பீஹார் தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன? வாரிசு அரசியல் எடுபடாது என்பதுதான். அப்படியென்றால் தமிழ்நாடு ஏன் இப்படி வித்தியாசமாக இருக்கிறது என்று பார்த்தால், அதற்கு வேறு ஒரு தியரி தெரிகிறது.
எனக்கு இந்த ஓட்டு திருட்டு, EVM மோசடி போன்ற விஷயங்களில் உடன்பாடில்லை. இது தோற்றுப்போனவர்களின் புலம்பல். ஆனால் முறை தவறிய அரசியலை பிஜேபி செய்கிறது என்பது மட்டும் புரிகிறது. SIR தேவைதான். ஆனால் காலஅவகாசம் கொடுத்து இன்னும் எளிமையாக செய்திருக்கவேண்டும். அங்கே அவர்கள் அவசரம் காட்டியிருக்கிறார்கள்.
இங்கே நிஜமான அயோக்கியத்தனம் என்பது கடைசி நேரத்தில் பெண்களுக்கு கடன் உதவி என 10000 ரூபாய் அவர்களுக்கு வழங்கியதுதான். காலையில் திட்டிவிட்டு செல்லும் புருஷனை நம்பலாம், ஆனால் இரவு 10 மணிக்கு பூவும், அல்வாவும் வாங்கிவரும் புருஷனை ஒருபோதும் நம்பக்கூடாது. தேர்தல் நெருங்கும்போது வழங்கப்படும் உதவி ஒரு மறைமுக லஞ்சம் என்பதும் இவர்கள் ஆபத்தானவர்கள் என்பதும் இந்த பெண்களுக்கு தெரியவில்லை.
அதேசமயம் இதுபோன்ற அயோக்யத்தனங்களை இந்தியாவுக்கு அறிமுகப்படுத்தியதே திமுகதான் என்பதை மறந்துவிடக்கூடாது. நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதை கொடுப்போம் இதை கொடுப்போம் என வாக்குறுதிகளை அள்ளி வீசினார்கள். இலவச டிவி, மகளிர் உரிமைத்தொகை போன்றவை இந்த வகைதான். இவை நல்ல விஷயங்கள்தான், அதை மறுப்பதற்கில்லை. ஆனால் ஆட்சியில் இருக்கும்போது செய்யாமல், வந்தால் செய்வோம் என்று சொல்லும்போதுதான் இவை அயோக்கியத்தமானாக மாறுகிறது.
தற்போது பிஜேபி நாங்க அட்வான்சா கொடுத்துவிடுகிறோம் என முந்திக்கொள்கிறார்கள். நல்லதோ, கெட்டதோ, தமிழ்நாடு இந்தியாவில் பலருக்கு முன்மாதிரியாக இருக்கிறது.
எனக்கு நிதிஷ் குமார் யார் எப்படிப்பட்டவர் என்ற விவரம் புரியவில்லை. பெரிய அளவில் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு இல்லை. அவருக்கு இருக்கும் ஒரே வாரிசும் அரசியல் ஆர்வம் இல்லாதவராக இருக்கிறார். அந்த வாரிசின் மீதும் எந்த குற்றச்சாட்டும் இல்லை. இது நல்ல தலைவருக்கான அடையாளம்தான்.
ஆனால் முதல்வர் பதவிக்காக இவர் செய்யும் அட்டூழியம்தான் கொஞ்சம் இடிக்கிறது. இவருடைய கட்சிக்கு குறைந்த எம் எல் ஏக்கள் இருந்தாலும் நான்தான் முதல்வர் என அடம்பிடிப்பதும், அதற்காக குரங்கு பல்டி அடிப்பதும் என இவர் செய்யும் கூத்து இருக்கிறதே ... இவரை எதில் சேர்ப்பது என்றே தெரியவில்லை. இவ்வளவையும் மீறி இவர் ஜெயிக்கிறார் என்றால் நிச்சயம் இவர் ஒரு புதிர்தான்.
இருந்தாலும் பீஹார் அரசியலை பற்றி பீஹாருக்கு போகாத, அங்குள்ள அரசியல் வரலாறு தெரியாத ஒருவன் விமர்ச்சிப்பது என்பது முட்டாள்தனமானது. காரணம் இங்கே குஜராத் மாநிலத்தில் என்ன நடக்கிறது என்று தெரியாமலே தமிழ்நாட்டில் பல மேதாவிகள் பல கதைகளை அவிழ்த்துவிடுவார்கள்.
அதேபோல் தமிழ்நாட்டில் பிஜேபி படுதோல்வி அடையும்போதெல்லாம் `தமிழ்நாடுமே கிஸிக்கு திமாக் நெய்யே` என தமிழ்நாட்டு மக்களை கிண்டல் செய்வார்கள் இங்கிருக்கும் பிஜேபி ஆதரவாளர்கள். அவர்களை பொறுத்தவரை பிஜேபிக்கு ஒட்டு போட்டால்தான் ஒருவனை அறிவாளி என்று ஏற்றுக்கொள்வார்கள். தமிழ்நாடு பெரியார் மண், இங்கே மதவாதம் எடுபடாது என்பது அவர்களுக்கு புரியவில்லை. உண்மையில் மக்களிடம் இருக்கும் மருந்தே இல்லாத மன வியாதி இது.
மொத்தத்தில் இங்கே ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் கவனிக்க வேண்டும். பிஹாரில் பிஜேபி ஜெயிக்கவில்லை, காங்கிரஸ், ஆர்ஜேடி தோற்கடிக்கப்பட்டிருக்கிறது. வாரிசு அரசியல் மோசமானதுதான். அதேசமயம் செயல்படாத அரசும், சந்தர்ப்பவாத அரசியலும் மோசமானதுதான். எனவே நான் கூட நிதிஷ் தோற்கவேண்டும் என்றுதான் எதிர்பார்த்தேன்.
மத்தியப்பிதேசத்தில் சிவராஜ் சிங் சவுஹான், இங்கே நிதிஷ் குமார் போன்றவர்கள் மாநிலத்தில் எந்த ஒரு பிரமாண்டமான வளர்ச்சியையும் காட்டாமல், தொடர்ந்து ஜெயிப்பதற்கு காரணம் மாற்றத்தை கொடுக்கக்கூடிய ஒரு புது முகம் இந்த மாநில மக்களுக்கு கிடைக்கவில்லை என்பதுதான். அப்படி ஒரு புதுமுகத்தை காங்கிரஸ் காட்டாமல் ராகுல் காந்தியைத்தான் காட்டுவோம் என்று அடம்பிடித்தால் இதுதான் தொடர்கதையாக இருக்கும்.
அதேசமயம் காங்கிரசிலிருந்து தெலுங்கானாவில் ரேவேந்த்ர ரெட்டி, கர்நாடகாவின் சித்தராமையா போன்றவர்களும் ஜெயிக்கிறார்கள். இங்கே பாடம் என்ன சொல்கிறது?
இதற்கு கிரிக்கெட் மூலம் உதாரணம் சொல்லலாம். ஒரு மேட்சில் ஒரு பேட்ஸ்மேன் அன்று விளையாட முடியாமல் தடுமாறுவார், அப்போது இன்னொரு பேட்ஸ்மேன் புல் பார்மில் இருப்பார். எனவே இவர் விளையாடாமல் அவருக்கு விளையாடும் வாய்ப்பை அதிகப்படுத்தி சமாளித்து வெற்றியும் பெறுவார்கள். அதுதான் கர்நாடகாவிலும் தெலுங்கலானாவிலும் நடந்தது. நிரந்தர அவுட் ஆப் பார்மில் வாரிசு ராகுலும், புல் பார்மில் புதுமுகமாக மாநில தலைவர்களும் இருந்திருக்கிறார்கள். எனவே அவர்களில் திறமையால் வந்த வெற்றி இது.
ஆனால் பிஹாரில் இரண்டுமே (ராகுல், தேஜேஸ்வர்) மொக்கையாக வாரிசுகளாக இருந்திருக்கிறார்கள். இதுதான் பிஹாரின் தலைவலி. இதை அவர்கள் இருவரும் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு வாய்ப்பில்லை.
அதேசமயம் பிஜேபி அதிகார வெறிபிடித்து ஆடுகிறது என்ற பிம்பம் இங்கே கட்டமைக்கப்படுகிறது. இதையும் நான் நம்பவில்லை. அப்படி இருந்தால் எண்ணிக்கை அதிகமா இருந்தும் நிதிஷை முதல்வராக்க வேண்டிய அவசியம் என்ன? பிஜேபிக்கு காங்கிரஸோ அல்லது அதன் கூட்டணி கட்சிகளோ ஆட்சிக்கு வந்துவிட கூடாது என்ற கொள்கைதான். காங்கிரசின் சிறுபான்மை ஆதரவு என்ற நிலை தொடரும் வரை, அவர்களை வளரவிடாமல் பிஜேபி கழுத்தறுக்கும். அதற்காக அது எந்த விலையையும் கொடுக்கும்.
சில புள்ளிவிவரம் நமக்கு உண்மையை சொல்லும். இந்தியாவிலேயே அதிகம் கோவில்கள் உள்ள மாநிலம் தமிழ்நாடுதான். மகாபாரதம், ராமாயணம் போன்றவை உருவான வடமாநிலங்களை விட இங்கே கோவில் அதிகம் இருப்பதன் காரணம் என்ன?
வடமாநிலங்களில் இருந்திருக்கின்றன. அவை இஸ்லாமிய ஆட்சியில் அழிக்கப்பட்டிருக்கின்றன. அந்த தகவல் தலைமுறை தலைமுறையாய் மக்களிடையேயே கடத்தப்பட்டு அந்த பகுதிகளில் இன்னமும் இஸ்லாமிய வெறுப்புணர்வு இருக்கும். இந்த உண்மையை காங்கிரஸ் புரிந்து கொண்டு அதற்கு தகுந்தாற்போல் அவர்கள் அங்கே தேர்தல் உத்தியை வகுக்கவேண்டும்.
தமிழ்நாட்டில் நாம் இஸ்லாமியர்களின் தலைவலியை சந்திக்கவில்லை. அவர்களால் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை, எனவே நாம் ஏன் அவர்களை வெறுக்கவேண்டும் என்ற மனநிலையில் தமிழ்நாட்டு மக்கள் இருக்கிறார்கள். இது தெரியாமல் பிஜேபி இங்கு மதவாத அரசியல் செய்தால் இங்கே பிஜேபியும் வளரமுடியாது.
மொத்தத்தில் குளிர் பிரதேசமான வடமாநிலங்களில் காங்கிரஸ் கதர் சட்டை விற்கிறது. குளிர் இல்லாத தமிழ்நாட்டில் பிஜேபி ஸ்வட்டர் விற்கிறது. இருவரின் வியாபாரமும் அந்த குறிப்பிட்ட பகுதிகளில் ஓடாது என்பதுதான் தற்போதைய நிலைமை.

0 comments:
Post a Comment