!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Wednesday, April 22, 2026

பி.டி.ஆர் vs சுந்தர் சி


சமீபத்தில் பி.டி.ஆர் vs சுந்தர் சி சர்ச்சையைக் கவனித்தேன். சுந்தர் சி நன்கு பேசுகிறார். நம்ம ஆட்களும் அதிபுத்திசாலிகள்; ஒருவரிடம் வாதத்திறமை இருந்துவிட்டால், உடனே அவர் அறிவாளிதான் என்று முடிவு செய்துவிடுவார்கள். அந்த வகையில் இணையத்தில் இவர் ஹீரோவாகிவிட்டார். சினிமாவில் அவர் வெற்றியாளர்தான், ஆனால் அரசியலில்?

எனக்கு திமுகவை பிடிக்காது. இந்தத் தேர்தலில் அந்தத் கட்சி தோற்க வேண்டும் அல்லது சிறுபான்மை அரசாக மாற வேண்டும் என்று விரும்புகிறேன். ஆனால், நியாயம் என்று வந்துவிட்டால் அது யார் பக்கம் இருக்கிறதோ, நானும் அங்கேதான் இருப்பேன். அந்த வகையில் நான் பி.டி.ஆர் பக்கம் நிற்கிறேன். காரணம் என்ன?

அரசியலில் இரண்டு விதமான நபர்கள் இருப்பார்கள். ஒருவர், மேல்மட்ட நிர்வாகத் தலைமை உள்ளவர்கள். அடுத்து, அங்கே போக முடியாமல் எம்.எல்.ஏ-க்களாகவே வாழ்க்கையை முடிப்பவர்கள். இந்த மேல்மட்டத் தலைவர்களின் தலைவலி வித்தியாசமானது. இவர்கள் சிறந்த அமைச்சராகவும் இருக்க வேண்டும், கூடவே நல்ல எம்.எல்.ஏ-வாகவும் இருக்க வேண்டும். அதிலும் பி.டி.ஆர் ஒருபடி மேலே; டெல்லிக்கு திமுகவின் பிரச்சார பீரங்கியாகவும் இருக்க வேண்டியுள்ளது.

பி.டி.ஆரைப் பொறுத்தவரை இது மும்மொழி கற்பது போன்றது. எல்லாவற்றிலும் தேர்ச்சி பெறுவது சிரமம்தான். ஏதாவது ஒரு பாடத்தில் (Subject) கோட்டை விட வேண்டியிருக்கும். அந்த வகையில் அவர் எம்.எல்.ஏ-வாகச் சரியாகச் செயல்பட முடியவில்லை என்பதுதான் நிஜம். ஆனால், மற்ற இரண்டு துறைகளில், அதாவது நல்ல அமைச்சராகவும், திமுகவின் தேசிய முகமாகவும் ஜெயித்திருக்கிறார். அது போதாதா?

இங்கே இன்னொரு பிரச்சினையும் இருக்கிறது. மனஅழுத்தம் எல்லோருக்கும் வரும்; அது பி.டி.ஆருக்கும் வந்திருக்கிறது போலத் தெரிகிறது.ஒரு நபர் பெரும் கனவுகளோடு காவலர் (Constable) வேலைக்கு வருகிறார். நேர்மையாக இருந்து சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி, பதவி உயர்வு பெற்று எஸ்.ஐ ஆகி, அப்புறம் இன்ஸ்பெக்டர் ஆக வேண்டும் என்பது அவர் கனவு. அதன் பிறகும் நல்ல பெயர் எடுத்து டி.ஐ.ஜி (டி ஐ ஜி...? கனவுதானே) ஆக உயர வேண்டும் என நினைக்கிறார்.

ஆனால், காவல் நிலையத்திற்குள் வந்த பிறகுதான் தெரிகிறது, இன்ஸ்பெக்டரும், எஸ்.ஐ-யும் கோடிகளில் புரள்கிறார்கள் என்று. கனவு நொறுங்கிவிட்ட நிலையில், அவர்களை மீறி ஏதும் செய்ய முடியுமா? முடியாது. அப்போதுதான் அந்த காவலருக்கு மனஅழுத்தம் வரும்.

இந்த முறையை (System) மீறி நம்மால் ஒன்றும் செய்ய முடியாது என்ற கோபத்தில் இருக்கும்போதுதான், ஏதோ ஒரு வழக்கில் ஒரு நபரைப் பிடிப்பார்கள். தமக்கு மேலே உள்ளவர்களை ஒன்றும் செய்ய முடியவில்லையே என்ற ஆத்திரத்தில், அந்தச் சாதாரணக் குற்றவாளியை போட்டு பிளப்பார்கள். அப்படித்தான் பி.டி.ஆரிடம் மாட்டிக்கொண்டார் சுந்தர் சி. அதாவது, அமைச்சரின் கோபம் வேறு எதன் மீதோ இருந்தது, அது சுந்தர் சி பக்கம் திரும்பிவிட்டது.

இருந்தாலும், தற்போதைய அரசியல்வாதிகளில் பி.டி.ஆர் போன்ற சில நாகரிகமானவர்களையாவது ஜெயிக்க விடுங்கள். அப்போதுதான் ஒருவேளை திமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ‘மாமனும் மச்சானும்’ எவ்வளவு கொள்ளையடிக்கிறார்கள் என்று என்றைக்காவது ஒருநாள் ஓர் ஆடியோ வெளியாகும்.

இனி சுந்தர் சி பற்றி:

இவர் அரசியலுக்குப் புதியவர்; ஒரு இயக்குநராகச் சாதனையாளர். சராசரிக் குடும்பத்தில் பிறந்து மேலே வந்தவர். அதெல்லாம் சரி, ஆனால் ஒருவேளை இவர் எம்.எல்.ஏ ஆகி 5 ஆண்டுகள் கழித்து மதுரையின் நிலையைப் பற்றிக் கேட்டால், "நானும் எவ்வளவோ நினைத்தேன், ஆனால் என்னால் முடியவில்லை" என்றுதான் சொல்வார். ஏனென்றால் அரசியல் அப்படிப்பட்டத் துறை. இங்கே இறங்கும்போது நல்லவனாக இருப்பான்; இறஙகிய பின் அது வந்து... என்று வடிவேலாக மாறிவிடுவார்கள்.

கூடவே இவர் ஒரு கதைசொல்லி. தயாரிப்பாளர்களை, நடிகர்களைக் கதை சொல்லி மயக்க வேண்டும்; அந்தத் திறமை இவரிடம் நிறையவே இருக்கிறது. அந்தத் திறமைதான் மக்களிடையே அவரை நெருக்கமாக்குகிறது. ஆனால் ஜெயித்தால், ஐந்து ஆண்டுகள் கழித்து இவரும் `ஏன் என்னால் எதுவும் செய்யமுடியவில்லை` என்று ஒரு கதை சொல்வார். அப்போதும் அது நம்பும்படி இருக்கும்.

இது தவிர, பி.டி.ஆர் உதவியாளர் குறித்த ஊழல்கள் பேசப்படுகின்றன. அது உண்மையா என்று தெரியவில்லை. இருந்தாலும், அது "தேனை எடுத்தவன் புறங்கையை நக்கிய" கதையாகத்தான் இருக்கும். திமுகவின் மற்ற பெருந்தலைகளோடு ஒப்பிடுகையில் அது குறைவாகத்தான் இருக்கும்.

மொத்தத்தில், திமுகவின் தேசிய முகமாக இருக்க வேண்டிய நிர்ப்பந்தம், மற்றும் அமைச்சராகப் பணியாற்ற வேண்டிய சூழல் காரணமாகத் தொகுதியை அவர் சரியாகக் கவனிக்கவில்லை போலிருக்கிறது. கமல் பாணியில் சொல்ல வேண்டுமென்றால், 'கவனித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்'. இந்த முறை ஜெயித்தால் அந்தத் தவறைச் சரி செய்வார் என நம்பலாம்.

0 comments:

Post a Comment