மழை விட்டும் இன்னும் தூவானம் நிற்கவில்லை. இன்னமும் விஜய் கொடுத்த அதிர்ச்சியைப் பலரால் ஜீரணிக்க முடியவில்லை; விதவிதமான வியாக்கியானங்கள். விஜய், திமுக கூட்டணிக் கட்சிகளை எப்படி அழைக்கலாம்? அவர்கள் தீய சக்தி இல்லையா? அதிமுகவை எப்படி உடைக்கலாம்? இப்படி திமுக மற்றும் அதிமுக ஆதரவு ஊடகவியலாளர்களின் புலம்பல் ஓவராக இருக்கிறது.
ஒவ்வொரு தேர்தலும் தலைவலிதான். எவ்வளவோ சீர்திருத்தங்கள் வந்தாலும் மீண்டும் மீண்டும் ஏதோ ஒரு கோளாறு வந்துவிடுகிறது. `இந்தத் தேர்தல் நிறைய குழப்பங்களை உருவாக்கிவிட்டது` என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். ஒருவேளை அந்த சீர்திருத்தங்களை மத்திய அரசு கொண்டுவந்தால், இந்தத் திரைமறைவு குதிரை பேரங்கள் குறையும்.
நாம் எப்போதும் எங்கேயாவது பயணித்துக்கொண்டிருப்போம். ஆனால், எல்லாப் பாதைகளும் சுகமானதாக இருக்காது. சில கரடுமுரடாக இருக்கும்; சில வழிகளில் சாக்கடையும் குறுக்கிடலாம். இதற்காகவெல்லாம் நாம் பயணத்தை நிறுத்திவிட்டுத் திரும்பிப் போகப்போவதில்லை. சூழ்நிலை கருதி, மாற்று வழி இல்லாத பட்சத்தில் அதையும் சகித்துக்கொண்டுதான் பயணிப்போம். அதாவது, விரும்பாத பாதை; வேறு வழியில்லை என்ற சூழ்நிலை. அதைத்தான் இப்போது விஜய் செய்கிறார்.
பெரும்பான்மை இல்லாத நிலையில் விஜய் முன் இருந்த பல வழிகளில், "இது பரவாயில்லை, வேறு வழியில்லை" என்ற பாதையைத்தான் அவர் தேர்ந்தெடுத்திருக்கிறார். இது ஆரோக்கியமான பாதை (குதிரை பேரம்) இல்லை என்பது உண்மைதான். ஆனால், இதற்கு மாற்று இல்லை என்பது அதைவிடக் கசப்பான உண்மை.
திமுக தீயசக்தி என்பது உண்மையானாலும், திமுகவின் கூட்டணிக் கட்சிகளை அப்படிப் பார்க்க முடியாது. திமுக அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கொடுக்கவில்லை. எனவே, திமுக ஆட்சியில் நடந்த ஊழலுக்கு அவர்கள் பார்வையாளர்கள்தானே தவிர, பொறுப்பாளர்கள் அல்ல. சுருக்கமாகச் சொன்னால், திமுக 'ஹவுஸ் ஓனர்' (House Owner), கூட்டணிக் கட்சியினர் 'பேயிங் கெஸ்ட்' (Paying Guest).
அதே சமயம் காங்கிரஸ், விசிக எல்லாம் தேர்தலுக்கு முன்பே ஊசலாட்டத்தில் இருந்திருக்கிறார்கள். ஏற்கனவே பெண் பார்த்துப் பல காரணங்களால் கைகூடாத உறவு, இப்போது கைகூடியிருக்கிறது. அவ்வளவுதான்.
இந்தப் பக்கம் அதிமுக கதை வேறு வகை. அங்கே கூட்டணிக்கான முயற்சிகள் நடந்திருக்கின்றன. கணிசமான இடங்களும் (Seats) துணை முதல்வர் பதவியும் விஜய்க்குத் கொடுத்திருந்தால், இன்று கதை வேறு மாதிரி இருந்திருக்கும். ஆனால் ஆணவம், அகம்பாவம் காரணமாக எடப்பாடி பழனிசாமி இறங்கி வர மறுத்தார். யதார்த்தம் அவருக்குப் புரியவில்லை; இப்போது மக்கள் அவருக்குப் புரியவைத்துவிட்டார்கள். அங்கேயும் அதிமுகவில் சிலர் விஜய் கூட்டணியை விரும்பியிருக்கக்கூடும். அவர்கள் தேர்தலுக்கு முன்பே விரும்பியதைத் தேர்தலுக்குப் பின் செய்கிறார்கள். இதுவும் நியாயமானதுதான்.
அதாவது விஜய் செய்தது, செய்வது எல்லாமே தேர்தலுக்கு முன்பே விரும்பிய ஒன்றுதான். அது கொஞ்சம் காலதாமதமாக நடக்கிறது.
இங்கே அயோக்கியத்தனம் என்பது யாரும் எதிர்பார்க்காத, கற்பனையே செய்ய முடியாத திமுக-அதிமுக கூட்டணிதான். அது நடக்காத பட்சத்தில், ஒரு பொது நபராகத் திருமாவளவன் அவர்களை முன்னிறுத்தியும் பார்த்திருக்கிறார்கள். கடைசியில் அதுவும் கைகூடாமல், தற்போது "அப்படி ஒரு முயற்சியே நடக்கவில்லை" என்று கவுண்டமணியின் `சாப்பாட்டில் கல்` என்ற செங்கல் காமெடி ரேஞ்சுக்குப் போய்விட்டார்கள்.
கம்யூனிஸ்ட் கட்சியின் பேபி, அதிமுகவின் சி.வி. சண்முகம், திருமாவளவன், "பெரும்பான்மை யாரிடம் இருந்தாலும் பரிசீலிப்பேன்" என்ற கவர்னர் என எல்லோரும் உண்மையை இப்படிப் போட்டு உடைத்தும், இன்னமும் அப்படி நடக்கவில்லையே என்று சமாளிக்கும் உடன்பிறப்புகளை என்ன சொல்வதென்றே தெரியவில்லை. போற போக்கைப் பார்த்தால் சீமானின் உருட்டுகளையே திமுகவினரின் உருட்டுகள் பின்னுக்குத் தள்ளிவிடும் போலிருக்கிறது.
ஒரு பொதுவான நீதி உண்டு. மலைப்பாதைகளில் வாகனங்கள் செல்லும்போது, ஏறும் வண்டி, இறங்கும் வண்டி இரண்டும் ஒரே பாதையில் சந்தித்தால், ஏறும் வண்டிக்குத்தான் முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்பது விதி. விஜய் ஏறி வருகிறார். அவருக்கு வாய்ப்புக் கொடுத்து, அவரால் முடியாத பட்சத்தில் இவர்கள் இப்படி ஒரு முயற்சியில் இறங்கியிருந்தால் அது இந்த அளவுக்குக் கண்டனத்திற்கு உள்ளாகியிருக்காது.
ஆனால் அவசரம்! ஒரு நடிகன், அதுவும் கட்சி ஆரம்பித்த சில வருடங்களிலேயே இப்படித் திராவிடக் கட்சிகளை அடித்து நொறுக்குவான் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அந்த அவமானத்தைத் துடைக்க ஒரு முயற்சி எடுக்கிறோம் என்று இவர்கள் எடுத்த காரியம், இவர்கள் முகத்தில் மேலும் கரியைத் தான் பூசியிருக்கிறது.
ஒரு மாணவன் தேர்வுக்குப் போகும் முன் அவனுக்கு இருக்கும் மரியாதையே வேறு. `அம்மா ஷூ எங்கம்மா?`, `அம்மா மணியாகுது` என்ற பிள்ளையின் பதற்றத்திற்கு அம்மா ஓடோடி வந்து சேவை செய்வார்; பையன் தேர்ச்சி பெற்றுவிடுவான் என்ற நம்பிக்கை அது. அதே பையன் கேவலமாகத் தோல்வியடைந்தால் என்ன நடக்கும்? அந்தப் பையன் வாயிலிருந்து வார்த்தைகூட வராது.
ஆனால், தமிழக அரசியல் வித்தியாசமானது. இங்கே தோற்றவர்கள், அதுவும் கேவலமாகத் தோற்றவர்கள்தான் சத்தம்போட்டுக் கொண்டிருக்கிறார்கள். இது தங்களின் தோல்வி என்பதையே உணராத ஒரு மனநிலை.
காமராஜர் மாணவர்களுக்குக் கல்வியைக் கொடுத்தார்; அது தரமாக இருந்தது. திராவிடக் கட்சிகள் கல்வியை மாணவர்களிடம் விற்றிருக்கிறார்கள்; அதுதான் பலரைத் தற்குறியாக மாற்றியிருக்கிறது. கொடுப்பது வேறு, விற்பது வேறு என்பதைத் திராவிடக் கட்சிகள் இனி உணர்ந்தாலும் பயனேதுமில்லை.
இந்தத் திராவிடக் கட்சிகளின் `நாங்கள் கல்வியைக் கொடுத்தோம்` என்பது ஒரு வார்த்தை விளையாட்டு. இவர்கள் கணிசமாகத் தனியார் பள்ளிகள் என்ற ஹோட்டல்களைத் திறந்திருக்கிறார்கள். அதில் மாணவர்கள் பணம் கொடுத்துப் படித்திருக்கிறார்கள். அது கிட்டத்தட்ட 50 சதவீதத்திற்கும் மேல் இருக்கலாம். அரசால் இது முழுக்கச் சாத்தியமில்லை என்பதால், தனியார் பள்ளிகள் என்பது ஒரு யதார்த்தமான முடிவுதான். ஆனால், ஒரு தேவையான யதார்த்தமான முடிவை எப்படி ஒரு 'சாதனை'ப் பட்டியலில் சேர்க்க முடியும்? கொடுப்பதுதான் சேவை; விற்பது அல்ல.
எனக்கும் இப்படி ஒரு அனுபவம் இருக்கிறது. அம்மா இறந்து சில வருடங்கள் இருக்கும், எனக்கு 10-12 வயது. அகமதாபாத் வந்தேன். ஒரு வீட்டில் ஒரு நாள் எதேச்சையாகச் சாப்பாடு. அங்கே இருந்த ஒரு பெண்மணி, "அம்மா இல்லாத பிள்ளை" என்று சொல்லி என் தட்டில் நிறைய உணவை வைத்தார். எனக்கு அவர்தான் கடவுள் போலத் தெரிந்தார்.
அதன்பின் பல வருடங்களாக அவர் நல்லவர் என்று சொல்லிக்கொண்டிருந்தேன். இதை கவனித்த ஒருவர் என்ன நடந்தது என்று கேட்டார். எந்த வீட்டில் சாப்பிட்டாய் என்றும் கேட்டுவிட்டு, அவங்க வீட்டுக்குப் போய் சாப்பிட்டுப் பார் என்று சொன்னார். அதன் அர்த்தம் பல வருடங்களுக்குப் பின்தான் எனக்குப் புரிந்தது.
மனிதர்கள் இப்படித்தான்; இவர்களுக்குத் தானம் என்றால் என்ன, அதை எங்கே செய்ய வேண்டும் என்பதெல்லாம் தெரியாது. கடைத்தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைத்துவிட்டு, அதைத்தான் சாதனை என்று நிஜமாகவே நினைக்கின்றனர்.
நீயா நானா வில் ஒரு நிகழ்ச்சி. ஒரு (ஒற்றை பெற்றோர்) பெண் பேசினார். `என் பிள்ளைகளை பட்டதாரியாக்கிவிட்டேன்` என்று பெருமையாக சொன்னார். நான் அந்த அம்மாவின் உடையை, அணிந்திருந்த நகைகளை கவனித்தேன். அங்கே ஏழ்மை அப்பட்டமாக தெரிந்தது. இதுதான் சாதனையின், தியாகத்தின் அடையாளம்.
திராவிட கட்சிகள் மக்களுக்கு அதை செய்தோம் இதை செய்தோம் என சொல்வார்கள். இப்போது இந்த திராவிட தலைவர்களின் வாழ்க்கையை, அவர்களின் பொருளாதார நிலையை கவனியுங்கள். உண்மை என்னவென்று உங்களுக்கே தெரியும்.
மொத்தத்தில் இவர்கள் விதைத்த விதையே இன்று இவர்களின் கதையை முடித்திருக்கிறது என்பதுதான் மிகவும் சந்தோஷமான விஷயம்.

0 comments:
Post a Comment