!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Monday, December 5, 2011

முல்லைப் பெரியாறு பிரச்சினை, என்ன செய்யலாம்?


முல்லைப் பெரியாறு அணைதான் தற்போதைய தலைவலி. இந்த பிரச்சினையை அலசும் முன் ஒரு அனுபவம்.

ஒரு ரயில் பயணம். (பம்பாயிலிருந்து அகமதாபாத்தோ அல்லது இங்கேயிருந்து அங்கேயோ) அன்ரிசர்வ்ட் கம்பார்ட்மெண்டில் அநியாயத்துக்கு கூட்டம். டாய்லெட்டில் கூட சில வியாபாரிகள் மூட்டைகளை அடுக்கி இருந்ததை கவனித்தேன். கூட்டம் நடை பாதையிலேயே உட்கார்ந்திருந்தது. அதிலும் ஒருவர் ஏற முயற்சிக்கிறார். ஆனால் வழியில் உட்கார்ந்திருப்பவர்கள் அனுமதிக்கவில்லை. உள்ளே இடமில்லை என்கிறார்கள். அவர் காட்டு கத்தல் கத்துகிறார். நானும் டிக்கட் வாங்கி இருக்கிறேன் என்று உரிமை கீதம் பாடுகிறார். கடைசியில் அவருடைய கத்தலை சமாளிக்க முடியாமல் அவருக்கு வழி விடுகிறார்கள். அவரும் அந்த நெருக்கடியில் பயணிக்கிறார்.

வண்டி கிளம்பிய பிறகு அந்த விரோதம் மறைந்து அவரும் அந்த நெருக்கடியில் அமர்கிறார். அடுத்த ஸ்டேஷனில் வண்டி நிற்கிறது. அங்கேயும் ஒருவர் ஏற முயற்சிக்கிறார். இங்கேயிருந்து அதே பதில். அங்கேயிருந்து அதே உரிமை கீதம். ஆனால் கடைசியாக ஏறிய நபர் இப்போது அந்த நபரின் உரிமைக்காக குரல் கொடுக்கவில்லை.

இதை எப்படி புரிந்து கொள்வது? தனக்கு பாதிப்பு எனும் போது ஆவேசப்படுபவர்கள் மற்றவர்கள் பாதிக்கும் போது (பெரும்பாலும்) மவுனமாகி விடுகிறார்கள் என்றா? அல்லது உள்ளே இருக்கும் சூழ்நிலையை வெளியே இருந்து உணர முடியாதவர்கள், உள்ளே போய் கண்ணால் கண்ட பிறகு அதை புரிந்து கொள்கிறார்கள் என்றா? இரண்டுமே பொருந்தினாலும் இரண்டாவது காரணம்தான் பல இடங்களில் பொருந்தும். இந்த யதார்த்தம்தான் இன்றைய அரசியலே. எதிர்கட்சியாக இருக்கும்போது விலை ஏற்றத்துக்கும் அரசின் கொள்கை முடிவுகளுக்கும் எதிராக குரல் கொடுப்பவர்கள், அதிகாரத்துக்கு வந்த உடன் யதார்த்தத்தை புரிந்து கொள்கிறார்கள்.

கூடங்குளம் பிரச்சினைக்கு அடுத்து முல்லைப் பெரியாறு பிரச்சினையை அணுகும்போது, இந்த யதார்த்தம் கொஞ்சம் அதிகமாகவே சுடுகிறது. இங்கே ஆபத்து நிச்சயம் என்று பிரச்சாரம் செய்பவர்கள் அங்கே எந்த ஆபத்தும் இல்லை என்று வாதிடுகிறார்கள். ஒரு சக தமிழன் வீட்டில் விளக்கு எரிய நான் எதற்கு ரிஸ்க் எடுக்க வேண்டும் என்று சொல்பவர்கள், கேரளாக்காரர்களுக்கு சொல்லும் உபதேசமே வேறு.

என்னதான் பிரச்சினை?

இந்த விஷயத்தில் தகவலைத் தேட இணையம் உபயோகமாக இல்லை. அணைக்கு ஆபத்து, எனவே புதிய அணை தேவை என்பது கேரளாவின் வாதம். அணை பலமாக இருக்கிறது என்பது தமிழ் நாட்டின் வாதம். இதுதான் பத்திரிக்கை செய்தி. இதில் தமிழர்கள் சொல்வதையும் நம்ப முடியாது, கேரளாக்காரர்களையும் நம்ப முடியாது. நடுநிலையாளர்கள் கருத்து என்பதே இங்கு இல்லை. எனவே கேள்வி ஞானம் என்ற அடிப்படையில் கூட கருத்து சொல்ல முடியாது.

இந்திய அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் முதன் முதலில் அறிவிக்கப்பட்டபோது, அதன் நோக்கம் பல நாடுகளில் விவாதிக்கப்பட்டதால், இந்தியா, அமெரிக்கா மற்றுமின்றி பல நடுநிலையான நாடுகளின் பத்திரிக்கைகளையும் படித்தேன். எனவே அது குறித்து பதிவு போடுவதிலோ அல்லது அணு உலைகளை ஆதரிப்பதிலோ தயக்கம் ஏற்படவில்லை.

ஆனால் முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் என்ன சொல்வது? இரண்டு மாநில அரசியல்வாதிகளுமே இதை அரசியலாகத்தான் பார்கிறார்கள்.
If we had ministers who have at least basic qualifications rather than some goons, illiterate, or celebrities, these kind of issues would never have emerged. even if emerged, it would have been already solved or steps would have taken wisely. India needs to have politicians who should be qualified enough to handle situation like this.
இது மனோரமா இணையத்தில் பார்த்த ஒரு கேரளாக்காரரின் யதார்த்தமான பின்னூட்டம். வேறு சில பின்னூட்டங்கள் அதிர்ச்சி அளிக்கிறது. மாநில மக்களுக்கிடையே வெறுப்புணர்வு வளர்ந்து வருவதை காட்டுகிறது. இந்நிலை தொடர்ந்தால், இந்தியாவை துண்டாட எதிரிகள் வேண்டாம், மாநிலங்களுகிடையான பிரச்சினைகளை விரைவில் தீர்க்காமல் இழுத்தடித்தாலே போதும், மக்களுக்கு இந்திய அமைப்பின் மீது வெறுப்பு ஏற்பட்டு தானாகவே உடைந்துவிடும்.

வாதம்.

முல்லைப் பெரியாறு குறித்து பல தகவலைத் தேடி கடைசியில் காவிரி மைந்தன் தளம் படித்தேன். அவர் சொன்ன கருத்துக்கள் உண்மையானால் தமிழகத்தின் பக்கம் நியாயம் இருப்பதாக தெரிகிறது. அதேபோல் ஒரு கேரளாக்காரரின் பதிவையும் படித்தால், அவர் ஒரு தியரியையை மட்டுமே பிடித்துக் கொண்டாலும், அதுவும் நியாயமான கவலையாகத்தான் இருக்கிறது.

இன்று இல்லாவிட்டாலும் என்றாவது ஒரு நாள் புது அணை கட்டியாக வேண்டும், அதை ஏன் இப்போதே செய்யக் கூடாது என்பது அவர்களின் கேள்வி. அத்துடன் கூடங்குளம் விஷயத்தில் தமிழக அரசியல்வாதிகளின் ஸ்டன்ட் அவர்களுக்கு மேலும் ஊக்கம் கொடுத்துவிட்டது.       

இன்னொரு தலைவலி என்னவென்றால், பொதுவாக மக்களுக்கு அவர்கள் சார்ந்த பகுதியின் செய்திகளையே அதிகம் கேட்கும் வாய்ப்பு ஏற்படும். மாற்றுக் கருத்து அவர்களுக்கு கிடைப்பதும் இல்லை சராசரி மனிதனுக்கு அதை தேடும் அளவுக்கு நேரமும் இல்லை. அவர்கள் காதில் விழும் செய்திகளே அவர்கள் மனதில் ஆழமாக பதிந்து விடுகிறது. இதனால் நாம் கேரளாவையும், அவர்கள் நம்மையும் குறை சொல்லிக் கொண்டிருப்போம்.

எனவே இந்த பிரச்சினையை ஆழமாகப் புரிந்து கொண்டு நீதிமன்றங்கள் தீர்பளிக்கும் வரை நியாயம் யார் பக்கம் என்று கணிப்பது சிரமம். தற்போதைய கேரளாவின் கோரிக்கை லாஜிக்காக இருப்பதால், மற்றவர்களின் மனதில் தமிழகத்தின் நிலைப்பாடுதான் சந்தேகம் கொள்ளவைக்கும்.

அப்படியானால் தீர்வுதான் என்ன?

நீதிமன்றங்கள்தான் ஒரே வழி. ஆனால் அவர்களால் பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. இந்திய நீதிமன்றங்கள் ஆமை வேகத்துக்கு செயல்பட்டாலும், மாநிலங்களுகிடையான வழக்குகள் முடியாமல் இழுக்கப்படுவதற்கு, நான் மத்திய அரசையோ, நீதிமன்றங்களையோ குறை சொல்ல மாட்டேன்.

ஒரு கூட்டுக் குடும்பத்தில் இரு பிள்ளைகளுகிடையில் பிரச்சினை ஏற்பட்டால் குடும்பத்தில் பிளவு வராமல் தடுக்க சமாதானப்படுத்தத்தான் முயற்சிப்பார்களே ஒழிய, வெட்டு ஓன்று துண்டு ரெண்டுன்னு அங்கே தீர்ப்பு கிடைக்காது. இது தமிழகத்துக்கு மட்டுமில்லை இந்தியாவின் எல்லா மாநிலத்துக்கும் பொதுவானது. எனவே உச்ச நீதிமன்றங்கள் மாநிலங்களுகிடையான பிரச்சினைகளை விரைவாக தீர்பதற்கு தற்போதைக்கு வாய்ப்பில்லை. அவை நியாயமான தீர்ப்பை வழங்கினாலும், பாதிக்கப்படும் மாநிலங்களை சேர்ந்த அரசியல்வாதிகள் மக்களின் உணர்வுகளை தூண்டுவார்கள்.

என்னதான் வழி?

நீதிக்கு கட்டுபடுவோம் என்று இரு மாநில அரசுகளும் முடிவெடுத்தால் வழி இருக்கிறது. ஒய்வு பெற்ற, நேர்மையான உச்ச நீதிபதிகளை கொண்டு நாமே தனி நீதிமன்றம் அமைக்கலாம். தென் மாநிலங்களை சேராத 3 அல்லது 5 நீதிபதிகளை தேர்ந்தெடுத்து இதை அமைக்கலாம். அதே சமயம் ஜனநாயகத்தின் ஒரு அமைப்பு இன்னொரு அமைப்பை அவமதிக்க முடியாது. எனவே மாநில அரசுகள் இதை செய்ய முடியாது.மக்களின் நிதி உதவியுடன் பொதுநல அமைப்புகள் இதை செய்தால் அது இன்னும் சிறப்பாக இருக்கும்.அவர்கள் வழங்கும் தீர்ப்பை அமல்படுத்துகிறார்களோ இல்லையோ ஆனால் அரசியல்வாதிகள் தவறான தகவல் மூலம் மக்களிடையே பிளவை ஏற்படுத்தும் முயற்சி தடுக்கப்படும்.
    
அவர்கள் வழங்கும் தீர்ப்பை இன உணர்வுக்கு பலியாகாமல் இரு மாநிலங்களும் கட்டுபாட்டால், மாநிலங்களுகிடையான மற்ற பிரச்சினைகளையும் இதேபோல் தீர்த்துக் கொள்ளலாம். 

இதே வேலையை உச்ச நீதிமன்றமும் செய்யலாம். ஆனால் அவர்களுக்கு வேலைப்பளு அதிகமோ அல்லது நமது தீர்ப்பு மாநிலங்களில் எப்படி எடுத்துக்கொள்ளப்படும் என்ற தயக்கமோ, ஏதோ ஓன்று அவர்களை செயல்பட விடாமல் தடுக்கிறது. எனவே மாத்தி யோசிக்க வேண்டியதுதான்.

16 comments:

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.

Rathnavel Natarajan said...

பாரபட்சம் இல்லாத அருமையான பதிவு.

Anonymous said...

LOL. what a great understanding..

the SC has already given verdict in favour of TN but kerala did not obey. the issue to be analysed only by experts and not by politicians. kerala has no reason to demolish the dam and diverting the issue as public safety. the experts have clarified the water passge routing in case of overflow or damage. kerala can not assure the water supply and electricity to TN if new dam constructed, and again we may have to approach SC like Karnataka. there are lots of reasons why kerala wish construct a new dam by demolishing mullai periyar dam. get to the facts. we have many examples where SC orders have been violated by states. if there is any problem in the existing dam to be advised by experts and corrective measure may be taken. we can not ignore our rights and beg for the same. get united.
Vijayan

சிவானந்தம் said...

@நண்டு @நொரண்டு

///நல்ல பதிவு
வாழ்த்துக்கள்.///

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே.

@ ரத்னவேல்

///பாரபட்சம் இல்லாத அருமையான பதிவு.///

வாங்க ரத்னவேல் சார். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

சிவானந்தம் said...

வாங்க விஜயன்

நாம் என்ன சொன்னாலும் லாஜிக்னு ஒன்னு இருக்கு. நியாயம் யார் பக்கம் இருந்தாலும் அதை நீதிபதிகள் சொல்லும் வரை பார்வையாளனின் மனதில் சந்தேகம் இருந்து கொண்டுதான் இருக்கும். தேசிய சேனலில் இதை பத்தி மேலோட்டமா கேளுங்க. `புது டேமுக்கான செலவை நாங்களே பாத்துக்கறோம், தண்ணியையும் அதே அளவு தருகிறோம்`னு என்று கேரளா சொல்லும் போது இதை பத்தி தெரியாத சாதாரண பார்வையாளன் என்ன நினைப்பான்? அதுதான் பிரச்சினையே.

///ஏற்கனவே நீதிமன்றங்களின் தீர்ப்பை கர்நாடகாவும் மதிக்கவில்லை, கேரளாவும் மதிக்கவில்லை.///

உண்மைதான். ஆனால் அதேசமயம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் நீதிமன்றத்துக்கு கொடுக்கற மரியாதை உங்களுக்கு தெரியாதா? இத நான் விளக்கமா சொல்லனுமா? இந்தியாவில நீதிமன்ற தீர்ப்பை யாரும் மதிப்பதில்லை என்பதுதான் உண்மை. அது நமது அமைப்பில் இருக்கும் குறை. ஏதோ கர்நாடகாவும் கேரளாவும்தான் மதிப்பதில்லை என்பது போன்ற தோற்றத்தை உருவாக்காதீர்கள்.

//kerala can not assure the water supply and electricity to TN if new dam constructed, ///

காவிரிமைந்தன் சொல்லிய கருத்துக்கள் கவனிக்கப் படவேண்டியவை. அதேசமயம் இதற்கு அவர்களின் பதில் என்ன, என்ன தீர்வு என்பதையும் கேட்க வேண்டாமா? எதிரிக்கு விளக்கம் அளிக்க சந்தர்ப்பம் கொடுக்காமல், நாமே குற்றம் சுமத்தி அதற்கு நாமே தீர்ப்பு எழுத முடியுமா?

பிரச்சினை என்னவென்றால் ஏதோ தமிழனுக்கு மட்டும்தான் நீதி மறுக்கப் படுகிறது என்ற மாயையை உருவாக்கப் பார்கிறீர்கள். கோயிலுக்கு போகும் 100 பெண்களை நிறுத்தி கேளுங்கள். ஏதோ கடவுள் அவங்களுக்கு மட்டும்தான் கஷ்டத்தை கொடுத்திருப்பதை போல் பேசுவார்கள். ஆனால் எல்லோருக்கும் ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதுதான் நிஜம். இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் மூன்று மாதம் தங்கி இருந்து அந்த மாநிலத்தின் செய்திகளை படியுங்கள். அவர்களுக்கும் மத்திய அரசின் மீது கோவம் இருக்கும். சமீபத்தில் நான் கவனித்தது மணிப்பூர். பாவப்பட்ட மாநிலம்.

///we can not ignore our rights and beg for the same.///

தண்ணீர் இயற்கை கொடுப்பது. அதை ஒரு நாடே உரிமை கொண்டாட முடியாது எனும்போது ஒரு மாநிலம் என்ன உரிமை கொண்டாடுவது? எனவே உரிமையை விட்டு கொடுக்கவோ கெஞ்சவோ தேவையில்லை. இருந்தாலும் சில நடைமுறைகள் இருக்கிறதல்லவா? அங்கே சமீபத்தில் ஏற்பட்ட நில அதிர்வும் இங்கே அரசியல்வாதிகள் கூடங்குளத்தை வைத்து பண்ணிய அரசியலும் கேரளாவுக்கு துணிச்சலை கொடுத்துவிட்டது. இதற்கு உச்ச நீதிமன்றம் என்ன பதில் வைத்திருக்கிறது என்று பார்ப்போம். வழக்கம்போல் வழவழ கொழகொழ என்றுதான் இருக்கப்போகிறது. எனவேதான் இந்த யோசனையை வைத்தேன். ஆனால் தமிழனுக்கு ஒரு பிரச்சினை என்றால் ஏன், எதற்கு, எப்படி என்றெல்லாம் கேள்வி கேட்காமல் கொடி பிடிக்க என்னால் முடியாது.

J.P Josephine Baba said...

http://josephinetalks.blogspot.com/2011/11/mullaiperiyar-dam-999.html

Anonymous said...

நீங்க இன்னும் நிறையப் படிக்கணும் பாஸ்.

உச்ச நீதிமன்றம் ஏற்கனவே முல்லப்பெரியார் அணை உறுதியா இருக்குண்ணு தீர்ப்புக் கொடுத்தாச்சு. இனிமேல் சர்வதேச நீதிமன்றத்துக்கு போக வழியில்ல. இறையாண்மை தடுக்குது.

முல்லப்பெரியார் உடைந்தாலும் அதற்கு 36 கிலோமீட்டர் கீழே இருக்கும், முல்லப்பெரியாரியாரைக் காட்டிலும் 7 மடங்கு கொள்ளளவு அதிகம் கொண்ட இடுக்கி அணை வெள்ளத்தைத் தடுக்காதா?

36 கிமி மேலே நில அதிர்ச்சி தாக்குமென்னும்போது இடுக்கி அணை மட்டும் உடையாதா? அது மிகவும் பலம் வாய்ந்ததா?

முல்லப்பெரியாருக்கும் இடுக்கி அணைக்கும் இடையே இருப்பது 450 குடும்பங்கள் மட்டுமே. சொன்னது கேரள உயர் நீதிமன்றத்தில் அம்மாநில அட்வகேட் ஜெனரல்.

1979ல் இடுக்கி அணையைக் கட்டி முடித்த பின்னர் அவ்வணைக்கு தேவையான நீர் வருவதில்லை, மின்சாரம் தயாரிக்க முடியவில்லை என உணர்ந்தனர். உடையடா முல்லப்பெரியாரை என கேரளம் முயலுவது ஏன் என்று இன்னும் புரியவில்லையா?

முல்லப்பெரியாரை உடைக்கச் சம்மதித்தால் உடைத்த மறுநொடி, அதே நிலநடுக்கத்தைக் காரணம் காட்டி புது அணையைக் கட்டவே மாட்டார்கள்.

ரொம்ப சிம்ப்பிள். கூகுள் மேப்பில் முல்லப்பெரியார் அணை மற்றும் இடுக்கி அணை தொடங்கும் பகுதிகளைப் பார்த்தாலே கேரளத்தின் சூழ்ச்சி புரியும்.

தமிழ்மலர் said...

http://tamilmalarnews.blogspot.com/2011/12/blog-post.html

தமிழக தமிழர்கள் இரக்க குணம் அற்றவர்களா?

சிவானந்தம் said...

///நீங்க இன்னும் நிறையப் படிக்கணும் பாஸ்.///

கண்டிப்பா! எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் இது. ஆனால் கேட்கும், படிக்கும் விஷயங்கள் அனைத்தும் நம்முடைய ஆறாம் அறிவின் பரிசீலனைக்கு உட்பட்டது. சிறையில் பத்திரிகையில் வரும் குற்றச் செய்திகளை படிப்போம். அந்த செய்தியின் நாயகன் பக்கத்தில் உட்கார்ந்திருப்பான். அவர்களிடம் விசாரித்தால் செய்தி உண்மையாய் இருந்தாலும் அதன் கோணம் வேறு மாதிரி இருக்கும். எனவே செய்திகளை அப்படியே உள் வாங்கிக் கொள்ளாதீர்கள்.

///உச்ச நீதிமன்றம் ஏற்கனவே முல்லப்பெரியார் அணை உறுதியா இருக்குண்ணு தீர்ப்புக் கொடுத்தாச்சு. இனிமேல் சர்வதேச நீதிமன்றத்துக்கு போக வழியில்ல. இறையாண்மை தடுக்குது.///

நான் மறுபடியும் சொல்கிறேன் நீதிமன்ற தீர்ப்பை அவமதிப்பதில் நாம் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை. தமிழக அரசியல் தலைவர்களே அதற்கு சிறந்த உதாரணம். இது இந்தியாவின் ஒட்டுமொத்த பிரச்சினை. அதை மட்டும் சுட்டிக்காட்டி மக்களிடையே இன உணர்வை தூண்டாதீர். அதேசமயம் எந்த தீர்ப்பும் நிரந்தரமல்ல. அவ்வப்போது மாறும் சூழ்நிலைகேற்ப பரிசீலிக்கப்பட வேண்டியவைதான். இப்போது கேரளா சொல்லவிருக்கும் மாற்று தீர்வு என்ன என்பதை நீதிமன்றம் ஆராயட்டும்.

//முல்லப்பெரியார் உடைந்தாலும் அதற்கு 36 கிலோமீட்டர் கீழே இருக்கும், முல்லப்பெரியாரியாரைக் காட்டிலும் 7 மடங்கு கொள்ளளவு அதிகம் கொண்ட இடுக்கி அணை வெள்ளத்தைத் தடுக்காதா?

1979ல் இடுக்கி அணையைக் கட்டி முடித்த பின்னர் அவ்வணைக்கு தேவையான நீர் வருவதில்லை, மின்சாரம் தயாரிக்க முடியவில்லை என உணர்ந்தனர். உடையடா முல்லப்பெரியாரை என கேரளம் முயலுவது ஏன் என்று இன்னும் புரியவில்லையா?///

நீங்கள் சொன்ன கருத்தைதான் காவிரிமைந்தன் சொல்லி இருக்கிறார். இதை தமிழகத்தின் சார்பாக நீதிமன்றத்தில் முன் வைக்க வேண்டும். அதற்கு கேரளா என்ன சொல்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். அதற்கு பிறகுதான் கருத்து சொல்ல முடியும். உடனடி தீர்ப்பு நான் வழகுவதில்லை

//முல்லப்பெரியாரை உடைக்கச் சம்மதித்தால் உடைத்த மறுநொடி, அதே நிலநடுக்கத்தைக் காரணம் காட்டி புது அணையைக் கட்டவே மாட்டார்கள்.///

இது அதிகப்படியான கற்பனை. இது போன்ற அபத்தத்தை கேரளாக்காரர்களும் செய்யமாட்டார்கள், நீதிமன்றங்களும் வேடிக்கை பார்க்காது. நீங்க நிறைய காமிக்ஸ் படிப்பீங்களோ?

//ரொம்ப சிம்ப்பிள். கூகுள் மேப்பில் முல்லப்பெரியார் அணை மற்றும் இடுக்கி அணை தொடங்கும் பகுதிகளைப் பார்த்தாலே கேரளத்தின் சூழ்ச்சி புரியும்.//

சூழ்ச்சி உண்மை என்றால் அதை நீதிமன்றத்திலும் தேசிய மீடியாவிலும் வெளிபடுத்தி முறைப்படி முறியடிக்க வேண்டும். ஆனால் விவரம் தெரியாத தமிழனோ கேரளாக்காரனோ காரணமில்லாமல் ஒருவரை ஒருவர் எதிரியாகப் பார்க்ககூடாது. இணையங்களில் வெளிப்படும் கருத்து அப்படித்தான் இருக்கிறது.

அப்படியே தமிழ்மலர் பதிவையும், ஜோசபின் பதிவையும் படிங்க

நெல்லை கபே said...

இன்று இந்தியாவில் எல்லா மாநிலத்திலேயும் இருக்கும் மிக மோசமான நிலைமை...அரசியல்வாதிகள் கையில் போன பிரச்னை தீரவே தீராது என்பது. அவர்கள் தீர்வுக்காக யோசிப்பதில்லை என்பது.

நெல்லை கபே said...

உங்களின் இந்த பதிவுக்கும் தமிழ்மலரின் பதிவுக்கும் என் வலைப்பக்கத்தில் லிங்க் கொடுத்துள்ளேன் 'ப(பி)டித்த பதிவுகள்' பகுதியில்....

தமிழ்மலர் said...

முல்லைபெரியாறு அணை பலமுடன் உள்ளது. அதன் முழு உரிமையும் தமிழகத்துக்கு தான் என்ற கருத்தில் எள் அளவும் மாற்றம் இல்லை. ஆனால் ஒரு எதார்த்த தமிழனாக இந்த கோரிக்கைகளை முன் வைக்கிறேன்.

அணை நிலநடுக்கப்படுகியில் உள்ளது. அடிக்கடி லோசான நிலநடுக்கம் ஏற்படுகிறது என்பது உண்மை. ஒவ்வொரு மழையின் போதும், ஒவ்வொரு நில அதிர்வின் போதும், மரண பயத்தில் உறைந்துபோகின்றனர் ஒரு லட்சம் மக்கள். போதாகுறைக்கு ஊடகங்களின் பீதி கூட்டலின் உச்சம் வேறு. அணு அணுவாக செத்துமடியும் இந்த உயிர்களின் மரண கூக்குரலை தயவு செய்து காது கொடுத்துக் கேளுங்கள்.

அணையை உடைக்கவோ, புதிய அணை கட்டவோ வலியுறுத்தவில்லை. தயவு செய்து அணையின் பயன்பாட்டை குறைத்துக்கொள்ளுங்கள் என்று தானே சொல்கிறோம். இதில் என்ன தவறு கண்டீர்கள்?

முல்லைபெரியாறு அணையின் பயன்பாடு இல்லாமலே தமிழகம் தாராளமாக தண்ணீர் எடுத்துச்செல்லக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது. இப்படி இருக்கும்போது எதற்காக பிரச்சனையையே தீர்வாக வலியுறுத்தி வருகிறீர்கள்? ஒரு பிரச்சனைக்கு அதன் மாற்றுவழி ஒன்று தானே உண்மையான தீர்வு.

கிழக்கு இந்திய கம்பெனியால் முதன் முதலில் பரிசீலிக்கப்பட்ட திட்டம், பென்னிகுயிக் விரும்பிய திட்டம் இது ‘‘கூடுதல் கால்வாய்கள் மூலம் தண்ணீரை நேரடியாக தமிழகத்துக்கு கொண்டு வருதல்’’. பென்னிகுயிக்கிடம் நிதி இல்லாமல் தான் இந்த திட்டம் கைவிடப்பட்டதே தவிர வாய்ப்பு இல்லாமல் அல்ல. இந்த திட்டம் தமிழக விவசாயிகளுக்கு மிகப்பெரிய வரபிரசாதமாக அமையும். கேரள மக்களின் தலைக்கு மேல் உள்ள மரண பயத்திற்கு முழுமையான ஆறுதலை தரும்.

இந்த திட்டத்தை ஏன் பரிசீலித்து செயல்படுத்தக்கூடாது?

இதனால் தமிழக விவசாயிகளுக்கு கடுகளவேனும் இழப்பு உண்டா? சுமூகமான தீர்வுகள் இருக்கும்போது ஏன் தமிழர்கள் வீண்பிடிவாதம் பிடிக்க வேண்டும். முல்லைப்பெரியாறு அணை என்றும் தமிழர்களுடையது தான். ஆனால் தயவு செய்து மனிதாபிமான அடிப்படையிலாவது கேரள போராட்டக்குழுவின் கோரிக்கையை பரிசீலியுங்கள்.

இந்த கோரிக்கையில் 1% மேனும் தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள் உங்கள் கருத்தை முழுமையாக ஏற்றுக்கொள்கிறேன்.

சிவானந்தம் said...

வாங்க மாயன். உங்கள் வருகைக்கும் லிங்கிற்கும் நன்றி.

இது ஒரு சுமுகமாக தீர்க்கக் கூடிய பிரச்சினை. ஒரு வேளை தீர்ந்தாலும் இந்த சண்டையினால் மக்களிடையே உருவாகும் வெறுப்பு ஆழமாக பதிந்துவிடும். ஆனால் அரசியல்வாதிகளுக்கு அதை பற்றி கவலை இல்லை, ஓட்டுக்காக எதையும் செய்யும் மனிதர்கள் இவர்கள். இதுதான் இந்தியாவின் துரதிரிஷ்டம்.

சிவானந்தம் said...

வாங்க தமிழ் மலர்.

இருதரப்பும் செய்யும் வாதங்களில் தங்களுக்கு சார்பான கருத்துக்களை மட்டுமே முன் வைக்கின்றனர். எனவே யார் உண்மையை பேசுகிறார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை. ஒரு நாள் முழுக்க கேரளா இணையங்களை படித்தால் அங்கே நியாயம் இருப்பது போலவும், தமிழக செய்திகளை படித்தால் நம் பக்கம் நியாயம் இருப்பதாகவும் தெரிகிறது. இருந்தாலும் ஒரு பிரச்சினை சூடாகி விவாதம் அதிகரிக்கும் போது அதில் உண்மை வெளிவந்துவிடும். எனவே கொஞ்சம் பொறுத்திருந்து பாப்போம்.

உங்களின் முயற்சிக்கு என் வாழ்த்துக்கள்.

தமிழ்மலர் said...

இந்த காணொளியில் பேசுவது தமிழ்நாடு பெரியாறு நீர்பாசன விவசாயிகள் சங்கத்தின் தலைவர் திரு. கம்பம் அப்பாசு அவர்கள்

அடுத்த காணொளியில் பேசுவது கேரள முல்லைபெரியாறு அணை பாதுகாப்பு போராட்டக்குழ தலைவர் திரு. சி.செ. ரோய் அவர்கள்

இருவரும் சொல்வது :-

திரு. சி.செ.ரோய் கேரள போராட்டக்குழு தலைவர் :( இவர்தான் முதன்முதலாக முல்லைப்பெரியாறு பிரச்சனை தொடர்பாக கேரள உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தவர்)

தற்போது தமிழகம் தண்ணீர் எடுக்கும் கால்வாய்களின் ஆழத்தை கூட்டி அல்லது புதிய கால்வாய் வெட்டி கூடுதலான தண்ணீரை தமிழகம் எடுத்து செல்ல வேண்டும். இதனால் அணையின் பயன்பாடு இல்லாமலும் தமிழகம் தண்ணீரை எடுத்து செல்ல முடியும். தண்ணீரை பாதுகாப்பாக எடுத்து செல்லவேண்டிய பொருப்பை தமிழகம் ஏற்கவும், தண்ணீரை முழுமையாக கொடுக்கும் தார்மீகத்தை கேரள கடைபிடிக்கவும் செய்வது தான் எங்களுடைய தீர்வு.

திரு. கம்பம் அப்பாசு தமிழக போராட்டக்குழு தலைவர் ( இவர்தான் தமிழக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொ£டர்ந்தவர்.)

முல்லைபெரியாறு அணையில் கூடுதாலான தண்ணீரை தேக்குவது கேரள மக்களுக்கு அச்சத்தை தருகிறது. இதற்கு மாற்றாக தாழ்வான கால்வாய்களை அமைத்து தமிழகம் 34 அடியில் இருந்து தண்ணீரை எடுக்கும் திட்டத்தை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம். இதற்கு கேரள அரசும் கேரள மக்களும் சம்மதம் தருவார்களானால் அதை தமிழக அரசும் தமிழக மக்களும் முழு மனதாக ஏற்றுக்கொள்வார்கள். இந்த திட்டம் எங்களுக்கு ழுழு திருப்தி.

இந்த திட்டம் தான் திரு. பென்னிகுயிக் அவர்களினவ் கனவு திட்டம் அப்போது நிதி இல்லாததால் அதை அவரால் செயல்படுத்த முடியவில்லை. இதை திரு.பென்னிக்குயிக் தமது டைரி குறிப்புகளில் எழுதியுள்ளார். இந்த டைரி திரு.கம்பம் அப்பாசு அவர்களிடம் உள்ளது.

சக வலைபதிவர்களே இந்த முயற்சிக்கு தமிழக கேரள ஊடகங்கள் ஒத்துழைப்பது இல்லை. தமிழக கேரள அரசியல்வாதிகள் கூட ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் ஊடகங்களுக்கு மட்டும் பிரச்சனை தீர்வதில் விருப்பம் இல்லை. இந்த இருவரின் பேட்டியை ஒளிபரப்ப எந்த ஊடகமும் தயாரில்லை. எந்த பத்திரிக்கையும் தயாரில்லை. கேரளாவின் ஒரு சில பத்திரிக்கைகள் மட்டுமே வெளியிட்டுள்ளன.

அடுத்த இரண்டு வாரங்களில் கேரள தமிழக போராட்டக்குழுக்கள் சந்தித்து பேசி சுமூக முடிவை உச்சநீதிமன்றத்தில் அறிவிக்க உள்ளன என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.

http://tamilmalarnews.blogspot.com/2011/12/blog-post_09.html

Suresh Subramanian said...

nice post.... thanks to share...

http://www.rishvan.com

Post a Comment