
சமீபத்தில் ஒரு விவாதத்தைக் கவனித்தேன். ஜீவசகாப்தன் என்ற உடன்பிறப்பு போலிருக்கிறது, அவர்தான் சொன்னார். இந்த மூன்று மாதங்களில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் அதிக முதலீட்டை ஈர்த்திருக்கின்றன, தமிழ்நாடு மிகவும் பின்தங்கியிருக்கிறதாம்.
தொடர்ந்து அரசியலைக் கவனிப்பவர்களுக்கு, அதன் முக்கியமான துறையான பொருளாதாரம் குறித்த புரிதலும் இருக்க வேண்டும். ஆனால் திமுகவினரும், அதன் ஆதரவாளர்களும் அறிவை வளர்ப்பதை விட வாயை வளர்ப்பதில்தான் ஆர்வமாக இருக்கிறார்கள். அதன் விளைவுதான் இப்படி ஒரு அபத்தமான கருத்து.
பொதுவாகவே தொழிலதிபர்கள் எந்த ஒரு நாட்டிலும், மாநிலத்திலும் அவ்வளவு சீக்கிரம் முதலீடு செய்ய மாட்டார்கள். ஒரு இடத்தில் வேலையில் சேர்வது சுலபம். சம்பளம் அல்லது வேறு ஏதாவது பிரச்சினை என்றால், இரண்டு நாள் சம்பளம் போனால் போகிறது என்று வேலையை உதறிவிட்டு வந்துவிடலாம்.
ஆனால் முதலீடுகள் அப்படியல்ல. இங்கே ஆயிரக்கணக்கான கோடிகளில் முதலீடு. கட்டுமானம், இயந்திரம் என ஒருமுறை முதலீடு செய்துவிட்டால், திரும்ப எடுப்பது மிகவும் சிரமம். எனவே அவர்கள் ஒரு புதிய அரசு அமைந்தால் எதிர்பார்ப்பது, அது பெரும்பான்மை அரசாக இருக்க வேண்டும் என்பதே. அது கம்யூனிஸ்ட் அரசாகவோ, அவர்களின் ஆதரவிலோ இருக்கக் கூடாது.
அப்படி இந்தத் தலைவலிகள் இல்லாமல் ஒரு புதிய அரசு வந்தாலும், அந்தப் புதிய அரசின் தொழில் கொள்கை என்ன என்பதை முதல் பட்ஜெட்டில் கவனிப்பார்கள். அதற்குப் பின் ஆர்வம் வரும், ஆனாலும் பெரிய முதலீடுகள் நிச்சயம் வராது. இரண்டாவது பட்ஜெட்டைப் பார்த்த பிறகுதான் அவர்களுக்கு நம்பிக்கை வரும். அதன் பிறகுதான் முதலீட்டுக்கான பேச்சுவார்த்தையை ஆரம்பிப்பார்கள்.
அந்த வகையில் தமிழகம் சில ஆண்டுகளுக்கு முதலீட்டை ஈர்ப்பது சிரமம்தான். முக்கியமான காரணம் பெரும்பான்மை இல்லை என்பதும், இடதுசாரி ஆதரவோடு இந்த ஆட்சி இயங்குவதும்தான்.
கேரளாவைப் பொறுத்தவரையில், அங்கே முதல் பட்ஜெட் வரை காத்திருக்க வேண்டியதில்லை. அவர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்; அதுமட்டுமன்றி காங்கிரஸ் சந்தைப் பொருளாதாரத்தை ஆதரிக்கும் கட்சி என்பது எல்லோருக்கும் தெரியும். முக்கியமாக அங்கே இடதுசாரி ஆட்சி இருந்ததால் பெரிய தொழில் நிறுவனங்கள் அங்கே மிகவும் குறைவாகவே இருக்கும். அதாவது கேரளம் ஒரு புது அபார்ட்மெண்ட் போன்றது; எல்லா வீடும் காலியாகத்தான் இருக்கிறது. எனவே இனி நிறைய குடியேற்றம் (முதலீடுகள்) அங்கே இருக்கும்.
இதே நிலைதான் மேற்கு வங்காளத்திற்கும்.
ஆந்திராவைப் பொறுத்தவரை சந்திரபாபு அவர்களும் வலதுசாரிதான். அவர்கள் மூன்றாவது பட்ஜெட் போட்டுவிட்டார்கள், எனவே அங்கே முதலீடுகள் வருவது ஆச்சரியமில்லை. கர்நாடகாவில் முதல்வர் மாறியிருக்கலாம், ஆனால் அரசு அதேதான்.
தற்போது தமிழ்நாட்டில் யாராவது முதலீடு செய்த பிறகு, ஒருவேளை இந்த ஆட்சி பல காரணங்களால் கவிழ்ந்துவிட்டால் என்ன செய்வது என்ற கவலை முதலீட்டாளர்களுக்கு இருக்காதா? எனவே இன்னும் சில காலம் காத்திருப்பார்கள்; அதன் பிறகுதான் முடிவெடுப்பார்கள்.
இப்படி ஏகப்பட்ட தரவுகள் வெளிப்படையாகவே தெரிய, இதையெல்லாம் கவனிக்காமல் விஜய் வந்த பிறகு தமிழ்நாட்டில் முதலீடுகள் குறைந்துவிட்டன எனத் தர்க்கம் செய்தால், இந்த திமுக அறிவாளிகளை எந்த லிஸ்டில் சேர்ப்பது?
திமுகவில் இருப்பவர்கள், அவர்களை ஆதரிப்பவர்கள் எல்லாம் பொருளாதாரம் தெரியாத பொருளாதார மேதைகள் போலிருக்கிறது. நல்லவேளை மக்கள் இவர்களுக்கு ஓய்வு கொடுத்துவிட்டார்கள்.
தமிழ்நாட்டிற்கு வளர்ச்சி கொஞ்சம் மெதுவாக வந்தாலும் பரவாயில்லை, அது ஊழலில் திளைக்காமல், அரசியல்வாதிகளை மட்டும் பணக்காரர்களாக மாற்றாமல் இருந்தால் போதும்.
0 comments:
Post a Comment