!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Sunday, February 5, 2012

2g உச்ச நீதிமன்ற தீர்ப்பு. நாட்டுக்கு லாபமா, நஷ்டமா?

சில விஷயங்களில் தவறை தவறு என்று கண்டிக்க முடியாது. அதேபோல் சில விஷயங்களில் சரி எனப்படுவதை சரி என்றும் சொல்லமுடியாது.

மேலே சொன்ன வார்த்தைகள் உங்களுக்கு குழப்பமாக இருக்கும். ஆனால் 2g வழக்கில் சுப்ரீம் கோர்ட்டின் தடாலடி தீர்ப்பு இந்த வகைதான். இந்த தீர்ப்பு சட்டத்தை நிலைநாட்டி ஒரு தவறான செயலை ரத்து செய்திருக்கலாம். ஆனால் இதை இப்படி அணுகியது தவறாகவும் போகலாம்.

இந்த உதாரணத்தை பாருங்கள். ஒரு மைனர் பெண்ணுக்கு மேஜர் ஆகாமலேயே கட்டாயத் திருமணம் ஆகிவிட்டது. எனவே இந்த திருமணம் செல்லாது என்று ஒருவர் கோரிக்கை வைக்கிறார். அவர் மைனர் என்பது ஊர்ஜிதமாகி இந்த திருமணம் செல்லாது என்று தீர்பளிக்க முடியுமா?

இந்த திருமணத்தில் எந்தவித `சம்பிரதாயமும்` நடக்காமல் இருந்தால் இதில் தலைவலி இல்லை. ஆனால் அவர்கள் சில வருடங்கள் வாழ்ந்து அவர்களுக்கு குழந்தைகள் இருந்தால், இப்படி எடுத்தேன் கவிழ்த்தேன் என்று தீர்ப்பு வழங்க முடியுமா?

இதுவும் அப்படித்தான். லைசன்ஸ்கள் முறைகேடாக வாங்கி இருந்தாலும், தொழிலை ஆரம்பித்து, ஒரு கட்டமைப்பை உருவாக்கிவிட்ட பிறகு, இதை ரத்து செய்வதால், இது எந்தமாதிரியான சிக்கலை உருவாக்கப் போகிறதோ? அது சில மாதங்கள் கழிந்த பிறகுதான் தெரியும். நீதிபதிகள் இதையெல்லாம் அலசி ஆராய்ந்து, அதன் பிறகே தீர்ப்பு வழங்கி இருப்பார்கள் என்று நம்புவோம். இருந்தாலும் இதில் நிச்சயம் பக்கவிளைவுகள் உண்டு.   

இது என்னுடைய இன்னொரு அனுபவம்.கடையில் தினம் பல மனிதர்களை சந்திக்க வேண்டி இருக்கும். எனவே சொந்த அனுபவம் மட்டுமின்றி, அங்கிருந்தும் சில அனுபவங்கள் வரும். ஒருவர் புலம்பினார். அவர் பையன் நிறைய கடன் வாங்கி குடித்து அழித்துவிட்டானாம். சில தெரிந்த நண்பர்களும் கொடுத்ததால், பையன் தராத நிலையில், இவரிடம் வந்து கேட்டிருக்கிறார்கள்.

`உங்க பையன் தராததற்கு நீங்கள் ஏன் தரவேண்டும். கொடுக்க மாட்டேன் என்று மறுக்கலாமே?` -நான் 

அதற்கு அவர், `அப்படி சொல்ல முடியாது. இங்கே ஒரு மனிதனின் தகுதி என்பது அந்த நபரால் மட்டும் உருவாவதில்லை. அந்த நபர் சார்ந்த குடும்பத்துக்கும் உள்ள மரியாதையும் சேர்ந்ததுதான் அது. எனவே நான் கொடுக்காவிட்டால், என்னுடைய மரியாதையும் பாதிக்கும்.

கடன் அல்லது பெண் கொடுப்பவர்கள் பெரும்பாலும் அந்த குடும்பத்தின் தகுதி அடிப்படையிலும்  முடிவெடுகிறார்கள். எனவே மற்ற பிள்ளைகளுக்கு வரன் தேடும் போது, `உன்னை எப்படியா நம்பறது? இந்த பிள்ளையும் தடம் மாறனா, என் பொண்ணு நடுத்தெருவுல நிக்கனுமா? என்று கேள்வி கேட்பார்கள். நல்ல குடும்பம் என்ற மரியாதைதான் முக்கியம். எனவே என்னுடைய மரியாதையை காப்பாற்ற, என்னுடைய பிள்ளைகளால் ஏற்படும் பாதிப்புகளை முடிந்த அளவு நான்தான் சரி செய்ய வேண்டும்` என்றார்.

இந்தியாவின் நிலையும் அப்படித்தான். இங்கே ஒரு அமைச்சருடம் போடப்படும் ஒப்பந்தங்கள் அவரை மட்டும் நம்பி போடப்படுவதில்லை. இந்தியா என்ற நாட்டை நம்பி, அங்கே இருக்கும் ஜனநாயக அமைப்பை நம்பி போடப்படுபவை. இந்த தீர்ப்பின் மூலம் அந்த நம்பிக்கை சிதைக்கப்பட்டுள்ளது.

இனி அமைச்சர்கள் இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவங்களுடன் ஒப்பந்தம் போடப்படும்போது தலையால் தண்ணி குடிக்க வேண்டும். `இதில் யாரும் லஞ்சம் வாங்கவில்லை` என்று சத்தியம் செய்தாலும், `எதற்கும் சுப்ரீம் கோர்ட்டுல ஒரு NOC வாங்கிடுங்களேன்` என்று ஜாக்கிரதையாய் இருப்பார்கள்.

ரெட் டேப்பிசம் என்ற பெயரில் ஏற்கனவே பல திட்டங்கள் தாமதமாக, இப்போது இந்த புது தலைவலி வேறு.

இந்த தீர்ப்பு ஊழல் செய்யும் அமைச்சர்களுக்கும், லஞ்சம் கொடுக்க முன் வரும் தொழில் அதிபர்களுக்கும் ஒரு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. ஆனால்...?

இது தவறுதான் ஆனால் தவறு இல்லை.  

ஒரு பெண் பாலியல் ரீதியாக பாதிக்கப்படும் போது, இங்கே தவறு செய்தவன் தண்டிக்கப் படவேண்டும் என்பதை விட, தன பெண்ணின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதில்தான் பெற்றோர்கள் கூடுதல் கவனம் செலுத்துவார்கள். எனவே இதுபோன்ற வழக்குகள் புகார் ஆகாது. ஆனால் இப்படி தெரிய வரும் குற்றவாளிகள் மீது போலீசார் ஏதாவது பொய் கேஸ் போட்டு வேறுவிதமாக தண்டிப்பார்கள்.

மேலே சொன்ன இரண்டும் தவறுதான். அதாவது பெண்கள் புகார் கொடுக்க மறுப்பதும், போலீசார் பொய் வழக்கு போடுவதும் தவறுதான். ஆனால் இங்கே சூழ்நிலைகளை பார்க்கும் போது, அதை தவறு என்று அழுத்தமாக சொல்ல முடியாது.

இது சரிதான் ஆனால்...?

அதேபோல் இந்த 122 லைசன்ஸ்களை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு சரி எனப்பட்டாலும், இது சரி என சொல்ல முடியவில்லை. இந்த தீர்ப்பினால் கிடைக்கும் நேரடி லாபத்தை விட, மறைமுக நஷ்டம் அதிகமாக இருக்கலாம்.

அப்படி என்றால் என்ன செய்ய வேண்டும்?. போலீசார் செய்வதை போல், பொய் கேஸ் போட்டு வேறுவிதமாக இவர்களை தண்டியுங்கள் என்று சொல்ல முடியாது. அது இங்கே சாத்தியம் இல்லை. இருந்தாலும் இந்தியாவின் இமேஜுக்கும் பாதிப்பில்லாமல் அதேசமயம் குற்றவாளிகளை தண்டித்து நடந்த தவறை சரி செய்ய வேறு வழி இருந்திருக்கலாம்.

இப்போதைக்கு இந்த நீதிமன்ற தீர்ப்பை யாரும் குறை சொல்லமாட்டார்கள். அது ரிஸ்க். கொஞ்சம் ஆறவிட்டு, அதன்பிறகு இந்த துறை சார்ந்த பொருளாதார நிபுணர்கள், இந்த தீர்ப்பின் சாதக பாதகங்களை அலசுவார்கள். அப்போது பார்ப்போம்.


4 comments:

bandhu said...

நஷ்டமும் உண்டு.. லாபமும் உண்டு..
Short term.. it is a loss. but long term.. it is profitable. This is the only way the country can shun corruption. Politicians only look for short term gains keeping an eye on election. By God's grace, the judge has kept long term gains for the country in his view

~முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

ஸலாம் சகோ.சிவானந்தம்,
contempt of court வந்து விடக்கூடாது என்று பார்த்து பார்த்து வார்த்தைகளை போட்டு வேறு ஒரு கோணத்தில் அலசி உள்ளீர்கள். நல்ல ஆய்வு. ஆனால், . பற்பல ஆண்டுகள்... பற்பல ஊழல்கள்... கணக்கில்லை. அதனால், இனிமேல்தான் இந்திய அரசியல்வாதிகளினால் நாட்டின் 'புகழ்' (அப்படி ஒன்று இருக்கும் பட்சத்தில்) போய்விடும் என்று பயப்பட தேவை இல்லை..! :-)

சிவானந்தம் said...

bandhu said...

///நஷ்டமும் உண்டு.. லாபமும் உண்டு..
Short term.. it is a loss. but long term.. it is profitable. This is the only way the country can shun corruption. Politicians only look for short term gains keeping an eye on election. By God's grace, the judge has kept long term gains for the country in his view///

வாங்க பந்து. உங்கள் கருத்துக்கு நன்றி. (அவரச வேலை. உடனடியாக பதிலளிக்க முடியவில்லை)

உங்கள் கருத்தில் எனக்கும் உடன்பாடுதான். ஆனால் நஷ்டம் என்பது ஊழலால் மட்டும் வருவதில்லை. முடிவெடுக்க தாமதமவதிலும் வரும். அந்த இழப்பு நம் கண்ணுக்கு தெரியாது. பல அரசுத் துறைகள் திட்டங்களை அமல்படுத்துவதில் தாமதம் செய்வதால், திட்ட மதிப்பீடு உயர்வதை படித்திருக்கிறோம். அதுவும் நஷ்டம்தானே? இந்த தீர்ப்பு உடனடியாக ஒரு மந்த நிலையை உருவாக்கும். நீண்ட கால நோக்கில் பலன் கொடுத்தால் சந்தோஷம்தான்

சிவானந்தம் said...

முஹம்மத் ஆஷிக் citizen of world~ said...

////contempt of court வந்து விடக்கூடாது என்று பார்த்து பார்த்து வார்த்தைகளை போட்டு வேறு ஒரு கோணத்தில் அலசி உள்ளீர்கள். ////

வாங்க நண்பரே. இது ஒரு சிக்கலான தீர்ப்பு. இதை தவறு என்று சொன்னால் நான் ஊழலை ஆத்ரிப்பவேன் என்ற தோற்றம் உருவாகும் (அன்னா ஹசாரேயை எதிர்ப்பது போல்).அந்த தயக்கம்தான் காரணம். மற்றபடி கோர்ட்டுக்கு பயப்படுபவன் நானல்ல.

///இந்திய அரசியல்வாதிகளினால் நாட்டின் 'புகழ்' (அப்படி ஒன்று இருக்கும் பட்சத்தில்) போய்விடும் என்று பயப்பட தேவை இல்லை..! :-)///

தவறான கருத்து. 2004 பாராளுமன்ற தேர்தலுக்கு பிறகும், அமெரிக்க இந்தியாவுக்கு அணுசக்தி ஒப்பந்தம் போட முடிவு செய்த போதும், உலக நாடுகளின் பல பத்திரிக்கைகளை படித்தேன். எனக்கே நம்பிக்கை இல்லாமல் என் கையை கிள்ளி பார்த்தேன். அந்த அளவுக்கு உலக நாடுகள் இந்தியாவை பாராட்டி இருந்தன. வருங்காலத்தில் இந்தியா சூப்பர் பவர் ஆகிறதோ இல்லையோ, ஆனால் பலமான (பேலன்ஸ்) சக்தியாக இருக்கப் போவது நிச்சயம். எனவேதான் அமெரிக்கா இந்தியாவின் மீது ஆர்வம் காட்டுகிறது.

தினம் பல ஊழல் மற்றும் நெகடிவ் செய்திகளையும் படிப்பதால் நீங்கள் இப்படி கருத்து தெரிவித்திருக்கலாம். ஆனால் எங்கே உண்மையான ஜனநாயகமும், சுதந்திரமும் இருக்கோ, அங்கே சத்தமும் அதிகமாகதான் இருக்கும். அதுவும் 120 கோடி கொண்ட நாட்டில் இது கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். எனவே இந்த சத்தத்தை வைத்து நம் நாட்டை எடை போடாதீர்.

Post a Comment