!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Friday, November 5, 2010

என் கதை:இந்திய நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக...

இது `சிறை அனுபவம்: வசூல்ராஜா எம்.பி.பி.எஸ்.` பதிவின் தொடர்ச்சி. அதை படித்துவிட்டு இதை படிக்கவும்.

என் கதையை உங்களிடம் சொல்லுவதா, வேண்டாமான்னு நான் இன்னும் முடிவு செய்யவில்லை. ஏனென்றால், சிறைக்கு போகும் முன்  நான் சில சபதங்கள்  எடுத்திருந்தேன். ஓன்று, இனிமேல் நான் என் பிரச்சினயைப் பற்றி யாரிடமும் சொல்லப் போவதில்லை. இரண்டு, இனிமேல் எந்த காரணம் கொண்டும் .............. ............. ............. வாழக்கூடாது என்று. இரண்டாவது சபதம் கிட்டத்தட்ட தோல்விதான். எனவே சுருக்கமாக  சில விஷயங்களை மட்டும் சொல்கிறேன்.

வாழவேண்டும், அதுவும் பிரச்சினைகளை சந்தித்து அதை ஜெயித்து வாழ்ந்து காட்ட வேண்டும், அதுதான் ஆறறிவு படைத்த மனிதனின்  அடையாளம். எனக்குள்ளும் அப்படி ஒரு போராட்ட வெறி உண்டு. ஆனால் பிரச்சினைகளின் தீவிரம் அதிகரிக்கும்போது அதிலிருந்து தப்பிக்க ஒரு வழி கிடைக்காதா என்று தேடுவோம். அந்த வகையில் என்னுடைய பிரச்சினைகளிலிருந்து தப்பிக்க நானும் ஒரு வழியை தேடிகொண்டிருந்தேன்.

சிறைக்கு செல்லும் முன் நான் வாழ்ந்து கொண்டிருந்த வாழ்க்கை மீது எனக்கு ஒருவிதமான வெறுப்பு இருந்தது. அதே  சமயம் தோல்வியை ஒப்புக்கொள்ளவும் மனமில்லை. எனவே ஏதாவது ஒரு வழி பிறக்கும் அதுவரை பொறுமை காப்போம் என்று சந்தர்ப்பத்திற்காக காத்திருந்தேன். ஆனால் எனது பிரச்சினைகள் தீருவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை. எனவே இருந்தது ஒரே ஒரு வழி. வேறு வழி இல்லையென்றால் இந்த வழியை தேர்ந்தெடுப்பது என்று நான் ஏற்கனவே முடிவு செய்திருந்தேன்.

வாழ்ந்தது போதும், இனி இந்த மாதிரி வாழ்கை வேணாம்... இதற்கு முற்றுபுள்ளி வைத்துவிடுவோம் என்ற முடிவுக்கு நான் கிட்டத்தட்ட வந்த நேரத்தில், இனி எது நடந்தாலும் எனக்கு நஷ்டம் இல்லை என்பதால், அந்த  கடைசி முடிவை எடுத்தேன். 

ஏதாவது ஒரு தப்பு செஞ்சுட்டு ஜெயிலுக்கு போறதுங்கறது தான் நான் எடுத்த முடிவு. ஜெயிலுக்கு போவதற்காக என்ன தப்பு செய்யலாம் அப்படின்னு நான் யோசிச்சிக்கிட்டு இருக்கும்போது, யாருக்கும் அதிகம் பாதிப்பு ஏற்படாத ஒரு தப்பு செய்யக்கூடிய சந்தர்ப்பம் கிடைக்க, நான் அதை பயன்படுத்திக் கொண்டேன்.

`ஜெயிலுக்கு போவதால் பிரச்சினை தீருமா?` என்று நீங்கள் கேட்கலாம். மாத்தி யோசி என்று சொல்வார்களே, அதேபோல் நானும் கொஞ்சம் வித்தியாசமாக யோசித்தேன். இந்த வழக்கில் ஒரு தியரி எனக்கு சாதகமாக செயல்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படி நடக்கவில்லை.

போலீஸ் ஸ்டேஷன்லிருந்தே எனக்கு பிரச்சனை ஆரம்பமானது. என்னால் பாதிக்கப்பட்ட (IPC 307) என் மாமா என் மீது புகார் கொடுக்க மறுத்ததால், போலீசார் என்னை கைது செய்ய தயங்கினார்கள். ஆனால்  ஜெயிலுக்கு போவது என்ற முடிவில் நான் உறுதியாக இருந்ததால், ஆரம்பத்தில் எனது முடிவை கேட்டு குழம்பி போனவர்கள், பின்னர் எனது பிரச்சினையை ஓரளவு புரிந்து கொண்டு, என்னை திருப்திபடுத்துவதற்க்காக,  பேருக்கு ஒரு கேசை போட்டு ஜெயிலுக்கு அனுப்பி வைத்தார்கள். உள்ளே போனவன் போனவன்தான். பிரச்சினை தீராமல் வெளியே வரக்கூடாது என்ற முடிவோடு நான் போனதால், பெயிலும் வேண்டாம், விடுதலையும் வேண்டாம் என்று உள்ளேயே இருந்துவிட்டேன்.

உலக தொலைகாட்சிகளில் முதல்முறையாக என்று சொல்வார்களே, அதுபோல் இந்திய நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக என்று சொல்லக்கூடிய பல விஷயங்கள் என் வழக்கில் நடந்திருக்கின்றன. அதையெல்லாம் நான் சொல்லுவது நாகரீகமாக இருக்காது. ஏனென்றால், போலீஸ் ஸ்டேஷனிலும், கோர்ட்டிலும் எனக்கு சாதகமாக அனுதாப அலை அடிக்க ஆரம்பித்ததால், என்னை காப்பாற்றுவதற்காக  சிலர் செய்த முயற்சி அது. 

என் அம்மா, தங்கை, அண்ணன், மூவரும் (வெவ்வேறு காலங்களில் ) தற்கொலை செய்து கொண்டதால், நான் மன அழுத்தத்தால் பாதிக்கபட்டிருக்கிறேன் என்றும், நான் செய்ததை ஒரு சிறிய குற்றமாகவும் கருதி, போலீசாரும், நீதிபதியும் என்னை ஜெயிலிருந்து வெளியே அனுப்பவே பார்த்தார்கள். நான் பெயில் வேண்டாம் என்று உள்ளேயே இருந்ததால், வழக்கை விரைவாக முடித்து என்னை விடுதலை செய்ய முயற்சி நடந்ததது. `என்னை விடுதலை செய்தால், நான் மறுபடியும் ஒரு கொலை செய்யவேண்டி இருக்கும் ` என்று நீதிமன்றத்தில் நீதிபதியிடமே (மிரட்டலாக ) சொன்னபிறகு தான் எனது வழக்கை முடிக்காமல் இழுக்க ஆரம்பித்தார்கள். 

ஒரு நீதிபதி, `சிறை என்பது சமூக விரோதிகளுக்கானது. அவர்களால் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் என்பதால்தான் அவர்களை உள்ளே வைத்திருக்கிறோம். மற்றவர்களெல்லாம் போய் இருக்க அது என்ன கெஸ்ட்ஹவுசா?` என்று நேரடியாகவே கேட்டு விட்டார் . நான் சமூகவிரோதி அல்ல என்று ஒரு நீதிபதியே சொன்னது சந்தோசமான விஷயம்தான். ஆனால் எனது பிரச்சினையை பலரால் புரிந்து கொள்ளமுடியாதது தான் எனக்கு மிகப் பெரிய பிரச்சினை.

சரி. இவ்வளவு பிடிவாதமாக உள்ளே இருந்து விட்டு, இப்போது விடுதலையாக நான் ஒப்புகொண்டதற்கு காரணம், எனக்கு வெளியே ஒரு சிறப்பான வாழ்கை இருக்கிறது என்பதற்காகவோ அல்லது மனிதனாக பிறந்து விட்டால் எப்படியாவது வாழ்ந்து விடவேண்டும் என்பதற்காகவோ அல்ல. நாம் வாழும் வாழ்க்கை ஓரளவுக்காவது நாகரிகமாக, திருப்தியாக இருக்க வேண்டும் என்று நினைப்பவன் நான். அப்படி இல்லாத பட்சத்தில் அதை முடித்து கொள்ளத்தான் விரும்புவேன். 

சிறை அனுபவம் என்னை கொஞ்சம் மாற்றி இருக்கிறது. சில கைதிகளின் கதையை சொல்வதன் மூலம் பலர் தவறான பாதையில் போகாமல் தடுக்கப்படலாம். மிக முக்கியமாக, சிறை, காவல் மற்றும் நீதித்துறை போன்றவை செயல்படும் விதம் குறித்தும் ஓரளவு தெரிந்து கொள்ள முடிந்ததால், அது பற்றியும் எழுதலாம். உள்ளே இருந்து கொண்டு இதையெல்லாம் செய்ய முடியாது. நான் ஜெயிலுக்கு போன நோக்கம் தோல்வியில் முடிந்தாலும், இதையெல்லாம் எழுதிய பிறகு ஒரு முடிவெடுப்போம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறேன்.

இறுதியாக, இந்த கதையில் ஒரு டிவிஸ்ட் இருக்கிறது. ஜெப்ரி ஆர்ச்சருக்கே அல்வா கொடுக்ககூடிய டிவிஸ்ட். அது மட்டும் நடந்திருந்தால் இந்நேரம் என் தலை எழுத்து மாறியிருக்கும். அனால் அப்படி நடக்கவில்லை.

நான் ஒரு பத்திரிக்கையாளன் கிடையாது. அதற்கான அடிப்படை தகுதி என்னிடம் இல்லை. கேள்வி ஞானம் என்று சொல்வார்களே, அதுபோல் தொடர்ந்து பத்திரிக்கைகளை படித்து கொண்டிருப்பதால் அந்த அனுபவத்தில் எழுத ஆரம்பித்திருக்கிறேன். எனது எழுத்து நீங்கள் ரசிக்கும்படி இருக்கிறதா என்பது எனக்கு தெரியாது. குறைகள் இருந்தால் சுட்டி காட்டுங்கள்.

4 comments:

Unknown said...

புதிய உதயம் நமக்காக

ரவி said...

சுவாரஸ்யமான எழுத்து நடை.விறுவிறுப்பாக இருக்கு. தொடருங்கள். பின்னூட்டங்களை பற்றியோ உற்சாகப்படுத்துதல்கள் பற்றியோ கவலைப்படாமல்.

அன்புடன்..!

சிவானந்தம் said...

செந்தழல் ரவி மற்றும் விக்கிக்கு என் நன்றி. நான் தொடர்ந்து பதிவுகள் போட முயற்சிக்கிறேன்

Ramesh said...

இயல்பான எழுத்து நடையாக இருக்கிறது.. தொடருங்கள்... தொடருகிறேன்..

Post a Comment