!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Friday, April 17, 2026

டிலிமிடேஷன்

டிலிமிடேஷன் குழப்பம் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. சமீபத்திய செய்திகள் உண்மையாக இருந்தால், தமிழகத்தின் சதவிகிதம் குறையாதாம்; நல்ல விஷயம்தான். ஆனால் உண்மையில் இங்கே நடந்தது பிஜேபி நடத்திய கண்கட்டு வித்தை. கடைசியில் அவர்கள் திட்டம் பலிக்கவில்லை. இங்கே பிஜேபிக்கு கெட்ட நோக்கம் இருப்பதாக தெரியவில்லை. ஆனால் சில இடியாப்ப சிக்கல்கள் அப்படி ஒரு சூழ்நிலைக்கு நாட்டை கொண்டுவந்து விட்டது. இதற்கான நியாயமான தீர்வு யாரிடமும் இல்லை. 

வட மாநிலங்களில் மக்கள் தொகை பெருக்கம் கட்டுப்படுத்தப்படவில்லை, இதுதான் தலைவலி. இந்த மாநிலங்களில் வறுமை அதிகம். வெளியே வேலை இல்லை; மக்களுக்கு வீட்டிலேயே `வேலை`. இது வரமா,சாபமா? இன்னொரு பக்கம் முஸ்லிம்கள் அதைவிட கடுமையாக `உழைக்கிறார்கள்`. அந்த ஆபத்து வேறு.

மக்கள் தொகை வளர்வதை தடுக்க சட்டம் கொண்டு வந்தால், இது ஜனநாயக நாடு என்று கூப்பாடு போடுவார்கள். அப்படியே விட்டால் காவி பச்சையாக மாறும் அபாயம்.  எனவே அவர்களுக்கு போட்டியாக இந்துக்களும் கடுமையாக உழைக்க வேண்டும். என்னதான் செய்வது? 

இது குறித்த அராத்துவின் ஒரு பதிவில்  என் கருத்தை சொல்லியிருந்தேன்:

//இது ஒரு இடியாப்ப சிக்கல். மக்கள் முடிவுகளை அவர்கள் சந்திக்கும் பிரச்சினைக்கேற்ப எடுக்கிறார்கள். வடமாநிலங்களில் இஸ்லாமிய அடக்குமுறையில் இந்துக்களின் மரணவிகிதம் அதிகம். எனவே 10 குழந்தை பெற்றால்தான் ஒரு பிள்ளையாவது கடைசிக் காலத்தில் கை கொடுக்கும் என்ற நிலை அங்கே இருந்தது. வேறு பல காரணம் இருந்தாலும் இதுதான் முதன்மையானது. இப்போதும் அங்கே முஸ்லிம்கள் கணிசமாக பெற்று தள்ளுவதால், அவர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிடும் என்ற பயத்தில் அரசியல்வாதிகளே குடும்பக்கட்டுப்பாட்டை அங்கே ஆதரிப்பதில்லை.

இந்தியா முழுக்க, அணைத்து மதத்திற்கும், குடும்பக் கட்டுப்பாடு கட்டாயம் என்ற நிலை தேவை. அல்லது இரண்டுக்கு மேல் இருந்தால், ரேஷன் கார்டில் எந்த பொருளும் கிடைக்காது, அரசு உதவித் திட்டங்கள் கிடைக்காது, முக்கியமாக வங்கியில் எந்த வகையான கடனும் கிடையாது என்று ஒரு நிர்ப்பந்தமாவது தேவை.// 

வடமாநில மக்கள் வேண்டுமென்றே அல்லது அறியாமையில் கூடுதலாக குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள் என கிண்டலடித்துவிடலாம். அது சுலபம். ஆனால் அங்கே அறியாமையும் கூடவே ஒரு இஸ்லாம் என்ற நிர்பந்தமும் இருக்கிறது, அதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே இந்தியா முழுக்க எல்லோருக்கும் பொருந்தும் ஒரு கடுமையான சட்டம் தேவை 

இனி டிலிமிடேஷனை பார்ப்போம்.

இதில் தமிழகத்துக்கு பாதிப்பில்லையாம், ஸ்டாலின் தேவையில்லாமல் இந்த பிரச்சினையை கிளப்புகிறாராம். இது பிஜேபியினரின் கதறல். நான் திமுகவை ஆதரிப்பவன் அல்ல; அதற்காக எல்லாவற்றையும் எதிர்ப்பவனும் அல்ல. இங்கே தென்மாநிலங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்பதுதான் உண்மை. பசித்தவனுக்கு சாப்பாடு போடுவது வேறு, சொத்தை எழுதிக்கொடுப்பது என்பது வேறு. 

ஜிஎஸ்டியில் அந்த மாநிலங்களுக்கு வரி வருவாயில் கூடுதலாக பங்கு போனால் அதை ஏற்றுக் கொள்ளலாம்.      ஆனால் இது சொத்தில் பங்கு கொடுப்பதை போன்றது. எனவே இங்கே கொஞ்சம் கவனமாகத்தான் இருக்கவேண்டும்.

தற்போது நிலைமை ஓரளவுக்குத் தெளிவுபடுத்தப்பட்டிருக்கிறது. அனைவருக்கும் 50 சதவிகிதம் உயர்த்தப்படுமாம். இதில் எம்பிகளின் எண்ணிக்கை உயர்ந்தாலும், பிரச்சினை என்னவோ அப்படியேதான் இருக்கப்போகிறது. அதாவது இப்போதும் அங்கே எம்பி தொகுதிகளின் வாக்காளர் எண்ணிக்கை தமிழகத்தை விட அதிகமாத்தான் இருக்கப்போகிறது. இருந்தாலும் இதை முதலிலேயே சொல்லியிருந்தால் இவ்வளவு தலைவலி வந்திருக்காது. அப்படி ஒரு நிலையை உருவாக்கியது பிஜேபி அரசின் தவறு.

இங்கே ஒரு சின்ன திருத்தும் செய்யலாம். எம்பிகளின் தொகுதிக்கான திட்ட ஒதுக்கீடு அந்த தொகுதியின் வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் ஒதுக்கலாம். தமிழக எம்பிகளுக்கு 5 கோடி என்றால், அங்கே 10 கோடி என இருக்கட்டுமே. அங்கே அவர் கூடுதலாக பயணிக்க வேண்டும் என்றால், அதற்கான அலவன்சும் அந்த மாநில எம்பிகளுக்கு கூடுதலாக கொடுங்கள். இப்படி செய்யாமல், ஒழுங்கா வேலைக்கு போய் குடும்பத்தை காப்பாத்தற தென் மாநிலங்களின் அடிமடியிலேயே கை வைத்தால்?

இங்கே ஸ்டாலின் இந்த விஷயத்தை பரபரப்பாகியது நல்லதுதான். சினிமாவில் ஒரு காட்சி வரும்; ஒரு திருடனை பஸ் கண்டக்டர் பார்த்துவிடுவார். "இந்த ஏரியாவில் திருட்டு ஜாஸ்தி; உஷாராக இருங்கள்" என குரல் கொடுப்பார். இப்போது மக்கள் கொஞ்சம் கவனமாக இருப்பார்கள். திருடனும் அதை உணர்ந்து "இது நேரமல்ல, இப்போது மாட்டினால் கதை கந்தலாகிவிடும்" என அமைதியாக இருந்துவிடுவான்.

அதுதான் தற்போது நடந்திருக்கிறது. ஒருவேளை திமுக இதை பிரச்சினையாக கையில் எடுக்காமல் இருந்திருந்தால், தற்போதைய மாற்றங்கள் வந்திருக்குமா என்பது சந்தேகமே. மக்கள் தொகை அடிப்படையில்தான் அதை கொண்டு வந்திருப்பார்கள். எனவே முன்கூட்டிய சத்தம் போட்டு ஸ்டாலின் தடுத்துவிட்டார். இப்போது பிஜேபிக்கு வேறு வழியில்லை. "பார்த்தியா நீங்க பயப்படற மாதிரி எங்க கையில ஒண்ணுமே இல்லை" என்று வாடிய முகத்தோடு சொல்வார்கள்.   

உலகம் முழுக்க இதுதான் நடைமுறை. ஈராக், ஈரான் போர் எல்லாம் இந்த வகைதான். அவர்கள் அணு ஆயுதம் தயாரிக்கும் இலக்கின் கிட்டே நெருங்கிவிட்டார்கள். முன்கூட்டியே தடுக்காவிட்டால், நிலைமை கைமீறிப் போய்விடும். இப்போது அங்கே ஈரானில் சோதனை செய்தால் எதுவும் கிடைக்காது. அவர்களும் பிஜேபி மாதிரியே பதில் சொல்வார்கள். "பாத்தியா அமெரிக்கா தேவை இல்லாமல் பயம் காட்டுகிறது. இங்க ஒண்ணுமே இல்லை பாருங்க " என்று சமாளிப்பார்கள்.

சில இடங்களில் நம்பிக்கை கை கொடுக்காது. அப்படியே நம்பியிருந்தால், அங்கே ஈரான் அமெரிக்கா காதிலும், இங்கே பிஜேபி தென் மாநிலங்கள் காதிலும் பூ சுற்றியிருப்பார்கள். எனவே சில நேரங்களில் பிரச்சினை வரட்டும் பார்த்துக்கொள்வோம் என்று இருக்காமல் முன்கூட்டியே இப்படி பிரச்சினை செய்வதன் மூலம் எதிரியின் திட்டத்தை தோற்கடிக்கலாம். இது அரசியல், இப்படித்தான் இருக்கும்.

இந்த விஷயத்தில் `அட்வான்டேஜ்` திமுக என்றுதான் சொல்வேன். ஆனாலும் திமுக தோற்க வேண்டும் என்று விரும்புவேன்; அது வேறு கதை. 

0 comments:

Post a Comment