இன்னமும் நம் நாட்டில் பல அரசியல்வாதிகள், விவசாயம் தான் நாட்டின் முதுகெலும்பு என்ற தவறான நம்பிக்கையில் செயல்பட்டு, நாட்டின் வளர்ச்சிக்கு தடையாய் இருக்கின்றனர்.
விவசாயம் மிகவும் அத்தியாவசியமான துறை என்பதை மறுப்பதற்கில்லை. அதே சமயம், உலகம் தற்போது பல வகைகளில் மாறி இருக்கிறது. ஒரு சராசரி குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட்டை ஆராய்ந்தால், அவர்கள் 70 சதவீதத்திற்கும் மேல், உணவுக்காகத் தான் முன்பு செலவு செய்திருப்பர். ஆனால், தற்போதைய குடும்பத்தின் மாதாந்திர பட்ஜெட்டை ஆராய்ந்தால், அதில் 30 சதவீதத்திற்கும் கீழ் தான், உணவுக்கான செலவாக இருக்கும். ஏனென்றால், விஞ்ஞானம் வளர்த்து, அது பல்வேறு துறைகளை உருவாக்கிய பிறகு, நாம் அதற்காக செலவு செய்வது அதிகரித்து கொண்டே போகிறது.
அதாவது, ஒரு காலத்தில் விவசாயம் மிகப்பெரிய துறையாக இருந்தது. அப்போது அந்த துறையில் சிறந்து விளங்கியவர்கள் சிறப்பாக வாழ்ந்தனர். அந்த காலத்தில், போக்குவரத்து மிகவும் தாமதமான ஒன்றாக இருந்தது. எனவே, பஞ்சம் ஏற்படும் போதும் மற்றும் போர்க்காலங்களில் அண்டை நாடுகள் முற்றுகை இடும்போதும், அந்த சூழ்நிலையை சமாளிக்க, உணவு விஷயத்தில் தன்னிறைவு என்பது அவசியமானதாக இருந்தது. ஆனால், தற்போது போக்குவரத்து விரைவாகவும் மற்றும் அணு ஆயுதங்களின் வரவு, போர் என்பதே சாத்தியமில்லாததாகிவிட்ட நிலையில், உணவு விஷயத்தில் தன்னிறைவு கொள்கை, தற்போது தேவையில்லாததாகி விட்டது.
வளர்ச்சி பெற்ற நாடுகள், தங்களுக்கு தேவையான உணவு தானியத்தை, அவர்களே உற்பத்தி செய்கின்றனரா அல்லது இறக்குமதி செய்கின்றனரா என்ற கேள்விக்கு விடை தேடிக் கொண்டிருந்தேன். ஆனால், அதற்குள் சில பிரச்னைகள் என்னை அரசு, "விருந்தாளி' ஆக்கிவிட்டது. ஒருவேளை ஜப்பானிய அரசியல்வாதிகள், "நாம் நமது பாரம்பரிய தொழிலை தான் கவனிக்க வேண்டும்' என்று முட்டாள்தனமாக செயல்பட்டிருந்தால், இந்த பொருளாதார வளர்ச்சியை ஜப்பான் கண்டிருக்குமா? பரப்பளவிலும், மக்கள் தொகையிலும் மிகச்சிறிய நாடான ஜப்பான், உலக பொருளாதார தர வரிசையில், தற்போது மூன்றாவது இடத்தில் இருப்பதற்கு காரணம், பிற துறைகளின் அவசியத்தையும், அதன் வளர்ச்சியையும் விரைவாக உணர்ந்து கொண்டது தான்.
தற்போது, தலா 1,000 ஏக்கர் நிலத்தை விவசாயிகளிடமும், தொழில் முனைவோரிடமும் கொடுத்தோமேயானால், விவசாயிகளை விட பல மடங்கு உற்பத்தியையும், வேலை வாய்ப்பையும், பிற துறையினரால் வழங்க முடியும். அத்துடன், இயற்கையை நம்பி இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்த உண்மையை பல நாடுகள் உணர்ந்து செயல்பட்டதால் தான், அவர்களால் வேகமான வளர்ச்சியை காண முடிந்தது.
`விவசாயம் தான் இந்தியாவின் முதுகெலும்பு' என்ற சித்தாந்தத்தில் சிக்கி கொள்ளாமல், பிற துறைகளின் அவசியத்தையும், விவசாய நிலங்களை கையகப்படுத்துவது தவிர்க்க முடியாதது என்பதையும், போராடும் அரசியல்வாதிகள் உணர வேண்டும்.
2 comments:
"சுவர் இல்லாமல் சித்தரம் வரைய முடியாது ' விவசாயம் மிகவும் முக்கியம் , உணவுக்கு வழி இல்லாமல் காரில் போய் என்ன பயன் ?!. உங்களுக்கு ஒரு செய்தி : உணவுக்காக ஒரு உலக போர் வரலாம் ! ( உதாரணம் : உங்கள் சிறை அனுபவம் - முதல் இரவு - இரவு ஒரு நேரத்துல கண் முழிச்சி பார்த்து, ஒருவிதமான பொசிஷன பார்த்துட்டு, இப்படியெல்லாம் மனுஷங்க ................ ஆச்சர்யப்பட்டேன். )
ராஜன், நான் சொல்ல வந்தததை கொஞ்சம் பெரிதாகவே எழுதி தினமலருக்கு அனுப்பி இருந்தேன். அதை ஆசிரியர்கள் புரிந்து கொண்டுதான் வெளியிட்டிருக்கிறார்கள். சுருக்கமாக படித்ததால் உங்களுக்கு புரியவில்லை. ஒரு பிரச்சினையை பிசினஸ் மைண்டோடு அணுகினால் அது உங்களுக்கு புரியும்.
இதற்கான தெளிவான பதிலை `விவசாயம் இந்தியாவை காப்பாற்றுமா?` என்ற பதிவில் எழுதி இருக்கிறேன். கவனிக்கவும்.
http://anindianviews.blogspot.com/2010/12/blog-post_12.html
Post a Comment