ஆனால், அதை இவர்கள் காட்டும் விதம்தான் கொஞ்சம் இடிக்கிறது.
நிஜம் என்னவென்றால், நீயா நானாவில் இன்றைய இளைஞர்களைத் தற்குறிகளாகக் காட்ட வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டார்கள். அதற்குத் தகுந்தாற்போல் நிகழ்ச்சியையும் நடத்திவிட்டார்கள். அவ்வளவுதான் விஷயம்.
இதற்கு இரண்டு உதாரணங்கள் சொல்லலாம்.
ஒரு பள்ளிக்கு மேலதிகாரிகள் வருகிறார்கள். இப்போது அந்தப் பள்ளி நிர்வாகம், நாங்கள் அறிவாளிகளை உருவாக்குகிறோம் என்று காட்ட வேண்டும். என்ன செய்வார்கள்? எப்படியும் 100 மாணவர்களில் 10 பேர் புத்திசாலிகளாகத்தான் இருப்பார்கள். அவர்களை மட்டும் அன்று முன்வரிசையில் உட்கார வைக்கலாம். அல்லது படிப்பில் ஆர்வம் இல்லாத மாணவர்களை வரவேண்டாம் என்று சொல்லலாம். இப்போது அந்த அதிகாரி யாரைக் கேள்வி கேட்டாலும் அந்த மாணவன் அறிவாளியாகத்தான் இருப்பான். அதாவது, நீங்கள் என்ன முடிவை எதிர்பார்க்கிறீர்களோ, அந்த முடிவை உங்களால் உருவாக்கிக் காட்ட முடியும்.
இந்த நீயா நானாவும் அந்த வகைதான். இங்கே நிகழ்ச்சிக்கான தேர்வு முறை எப்படி இருக்கும் என்பது பலருக்கும் தெரியும். ஒரு தலைப்பில் நன்றாகப் பேசக்கூடியவர்களை முன்கூட்டியே பேசி , இவர் நன்றாகப் பேசுவார் என்று அலசித்தான் நிகழ்ச்சிக்கு அழைக்கிறார்கள். அதிலும் அந்தக் குறிப்பிட்ட தலைப்பில் சுவாரசியமான தகவல்கள் உங்களிடம் இருந்தால், உங்களுக்கு வாய்ப்பு அதிகமாகும்.
அந்தக் கதைத்தான் இங்கே நடந்திருக்கிறது. யாரெல்லாம் மொக்கையாகப் பேசுவார்கள் என்று கணித்து, அவர்களைத் தேர்வு செய்து, ஒரு விவாத நிகழ்ச்சி என்ற பெயரில் ஒரு காமெடி ஷோ நடத்தியிருக்கிறார்கள்.
பிரச்சினை என்னவென்றால், இங்கே இந்தத் தற்குறிகள் சினிமாவில் மட்டுமில்லை, அரசியலிலும் இருக்கிறார்கள். அதைப் பற்றி இவர்கள் பேசத் தயாரில்லை.
கலைஞர் என்னதான் குடும்ப அரசியலும் ஊழலும் செய்திருந்தாலும், அவரை ஒரு தலைவராகப் போற்றும் தற்குறிகளும் இருக்கிறார்கள். இதேதான் திருமாவளவன், சீமான் என எல்லாக் கட்சிகளிலும். தலைவன் தப்பு செய்தாலும், 'எங்க தலைவர் போல யாரு மச்சான்' என்று பேசும் தற்குறிகளும் நிறைய இருக்கிறார்கள்.
ஆனால், அதையெல்லாம் இவர்களால் பேச முடியாது. வச்சிச் செஞ்சிடுவார்கள். விஜய் அப்படி அல்ல. அதுவே ஒரு நல்ல மாற்றம். விஜய் வந்த பிறகு, அதிகாரத்தில் இருப்பவர்களைப் பயப்படாமல் விமர்சிக்கும் போக்கு தமிழ்நாட்டுக்கு வந்திருப்பது ஒரு நல்ல ஜனநாயக முன்னேற்றம்.
அதே சமயம், இது விஜய் ரசிகர்களுக்கு முட்டுக்கொடுக்கும் பதிவல்ல. நான் ஏற்கனவே என்னுடைய பல பதிவுகளில், இவர்களுடைய பேச்சைக் கேட்டால் அதிர்ச்சியாக இருக்கிறது என்று எழுதியிருக்கிறேன். பல விஜய் ரசிகர்களின் பேச்சு பைத்தியக்காரத்தனத்தின் உச்சம். ஆனாலும், அவர்கள் ஒரு குறிப்பிட்ட சதவீதத்தினர்தான். அந்தக் குறிப்பிட்ட சதவீத இளைஞர்களைத் தேடிப்பிடித்து, அவர்கள் பேசிய பல வார்த்தைகளில் ஆகச்சிறந்த மொக்கையை மட்டும் தேர்ந்தெடுத்து, 'இவர்கள் இப்படித்தான்' என்று ஒரு பிம்பத்தை விஜய்யை பிடிக்காதவர்கள் செய்துகொண்டிருந்தார்கள். இப்போது அரசியலே பேசாத விஜய் டிவியும் திடீர் வீரனாக உருவெடுத்திருக்கிறது.
ஆனால், இதைவிடக் கொடுமை என்னவென்றால், இவர்களின் பேச்சைக் கேட்டு கோபிநாத் அதிர்ந்திருக்க வேண்டும். 'நாங்கள்தான் மக்களைப் படிக்க வைத்தோம், அறிவைக் கொடுத்தோம் என்று சொன்னீர்களே, இங்கே அதற்கான அறிகுறியே இல்லையே! அப்படியென்றால், நீங்கள் என்னதான் செய்தீர்கள்?' என்று 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தை ஆண்ட திராவிடக் கட்சிகளைப் பார்த்துக் கேள்வி கேட்டிருக்க வேண்டும். கேட்கமாட்டார். காரணம், அந்தத் திராவிடக் கட்சிகள் கொடுத்த கல்வியைத்தானே இவரும் பெற்றிருக்கிறார். அப்படியென்றால், இவரும் அப்படித்தானே இருப்பார்?
எப்படியோ, திராவிடக் கட்சிகள் ஊழலில் திளைத்து, கல்வியை வியாபாரமாக்கிக் கொள்ளையடித்து, ஒரு தற்குறிச் சமுதாயத்தை உருவாக்கியிருக்கின்றன. அந்த இளைஞர் சமுதாயமே அவர்களைப் போட்டுத் தள்ளியதுதான் காலத்தின் கொடுமை. அதாவது, 'அவன் ஆயுதத்தை எடுத்து அவனையே போடணும்' என்று சொல்வார்களே, அதுதான் இது.

0 comments:
Post a Comment