பெண்கள் இடஒதுக்கீட்டு மசோதா தோல்வி அடைந்தது குறித்து நிறைய விவாதம் நடக்கிறது. இது கொண்டு வந்ததில் பிஜேபி ஒரு அயோக்கியத்தனம் செய்திருக்கிறது என்பதும் உண்மை. பலமில்லை என்றும் தெரிந்தும் ஒரு காரியத்தை செய்கிறார்கள் என்றால் அது ஊரை ஏமாற்றும் வேலைதான்.
ஆனால் முக்கியமான விஷயத்தை பலர் கவனிக்கவில்லை. அது இங்கே.
முதல் சிக்கல், 33 சதவிகிதம் பெண்களுக்கு தேவையா? அவர்கள் கேட்டார்களா? இல்லையே! இவர்களாகவே கூப்பிடுவாங்கலாம், அப்புறம் நேரம் சரியில்லை அப்புறம் பார்க்கலாம் என்று சொல்வார்களாம். இந்த காமெடிதான் தற்போது நடக்கிறது.
பெண்கள் என்ன கேட்பது? இது அவர்களின் தார்மீக உரிமையாயிற்றே! `சில விஷயங்களை கேட்டா கொடுக்க வேண்டும்` என்று கேட்டால் அதற்கும் பதில் இருக்கிறது.
ஆமாம், கேட்டுத்தான் கொடுக்க வேண்டும். பசித்தவனுக்கு சோறு போட்டால்தான் அது வயிற்றுக்கு போகும், பசிக்காதவனுக்கு கொடுத்தால் அது குப்பைக்குத் தான் போகும். எனவே, விரயத்தை தவிர்க்க, எதுவுமே இங்கே கேட்டு கவனித்து கொடுப்பதுதான் நல்லது.
நிஜத்தில் பெண்கள் அதிகாரத்தை விரும்புகிறீர்களா என்று பார்த்தால், இல்லை என்றுதான் தோன்றுகிறது. தற்போதைய நிலையில் 100 பெண்களிடம் `தினம் பேப்பர் அல்லது டிவியில் செய்தியை கவனிக்கிறீர்களா?` என்று கேட்டால், 10 சதவிகிதம் பெண்கள்தான் `ஆம்` என்று சொல்வார்கள். அந்த அளவுக்குத்தான் நிலைமை இருக்கிறது. அவர்களுக்கு டிவி சீரியலும், மேக்கப்பும்தான் இப்போதைக்கு உலகம். அதைத்தாண்டி அவர்கள் அவ்வளவு சீக்கிரம் வரமாட்டார்கள்.
அதேபோல் எங்கேயாவது பெண்கள் ஆர்வத்தோடோ அல்லது ஒரு கட்சியில் சீட் கிடைக்காமல் அதை எதிர்த்து சுயேச்சையாக நின்றிருக்கிறார்களா? இல்லை.
காரணம் என்ன? இது வீடுகளில் /விருந்துகளில் நடக்கும். இங்கே பெரிய தலைகள் முதலில் சாப்பிடுவார்கள், பின்னர் அடுத்த நிலை மனிதர்கள், கடைசியில்தான் பெண்கள். அதே தியரிதான் சுதந்திரத்திலும். இந்தியாவுக்கு 1947 -ல் கிடைத்திருக்கலாம். முதலில் அதை அனுபவித்தது மேல் ஜாதியினரும் அதன்பின் அடுத்தகட்ட மனிதர்களும்தான். அது பெண்களுக்கு இப்போது கடைசியாகத்தான் கிடைத்திருக்கிறது.
வீட்டை விட்டு வெளியே வரும் சுதந்திரம், படிக்கும் சுதந்திரம், வேலைக்கு போகும் சுதந்திரம், அதன்பின் கடைசியாக, தன் விருப்பதை நிறைவேற்றிக்கொள்ளும் சுதந்திரம் என அது அவர்களுக்கு படிப்படியாக வருகிறது. சுருக்கமாக சொன்னால் இப்போதுதான் அவர்களுக்கு அந்த சுதந்திரம் கிடைத்திருக்கிறது. இன்னும் பலருக்கு அது கனவாகவே இருக்கிறது. அப்படி கிடைத்தவர்கள் கூட அந்த சுதந்திரத்தை அனுபவிக்கும் மனநிலையில்தான் இருக்கிறார்கள். இதை அப்படியே விட்டு விடுவதுதான் நல்லது.
இந்த இடைப்பட்ட `அப்ரெண்டிஸ்` காலத்தை அவர்கள் சந்தித்தே ஆகவேண்டும். இதையெல்லாம் கவனத்தில் கொள்ளாமல் இப்போதே அவர்களுக்கு இப்போதே அதிகாரத்தை கொடுப்பது என்பது, வயசுக்கு வந்த பெண்ணை உடனே திருமண மேடைக்கு அனுப்புவதற்கு சமம்.
இதுவரை அரசியலில் பிரபலமான பெண் தலைவர்களை கவனித்தால், அவர்கள் குடும்ப வாழ்க்கை இல்லாதவர்கள். பெரியார் சொன்னது போல் கர்ப்பப்பை அவர்களுக்கு ஒரு சிக்கலாக இருக்கிறது. அதற்காக அதை அறுத்து எறியவும் முடியாது, ஒதுக்கவும் முடியாது. அதற்காக இதையே காரணம் காட்டி அவர்களுக்கு தடை போடவும் முடியாது.
எனவே தற்போதைக்கு அந்த ஹனிமூன் பீரியட் அவர்கள் அனுபவிக்கட்டும். அது அவசியமும் கூட. ஒரு கட்டத்தில் அதுவும் போரடித்த பிறகு பெண்கள் ஆர்வத்தோடு அரசியலுக்கு வருவார்கள். அதன்பின் நீங்கள் எதுவும் அவர்களுக்கு கொடுக்கவேண்டாம். அவர்களாகவே ரெண்டு மிதி மிதித்து எடுத்துக்கொள்வார்கள். பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு நடக்கும்போது, ஆண் எம்பிகளிடம் அவர்களுடைய மனைவிகள் `மசோதா தோத்துச்சு, வீட்டுல `சாப்பாடு` கிடையாது` என்று மிரட்டி அனுப்புவார்கள். அவர்களும் ஆதரித்து ஓட்டு போட்டதை வீடியோவாக எடுத்து பாதுகாப்பாக ஆதாரத்துடன் வீட்டுக்கு வருவார்கள்.
மேலே சொன்னது எதிர்காலத்தில் நடக்கலாம் என இப்படியே இதை விடவும் முடியாது. 33 சதவிகிதம் அதிகம் என்றாலும், தற்போது 15 சதவிகிதம் என்ற நிலையில் இருப்பதால், அதை உடனடியாக 20 என்று உயர்த்துவது ஒரு மாற்று யோசனையாக இருக்கும். அடுத்த 20 ஆண்டுகள் கழித்து அது 30 ஆக மாறலாம்.
நடக்கவே சோம்பேறித்தனம் உள்ளவனை திருப்பதிக்கு நடந்தா போவ சொல்வது? முதலில் ஊரில் உள்ள கோவிலுக்கு அல்லது கொஞ்சம் அருகாமையில் உள்ள கோவில் என பழக்கப்படுத்த வேண்டும். ஆனால் இன்றைய அரசியல்வாதிகள் எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என திட்டம் போடுவார்கள். அதுதான் இந்த மகளிர் மசோதா. அது இப்போதைக்கு தோற்றுப்போனது நல்லதுதான்.

0 comments:
Post a Comment