தேர்தல் தோல்விக்குப் பின், திமுக மற்றும் ஊடகவியலாளர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களின் தொல்லை தாங்க முடியவில்லை. அரசியலில் விமர்சனம் தேவைதான். ஆனால், அதை எங்கே செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவு வேண்டாமா? இப்போதைக்கு அவர்களிடம் அதை எதிர்பார்க்க முடியாது; எப்போது வரும் என்றும் தெரியாது.
"முதல்வர் விஜய் பேச மாட்டேன் என்று அடம் பிடிக்கிறாராம்! அவருக்கு எதுவுமே தெரியவில்லையாம்!"—இதுதான் இப்போதைய ஹாட் டாபிக். ஆனால், அவருக்கு ஜெயிக்கத் தெரிந்திருக்கிறது; சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி. அவர் ஒரு வெற்றியாளர், அது போதாதா?
தற்போது 'பேசுபவன்தான் அறிவாளி' என்ற பிம்பம் மக்களிடம் மிக ஆழமாகப் பதிந்துவிட்டது. ஒரு காலத்தில் அவசியமாக இருக்கும் ஒரு தொழில்நுட்பம், கால ஓட்டத்தில் காணாமல் போய்விடும். இது தெரியாமல் இன்னமும் பலர் இந்த 'பேக்கேஜை' சுமந்துகொண்டிருக்கிறார்கள்.
இதற்கான காரணம், வரலாற்றைத் தொடர்ந்து கவனித்தால் புரியும். அது ஒரு காலம்—மின்சாரம், ஒலிபெருக்கிகள், அச்சு ஊடகங்கள் எதுவும் இல்லாத காலம். வந்த பிறகும் பரவலாக போய் சேராத காலம். மக்களுக்குப் படிப்பறிவும் இல்லை. அந்தச் சூழ்நிலையில் அங்கே ஒரு தலைவன் தேவைப்பட்டான். மக்களுக்கு நல்ல விஷயங்களைச் சொல்ல, அவர்களுக்கு அறிவைப் புகட்டச் சத்தம் போட்டும், சுவாரசியமாகவும் பேச வேண்டிய அவசியம் அன்று இருந்தது. எனவேதான், அந்தக் காலத்தில் அப்படிப் பேசிய பெரியார், அண்ணா போன்றவர்கள் ஜெயித்தார்கள்.
இப்போது காலம் மாறிவிட்டது. திரைப்படம், தொலைக்காட்சி, கைபேசி என யுகமே மாறிவிட்டது. மூச்சு விட்டாலே கேட்கும் அளவுக்குச் சட்டையில் மாட்டும் சிறிய 'மைக்' வந்துவிட்டது. முக்கியமாகக் கல்வியறிவும் மக்களுக்குக் கிடைத்து, இணையமும் தகவல்களை வீட்டிற்குள்ளேயே கொண்டுபோய்ச் சேர்த்துவிட்டது.
எனவே, இப்போது அறிவாளிகள் மேடையில் இல்லை; அவர்கள் மேடைக்குக் கீழே அமர்ந்திருக்கிறார்கள். அவர்கள் தேடும் தகவல்களை வீட்டிலிருந்தே அவர்களால் பெற முடியும். இருந்தும் பலர் மேடைப் பேச்சைக் கேட்க வருவதன் காரணம், அவர்களுக்குப் பொழுதுபோகவில்லை என்பதுதான். அதுமட்டுமின்றி, அவர்கள் இதுபோன்ற நிகழ்ச்சிகளை ஒரு ‘அவுட்டிங்’, ‘கெட் டு கெதர்’ என ஜாலியாக எடுத்துக்கொள்கிறார்கள்.
மேடையில் பேசுபவர்களின் பேச்சை ரசித்துப் பொழுதுபோக்கிவிட்டு, வாக்குகளைத் தங்களுக்குப் பிடித்தமானவர்களுக்குப் போட்டுவிடுகிறார்கள். இந்த உண்மையை அறியாத மனிதர்கள்தான் தங்களைத் தலைவர்கள் என நினைத்துக்கொண்டு இன்னமும் முட்டாளாகவே இருக்கிறார்கள். இதில் முதலிடத்தில் இருப்பவர் நம்ம சின்ராசு சீமான்.
அதே சமயம், பேசுபவன் ஜெயித்தவனாக இருந்தால்தான் அது வெற்றிக்கான வழியாக மாறும். ஆனால், இன்றைய அரசியலில் பேசுபவர்கள் ஜெயிப்பதில்லை; அதுவும் அதிகம் பேசுபவர்கள் டெபாசிட் இழக்கிறார்கள் என்னும்போது, இனி ‘பேசுங்கள் CM சார்’ கோஷமெல்லாம் எடுபடாது.
கிரிக்கெட்டில், தோற்ற அணியின் கேப்டனைத்தான் முதலில் பேட்டி எடுப்பார்கள். அங்கே வெற்றியாளனின் வார்த்தைகள்தான் இறுதியில் வரும். அங்கே பேச வேண்டிய அவசியமில்லை, கப்பைத் தூக்கிக் காட்டினால் போதும். "நாங்கள் பேச மாட்டோம்; ஆனால் ஜெயிப்போம்" என்று பேசாமல் சொல்கிறார்கள் என்று அர்த்தம்.
காலம் மாறியும் அது தெரியாத, புரியாத மனிதர்களாகச் சிலர் இருக்கிறார்கள். கால மாற்றத்தை விரைவாகப் புரிந்துகொண்டவர்கள் சாதிக்கிறார்கள். இதுதான் நிதர்சனம்.
இது பொதுவான நீதி. இருந்தாலும் முதல்வர் கொஞ்சமாவது பேச வேண்டும். எழுதி வைத்தும் படிக்கலாம், தப்பில்லை. ஆனால், 'புஷ்பா' சைகையெல்லாம் சட்டசபைக்கு வேண்டாம். ஸ்டாலின் அதை வெளியில் செய்தார், அதற்கான தண்டனை அவருக்குக் கிடைத்துவிட்டது. நீங்களும் அதே பாதையில் போனால், காலம் உங்களுக்கும் அதே முடிவைத்தான் கொடுக்கும். வெற்றியைக் கொண்டாடுவது என்பது வேறு, அகங்காரமாக அதை மற்றவர்களிடம் காட்டுவது என்பது வேறு. இன்று சட்டமன்றத்தில் விஜய்யின் பேச்சும் சைகையும் எல்லை மீறுகின்றன.
அகங்காரம் எல்லோருக்கும் ஆபத்து... ஜாக்கிரதை!

0 comments:
Post a Comment