என்னோட முதல் இரவு அனுபவம் கிட்டத்தட்ட உங்கள்ல பல பேரோட அனுபவம் மாதிரி தான் இருந்தது. அந்த இரவு எப்படி இருக்குமோன்னு நான் படபடப்பா இருந்தேன். ஆனா நான் பயந்த மாதிரி ஒன்னும் ஆவல. அந்த சூழ்நிலை எனக்கு திருப்தியாவே இருந்தது. நானும் அந்த இரவு முழுக்க சரியா தூங்கல. இரவு ஒரு நேரத்துல கண் முழிச்சி பார்த்து, ஒருவிதமான பொசிஷன பார்த்துட்டு, இப்படியெல்லாம் மனுஷங்க ................ ஆச்சர்யப்பட்டேன்.
போதும். இதுக்கு மேலேயும் நான் ஏதாவது எழுதினேன், நல்ல பதிவர்கள் எல்லாம் சேர்ந்து இந்த பதிவுக்கு தடை போட்ருவாங்க. அதனால நான் உண்மையை சொல்லிடறேன். நான் சொல்ல போவது சிறையில் நான் கழிச்ச முதல் இரவைப் பத்தி.
அன்னைக்கி காலையில போலீஸ் ஸ்டேஷன்ல, (என் வாழ்க்கையின் மீது) வெறுப்போடும், (ஜெயில் எப்படி இருக்குமோ என்ற) பயத்தோடும், இன்னொரு பக்கம் என்னுடைய பிளான் சக்சஸ் ஆயிட்டா, எனக்கு கிடைக்கபோற அட்டகாசமான வாழ்க்கையின் மீது நம்பிக்கையுமாக கண் விழித்தேன்.
இதற்கிடையில் போலீஸ்காரர்கள் என்னைபத்தியும், என்னோட பிரச்சினைகளையும் தெரிஞ்சிகிட்டு, ஜெயிலுக்கு போவது என்கிற என் உறுதியான முடிவையும் பார்த்துட்டு `ஜெயிலுக்கு போய் நிம்மதியா இருக்கலாம்னு நீ நினைக்கிற, ஆனா ஜெயில் எவ்வளவு மோசமா இருக்கும்னு உனக்கு தெரியுமான்னு ?` கேட்டாங்க .
`பிரச்சினையிலிருந்து தப்பிச்சி ஓடுபவர்கள், கிடைக்கும் ஏதாவது ஒரு வழியில் புகுந்து ஓடுவார்கள். நானும் அது போலத்தான். நாம் போய் சேரும் இடத்தில் கூட பிரச்சினை இருக்கலாம். அதை அங்கே போய் பார்த்துக் கொள்வோம் ` என்று நான் சொல்ல, எனது உறுதியான பதிலை கேட்ட அவர்கள் நான் தெளிவாக இருப்பதையும் உனர்ந்து, எனக்கு கொஞ்சம் அட்வைஸ் செஞ்சுட்டு, என் மேலே FIR எழுத ஆரம்பிச்சாங்க.
காலை டிபன் ஸ்டேஷனிலேயே (4 இட்லி ) முடிந்துவிட, அதற்கு பின் 11 மணியளவில் என்னை கோர்ட்டுக்கு அழைத்து சென்றார்கள். கோர்ட்டில் நீதிபதி `உங்கள் மீது கொலை முயற்சிக்கான குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது` என்றார். நான் தலையாட்டினேன். பின்னர் கோர்ட்டுக்கு வெளியே உறவினர்கள் ஜூஸ் வாங்கி கொடுக்க, அதை குடித்துவிட்டு புழலுக்கு கிளம்பினோம். என்னை புழல் சிறைக்கு 2 (விசாரணை சிறைவாசிகளுக்கானது) உள்ளே அனுப்பும் முன், என்னை அழைத்து வந்த போலீசார் எனக்கு பிரட் மற்றும் சில பொருட்களை வாங்கி கொடுத்துவிட்டு, அவர்கள் பங்குக்கு கொஞ்சம் புத்திமதிகள் சொல்லிவிட்டு கிளம்பினார்கள்.
நான் இதற்குள் இன்னொரு முடிவு எடுத்திருந்தேன். ஒரு புதிய இடத்தில் நம்மை புதியவனாக காட்டிகொண்டால், பலர் நம் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்பதால் பழைய ஆளாக காட்டி கொள்ளவேண்டும் என்று.
ஆனால், உள்ளே நுழைந்து முறைப்படியான பரிசோதனைக்கு பிறகு அங்கே இருந்த திண்ணையில் உட்கார்ந்த சில நிமிடங்களிலேயே ஒரு கைதி கேட்டார், `அண்ணே, ஜெயிலுக்கு புதுசான்னே?`
எப்படி கண்டுபிடித்தான் என்று நான் குழம்பிபோய்விட்டேன். வடிவேலுவுக்கு அவருடைய கொண்டை காட்டிக் கொடுத்ததை போல், என் கையிலிருந்த பிரட் என்னை காட்டிக் கொடுத்துவிட்டது.
`அண்ணே, இங்கே உட்கார்ந்திருக்கிறவங்க, ஒன்னு இங்கேயிருந்து வெளியே (கோர்ட்டுக்கு) போவாங்க. அவங்க கையில கோர்ட் படி (சாப்பாடு) இருக்கும். இல்ல வெளியிலேந்து உள்ள வருவாங்க. அவங்க கையில பிரட் இருக்கும்` என்று அந்த கைதி விளக்கம் கொடுத்தார். கூடவே `அண்ணே பசிக்குதன்னே, கொஞ்சம் பிரட் கொடுங்கன்னே` என்று கேட்டார். நான் சிறையில் (பாதுகாப்புக்காக) நண்பர்களை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்ததால், முழுவதையும் கொடுத்துவிட்டேன்.
`அண்ணே, இங்கே உட்கார்ந்திருக்கிறவங்க, ஒன்னு இங்கேயிருந்து வெளியே (கோர்ட்டுக்கு) போவாங்க. அவங்க கையில கோர்ட் படி (சாப்பாடு) இருக்கும். இல்ல வெளியிலேந்து உள்ள வருவாங்க. அவங்க கையில பிரட் இருக்கும்` என்று அந்த கைதி விளக்கம் கொடுத்தார். கூடவே `அண்ணே பசிக்குதன்னே, கொஞ்சம் பிரட் கொடுங்கன்னே` என்று கேட்டார். நான் சிறையில் (பாதுகாப்புக்காக) நண்பர்களை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இருந்ததால், முழுவதையும் கொடுத்துவிட்டேன்.
`ஏம்பா, ஜெயில்ல சாப்டலியா?` என்று நான் கேட்க...
`அது எங்கன்னே பத்தும்` என்று பதில் வந்தது.
இருந்த பிரட்டை தானம் பன்னிவிட்டதால், அன்று மதியம் நான் சாப்பிடவில்லை. புதிதாக வந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்தவுடன் எங்களை ஒரு பிளாக்கில் அடைத்தார்கள். சுமார் 4.30 மணியளவில் படி வந்தது. அதற்குள் ஓரளவு பழகிவிட்ட ஒருவர், ஒரு தட்டை கொடுத்து `சாப்பாடு வாங்கிகங்க` என்று சொல்லிவிட்டு போய்விட்டார். அந்த சாப்பாட்டை ஒரு வாய்தான் சாப்பிட்டிருப்பேன். சரி, நாம இன்னக்கி உண்ணாவிரதம் இருப்போம் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன். பின்னர் அருகிலிருந்த ஒருவரிடம், `நைட் சாப்பாடும் இப்படித்தான் இருக்குமா`ன்னு நான் விளக்கம் கேட்க, `அண்ணே, நீங்க ஜெயிலுக்கு புதுசா`ன்னு கேள்வி கேட்டு என்னை டெண்ஷனாக்கினார்
ஜெயில்ல காலை படி 7 மணிக்கும், மதிய படி 12 மணிக்கும், இரவு படி 4.30 கொடுத்துடுவாங்க. நம்ம விருப்பப்படி எப்ப வேணுமின்னாலும் சாப்பிடலாம். இது தெரியாம நான் கேள்வி கேட்டதால வந்த வினைதான் அது.
சிறை நான் பயந்த மாதிரி மோசமா இல்ல. எங்களை அடைச்ச அறையில 30 பேர் படுக்கிற அளவுக்கு ஹால் மாதிரி பெரிசாவும், நல்ல காத்தோட்டமாவும், பேன் வசதியோடும் இருந்தது. பெரிய ரவுடிகளும் யாரும் இல்லை. அங்கிருந்த எல்லாரும் மரியாதையா, கொஞ்சம் பயந்த மாதிரி தான் பேசினாங்க.
நான் என்னோட முதல் இரவில சரியா தூங்கலைன்னு சொன்னதும் நீங்க ஒன்னும் தப்பா நினைக்கலையே. நான் அன்னிக்கி காலைல சாபிட்டதோட சரி. மத்தபடி நான் அன்னிக்கி முழுக்க பட்டினி. அதான் என்னால தூங்கமுடியல. அந்த அரைகுறை தூக்கத்துல நேரம் என்னான்னு தெரியாத ஒரு நேரத்துல கண் முழிச்சி பார்க்கும்போது தான் நான் அந்த வித்தியாசமான பொசிஷன பார்த்து அதிர்ந்து போனேன்.
தொடரும்
ஜெயில் நான் பயந்த மாதிரி இல்லன்னதும், நீங்க ஒரு முடிவோட கிளம்பிட போறீங்க. இது ஆரம்பம். பிற விஷயங்கள் பின்னால் வரும்.
*******************************************************
அன்பார்ந்த வாசகர்களே, பதிவர்களும் அரசியல்வாதிகளை போல் `போடுங்கம்மா வோட்டு` என்று கேட்க ஆரம்பித்துவிட்டார்கள் (என்னையும் சேர்த்து). எனவே உங்கள் கருத்துகளை தெரிவியுங்கள். அது அடுத்த பதிவு குறையில்லாமல் வர உதவியாக இருக்கும்.
8 comments:
இந்த மாதிரி விசயங்களை பொதுவெளியில் எழுதுவதற்கு ஒரு துணிச்சல் வேண்டும்.. தொடர்ந்து எழுதுங்கள் ...
அட்டகாசமா தொடங்கி இருக்கீங்க...வாழ்த்துக்கள்
வாழ்த்துரைகள் பதிவுலகின் பிரபல்ங்களிடமிருந்து (கே.ஆர்.பி.செந்தில், ஆர்.கே.சதீஷ்குமார்) வந்திருக்கின்றன. நன்றி. உங்களின் ஆதரவுடன் எனது பதிவுகள் தொடரும்.
Error Is Human ,
வாழ்த்துக்கள்
இப்படி ஒரு வலைப்பூவிற்கு வருவேன் என சிறிது எண்ணவில்லை....
கே ஆர் பி அண்ணன் சொன்னது போல இந்த அனுபவங்களை எழுத ஒரு துணிவு வேண்டும்தான்
தொடருங்கள்... தொடர்ந்து வருகிறேன்
சஸ்பென்ஸோட முடிச்சிருக்கீங்க.. தொடருங்க.. காத்திருக்கேன்..
அடுத்த பதிவு எப்போ?
``அடுத்த பதிவு எப்போ?``
வாரம் ஒரு பதிவு என்ற முடிவில் இருக்கிறேன்
Post a Comment