!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Friday, November 20, 2026

திருப்பரங்குன்றம். நான் நினைத்தேன், உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது

வழக்கமாக நாம் முன்கூட்டியே எழுதி, அது நடந்துவிட்டால் நான் அப்பவே சொன்னேன் என்று சந்தோஷப்படுவோம். இந்த முறை கொஞ்சம் வித்தியாசம். இந்த முறையும் திருப்பங்குன்றம் குறித்து எழுதுவோம் என நினைத்து சில உத்திகளை நினைத்தபோது, அதுபோலவே ஒரு தீர்ப்பை உச்ச நீதிமன்றம் சொல்லிவிட்டது. இருந்தாலும் நான் நினைத்தது கொஞ்சம் வேறு வகை.

தீர்ப்பு என்னவென்றால் இந்த ஒரு முறை மட்டும் ஏற்றிக்கொள்ளலாமாம். அதேசமயம் எந்த பந்தாவும் இருக்கக் கூடாது என்று ஒரு உத்தரவு. அதாவது சென்னை உயர் நீதிமன்றம் சொல்லிவிட்டது,அவர்கள் மானத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இப்படி ஒரு தீர்ப்பு என நினைக்கிறேன்.

ஆனால் நான் வேறு மாதிரி யோசித்தேன். இது குறித்து கடந்த வருடமே 'உச்சி பிள்ளையாரா, தீபத் தூணா?' 'திருப்பரங்குன்றம் பற்றி எரிகிறது' என இரண்டு பதிவுகள் எழுதியிருக்கிறேன்.

என்னுடைய பழைய பதிவுகளில் சொன்னதைத்தான் இப்போதும் சொல்வேன். விஞ்சானம் வளராத காலத்தில் முருகனுக்கு பூஜை முடிந்துவிட்டது என்பதை சுற்று வட்டாரத்தில் இருக்கும் கிராம மக்களுக்கு உணர்த்துவதற்காக (அதிகபட்ச) மலை உச்சியில் தீபம் ஏற்றினார்கள். அந்த அடிப்படையில் தற்போது இருக்கும் இடத்தை விட, தர்காவுக்கு அருகில் இருக்கும் தூண் உயரம் அதிகம் என்பதால், அதுதான் தீபத் தூணாக இருக்கக் கூடும். பின்னர் வெள்ளைக்காரன் ஏதோ ஒரு காரணத்துக்காக அதை மாற்றியிருக்கலாம்.

இன்று இணைய உலகில் வாழும் நமக்கு இப்படி தீபம் மூலம் தகவல் பரிமாற்றம் தேவையில்லை. அது சம்பிரதாய சடங்கு என்பதால் எங்கே வேண்டுமானாலும் ஏற்றலாம். ஆனால் சென்னை உயர் நிதிமன்றத்தின் கருத்து என்னவென்றால், இப்படி ஒரு இடத்தை பயன்படுத்தாமல் இருந்தால் எதிர் காலத்தில் அந்த இடத்தின் மீதான கோயில் நிர்வாகத்தின் உரிமை கேள்விக்குறியாக மாறலாம். எனவே அங்கே ஏற்ற வேண்டும் என்பது அவர்களின் உத்தரவு. இது ஒரு வகையில் சரிதான்.
வெளிநாட்டில், வெளியூரில் போய் சிலர் செட்டிலாகியிருப்பார்கள். அவர்களுக்கு சொந்த ஊரில் இடம் இருக்கும். நீண்ட காலம் அப்படியே இருந்தால் யாரவது அதை ஆட்டை போட்டுவிடுவார்கள் என்பதால் அவ்வப்போது வந்து அங்கு சில நாள் தங்கிப் போவது வழக்கம். வழக்கமாக ஆட்டையை போடுபவர்கள் இப்போது ஆட்சியில் இல்லையென்றாலும், அது நிரந்தர ஆபத்துத்தானே?

எனவே, என்னதான் தீர்வு?

மனிதர்கள் கடைப்பிடிக்கும் அதே பார்முலாதான். சில வருடங்களுக்கு ஒருமுறை சொந்த ஊருக்கு விசிட் செய்து, நமது சொத்து பத்திரமாக இருக்கிறதா என்று பார்ப்பதைப்போல், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை அங்கே தீபம் ஏற்றினால் என்ன? இதைத்தான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன். எனவே, இந்த ஒரு முறை என்றில்லாமல், ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை இப்படி செய்வதுதான் நல்லது.

அதேசமயம், ஏகப்பட்ட கோயில் நிலங்களைப் பலர் ஆக்கிரமித்திருப்பதை அவ்வப்போது செய்திகளில் கவனிக்கிறோம். இப்படி கேட்பாரற்றுக் கிடக்கும் அரசு மற்றும் கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பதில் இந்துக்களும், குறிப்பாகப் பிராமணர்களும் சளைத்தவர்கள் அல்ல. சாஸ்த்ரா பல்கலைக்கழகம் இப்படி சில இடங்களை ஆக்கிரமித்து, இன்னும் அந்தப் பிரச்சினை முடிந்தபாடில்லை.

எனவே, எல்லா இடத்திலும் அவ்வப்போது 'உள்ளேன் ஐயா' என்று சொல்ல வேண்டியது அவசியம். அந்த வகையில், இந்தத் தீர்ப்பு தேவையான ஒன்றுதான்.

ஆனால், இந்தத் திராவிட அறிவாளிகள் சில வாதங்களை முன்வைப்பார்கள். அது நமது அறிவுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். அது தீபத்தூண் இல்லையாம், சர்வே கல்லாம். சரி, ஒரு வாதத்துக்கு அதை உண்மை என்றே வைத்துக்கொள்வோம். தற்போது தீபம் ஏற்றப்படும் இடம் கடந்த 150 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படுகிறது. அதற்கு முன் எங்கேயாவது ஏற்றியிருப்பார்கள் அல்லவா? அது எந்த இடம்?

நீதிமன்றத்தில் ஓர் ஆளைக் காணோம் என, ஹேபியஸ் கார்பஸ் என்று ஒரு பெட்டிஷன் போடுவார்கள். அப்போது நீதிமன்றம், அரசுக்குச் சம்பந்தப்பட்ட நபரைக் கண்டுபிடித்து ஆஜர்படுத்தும்படி உத்தரவிடும்.

அதேபோல், 'பிள்ளையாரிடம் நாங்கள் போட்ட 150 ஆண்டுகால ஒப்பந்தம் முடிகிறது. நாங்கள் பழைய இடத்துக்கே போகிறோம். எனவே, 150 ஆண்டுகளுக்கு முன் நாங்கள் பயன்படுத்திய தூண் எங்கே இருக்கிறது, எந்த இடத்தில் இருக்கிறது' என்பதைக் கண்டுபிடித்துத் தரும்படி நீதிமன்றத்தில் ஒரு பெட்டிஷன் போட்டால் எப்படி இருக்கும்? அரசுக்கு வேறு வழியில்லை. வரலாற்று ஆதாரங்களைத் தேடிப்பிடித்து, அது எந்த இடம் என்பதைத் தெரிவித்தாக வேண்டும். இதெல்லாம் நடக்காத காரியம். இருந்தாலும், ஒரு காமெடிக்காக எழுதுகிறேன்.

கூடவே இன்னொரு தகவல். நாம் இப்போது டி.என்.ஏ. மற்றும் கார்பன் டேட்டிங் உலகில் இருக்கிறோம். ஒரு குழந்தைக்குப் பெற்றோர் யார் என்பதையும், ஒரு பொருள் எவ்வளவு பழமையானது என்பதையும் விஞ்ஞானம் புட்டுப் புட்டு வைத்துவிடும்.

அந்தத் தீபத்தூணின் மேல் பகுதியைக் கொஞ்சம் வெட்டி லேபுக்கு அனுப்பினால், அதில் எண்ணெய் ஊற்றி விளக்கேற்றினார்களா என்பதைக் கண்டுபிடிக்க ஏதாவது ஒரு தொழில்நுட்பம் இருக்கும். என்னதான் 150 வருடங்களாக அது பயன்படுத்தப்படாமல் காற்றில் காய்ந்து போயிருந்தாலும், விஞ்ஞானம் ஏதோ ஒரு ஆதாரத்தை அங்கே வைத்திருக்கும். அப்படி இல்லையென்றால், இந்தப் பஞ்சாயத்தும் முடிவுக்கு வந்துவிடும்.

மனமிருந்தால் மார்க்கமுண்டு.

0 comments:

Post a Comment