சமீபத்தில் உச்ச நீதிமன்றம் தமிழக அரசு vs கவர்னர் ரவி தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. அவர்கள் என்ன சொல்லவருகிறார்கள் என்று இரண்டு நாளாக படித்தேன். வருவேன்..ஆனா வரமாட்டேன் என்ற வகை.
இந்த வழக்கில் கவர்னர் மற்றும் குடியரசு தலைவர்களுக்கு காலக்கெடு நிர்ணயிக்கமுடியாது என்று இவர்கள் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். நான் பல பதிவுகளில் எழுதியிருக்கிறேன், இந்த நீதிபதிகளுக்கும் நீட் எக்ஸாம் வைத்து அவர்களுக்கு பொது அறிவு இருக்கிறதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவேண்டும் என்று. அதை செய்யாததால்தான் இப்படிப்பட்ட அபத்தமான தீர்ப்புகள் வருகின்றன.
இங்கே மறைமுகமாக கவர்னருக்கு காலக்கெடு நிர்ணயிக்கமுடியாது என்று சொல்லிவிட்டு, ஆனால் காலதாமதமானால் நீதிமன்றத்தை அணுகலாம் என்று சொல்லி நீதியை நிலைநாட்டியிருக்கிறார்கள்.
இது ஒரு கவுண்டமணி காமெடி வகை. கோவை சரளா ஒரு பிச்சைக்காரனுக்கு `சாப்பாடு` இல்லை என்று சொல்வார். கவுண்டமணிக்கு கோவம் வந்துவிடும். அந்த பிச்சைக்காரனை கூப்பிட்டு `அவ என்ன சொல்றது, நான் சொல்றேன் சாப்பாடு இல்லை` என்று சொல்வார்.
இங்கேயும் அதேதான் நடக்கப்போகிறது. கவர்னர் 6-12 மாதம் தாமப்படுத்துவார். இதை எதிர்த்து நீதிமன்றம் போனால், இப்படி முடிவை தாமதப்புடுத்தும் அதிகாரம் அவருக்கு யார் கொடுத்தது என்று சொல்லி, அந்த வழக்கை விசாரிக்கிறேன் என்று இவர்கள் மேலும் ஒரு வருஷம் இழுப்பார்கள்.
அதிலும் இவர்கள் வேண்டுமென்றே இதுபோன்ற வழக்குகளை இரண்டு நீதிபதிகள் அமர்வுக்கு அனுப்புவார்கள். அவர்கள் 6-12 மாதம் இழுத்துவிட்டு இருவரும் மாறுபட்ட தீர்ப்பை வேண்டுமென்றே கொடுப்பார்கள். இப்போது மூன்றாவது நீதிபதி வருவார். அவர் வந்து அவர் பங்குக்கு கொஞ்சம் இழுப்பார். கடைசியில் இது வடிவேல் காமெடியாக மாறிவிடும்.
இங்கே டெல்லியின் கதையே வேறு. அங்கே ஜனாதிபதி என்பவர் எம்பிகளால், எம் எல் ஏக்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார். அவர் தன் எல்லையை தாண்டி பயணித்தால் அவர் மீதும் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்து மத்திய அரசு அவரை வீட்டுக்கும் அனுப்ப முடியும். எனவே அவர்கள் ஒழுங்காக நடக்கிறார்கள். அதே நிலை கவர்னருக்கு இருந்தால் இந்த தீர்ப்பை வரவேற்கலாம்.
இந்த தீர்ப்பில் இருக்கும் இன்னொரு அயோக்கியத்தனம், இந்த தீர்ப்பை பீகார் தேர்தல் முடியும் வரை காத்திருந்து அதன்பிறகு வரவழைத்திருப்பதுதான். இங்கே நான் சரியான வார்த்தைதான் பயன்படுத்தியிருக்கிறேன். தீர்ப்பு கொடுக்கப்படவில்லை, வரவழைக்கப்பட்டிருக்கிறது.
ஒரு சிலர் கடுமையாக உழைத்து அற்புதமாக ஒரு கோட்டையை கட்டி எழுப்புவார்கள். ஆனால் கடைசி காலத்தில் அவர்களே ஏதாவது முட்டாள்தனம் செய்து அதை விழவைப்பார்கள். இப்படித்தான் காங்கிரஸ் நீண்டகாலமாக மக்களை டேக்கன் ஃபார் க்ராண்ட்டட் என்று இறுமாப்புடன் செயல்பட்டது. அவர்களுக்கு தண்ணி காட்ட மோடி வந்ததுபோல், இந்த மோடிக்கும், அல்லது இவர் போனபிறகு பிஜேபிக்கும் தண்ணி காட்ட ஒருவர் வருவார்.
இனி நாம் இங்கே வேறு சில விஷயங்களை பார்ப்போம். இப்போது நீதித்துறையும் மோடியும் ஒரு ஒப்பந்தத்தில் இருக்கிறார்கள். அதாவது தலைமை நீதிபதியை நீங்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளுங்கள், நான் தலையிட மாட்டேன். அதற்கு பதில் அவ்வப்போது நாங்கள் விரும்பும் தீர்ப்புகளை நீங்கள் கொடுக்கவேண்டும் என்பதுதான் இந்த டீலிங். நீதிபதிகளுக்கு இந்த டீலிங் பிடித்திருப்பதால் அவர்களும் நல்லவனாக காட்டிக்கொண்டு டபுள் கேம் ஆடுகிறார்கள். இந்த நிலைமையை தடுக்கவேண்டும்.
ஜனநாயகத்தில் The Last Say என்பது எப்போதும் தேர்தெடுக்கப்பட்ட தலைவர்களின் முடிவாகத்தான் இருக்கவேண்டும். அதுதான் ஆரோக்கியமான ஜனநாயகமாக இருக்கும். டெல்லியில் இந்த நிலை இருக்கிறது; மாநிலங்களில் இது இல்லை.
இங்கே இப்போது பிரச்சினை நீதிபதிகளுக்கும் கடிவாளம் வேண்டும் என்பதுதான். இவர்கள் கவர்னர்களை விட அபாயகரமானவர்களாக இருக்கிறார்கள். டெல்லியில் ஒரு நீதிபதியின் வீட்டில் லஞ்சப்ப பணம் எரிந்து செய்தியாகிறது. அந்த நீதிபதியின் மீது இன்னும் நடவடிக்கை வரவில்லை. ஆனால் மத்திய அரசுக்கு பாதிப்பு என்றவுடன் இங்கே விரைவாக நேரம் காலம் பார்த்து தீர்ப்பு.
இந்த டெல்லி நீதிபதி எந்தந்த வழக்குக்காக லஞ்சம் பெற்றார் என்று கவனித்து அந்த வழக்குகள் மறுபரிசீலனைக்கு இவர்கள் கொண்டுவரப்போவதில்லை. அதேசமயம் இங்கே லஞ்சம் கொடுத்து தீர்ப்பை வாங்கியவர் தப்பித்தும்விட்டார். விலைபோன நீதிபதிக்கும் பெரிதாக ஆபத்தில்லை. வேலைதான் போகும்; தண்டனை கிடையாது. இதுதான் நீதித்துறையின் லட்சணம்.
இத்தனைக்கும் கவாய் ஒரு SC. இவர் மேடை பேச்சுக்களை கேட்டால் ஏதோ RSS எதிர்ப்பாளர் மாதிரி தெரியும். ஆனால் தீர்ப்புகள் பிஜேபி குஷிப்படுத்தும் விதமாக இருக்கும். சுருக்கமாக சொன்னால் இவர் இடது பக்கமாக கையை காட்டிவிட்டு வண்டியை வலது பக்கமாக ஓட்டுகிறார். வலது என்றால் பொருளாதாரம் அல்ல.
இன்னொருபக்கம் இப்படி ஒரு தீர்ப்பு பிஜேபிக்கு ஆதரவாக கொடுக்கப்போகிறோம் எனறு எப்போதோ இவர்கள் முடிவு செய்திருப்பார். அது நீங்கள் நம்பும் அளவுக்கு இருக்க வேண்டும் என்பதற்க்காவே வேண்டுமென்றே இந்து மதத்தை திட்டுவது போலவும், தன்னை பிஜேபி எதிர்ப்பாளராகவும் காட்டிக்கொண்டிருந்தார். கடைசியில் அவருடைய முதுகெலும்பை காட்டிவிட்டார்.
என்ன செய்யலாம் என்று நான் இங்கே எழுதுவதால் ஒரு மாற்றம் வரப்போவதில்லை. அதேசமயம் வெறும் வேடிக்கை பார்ப்பதாலும் நாடு மாறப்போவதில்லை. எனவே எழுதி வைப்போம். யார் கண்ணிலாவது பட்டால் சந்தோசம். எனக்கு இன்று பொழுது போகும்.
அதேசமயம் பிஜேபி வந்தபிறகுதான் நீதித்துறை இப்படி மாறியிருக்கிறது என்று சொல்லப்போவதில்லை. காங்கிரஸ் சமயத்திலும் இதேபோல் நீதிபதிகள் எட்டடி பாய்ந்தார்கள். பிஜேபி அதை பதினாறு அடியாக மாற்றியிருக்கிறது.
இனி விஷயத்துக்கு வருவோம். ஜனநாயகம், நிர்வாகம் என்பதை அவ்வப்போது பரிணாம வளர்ச்சிக்கு உட்படுத்த வேண்டும். அதாவது பழைய நடைமுறை திருப்தியாக இல்லையென்றால் அங்கே புதிய மாற்றங்களை, சிந்தனைகளை புகுத்தவேண்டும். நீதித்துறையிலும் அப்படி செய்யலாம்.
மத்திய அரசு - எதிர்க்கட்சி தலைவர் - தலைமை நீதிபதி கலந்து எடுக்கும் முடிவு என்பது ஆரோக்கியமான நடைமுறையாக இருந்தது. அதில் என்ன கோளாறோ, கொலிஜியம் நடைமுறை வந்தது. ஆனால் இதுவும் சரியாக வேலை செய்யவில்லை.
எனவே நீதித்துறையை அவர்கள் பாதையிலேயே விட்டுவிடுவோம். ஆனால் அதில் இன்னும் கொஞ்சம் மசாலா சேர்க்கலாம். தேர்தலில் பெரும்பான்மை பெறும் ஒரு அரசியல் கட்சி ஒருமனதாக ஒரு நபரை தலைவராக தேர்தெடுப்பார்கள். அப்படி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தி அவர்களுடைய பெரும்பான்மையை நிரூபிக்கவேண்டும். இது நடைமுறை
இதை அப்படியே நீதித்துறையில் கொண்டுவரலாம். கொலிஜியம் மூலம் `தரமான` தலைமை நீதிபதியை இருட்டில் அவர்கள் தேர்ந்தெடுக்கட்டும். அது நமக்கு பிரச்சினை இல்லை. ஆனால் அதே சமயம் அவர்களும் இதேபோல் இன்னொரு அக்னிபரிட்சைக்கு உட்படுத்தவேண்டும். அதாவது அனைத்து உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிகளுக்கும் வாக்குரிமை அளித்து `இதோ ஒரு யோக்கியன் தலைமை நீதிபதியாக கொலிஜியம் மூலம் தேர்தெடுக்கப்பட்டிருக்கிறார். இவரை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என அவர்களிடம் கேட்கவேண்டும். அவர்களுக்கு ஓகே என்றால் சரிதான்.
பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல தேர்ந்தெடுக்கப்படும் நீதிபதி நல்லவரா கெட்டவரா என்பது இந்த நீதிபதிகளுக்குத்தான் நன்றாக தெரியும். எனவே அவர்கள் தரம் கெட்டவர்களை நிராகரித்துவிடுவார்கள். அது நாட்டுக்கு நல்லது
இங்கே இன்னொரு தலைவலி என்னவென்றால் தலித்துகளோ பிற சிறுபான்மையினரோ இப்படி தலைமை நீதிபதி பதவிக்கு போட்டிக்கு வந்தால், ஏற்கனவே அதிகாரத்தில் இருந்தவர்கள், ஒரு மோனோபோலியை உருவாக்கியவர்கள் சத்தம் போடாமல் கவிழ்த்துவிடுவார்கள். இதற்கும் எதிர்காலத்தில் ஒரு வழி பிறக்கலாம்.
அதேசமயம் தலித்துகள் வந்தால் என்ன `மாற்றம்` வரும் என்பதையும் பார்த்துவிட்டோம். எனவே ஜனநாயகத்தை நம்பவேண்டியதுதான். அதுதான் சர்வரோகநிவாரணி.

0 comments:
Post a Comment