!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, April 14, 2026

சாத்தான்குளம் கொலை வழக்கு - இது நீதியா?

சாத்தான்குளம் கொலை வழக்கு குறித்த தீர்ப்பைக் கவனித்தேன். ஈரானும், தமிழக அரசியலும் எந்த பக்கம் போகும் என்றே தெரியவில்லை. எனவே நாட்டு நடப்பையும் கொஞ்சம் கவனிப்போம்.

இந்த வழக்கில் ஆரம்பத்திலிருந்தே என்னுடைய கருத்து வெகுஜன மனப்பான்மையோடு ஒத்துப் போகவில்லை. என்றாவது ஒரு நாள் வானத்தைப் பார்த்தால் அங்கே சூரியனும் சந்திரனும்தான் தெரியும்.  தினமும் இடைவிடாமல் கவனித்தால் மட்டுமே, ஒருவேளை பூமியும் அப்படி இருக்குமோ என்ற சிந்தனை வரும். தொடர்ந்து நாட்டு நடப்புகளைக் கவனிப்பதால், பல விஷயங்களில் என் பார்வை மாறுகிறது. சாத்தான்குளம் வழக்கிலும் அப்படித்தான்.

இங்கே பல முரண்பாடுகள். தந்தை - மகன் இருவரும் 'அப்பாவிகள்' என்கிறார்கள். அது ஒரு வகையில் உண்மையாக இருக்கலாம். ஆனால் 'அப்பாவி' என்ற சொல் இவர்களுக்குப் பொருந்துமா? இவர்கள் நேரடியாகக் குற்றத்தைச் செய்யவில்லை என்றாலும், காவலர்களின் ஆத்திரத்தைத் தூண்டுவதற்கு ஒரு காரணமாக இருந்திருக்கிறார்கள்.

காவலர்களிடம் தரம் இல்லை என்றாலும், பொது இடத்தில் அவர்களை அவமானப்படுத்துவதா? இதுவே முதல்வர் அல்லது பெரிய தலைவர்கள் என்றால், வழக்கு போட்டுத் தாளிப்பார்கள். காவலர்களுக்கு இப்படி நேர்ந்தால் அவர்கள் என்ன செய்வார்கள்?

இந்தியாவில் நீதிமன்றங்களுக்குப் போய் நீதி பெறுவது என்பது செவ்வாய் கிரகத்தில் கால் வைப்பதை விடச் சிரமமானது. அதுவும் காவலர்கள் "என் மானம் போய்விட்டது" என்றெல்லாம் வழக்கு போட முடியாது; ஊரே சிரிக்கும். ‘என் மனைவி என்னை அடித்துவிட்டாள்’ என்று புகார் அளிப்பதைப் போன்றது இது. நீதிபதியும் சிரிப்பார். எனவே, ‘இரண்டு தட்டு தட்டிவிட்டு விட்டுவிடுவோம்’ என காவலர்கள் நினைத்திருக்கலாம்.

ஆனால் இந்தியாவில் சுதந்திரம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அளவுக்கு அதிகமான சுதந்திரமும் தலைவலிதான். எல்லோரும் சட்ட மேதைகளாக இருக்கிறார்கள். உடம்பில் இருக்கும் கொழுப்பை விட, வாயில் இருக்கும் கொழுப்பு பலருக்கு அதிகம். ஒரு இரண்டு கொழுப்புமே உயிருக்கு ஆபத்தானது என்பது பலருக்குப் புரிவதில்லை.

இந்தத் தந்தை - மகன் இருவரும் காவல் நிலையத்திலும் சட்டம் பேசியிருப்பார்கள். அப்போது காவலர்களுக்குக் கோபம் ஏறியிருக்கும்; அது கர்வமாக மாறியிருக்கும். மொத்தத்தில் இந்த பாழாய்ப்போன கர்வத்தால் (கொழுப்பால்)  எல்லோரும் தங்கள் வாழ்க்கையை இழந்துவிட்டார்கள்.

ஒரு நீதிக்கதை. ஒரு மரத்தில் கிளி ஒன்று ஆனந்தமாகப் பாடிக்கொண்டிருந்ததாம்.. அதை ரசித்த ஒரு கோழிக்குஞ்சு, "நானும் உன்னைப் போலவே பாடட்டுமா?" என்று கேட்க.. . "காசா பணமா? நீயும் பாடு" என்று என கிளி சொல்ல, அங்கே கச்சேரிதான்.

இந்தக் கான மழையைக் கேட்டு உள்ளூர் ரவுடியான பூனை அங்கே எட்டிப் பார்க்க.. வில்லனைக் கண்டதும் கிளி பறக்க; கோழிக்குஞ்சுக்கு மட்டும் 'எக்ஸ்பைரி டேட்' வந்துவிட்டது. இதுதான் நீதி. மேலே இருப்பவர்கள் வாய்க் கொழுப்புடன் பேசினாலும் எப்படியாவது தப்பித்துவிடுவார்கள்; கீழே இருப்பவர்கள்தான் கொஞ்சம் கவனமாக இருக்கவேண்டும்.

அதேசமயம் இந்தத் தீர்ப்பு சரியானதுதான். காவலர்களுக்கும் பயம் தேவை. சாமான்ய மனிதர்கள் அகம்பாவமாகப் பேசினாலும், சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியவர்கள் மிருகத்தனமாக நடக்கக்கூடாது. எனவே, தண்டனையில் எனக்கு முரண்பாடில்லை. "எல்லோருக்கும் ஒரே மாதிரியான தண்டனையா?" என்பதுதான் என் கேள்வி.

இங்கே அந்த ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் மட்டுமே குற்றவாளிகள். அவர்களுக்கு மரண தண்டனை சரி; ஆனால் மற்றவர்களுக்கு ஏன்? காவலர்கள் தங்கள் மேலதிகாரியின் உத்தரவை மீற முடியுமா? அப்படி மீறினால் அவர்களின் எதிர்காலம்? அவர்கள் நிர்ப்பந்திக்கப்பட்ட குற்றவாளிகள். நீதிபதி இதை உணர்ந்து அவர்களுக்கான தண்டனையைச் சற்றுக் குறைத்திருக்க வேண்டும்.

நிஜம் என்னவென்றால், நீதிபதிகளும் தற்போது 'எமோஷனல் ஏகாம்பரமாக' மாறத் தொடங்கிவிட்டார்கள். அவர்கள் சட்டத்தை மட்டுமே கவனிக்கிறார்கள்; பொது அறிவைப் பயன்படுத்துவதில்லை. அவர்களுக்கு அது இருக்கிறதா என்பது வேறு விஷயம். எனவே, நீதிபதிகளுக்கும் ஆலோசனைகள் (Counselling) தேவைப்படுகின்றன. (எனக்கும் கொஞ்சம் கொழுப்பு அதிகம்தான், இருந்தாலும் எனக்குக் கவலை இல்லை).

அடுத்த குழப்பம், அந்தத் தைரியமான பெண் காவலர். அவரைப் பாராட்டிப் பகிரப்படும் முகநூல் பதிவுகளைக் கவனித்தேன். இதுவும் காமெடிதான். 

அவர் உண்மையான மனசாட்சியுள்ளவராக இருந்திருந்தால், அந்தச் சம்பவம் நடந்தபோதே '100'க்கு அழைத்து, "நான் போலீஸ் ஸ்டேஷனிலிருந்து பேசுகிறேன், இங்கே மனித உணர்வே இல்லாமல் ஒருவரை அடிக்கிறார்கள், உடனே வேறு இடத்திலிருந்து நல்ல போலீசை அனுப்புங்கள்" என்று புகார் செய்திருக்க வேண்டும். அவர் அப்படிச் செய்யவில்லை; அவரால் அப்படி செய்யவும் முடியாது. கடமை உணர்வோடு நடந்த கொடுமையை வேடிக்கை பார்த்திருக்கிறார்.

பின்பு ஏன் இப்போது சாட்சி சொல்ல வேண்டும்? விஷயம் கைமீறிப் போய்விட்டது. காவலர்களால்தான் இந்தப் படுகொலை என்பது உறுதியாகிவிட்டது. எனவே வழக்கு பதிவு செய்தாக வேண்டும். நிலையத்திற்குள்ளேயே நடந்த சம்பவம் என்பதால் வேறு சாட்சிகள் இல்லை; சாட்சி இல்லாமல் வழக்கே நிற்காது. எனவே அடுத்து வந்த உயரதிகாரி அந்தப் பெண் காவலரிடம் "நீ சாட்சி சொல்" என்று உத்தரவிட்டிருப்பார்.

கொலை நடந்தபோது அதிகாரியின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு வேடிக்கை பார்த்தவர், இப்போது வேறு ஒரு அதிகாரியின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டுச் அந்த கொலைக்கான சாட்சியாக மாறியிருக்கிறார். இதில் எங்கே தைரியம் நேர்மை இருக்கிறது. அவர் ஒரு சராசரி பெண்.  

"நீதி நிலைநாட்டப்பட்டது" என்பது அடுத்த காமெடி. இங்கே இன்னும் இரண்டு அடுக்கு நீதிமன்றங்கள் இருக்கின்றன. அவர்கள் வழக்கைத் தாமதப்படுத்துவார்கள். பின்னர் என்ன நடக்கும் என்பது அப்போதைய சூழ்நிலையைப் பொறுத்தது. அதேசமயம் "ஏழைக்கு நீதி கிடைத்துவிட்டது" என்று சந்தோஷப்படவும் முடியாது. இங்கே தண்டிக்கப்பட்டவர்களும் ஏழைகள் என்பதால்தான் இவ்வளவு விரைவான, கடுமையான தீர்ப்பு.

விருந்துகளில் பணக்காரர்களுக்கு உணவு முதலிலும், ஏழைகளுக்குக் கடைசியாகவும் கிடைக்கும். ஆனால் நீதித்துறையில், ஏழைகளுக்குத் தண்டனை முதலிலும், பணக்காரர்களுக்குக் கடைசியிலுமே கிடைக்கும்; பல நேரங்களில் அதுவும் கிடைப்பதில்லை. இதுவே இந்திய நீதித்துறையின் கசப்பான வரலாறு.

எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது.. எது நடக்கின்றதோ.... 

0 comments:

Post a Comment