!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Sunday, August 26, 2012

லட்சம் கோடிகளை காப்பாற்ற, 300 கோடி போதும்


கடந்த வருடம்  `ஒரு கோடி பரிசு` என ஒரு பதிவு போட்டிருந்தேன். சமூகத்தில் நடக்கும் ஊழல்கள், மோசடிகள் போன்றவற்றை அரசுக்கு தெரிவிப்பவர்களுக்கு (அப்படி தெரிவிப்பவர்களில் ஒருவருக்கு), அரசு ஒரு கோடி பரிசை வழங்கலாம் என்றும், அப்படி ஒரு திட்டம் இருக்குமேயானால், பணத்தாசை காரணமாக பலர் துப்பறியும் புலிகளாக மாறி, ஊழல் குறித்த தகவல்களை அரசுக்கு ஆரம்பக்கட்டத்திலேயே தந்துவிடுவார்கள் என்று எழுதி இருந்தேன்.

தற்போதைய கிரானைட் ஊழலை பார்க்குபோது அது எவ்வளவு அவசியம் என்பது உங்களுக்கு புரியும். அப்படி ஒரு நடைமுறை இருந்திருந்தால் கிரானைட் ஊழல் இந்த அளவுக்கு வந்திருக்காது. கோடிக்கு ஆசைப்பட்டு யாராவது ஒருவர் இதை அரசுக்கு முதலிலேயே போட்டுக் கொடுத்திருப்பார்.

அதேசமயம் இந்த ஊழல்கள் கிரானைட் ஊழலோடு முடியப்போவதில்லை. இது இந்த மாத ஸ்பெஷல். அடுத்த மாதம் வேறு ஓன்று வரும். நாம் அதையும் வாய்பிளந்து படிப்போம். 

யதார்த்தம் என்னவென்றால், தவறு செய்பவர்கள் அத்தனை பெரும் பணத்தாசை பிடித்தவர்களாக இருக்க முடியாது. ஊழல் பேர்வழிகள் அப்படிப்பட்டவர்களாக இருந்தாலும், கீழ்மட்டத்தில் இவர்களுக்கு துணை போகும் பலர், வறுமையை சமாளிக்கவே இந்த பாதையை ஜீரணிப்பார்கள். 

சட்டத்துக்கு குற்றவாளிகளை அடையாளம் காட்டுவதன் மூலம் பரிசு கிடைத்து, இவர்களின் வறுமை தீரும் என்றால், நிச்சயம் இவர்கள் மனமுவந்து அந்த வேலையை செய்வார்கள். ஆனால் அவர்களை தூண்டிவிட ஒரு நடைமுறை தேவை. அந்த நடைமுறையில் அவர்களுக்கு  பாதுகாப்பும், பரிசுத்திட்டமும் இருந்தால், இது RTI யை விட அபாரமாக பலன் அளிக்கும்.

ஆண்டுக்கு 100 பேருக்கு தலா ஒரு கோடி வழங்கலாம் என்று எழுதி இருந்தேன். இதில் பரிசு மற்றும் நிர்வாக செலவாக அரசுக்கு ஆண்டுக்கு 300 கோடி தோராயமாக செலவாகலாம். 

இது நஷ்டமா?

நிச்சயம் கிடையாது.அரசு  தன்னுடைய குடிமகன்களில் சிலரை பணக்காரனாக்குகிறது. அதுவும்  சோம்பேறிகளை அல்ல. குற்றவாளிகளை அடையாளம் காட்டி நாட்டுக்கு சேவை செய்பவர்களை அரசு கவுரவிக்கிறது.

இதற்காக ஒரு துறையையும் உருவாக்குவதால், அங்கே வேலை வாய்ப்பும் உருவாகிறது. தற்போது வேலை கொடுக்கவேண்டும் என்பதற்காக அரசு பல உருப்படாத திட்டங்களை உருவாக்குகிறது. அதற்கு இது எவ்வளவோ பரவாயில்லை. 

சமீபத்திய கிரானைட் குவாரி கொள்ளையில் நாட்டுக்கு ஆயிரக்கணக்கான கோடி இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இந்த நஷ்டம் லட்சம் கோடிகளையும் தொடலாம். இந்த நஷ்டங்களோடு ஒப்பிடும் போது ஆண்டுக்கு 300 கோடி என்பது சொற்ப தொகைதான். மிகப்பெரிய செலவிலிருந்து தப்பிக்க நாம் இன்ஷூரன்ஸ் எடுப்பதில்லையா? அதேதான் இதுவும். 

இந்த மோசடி பத்தாது என அடுத்த மோசடியும் வந்திருக்கிறது. குரூப் 2 தேர்வுகளில் வினாத்தாள் லீக் ஆனதால், அரசு அந்த தேர்வையும் ரத்து செய்திருக்கிறது. இந்த தேர்வை நடத்திய வகையில் அரசுக்கும் நஷ்டம், இந்த தேர்வெழுதிய மக்களுக்கும் நஷ்டம். இதை கணக்கு போட்டாலும் நஷ்டம் பல கோடிகளில் போய் முடியும். 

புலனாய்வுப் புலிகள் ?!

பத்திரிகைகளில் இந்த செய்திகளை படிக்கும்போது கிரானைட் மோசடியில் ஈடுபட்ட தொழில் அதிபர்கள் மீதோ அல்லது இவர்களுக்கு துணை போன அரசியல்வாதிகள் மீதோ கோவம் வரவில்லை. பத்திரிகையாளர்கள் மீதுதான் வருகிறது.

இந்த மோசடிகள்  எப்போது ஆரம்பித்தது, யார் யாருக்கு பங்கு போனது என்று பட்டியலிட்டு இவர்கள்  பக்கங்களை நிரப்புகிறார்கள். பல  புள்ளிவிவரங்களையும் கொடுத்து  தங்கள் புலனாய்வு திறமையை நிருபிக்கிறார்கள். ஆனால் என்ன பயன்? இவை எல்லாமே செத்த பிறகு சங்கு ஊதிய கதைதான்.

டிவியில் நீங்கள் அவ்வப்போது இதை பார்க்கலாம். ஏதாவது விபத்து நடந்திருக்கும். அந்த இடத்தில் வசிக்கும் நபர், இது எப்படி நடந்தது என்று டிவியில் விவரிப்பார். அதாவது அவருக்கு நிறைய விஷயம் தெரியுமாம்! அதை அவர் நம்மிடம் ஆர்வமாக பகிர்ந்துகொள்கிறார். இதில் வருத்தப்பட வேண்டிய விஷயம் என்னவென்றால், எல்லாம் நடந்து முடிந்த பிறகு அங்கே என்ன குறை என்று அவர் பட்டியலிடுவதுதான். இன்றைய பத்திரிகைகள் அப்படித்தான் இருக்கின்றன.          

கட்டியவன் (அரசியல்வாதிகள்) சரியில்லை என்றால் பிள்ளையாவது (பத்திரிகைகள்) நம்மை காப்பாற்றும் என்ற நம்பிக்கை இருக்கும். அதுவும் சரியில்லை என்றால் எங்கேபோய் முட்டிகொள்வது? இதுதான் இந்தியாவின் இன்றைய நிலை.

சராசரி மனிதர்களை விட பத்திரிகைகளுக்கு சமூகப் பொறுப்பு அதிகமாக இருக்க வேண்டும். பல ஊழல்களை வெளிக்கொண்டுவரும் அளவுக்கு பலமும் அதற்கு தேவையான நெட்வொர்க்கும் அவர்களிடம் இருக்கிறது. இருந்தாலும், துரதிரஷ்டவசமாக டிவியில் பேட்டி கொடுக்கும் அந்த நபரை போல்,  எல்லாம் நடந்து  முடிந்த பிறகு இவர்கள் நமக்கு விளக்க அறிக்கை கொடுக்கிறார்கள்.

இருந்தாலும் ஒரு நம்பிக்கை.அடுத்த முறை ஒரு ஊழல் நடந்து முடிந்த பிறகு நமக்கு விளக்கப்படம் கொடுக்காமல், அதன் அறிகுறி தெரிந்தாலே அரசையும் மக்களையும் எச்சரிக்கும் அமைப்பாக பத்திரிகைகள் மாறும் என நம்புவோம்.

RTI  

ஒரு ஆபத்து நம்மை தாக்கும் முன் அது குறித்து எச்சரிக்கை செய்ய ஒரு நடைமுறை நமக்கு தேவை. இந்த விஷயத்தில்  நான் சொல்லும் இந்த ஐடியா நன்றாக இருந்தாலும், இன்றைய அரசியல்வாதிகள் இதற்கு உடன்படமாட்டார்கள்.

காங்கிரஸ் கட்சி தகவல் அறியும் உரிமை சட்டத்தை கொண்டுவந்தது. இதை பெருமையாக அவர்கள் வெளியே சொல்லிகொண்டாலும், அவர்களுக்கே ஆப்பு வைக்கும் அளவுக்கு பல ஊழல்களை இந்த சட்டம் வெளிச்சத்துக்கு கொண்டுவந்திருக்கிறது.

இத்தனைக்கும் RTI மூலம் உண்மையை வெளிக்கொணர நினைப்பவர்கள் சொந்த பணத்தை செலவு செய்யவேண்டும். அதிலும் வெளிப்படைத்தன்மை உள்ள நடைமுறை இது. இப்படிப்பட்ட நிலையிலும் அது பலனளிக்கிறது என்றால், இந்த பரிசுத்திட்டம் அதைவிட இன்னும் சிறப்பாக இருக்கும்.

உதாரணத்திற்கு குரூப் 2 தேர்வை எடுத்துக்கொள்வோம். உங்களிடம் வினாத்தாளுக்காக சில லட்சங்களை ஒருவர் கேட்கிறார். இப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? லஞ்சம் கொடுத்தால் வேலை கிடைக்கும். ஆனால் தவறான பாதை. மாட்டிக்கொண்டால் அந்த வேலையும் பறிபோகும்.

அல்லது  வினாத்தாள் விற்பவர்களை நீங்கள் அரசுக்கு காட்டிக்கொடுக்கலாம்.  இதில்  நாட்டுக்கு சேவை செய்த திருப்தி உங்களுக்கு கிடைக்கும். கூடவே போனசாக இன்னொரு லட்டும் கிடைக்கும் (பணம்). பலவருடம் வேலை செய்தாலும் சேர்க்கமுடியாத பணம் இதில் வரும். நல்லவனாக இருந்தாலும் சரி, புத்திசாலியாக இருந்தாலும் சரி, இரண்டாவது பாதையைத்தான் தேர்ந்தெடுப்பான்.    

வினாத்தாளை விற்பவர்கள் இதற்காக பலருக்கு  தூண்டில் போடும்போது அதில் ஒருவர் மனசாட்சி கொண்ட விபீஷனாகவோ அல்லது பணத்துக்கு ஆசைப்படும், ஆனால் தவறு செய்ய பயப்படும், மனிதனாக இருந்தாலே போதும், அவர்களின் கதை கந்தலாகிவிடும்.

அதைவிட முக்கியமாக இப்படி ஒரு நடைமுறை இருந்தாலே, தவறு செய்பவர்களுக்கு இவன் லஞ்சம் கொடுப்பானா அல்லது போட்டுக் கொடுப்பானா என்ற சந்தேகம்  ஏற்பட்டு, எதற்கு வம்பு என ஒழுங்காக இருப்பார்கள்.

ஆல்ப்ரெட் நோபல்

ஆண்டுக்கு 300 கோடி என்றால் நிச்சயம் இது அரசு கொண்டுவர வேண்டிய திட்டம். ஆனால் இன்றைய அரசியலில் அதற்கு சாத்தியமே இல்லை. அவர்கள் கோடியை கொடுக்கிறார்களோ அல்லது ஆட்டோவை அனுப்புவார்களோ என்ற பயத்தில் மக்கள் ரிஸ்க் எடுக்கமாட்ட்ர்கள். ஊழலை அறவே வெறுக்கும் ஆட்சியாளர்கள் வந்தால், முறையானா பாதுகாப்பு அம்சங்களோடு இதை ஆரம்பிக்கலாம். அது வரும் ஆனால் வராது வகை. 

இப்போதைக்கு பத்திரிகைகள் அல்லது தன்னார்வ குழுக்கள் இதை  செய்யமுடியும். ஒரு கோடி என்பதை நிதிவசதிக்கு தகுந்தாற்போல் ஒரு லட்சம், 5000 என குறைக்கலாம். அதேசமயம் எவ்வளவு குறைத்தாலும் பத்திரிக்கையாளர்களுக்கு இது நிதிசுமைதான். 

ஆனால் அவர்களிடம் பரந்த (நிருபர்) நெட்வொர்க் இருக்கிறது. யாராவது நிதிச்சுமையை ஏற்றுக்கொண்டால், அந்த நெட்வொர்க்கின் மூலம் எவ்வளவோ ஊழல்களை வெளிச்சத்துக்கு கொண்டுவரலாம். அதாவது நல்ல பத்திரிகையாளர்கள் இருந்து அவர்கள் இதற்கு உடன்பட்டால்.

அல்பிரேட் நோபலை போல் சில பணக்காரர்கள் தாங்கள் செய்த பாவத்துக்கு பரிகாரம் தேட இப்படி ஒரு முயற்சியில் இறங்கலாம். சில தனி மனிதர்கள்  கூட்டாக பங்களிப்பதன் மூலமும் இது சாத்தியம் ஆகலாம். 

நாம் வசிக்கும் தெருவை சுத்தமாக வைத்திருப்பது நமது கடமை. ஆனால் அதை செய்யவும் கூலி, அதுவும்   வாயை பிளக்குக்கும் அளவுக்கு கூலி என்றால் அதன்பிறகு மக்கள் சும்மாவா இருப்பார்கள்?  பல வில்லங்கங்கள் வெளியே வரும். யோசியுங்கள்.

பதிவர் சந்திப்பு

சென்னையில் இன்று பதிவர் சந்திப்பாம். வாழ்த்துக்கள்.

நான் தற்போது சென்னையில் இல்லை. இருந்திருந்தாலும் கலந்துகொண்டிருக்கமாட்டேன். இது போன்ற சந்திப்புகளில் குறைந்தபட்சம் பார்வையாளனாக கலந்துகொள்ளவேண்டும் என்ற ஆர்வம் எனக்கு இருந்தாலும், தற்போதைக்கு அது சாத்தியம் இல்லை.

யாரிடமாவது பேச ஆரம்பித்தால், `நீங்க என்ன செய்றீங்க?` என்ற தவிர்க்க முடியாத கேள்வி வரும். நான் ஙே என்று முழிக்க வேண்டி இருக்கும். உத்தியோகம் புருஷ லட்சனமாயிற்றே. என்ன சொல்வது?

வாழ்க்கையில் கொஞ்சம் அதிகப்படியான ரிஸ்க் எடுத்து பொருளாதார ரீதியாக என்னை நானே அழித்துக் கொண்ட பிறகு, அதிலிருந்து மீண்டு வராமல் மற்றவர்களோடு சகஜமாக பழகமுடியாது. எனவே இந்த பதிவர் சந்திப்புக்கு எனது வாழ்த்துக்கள் மட்டும்.

காலம் மாறினால் அடுத்து வரும் சந்திப்புகளில் கலந்துகொள்வேன். 

6 comments:

வவ்வால் said...

சிவானந்தம்,

கவலைப்படாதிங்க ...ஆல் இஸ் வெல்! மீண்டு வருவீங்க.

//வாழ்க்கையில் கொஞ்சம் அதிகப்படியான ரிஸ்க் எடுத்து பொருளாதார ரீதியாக என்னை நானே அழித்துக் கொண்ட பிறகு, அதிலிருந்து மீண்டு வராமல் மற்றவர்களோடு சகஜமாக பழகமுடியாது. //

சந்திப்புல கலந்துக்கொண்டால் மட்டுமா பதிவர் இல்லைனாலும் பதிவர் தான் ,நானெல்லாம் இல்லை அப்படி :-))

----------

கொஞ்சம் மாற்றுக்கருத்து முட்டிகொண்டாலும் கருத்தை சொல்லாமல் விடக்கூடாதுன்னு நினைக்கும் ஆசாமி நான் :-))

நீங்க சொல்லும் திட்டம் எழுத்து வடிவில் படிக்க நல்ல திட்டம், ஆனால் நடை முறையில் பலவீனமானது.

இந்த கிரானைட் ஊழல் பற்றி பலரும் பலமுறை புகார் அளித்தும் கண்டுக்கொள்ளப்படாத ஒன்று, ஒரு பத்திரிக்கை ஆசிரியரையே வேறு ஒரு செக் வழக்கில் கைது செய்ய வைத்தார் கிரானைட் அதிபர்.

ஆளும் வர்க்கம் நியாமாக இல்லாத நிலையில் தகவல் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பார்கள் என நினைப்பது எப்படி?

பெரும்பாலும் தகவல் கொடுத்தவர் மிரட்டப்படுவார், அல்லது கொலை செய்யப்படுவார்.

தகவல் அறியும் சட்டத்தில் கேள்விக்கேட்கப்பட்ட பலர் மிரட்டப்பட்டுள்ளனர், கொலையும் நடந்துள்ளது.

வருமான வரி ஏய்ப்பு [பற்றி தகவல் கொடுத்தால் கைப்பற்றப்பட்ட பணத்தில் 10% பரிசு தொகை உண்டு, ஆனால் எத்தனைப்பேர் தகவல் கொடுக்கிறார்கள், கொடுத்தவரையே காட்டிக்கொடுப்பார்கள், எனவே பணத்திற்கு ஆசைப்பட்டு யாரும் தகவல் கொடுத்து ஆபத்தினை வாங்குவது இல்லை.

சிவாஜி படத்தில் இது தான் மையக்கரு ,ஆனால் அதில் வருமான வரித்துறை நேர்மையாக தகவல் கொடுத்ததும் நடவடிக்கை எடுக்கும்.

ஆனால் யதார்த்தம் என்னவெனில் தகவல் கிடைத்தால் நேராக சென்று மிரட்டி தொழிலதிபரிடம் பணம் வாங்கிவிடுவார்கள்.

சென்னை மண்டல வருமான வரி ஆணையர் ரவீந்திரா என்பவர் வரி ஏய்ப்பு செய்தவரை மிரட்டி லஞ்சம் வாங்கியதாக கைதும் செய்யப்பட்டார், இப்போது என்னாச்சு என தெரியவில்லை.

ரவீந்திரா கைது செய்யப்பட்டதும் தான் துப்பியெறியும் பத்திரிக்கைகள் அவருக்கு பல கோடி சொத்திருக்கு, ஒரு அரசு அதிகாரியால் எப்படி இவ்வளவு சம்பாதிக்க முடியும் என "உண்மையை" சொன்ன :-))

-----------

சகாயம் கிரானைட் கொள்ளைப்பற்றி விரிவாக அறிக்கை தயார் செய்து அரசுக்கு அனுப்பினார் அதனால் இட மாற்றமும் செய்யப்பட்டார், ஆனால் இப்பொழுது அரசு நடவடிக்கை எடுக்க காரணம், கொள்ளையில் பெரும்பங்கு எதிர்க்கட்சி என்பதாலேயே.

நேர்மையாக செயல்ப்பட்ட சகாயம் டம்மியான கோ.ஆப்டெக்ஸ் இயக்குனர் பதவியில், ஐ.ஏ.எஸ்க்கே இதான் கதி என்னும் போது சாமன்யன் ஒரு கோடிக்கு ஆசைப்பட்டு தலையை இழப்பானா?

---------

அரசன் இலவசமாக உப்பு வாங்க கூடாது என ஒரு நீதிக்கதை அறிவீர்களா?

எனவே நம் நாட்டில் மேல் மட்டம் வரை ஊழல் பரவிவிட்டதால் ஒரு கோடி திட்டம் எடுபட வாய்ப்பில்லை.

michaelswamyarokiaraj said...

good message

சிவானந்தம் said...

வாங்க வவ்வால்,

))))ஆளும் வர்க்கம் நியாமாக இல்லாத நிலையில் தகவல் கொடுத்தால் நடவடிக்கை எடுப்பார்கள் என நினைப்பது எப்படி?))))

`` அவர்கள் கோடியை கொடுக்கிறார்களோ அல்லது ஆட்டோவை அனுப்புவார்களோ என்ற பயத்தில் மக்கள் ரிஸ்க் எடுக்கமாட்ட்ர்கள். ஊழலை அறவே வெறுக்கும் ஆட்சியாளர்கள் வந்தால், முறையானா பாதுகாப்பு அம்சங்களோடு இதை ஆரம்பிக்கலாம். `` ----பதிவிலேயே இதை நானும் சொல்லியிருக்கிறேன். கவனிக்கவில்லையா?

)))))இந்த கிரானைட் ஊழல் பற்றி பலரும் பலமுறை புகார் அளித்தும் கண்டுக்கொள்ளப்படாத ஒன்று, ஒரு பத்திரிக்கை ஆசிரியரையே வேறு ஒரு செக் வழக்கில் கைது செய்ய வைத்தார் கிரானைட் அதிபர்.))))

ஒரு முறை ஒரு நண்பர் என்னை ஊருக்கு அழைத்தார். அப்போது வேலை இருந்ததால் போகவில்லை. அங்கே போய்வந்த பிறகு, `டூர் போனமாதிரியும் ஆச்சு அப்படியே அதில் வருமானமும் இருந்தது ` என்றார். முதலில் `ஊருக்கு வா` என்று மொட்டையாய் அழைத்தவர், வந்த பிறகுதான் இதில் லாபமும் இருக்கு என்றார். இதை முதலிலேயே சொல்லி இருந்தால் நானும் போயிருப்பேன்.

அதேபோல் சிலவிஷயங்களை நாம் சொல்லும் விதத்தில்தான் மற்றவர்களின் கவனத்தை கவரமுடியும். இந்த கிரானைட் ஊழல் குறித்து செய்தி வெளியிட்டது ஒரு சாதாரண பத்திரிகை. எனவே அது கவனிக்கப்படவில்லை. அதேசமயம் ஊழல் இங்கே சர்வ சாதாரண ஒன்றாக மாறிவிட்ட பிறகு மக்கள் அதை பத்தோடு பதினொன்று என நினைத்திருக்கலாம்.

இதையே முன்னணி பத்திரிகை வெளியிட்டு, அதுவும் அதன் விஸ்தீரணத்தையும் வெளியிட்டிருந்தால் இது பரபரப்பாகி எப்போதோ முடக்கப்பட்டிருக்கும்.

இதுபோன்ற சூழ்நிலையில்தான் ஒரு அமைப்பு நமக்கு தேவை. புகார் சொல்பவர்களுக்கு பரிசு என்றால் மலை போல் புகார்கள் குவியும். அதில் முக்கியமானதை வடிகட்டி, ஓரளவு ஆதாரத்தையும் திரட்டி அதன் பிறகு அதை அம்பலப்படுத்தவேண்டும். இந்த வேலையை செய்யத்தான் நிறைய நிதி தேவைப்படும்.

இப்போது ஏதாவது ஒரு பத்திரிக்கை ஒரு ஊழ்லை வெளிப்படுத்தினால் அந்த பெருமை அந்த பத்திரிகைக்கு போய்விடும் என்பதால் மற்ற பத்திரிகைகள் அதை சீண்டாது.

காவிரி விஷயத்தில் டெல்லியில் குரல் கொடுக்க தமிழக அரசியல்வாதிகள் ஓன்று சேர மாட்டார்கள் என்று இவர்கள் அவர்களை கிண்டல் அடிப்பார்கள்.

ஆனால் ஊழலை ஒழிக்க இவர்கள் ஓன்று சேர்கிறார்களா? தினபூமி ஆசிரியர் கைது செய்யப்பட்டு அந்த விஷயம் வெளிவந்த பிறகு மற்ற பத்திரிகைகள் மேலும் நோண்டி அதன் வீரியத்தை வெளிபடுத்தி இருக்கலாம். அப்படி செய்தால் அந்த பெருமை எல்லாம் தினபூமி பத்திரிகைக்கு போய்விடுமே. அதை மற்ற பத்திரிகைகளால் இதை ஜீரணிக்க முடியுமா?

அல்லது அந்த ஆசிரியர் உண்மையிலேயே எதையோ எதிர்பார்த்து அது கிடைக்காத பட்சத்தில் இந்த செய்தியை வெளியிட்டிருக்கலாம். அப்படி அவர் தவறான நபராக இருக்கும்பட்சத்தில் மற்ற பத்திரிகைகள் ஒதுங்கவே விரும்பும்.

ஒரு பொது அமைப்பு இந்த திட்டத்திற்காக உருவாக்கப்பட்டு, அவை இது போன்ற செய்திகளை வெளியிட்டால், மற்ற பத்திரிகைகள் வரிந்துகட்டிக்கொண்டு அதை ஊதி பெரிசாக்கிவிடும். அங்கே மக்களுக்கும் பயம் இருக்காது, பத்திரிகைகளுக்கும் பொறாமை இருக்காது. அதைதான் நான் எதிர்பார்க்கிறேன்.

வவ்வால் said...

சிவானந்தம்,

//`` அவர்கள் கோடியை கொடுக்கிறார்களோ அல்லது ஆட்டோவை அனுப்புவார்களோ என்ற பயத்தில் மக்கள் ரிஸ்க் எடுக்கமாட்ட்ர்கள். ஊழலை அறவே வெறுக்கும் ஆட்சியாளர்கள் வந்தால், முறையானா பாதுகாப்பு அம்சங்களோடு இதை ஆரம்பிக்கலாம். `` ----பதிவிலேயே இதை நானும் சொல்லியிருக்கிறேன். கவனிக்கவில்லையா? //

நீங்க பெரும்பாலான இடங்களில் மற்றவற்றை விலாவாரிய சொன்னதில் இது கண்ணில் படவில்லை, மேலும் சில கருத்துக்கள் சில இடங்களில் மீண்டும் ரிபீட் ஆகிக்கொண்டே போவது போல இருப்பதாலும் சரியாக கவனத்தில் பதியவில்லை.

நீங்கள் சொல்வது போல ஊழலை அறவே வெறுக்கும் ஆட்சியாளர்கள் வந்தால் தான் இத்திட்டம் சாத்தியமாகும் என்றால், அப்படி ஒரு ஆட்சியாளர்கள் கண்ணுக்கெட்டிய தூரம் வரை காணோம், எனவே தான் சாத்தியமா என்று நானும் கேட்டேன் .

எனவே அனைத்து தரப்பினையும் கண்காணிக்க வகை செய்யும் திட்டம் வேண்டும், இப்போது லோக்பால் கூட அப்படி வரும் வாய்ப்பில் இருந்து செத்த பாம்பாக மாற்றப்பட்டுள்ளதை கவனிக்கலாம்.

நீங்கள் சொன்ன சன்மான திட்டம் அதிகாரிகள் அளவில் செய்யக்கூடியதாக இப்போதும் பலத்துறைகளில் இருக்கு என்பதற்கு வருமான வரித்துறை உதாரணம் காட்டினேன்,ஆனால் அதன் செயல்ப்பாடு என்ன என்பது அனைவருக்கும் தெரியும்.

மேலும் நார்காடிக்ஸ், என்ஃபோர்ஸ்மெண்ட், பொருளாதார குற்றப்புலனாய்வு துறை எனப்பலவற்றிலும் ரிவார்ட் திட்டம் இருக்கு ஆனால் மக்கள் எத்தனைப்பேர் துப்பு கொடுக்கிறார்கள்.

சி.ராஜன் என்ற பொருளாதார குற்றப்பிரிவு இயக்குனரே ஊழல் வழக்கில் தான் கைதானார், அவர் அடிக்கடி ரெய்ட் வேறு நடத்துவார், எல்லாம் கண்துடைப்புக்கு என பின்னர் சொன்னார்கள்.

அவர் எப்படி மாட்டினார் தெரியுமா, இன்ஃபார்மெருக்கு தர வேண்டிய பரிசு பணம் தர அதுக்கும் லஞ்சம் கேட்டார் என்பதால் இவறைப்பற்றியும் செய்தியை வெளியிட்டார் அப்போதும் நடவடிக்கை இல்லை ஆனால் பின்னர் வேறு ஒரு பெரிய இடத்திலும் எதிர்பார்த்து நடவடிக்கை எடுத்தார் அதன் பின்னரே இவர் மேல் வந்த தகவலைக்கையில் எடுத்து கைது செய்தார்கள்.


எனவே எல்லா மட்டத்திலும் ஊறிப்போய் இருக்கு, வெறும் பரிசு திட்டம் அனைத்தையும் மாற்றிவிடாது.

நீங்களாவது 1 கோடி மட்டும் சொல்கிறீர்கள், ஆனால் 10% சதவீதம் ஊக்க தொகை தரும் திட்டமே தோல்வியில் இருக்கு.

100 கோடிப்பற்றி தகவல் கொடுத்தால் 10 கோடி, 1000 கோடிப்பற்றிக்கொடுத்தால் 100 கோடி பரிசு ஏன் எல்லாரும் துப்புக்கொடுக்கவில்லை.

சகாயம் அறிக்கை அனுப்பினார் அப்போதும் நடவடிக்கை இல்லை ஒரு ஆண்டுக்கு பின் இப்போது நடவடிக்கை பாயக்காரணம் அரசியலும் இருக்கு.

ஊழலே இல்லாத அரசியல்வாதி ஆட்சிக்கு வந்தாலும் எதிர்க்கட்சி ஊழல் செய்தால் விரைவாக நடவடிக்கை இருக்கும்,அவர்கட்சி ஆட்களின் மீது ஊழல் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்காமல் மூடி மறைக்கப்பார்ப்பார்கள்.

எனவே பொதுவான ஒரு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும்.லோக்பாலில் அப்படி ஒரு வாய்ப்பு இருக்கு ஆனால் அதன் பல்லை பிடுங்கவே இப்போதைய ஆட்சியாளர்கள் பார்க்கிறார்கள்.

அமெரிக்கா போன்ற நாடுகளிலும் ஊழல் உண்டு, ஆனால் மக்களை நேரடியாகவும்,அவர்களின் அன்றாட வாழ்க்கையைப்பாதிக்காத வகையிலும் ஊழல் செய்வார்கள்.

உதாரணமாக சாலையை நன்றாக போடவேண்டும் என பெருந்தொகையை ஒதுக்கிவிட்டு , பழுதாகாத சாலையை மீண்டும் போடுவார்கள், மக்களைப்பொறுத்த வரையில் நமக்காக நல்ல சாலையை தரப்பார்க்கிறார்கள், என சந்தோஷம் ஆனால் ஆட்சி,அதிகாரிகளுக்கு இப்படி வேலை செய்ய காண்ட்ராக்ட் விட விடத்தான் வருமானம்,அதே சமயம் தரமாகவும் சாலைப்போடுவார்கள், அதாவது லஞ்சம் என்பது தரத்தினை பாதிக்காமல் பார்த்துக்கொள்வார்கள்,எனவே ஊழல் நடப்பதே வெளியில் தெரியாது.

ஃபாலிங் டவுன் படத்தில் இதனை வைத்து ஒரு காட்சி வரும்.

நம்ம ஊரில் மிக மோசமாக போட்டுவிட்டு பெரும்பகுதியை அடிப்பார்கள்.

ஜோக் ஒன்று;

அமெரிக்கா போன இந்திய அரசியல்வாதி ,அமெரிக்க அரசியல்வாதியின் பெரிய வீட்டைப்பார்த்துவிட்டு , இதை கட்ட எப்படி பணம் கிடைத்தது எனக்கேட்டார்,

அதோ தெரியுதே ஒரு பாலம் அதைக்கட்ட டெண்டர் விட்டதில் கிடைத்த கமிஷனில் கட்டினேன் என்றார்.

அமெரிக்க அரசியல்வாதி இந்தியா வந்தப்போது ,இந்தியரின் மிகப்பெரிய வீட்டைப்பார்த்து , இது கட்ட பணம் எப்படிக்கிடைத்தது எனக்கேட்டார்,

அதோ தெரியுதே ஒரு மலை அதுக்கு பக்கத்தில ஒரு பாலம் கட்ட டெண்டர் விட்டேன் ,அதுல கிடைச்ச பணம் என்றார்,

அமெரிக்கர் அங்கே பாலமே இல்லையே என்றார், அதான் இவ்வளவு பெரிய வீடு என்று இந்திய அரசியல்வாதி பதில் சொன்னார் :-))

rajan said...

வாழ்க்கையில் கொஞ்சம் அதிகப்படியான ரிஸ்க் எடுத்து பொருளாதார ரீதியாக என்னை நானே அழித்துக் கொண்ட பிறகு, அதிலிருந்து மீண்டு வராமல் மற்றவர்களோடு சகஜமாக பழகமுடியாது///.analysis your mistake what u have done in past, re-enter into same field, u can acheive sucess sure. தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும் .and if anyone ask u what u r doing? say iam a writer. u r great writer/blogger u have depth knowledge in various field hope u come up financial soon. all the best.

சிவானந்தம் said...

.analysis your mistake what u have done in past, re-enter into same field, u can acheive sucess sure. தொலைத்த இடத்தில்தான் தேட வேண்டும் .

வாங்க ராஜன்,

உங்கள் ஆலோசனைக்கு நன்றி

and if anyone ask u what u r doing? say iam a writer. u r great writer/blogger u have depth knowledge in various field hope u come up financial soon. all the best.

எழுத்தாளரா!!!

பரவாயில்லை. குறைந்தபட்சம் இந்த ஆசையாவது நிறைவேறி இருக்கிறது. வருத்தம் என்னவென்றால், எழுத்தாளர்களுக்கு வருமானம் கம்மியா வரும். எனக்கு அதுவும் கிடையாது. இருந்தாலும் இந்த வார்த்தைகளும் மனநிறைவை தருகிறது. மிக்க நன்றி

Post a Comment