!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Thursday, February 13, 2020

அதிர்ஷ்டம்: அரவிந்த் கெஜ்ரிவால்


அதிர்ஷ்டம். இதை சிறுவயதிலிருந்தே கவனித்துக் கொண்டிருக்கிறேன். ஆரம்பகாலங்களில் தன்னம்பிக்கை நிறைய இருந்ததால் அதை மூட நம்பிக்கை என்று இருந்தேன். ஆனால்  அதன்பின் பல சூழ்நிலைகள் அதை நம்ப வைத்திருக்கிறது.

உதாரணத்திற்கு ஒரு சம்பவம் போதும். அப்போது லாட்டரி வியாபாரம். இது நம்பகமான துறை இல்லை என்பதால் இதை நம்பி எதுவும் செய்ய முடியாது.  நிச்சயமற்ற நிலைமை. நானும் டிபரஷன் மனநிலைக்கு வந்திருந்தேன். நமக்கே லாட்டரி விழுந்தால் செட்டில் ஆகிவிடலாம் என்று குறுக்குபுத்தியில் இருந்தேன். அப்போதெல்லாம் டிக்கெட் விற்காவிட்டால்  மதியம் 3 மணிக்குள் திரும்ப கொடுத்துவிடலாம். ஆனால் பல சமயம் செய்வதில்லை. நானே வைத்து பார்ப்பேன். தினம் 500, 1000 நஷ்டம் வரும். இப்போது அதை நினைத்தால் கண்ணில்  ரத்தம் வருகிறது

இப்படி பல  நாட்கள்,மாதங்கள் நஷ்டங்களை  சந்தித்த பிறகு ஒரு நாள் இரவு 7 மணிக்கு 100 ரூபாய் அளவுக்கு டிக்கட் மீந்துவிட்டது. வாடிக்கையாளர் ஒருவர் வந்தார். இவர் தினம் வாங்குபவர் இல்லை. என்ன பண பிரச்சினையோ, `ஏதாவது லாட்டரி இருக்கா, அதுதான் என் பிரச்சினை தீர்க்கும்` என்று சொல்லி கேட்டார். 

அப்போது ஒரு தில்லுமுல்லு நடந்து கொண்டிருந்தது. லாட்டரி ரிசல்ட் மறுநாள்தான் பேப்பரில் வரும். சிலர் முன் கூட்டியே பரிசு விழுந்த நம்பரை மதியம் 4 மணிக்கே போன் மூலம் வாங்கிவிடுவார்கள். இதற்கென்று சிலர் இருந்தார்கள். பல கடைக்காரர்களுக்கு இது தெரியாது. பரிசு விழுந்த டிக்கட்களை இந்த திருட்டு கும்பல் கடைக்காரர்களுக்கே தெரியாமல் அவர்களுக்கு பிடித்த நம்பரை வாங்குவது போல் வாங்கிவிடுவார்கள்.

இது பின்னர் எங்களுக்கு தெரிய வந்ததால் 4 மணிக்கு மேல் டிக்கட் வாங்குபவர்களை கவனிப்போம். சந்தேகம் என்றால் விற்கவே மாட்டோம்.

இவர் அப்படிப்பட்டவர் இல்லை. நான் அப்போது இருந்த வெறுப்பில் `இருக்கு, ஆனா மொத்தமா வாங்கணும்..` என்று கண்டிஷன் போட்டேன். அத்துடன் அசல் வந்தால் போதும் என்று 30+10 பர்சென்ட் தள்ளுபடியெல்லாம் கொடுத்து அந்த 100 டிக்கட்டை 60 ரூபாய்க்குத்தான் அவரிடம் விற்றேன். விதி அப்போதே என்னை பார்த்து சிரித்திருக்கிறது. நான்தான் உணரவில்லை.

மறுநாள் அந்த லாட்டரியில் அவர் 60,000 பரிசு பெற்றார். 20 வருடத்துக்கு முன் பெரியதொகை. ஒரு வாரத்துக்கு சிவா புராணம்தான். அந்த சிவாவை (பாடலீஸ்வரர்) பார்த்துவிட்டு இந்த சிவாவை பார்த்தேன், கைமேல் பலன் என்று எனக்கு மார்க்கெட்டிங் மேனேஜராக இருந்தார்.

எனக்கு தனியாக இதில் பாதி அல்லது கொஞ்சம் குறைவாக போனஸாக கிடைக்கும்.  ஆனால் அங்கேயும் விதி விளையாடியது. அப்போது  சில வியாபாரிகள் போனஸை மட்டும் தனியாக விற்கும் பழக்கத்தை ஆரம்பித்திருந்தார்கள். அந்த வகையில் நான் போனஸை வேறு ஒருவரிடம் விற்க, அவர் `சிவா நீயும் நானும் ஷேர்`  என்று என்னையும் அதில் இழுத்திருந்தார். எனவே அந்த போனஸில் பாதி கிடைத்தது.  இல்லையென்றால் நான் அன்றே ஹார்ட் அட்டாக் வந்து செத்திருப்பேன். வலையுலகம் ஒரு பிரபல பதிவரை இழந்திருக்கும்.

அந்த பரிசு பெற்ற நபர் எனக்கு 5000 ரூபாய் கொடுத்து, ஒரு வாரத்துக்கு இலவச டீயூம்  வாங்கி கொடுத்தார். கூடவே `சிவா உன்னை நான் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன்` என்றும் சொன்னார்.

`நீங்களாவது இந்த ஜென்மத்துல மறக்க மாட்டீர்கள்,  நான் உங்களை அடுத்த ஜென்மத்துலேயும் மறக்கமாட்டேன்` என்று பல்லை கடித்தேன். எனக்கு ஏற்பட்ட பல அனுபவங்களில் இது ஓன்று. இங்கே கவனிக்க வேண்டிய விஷயம் அந்த நபருக்கு அதிர்ஷ்டம் இருந்திருக்கிறது. அவ்வளவுதான்  

அரவிந்த் கெஜ்ரிவால்

அதே கதைதான். பொருளாதார மந்தம், ஜி எஸ் டி தலைவலிகள் பத்தாது என்று என் ஆர் சி மற்றும் சி ஏ  ஏ பிரச்சினையும் சேர்ந்து கொள்ள, காங்கிரஸ் ம்ஹும்... நான் அதுக்கு சரிப்பட்டு வரமாட்டேன் என்று ஒதுங்கிக்கொள்ள, அத்தனையும் அவருக்கு சாதகமாக உருவாகி இருக்கிறது.

அத்வானி அவருக்காக ரோடு போட, அதில் அதிர்ஷ்டம் மோடிக்கு வண்டி ஓட்ட வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது. அன்னா ஹசாரே அவர் ஏதோ  கணக்கில் போராட்டத்தை ஆரம்பிக்க, பலனை கெஜ்ரிவால் அறுவடை செய்தார். அத்வானியை போல் இவரும் தற்போது  செய்திகளில் வருவதில்லை.

தமிழகத்தில் அம்மா மண்டையை போட, நினைத்தே பார்க்க முடியாத எடப்பாடி அரியணை ஏறினார். அதுமட்டுமா பிஜேபிக்கு தமிழ்நாட்டில் ஆள் இல்லாததால், இந்த ஆள் நமக்கு தேவை என அவருக்கு பின்னால் நிற்க...இந்த அதிர்ஷ்டம் காரணமாகவும் அவர் காட்டில் மழை.

இந்த தலைவர்களுக்கு திறமை இருக்கிறது என்பது உண்மையானாலும், அதிர்ஷ்டம் இவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருக்கிறது என்பதும் உண்மை.          
      

2 comments:

KILLERGEE Devakottai said...

மிகச்சரியாக அலசி இருக்கின்றீர்கள் நண்பரே... அனைத்தும் உண்மை.

அதிர்ஷ்டம் அது + இஷ்டம்
நமது இஷ்டப்படி கிடைக்காது.
- கில்லர்ஜி

சிவானந்தம் said...

நன்றி கில்லர்ஜி ,

இங்கே இவருடைய அதிர்ஷ்டத்தால் தோற்றது பிஜேபி என்பதால் கொஞ்சம் சந்தோஷம்தான்

Post a Comment