கடந்தகால மனிதர்களை மூடர்கள் என நினைக்கக்கூடாது. எதிர்கால மனிதர்கள் நம்மையும் அப்படி நினைக்கக்கூடும்.
இவையெல்லாம் பரிணாம வளர்ச்சி மனிதர்களுக்கு கொடுத்த வியாதியும் அதற்கான மருந்தும். உலகம் முழுக்க இதுதான் நிலை. இது நமக்கு புரிகிறது. காரணம் நாம் தொழில்நுட்பத்தில் பல மடங்கு மேலே வந்துவிட்டோம். தற்போது 10 நிமிடத்தில் பல்வேறு தகவல்களை இருந்த இடத்தைவிட்டு நகராமல் படிக்கிறோம். இந்த வாய்ப்பு பெரியாருக்கு கிடைக்கவில்லை. எனவே இது இயற்கை உருவாக்கிய கோளாறு என்பதை புரிந்துகொள்ளாமல் இந்து மதம்தான் பெண்களை மதிக்கவில்லை என்ற தவறான புரிதலில் இந்து மதத்தை தாக்க ஆரம்பித்துவிட்டார்.
அம்பேத்கரும் இந்து மதத்தில் இருந்த இந்த முரண்பாடுகளை பார்த்து வெறுத்தார். மும்பையில் இஸ்லாமிய ஆட்சியையும் பார்த்துவிட்டதால், அங்கேயும் அவருக்கு ஈர்ப்பு ஏற்படவில்லை. லண்டனுக்கு படிக்கச் போனார். அசலூர்காரன் கதை உள்ளூர்காரனுக்கு தெரியாது என்பதுபோல், அசலூரான கிறித்துவ மத வாழ்க்கையையும், அங்கே கறுப்பினத்தவரின் வேதனையும் அங்கேயே போய் சில காலம் வாழ்ந்து பார்த்தவர், எல்லாம் ஒரே சாக்கடைதான் என்று கிருஸ்துவ மதத்தையும் ஒதுக்கிவிட்டு புத்தரை தழுவினார். புத்தமத நாடுகளில் அவர் வாழ்ந்திருந்தால், எந்த மதமும் வேண்டாம் என நாத்திகத்தை ஏற்றிருப்பார்.
திருமாவளவனும் இந்துமதம் பெண்களை மதிக்கவில்லை என்று அடிக்கடி கூப்பாடு போடுவதால் இதை எழுதவேண்டியிருக்கிறது. இவர் அடிக்கடி மனுதர்மம் இதை சொல்கிறது என எதையாவது உதாரணம் காட்டுவார்.
அந்த மனு என்ற பிராமணர் என்ன இந்து மதத்தின் பி ஆர் ஓ வா? இல்லையே. சிவனே, `சக்தி இல்லையேல் சிவன் இல்லை சிவன் இல்லையேல் சக்தி இல்லை. இங்கு அனைவரும் சமம்` என்று அரசு கெஜட்டில் அதிகாரப்பூர்வமாக சொல்லிவிட்ட பிறகு ஒரு சாதராண பிராமனின் கருத்தை ஏன் ஏற்கவேண்டும்.
தற்போது திமுகவின் அதிகாரப்பூர்வ கொள்கை என்றால் கட்சியின் மூத்த தலைவர்கள் சொல்வதைத்தான் கவனிக்கவேண்டும். அந்த கட்சியிலும் இரண்டாம் கட்ட ஏன் நாலாந்தர கட்சி பேச்சாளர்களும் உண்டு. சாதிக் பாட்சா, சிவாஜி கிருஷ்ணமூர்த்தி என சில அலப்பறைகள் இருப்பதில்லையா. எல்லா கட்சியிலும் இப்படி கோளாறுகள் உண்டு. இந்து மதத்தின் அளப்பறைதான் இந்த மனு என்கிற பிராமணர்.
மேலே இதற்காகத்தான் நீண்ட விளக்கம் கொடுத்தேன். இந்து மதம் யாரையும் பயமுறுத்தவில்லை. ஒரு விஷயம் தவறு என தெரிந்தால் அதை நீங்கள் தைரியமாக சொல்லலாம். அந்த கருத்தை சொன்னவன் சிவனாக இருந்தாலும் சரி. இப்படி கருத்து சுதந்திரம் நிறைய இருந்ததால் இந்து மதத்தில் ஏகப்பட்ட கருத்து கந்தசாமிகள் உருவானார்கள். அப்படி உருவான கன்றாவி கந்தசாமிதான் இந்த மனு எனும் பிராமணர்.
நிகழ்கால அரசியலை கவனியுங்கள். இங்கே பேச்சாளர்கள் கலைஞரை /ஜெயலலிதாவை புகழ்ந்து பேசவேண்டும். அப்படியே உங்களுடைய எதிரியை தரம் தாழ்ந்தும் திட்டவேண்டும். இப்படிப்பட்ட பேச்சாளர்களை கலைஞரும் ஜெயலலிதாவும் ஆதரித்தார்கள், ரசித்தார்கள். அதேபோல் பிராமணன் உயர்ந்தவன், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என மனு சொன்னதை அந்த கால பிராமணர்கள் ரசித்தார்கள். அதோடு விடவில்லை, லைக் செய்தார்கள், ஷேர் செய்தார்கள், சப்ஸ்கிரைப்பும் செய்தார்கள்.
தற்போது புதிதாக இன்னொரு மனு வந்து பிராமணர்களை குஷிப்படுத்தியிருக்கிறார். அவருடைய தற்போதைய பெயர் சீமான். இவர் `பாப்பான் எல்லோரையும் சமமாக பார்ப்பான்` என்று புது தியரியை கண்டுபிடித்துவிட, அந்தக்கால பிராமணர்கள் மனுவுக்கு பல்லக்கு தூக்கியதை போல் இந்தக்கால பிராமணர்கள் சீமானுக்கு பல்லக்கு தூக்குகிறார்கள். இதுபோன்ற நாலாந்தர பேச்சாளர்களை (மனு, சீமான்) அவ்வளவு முக்கியத்துவம் கொடுக்காமல் ஒதுக்குவதுதான் நல்லது.
ஆனால், பெரியார் பெண்களின் சுதந்திரமற்ற அவலமான வாழ்க்கை முறையை கவனித்து அவர்களின் உரிமைக்கு குரல் கொடுத்தார், அதன்பலனாக அவர்களுக்கு அங்கீகாரம் தமிழகத்தில் கொஞ்சம் வேகமாகவே கிடைத்தது என்பது ஒரு வரலாற்று உண்மை.
அதெல்லாம் சரி, பெண்களுக்காக இவ்வளவு குரல் கொடுத்தவர் மணியம்மையை ஏன் திருமணம் செய்யவேண்டும்? இந்த குற்றச்சாட்டும் நியாயமாகத்தானே இருக்கிறது. இங்கேதான் வேறு ஒரு தியரி வேலை செய்ய ஆரம்பிக்கிறது. அதாவது மனிதர்கள் சிந்திக்கும் விதத்தில் ஒரு முரண்பாடு இருக்கிறது.
பெரியார் பெண்ணுரிமை பேசும்போது அவருக்கு வயது 30-50. கூடவே மனைவியும் இருந்திருக்கிறார். மனிதர்களுக்கு இது ஒரு கனாக்காலம். தத்துவமாக பேசுவார்கள். மனைவி போய் தனிமை வந்த பிறகுதான் வேதாளம் முருங்கைமரம் ஏறும். போதாதற்கு பெரியாருக்கு, அவருடைய பார்வையில், கெட்ட நேரம் ஆரம்பித்துவிட்டது. அதாவது 1940களில் இந்தியாவின் சுதந்திரம் கிட்டத்தட்ட உறுதியான நிலை வந்துவிட்டது.
இங்கே சுதந்திரம் என்பது நாட்டில் உள்ள அணைத்து மக்களுக்கும்தான். ஆனால் பெரியாரின் பார்வையில், எந்த பிராமணியத்தை எதிர்த்தாரோ அவர்கள் பெரும்பான்மையாக உள்ள காங்கிரசின் கையில் அதிகாரம் போகப்போகிறது. இந்த விஷயம் மனிதரை ரொம்பவே மனஅழுத்ததில் தள்ளிவிட்டது போலிருக்கிறது.
உலகக்கோப்பையில் இந்தியா தோற்றாலும் பரவாயில்லை, ஆனால் கப்பை பாகிஸ்தான் ஜெயித்தால் நமக்கு எப்படி இருக்கும். அந்த கதைதான். மனஅழுத்ததோடு பெரியார் வீட்டில் இருந்திருக்கிறார். மனைவியும் இல்லை. மணியம்மையை பார்த்தார்..பார்த்தார்.. அவ்வளவுதான்.
எனக்கும் ஆரம்பத்தில் சந்தேகம், ஒருவேளை மணியம்மை நிஜமாகவே வளர்ப்பு மகளாக இருப்பாரோ என்று. இந்த சொத்து சொத்து என்று சொல்கிறார்களே அதுதான் இந்த திருமணத்துக்கு காரணம் என்றும் நினைத்தேன். காரணம், ஆரம்பத்தில் இவரை பற்றிய நான் படித்த தகவல்கள் மேம்போக்காக இருந்தன.
சீமான் இவரை பற்றி பேசிய பிறகு நிறைய தகவல்கள், காணொளிகள் வெளிவந்தன. அதில் ஒன்றான பெரியார், ஜி டி, நாயுடு, மணியம்மை காணொளி பார்த்தேன். அந்த காணொளியில் பெரியாருடன் இணைந்து நடப்பதற்கு. ஜி டி நாயுடு மணியம்மையை இழுக்கிறார், மணியம்மையோ வெட்கப்படுகிறார். கவனிக்கவும் வருத்தப்படவில்லை, கோபப்படவில்லை, வெட்கப்படுகிறரர்.
இங்கே இரண்டு செய்தி இருக்கிறது. ஒரு பெண் யாரை பார்த்து வெட்கப்படுவார்? சந்தேகமே இல்லை. அவர்களுக்குள் உறவு இருந்த்திருக்கிறது. இன்னொன்று, அவர் ஒன்றும் அதிருப்தியில் இல்லை. அந்த வாழ்க்கையை அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். இப்போது அந்த போர் கால வாழ்க்கை முறையை மறுபடியும் படியுங்கள். 1940 களிலும் முதலாம் உலகப்போர் இரண்டாம் உலகப்போர் என மரணங்கள் நிறைந்த காலம் அது. இங்கே பெண்களுக்கு இது போன்ற திருமணங்கள்/வாழ்க்கைகள் பழகிப்போன ஒன்றாக இருந்திருக்கிறது. மணியம்மை வயதான நிலையில் பெரியாருடன் எடுத்த புகைப்படத்தையும் பார்த்தால் அங்கேயும் சாந்தமாகத்தான் இருக்கிறார். எனவே இதை அநியாயம் என்ற பார்வையில் பார்ப்பதே தவறு.
சரி, பெரியார் தவறு செய்துவிட்டார் என ஒரு வாதத்துக்கு வைத்துக்கொண்டாலும், அவருடைய இந்த செயலை கண்டித்து வெளியேறிய அண்ணாவின் அப்போதைய வயது என்ன. 30-40. இந்த வயதில் இவரும் தீவிர சீர்திருத்தவாதியாக இருக்கிறார். இப்போது அண்ணாவின் வயது 50 தொட்டவுடன் `மாற்றான் தோட்டத்துக்கு மல்லிகைக்கு மனம் உண்டா என்றும், நடிகைகளில் படி தாண்டும் பத்தினிகள் யார்` என்றும் ஆராய்ச்சி செய்கிறார். எம் ஜி ஆர், கலைஞர் எல்லாம் இதே கதைதான்.
சரி திராவிட தலைவர்கள்தான் இப்படி என்று பார்த்தால், காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திரரை, எடுத்துக்கொள்ளுங்கள். அவரும் இளம் பருவத்தில் ஆன்மிக நாட்டம் கொண்டு முற்றும் துறந்த முனிவராக வலம் வந்தார். வயதாகியது அதிகாரமும் வந்தது. இப்போது அவருக்கும் இளமை ஊஞ்சலாட ஆரம்பித்துவிட்டது.
மற்றவர்களாவது தலைவர்கள். அதை ஓரளவுக்கு மன்னிக்கலாம். ஆனால் துறவறம் பூண்டு இப்படி சிறகடித்து பறந்த இந்த ஆன்மீக போலிகளை பிராமணர்கள் அம்பலப்படுத்தினார்களா? இல்லையே. கமுக்கமாகத்தானே இருந்தார்கள். நக்கீரன் போன்ற ஒரு மஞ்சள் பத்திரிகைதான் இதை அம்பலப்படுத்தியது. அப்போதும் ஜெயேந்திரரை காப்பாற்ற பிராமணர்கள் முயற்சித்தார்கள்.
மொத்தத்தில் இது ஒரு வியாதி. எல்லோரையும் பீடிக்கும் வியாதி. இதற்கு யாரும் விதிவிலக்கல்ல. பெரியாரும் பலியாகிவிட்டார். அவர் இதை கலைஞரை போல் வார்த்தை ஜாலம் செய்து மறைந்திருக்கலாம். அல்லது அப்படியே தொடர்ந்திருந்தால் யாரும் கேட்கப்போவதில்லை. ஆனால் அவருக்கு தன்னை `சார்ந்து` மணியம்மை இருக்கிறார் அவருக்கு ஒரு பாதுகாப்பு வேண்டும் என்ற எண்ணம், தன் பேச்சை கேட்காத பிள்ளைக்கு சொத்தும் போகக்கூடாது என்றும் ஒரு கோவம். இவை காரணமாக இப்படி ஒரு கல்யாணம். இதையெல்லாம் கடந்துபோக வேண்டியதுதான்.
0 comments:
Post a Comment