இன்னும் ஆறு மாதத்திற்கு தவெக குறித்துதான் எழுத வேண்டும் போலிருக்கிறது. காரணம், எதிர்க்கட்சிகளிடம் நேர்மையோ திறமையோ இல்லை. எனவே, அவர்களைப் பாராட்டி எழுத வேண்டிய அவசியம் இல்லை. நாம் தோற்றுவிட்டோம் என்ற உண்மையை ஜீரணிக்க முடியாமல், இவர் எப்படி ஜெயிக்கலாம் என்று புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். வியாதி இவர்களிடம் இருந்தால் மருந்தை இவர்கள்தானே சாப்பிட வேண்டும்? அந்த உண்மை அவர்களுக்குப் புரியவில்லை. இன்னொரு தோல்வி அவர்களை நசுக்கிவிடும். அதுவரை அவர்கள் புலம்பட்டும்.
இங்கே விஜய் அவர்களின் நிர்வாகக் கோளாறுகள் ஒவ்வொன்றாக வெளிவர ஆரம்பித்திருக்கின்றன. இருந்தாலும் இவையெல்லாம் அரசியலில் ‘சாதாரணமப்பா’ என கடந்து போகக்கூடியவைதான்.
இங்கே சமூக மாற்றம் என்பது பிச்சைக்காரர்களின் வாழ்க்கை போன்றதுதான். பசியில் இருக்கும் ஒருவன் எங்கேயாவது போய், அம்மா பசிக்குதம்மா என்று சொன்னால், அந்த வீட்டு பெண்மணி உடனடியாக உங்களுக்குப் பிடித்த உணவைச் செய்து ஒரு விருந்து வைக்க மாட்டார். அவரிடம் இருக்கும் சாப்பாட்டில் கொஞ்சம் கொடுத்து உங்கள் பசியைக் குறைப்பார். இதுதான் நடக்கும்.
அரசியலும் அப்படித்தான். இங்கே மக்கள் பலவிதமான பிரச்சினைகளில் சிக்கித் தவித்தனர். அந்த நேரத்தில் ஒரு மாற்றமாக விஜய் வந்திருக்கிறார். இப்போது உடனடியாக ஒரு திருப்தியான, அற்புதமான, பாராட்டுக்குரிய நிர்வாகம் மக்களுக்குக் கிடைத்துவிடாது. பல தலைவலிகளில் சில தலைவலிகள் குறையும், சில புதிய தலைவலிகள் உருவாகும். இதுதான் ஒரு மனிதன் அல்லது ஒரு நாடு மெல்ல மெல்ல பிரச்சினைகளிலிருந்து மேலே வரும் முறை.
அந்த வகையில் விஜய் ஓட்டுக்கு பணம், ஜாதி அரசியல், கூட்டணி அரசியல், வாயை மட்டும் வளர்த்தவர்களின் அரசியல் மற்றும் எங்கும் ஊழல் எதிலும் ஊழல் என்ற முக்கியமான வியாதிகளை ஒழித்துவிட்டார். இவைகளை மாற்றவே முடியாது என்ற நம்பிக்கையையும் உடைத்து, அவற்றுக்கு ஒரு முடிவு கட்டிவிட்டார். இவையெல்லாம் முழுமையாக அழியாவிட்டாலும், இவை இனி கணிசமாகக் குறையும் என்பதும் ஒரு உண்மை. இவை இந்த தேர்தல் கொடுத்த லாபம்.
ஆனால், இப்போது பல புதிய வியாதிகள் வந்திருக்கின்றன. நாட்டில் இப்போது சோஃபா வியாபாரம் ஆரம்பித்திருக்கிறது. ரீல்ஸ் மோகம் அதிகரித்திருக்கிறது. 'சிங்கப் பெண்' என ஒரு படை உருவாக்கினால், அவர்கள் "நாங்கள் இன்னும் மான்கள்தான்" என ரீல்ஸ் போடுகிறார்கள். இவர்களைப் பாதுகாக்கவே ஒரு தனிப் படை உருவாக்க வேண்டும் போலிருக்கிறது. விஜய்யின் `அறியாமை அமைச்சர்கள்` தெரிந்தோ தெரியாமலோ ஏதாவது வில்லங்கத்தில் மாட்டிக்கொள்கிறார்கள்.
விஜய் அவருடைய வீட்டில் வேலை செய்த, அவருடன் பயணித்த அனைவருக்கும் ஏதோ ஒரு அரசு வேலை கொடுத்துவிடுவார் போலிருக்கிறது. இது எல்லாமே நல்ல, ஆரோக்கியமான அரசியல் அல்ல. இருந்தாலும் நான் இதற்காக விஜய்யைக் கண்டிக்கப்போவதில்லை.
ஏனென்றால், இங்கே இப்படி உருவான எல்லா வியாதிகளுக்கும் ஒரு நிர்பந்தம் இருக்கிறது. அதாவது, இது போன்ற வியாதிகளை விவசாய மொழியில் 'களை' என்று சொல்வார்கள். அரசியலிலும் இவை உருவாகும், ஆனால் காலப்போக்கில் அவை களை எடுக்கப்பட வேண்டும். அதை விஜய் செய்யத் தவறினால் இவரும் காணாமல் போவார்.
இங்கே பல புதிய வியாதிகள் இயற்கையானவை என்று எழுதியிருக்கிறேன். எல்லாவற்றையும் எழுத முடியாது. இந்த 'சோஃபா மாடல்' பற்றி மட்டும் இங்கே பார்ப்போம்.
சோஃபா மாடல் ஒரு வகையில் லஞ்சம்தான். ஆனாலும் இதில் பெரிய குற்றமில்லை.
புரியும்படி சொல்ல வேண்டும் என்றால், இதைக் 'கவுண்டமணி மாடல்' என்று சொல்லலாம்.கவுண்டமணி ஒரு திரைப்படத்தில் கார்த்திக் உடன் சேர்ந்து ஒருவரைக் கடத்துவார். ஆனால், எதிரே பேரம் படியாது. கடைசியில் அய்யா நாங்க வேனெல்லாம் வச்சி கடத்தியிருக்கோம். அந்த வாடகைக்காவது பாத்து கொடுங்கய்யா என்று அநியாயத்திற்கு இறங்கி வருவார்.
அரசியலும் அப்படித்தான் இருக்கிறது. பெரிய கட்சிகள் அதிகாரத்தில் இருப்பதால்/இருந்ததால் அவர்களுக்குக் கட்சியை நடத்த பணம் ஒரு பிரச்சினை இல்லை. ஆனால், சிறிய கட்சிகளுக்கு இது சிரமம். அவர்களுக்கு ஒரு கட்சியை ஒழுங்காக நடத்துவதற்கே ஓர் அலுவலகம், சில கூட்டங்கள், கட்சியை வளர்க்க மாநிலம் முழுக்க இடைவிடாத பயணம் என நிறைய செலவுகள் இருக்கின்றன. இவை நியாயமான செலவுகள். இவற்றை இதுவரை திராவிட கட்சிகள் கொடுத்தன. இப்போது அவர்கள் கொடுக்க மாட்டார்கள் என்பதால் விஜய்யிடம் கேட்டிருக்கிறார்கள், அவரும் கொடுத்திருக்கிறார்.
இதை வேறு விதமாகவும் சொல்லலாம். ரவுடிகள் தங்களை பலமாக காட்டிக்கொள்ள பல துணை ரவுடிகளைப் பக்கத்தில் வைத்திருப்பார்கள். வேலை இருக்கிறதோ இல்லையோ, அவர்களின் குடும்ப பராமரிப்பிற்கு (Maintenance) இவர்கள் பணம் கொடுத்தாக வேண்டும். அதுதான் ரவுடியிச வாழ்க்கை முறை.
திராவிட கட்சிகளும் இந்த ஃபார்முலாவுக்குள் வந்துவிட்டார்கள். அவர்களும் தங்களை பலமானவர்களாகக் காட்டிக்கொள்ள, இப்படி பல 'உப்புமா' கட்சிகளைப் பக்கத்தில் வைத்துக் கொண்டார்கள். இவர்களுக்குச் சில எம்.எல்.ஏ சீட் கொடுக்க வேண்டும். அவ்வப்போது கட்சியை நடத்த மெயின்டனன்ஸ் என ஒரு தொகையைக் கொடுத்து, 'கூட்டணி ஆட்சி என்ற நிபந்தனை விதிக்கக் கூடாது' என்ற நிபந்தனையோடு பக்கத்தில் வைத்துக் கொண்டார்கள். அந்த அரசியலுக்கும் விஜய் முடிவுரை எழுதிவிட்டார்.
ஆனால், விஜய்க்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. எனவே, இந்த உப்புமா கட்சிகளைத் தேடிப் போக வேண்டிய நிர்பந்தம். அவர்களிடம் "அமைச்சர் பதவி தருகிறேன்" என்று சொன்னாலும், "அது சரி, கட்சி நடத்த காசுக்கு எங்கே போவது?" என்று கேட்கிறார்கள்.
அமைச்சர் பதவி கிடைத்தால் சம்பாதிக்கலாம் என்ற உண்மை தெரியாத அப்பாவிகளாக இவர்கள் இருக்கிறார்கள்; அல்லது விஜய் ஆட்சியில் அதற்கான வாய்ப்பு இல்லை என்ற எண்ணமும் ஒரு காரணமாக இருக்கலாம்.
இனி கட்சி நடத்த திமுக-வும் பணம் கொடுக்காது. குழப்பத்தில் இருந்த அவர்கள், "இதோ பாருங்க விஜய், எங்களுக்கு வண்டி வாடகை செலவுக்காக மட்டும் ஒரு சோஃபா கொடுத்துடுங்க" என்று கேட்டால் என்ன செய்வது? கொடுத்துதான் ஆக வேண்டும். இதெல்லாம் ஊழலில் வருமா?
கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தவிர்த்து மற்ற கட்சிகளுக்கு இது ஒரு வகையில் நிர்பந்தம். கட்சி மாறிய அதிமுக எம்.எல்.ஏ-க்களும் இதே நிலைதான். "நான் தேர்தலில் செலவு செய்த காசை மட்டும் கொடுத்துடுங்க" என்றாலும் கொடுக்க வேண்டியதுதான். இது லஞ்சமா அல்லது லஞ்சம் போன்றதா என்பதெல்லாம் அவரவர் பார்வையில் மாறுபடும்.
ஆனால், இனி சிறிய கட்சிகளுக்குப் பணம் கிடைக்காது, மரியாதையும் இருக்காது. எனவே, அவை மெல்ல மெல்ல காணாமல் போகும். அடுத்து, தேர்தலில் ஓட்டுக்குப் பணம் கொடுக்க வேண்டும் என்ற எண்ணமும் எந்த அரசியல்வாதிக்கும் இனி வராது. அந்த வகையில் அரசியல் கொஞ்சம் ஆரோக்கியமான பாதையில் திரும்பியிருக்கிறது என்பதுதான் உண்மை. அதே சமயம், இவர்கள் 'பார்ட்டி ஃபண்ட்' என்று அடித்த கொள்ளையோடு ஒப்பிடும்போது, இந்த சோஃபா ஊழல் நியாயமான, தவிர்க்க முடியாத ஒரு ஊழல்தான்.
எனவே, இந்த சோஃபா வியாதி ஒரு தற்காலிக வியாதி. அடுத்த தேர்தலில் இது இருக்காது என்று நம்பலாம்.

0 comments:
Post a Comment