!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Saturday, March 1, 2025

இங்கே எல்லோரும் அமித்ஷாதான்



இந்த மும்மொழி பிரச்சினை காரணமாக பல ஆங்கில காணொளிகளை கவனித்தேன். இந்தி மொழிக்கு ஆதரவாக வாதாடும் பல அதிபுத்திசாலிகளை, இது குறிப்பாக வடக்கன்ஸ், கவனிக்க நேரிடுகிறது. இவர்கள் அடிமுட்டாள்கள் என அப்பட்டமாக தெரிகிறது. இருந்தாலும் நான் அவர்களை திட்டத்தான் போகிறேன்; வெறுக்கப்போவதில்லை. காரணம் சிறுவயதிலிருந்தே இப்படிப்பட்ட மனிதர்களை நிறைய பார்த்துவிட்டதால் அந்த மனநிலை எனக்கு வந்துவிட்டது.

சிறுவயதிலேயே அம்மா இறந்துவிட்டதால், மாமா ஆதரவில் சில வருடம் அவர்கள் வீட்டிலே இருந்தேன். அங்கேதான் நான் என் வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு அமித்ஷாவை பார்த்தேன். தற்போது எப்படி இந்தி திணிப்பு நடக்கிறதோ அதேபோல் அப்போது எனக்கும் ஒரு சம்பவம் நடந்தது. 

ஏதோ ஒரு குழம்பு என் தட்டில் விழுந்தது. அது எல்லோருக்கும் பிடிக்குமாம், எனவே நானும் சாப்பிட வேண்டும் என வலியுறுத்தல். உலகம் புரியாத வயது எனக்கு. கடுமையான அதிருப்தி. நான் வேண்டாம் என மறுத்துவிட்டேன். ஆனாலும் கட்டாயமாக வந்து விழுந்தது. கோபத்தில் ஏதோ ஒரு மருந்தை குடிக்க, பெரிதாக ஒன்றும் இல்லை. தப்பித்துவிட்டேன். அப்போது என் ஆயா எனக்கு உபதேசம் செய்தார். `நீ அடுத்தவர்கள் வீட்டில் சாப்பிடுகிறாய். இங்கே நீ வாயை மூடிக்கொண்டுதான் சாப்பிடவேண்டும்` என்று. அதில் வெறுப்பு இல்லை. எங்கள் மீது இருந்த அக்கறையினால் வந்த வார்த்தைதான்.

அந்த வார்த்தைகளின் அர்த்தம் அப்போது எனக்கு புரியவில்லை. எனக்கு புரிந்தது எனக்கு வீடில்லை என்பதுதான். அதன்பின் இலங்கை தமிழர்கள் நாடற்ற மனிதர்களாக பல நாடுகளில் வசிப்பதுபோல் நானும் வீடற்ற மனிதனாக பல வீடுகளில் வாழ்ந்தேன், சாரி, இருந்தேன் என்பதுதான் சரியான வார்தை.

அந்த பயணம் கொஞ்சம் கொஞ்சமாக நான் அடுத்தவர்கள் வீட்டில் இருக்கிறேன் என்பதை எனக்கு பல பாடங்கள் மூலம் உணர்த்திவிட்டது. அதாவது நாம் அடுத்தவர்கள் வீட்டில் குறைவாக சாப்பிடவேண்டும் மற்றும் குறைவாக பேசவேண்டும் என்பதை உணர்த்தியது. அதன்பிறகு நான் வாயை மூடிக்கொண்டு சாப்பிடவும், கண்களை மூடிக்கொண்டு பார்க்கவும் ஆரம்பித்தேன். அங்கே நான் பார்த்தது வேறு ஒரு உலகம், அம்மாக்கள் காட்டாத வேறு ஒரு உலகம்.

தற்போது நிதானமாக அந்த வாழ்க்கையை பார்த்தால், தவறு என்மீதுதான் என தெரிகிறது. எனக்காவது தப்பித்து ஓடும் வாய்ப்பு இருந்தது. பல வீடுகளில் பெண்களுக்கு அந்த வாய்ப்பும் இல்லை. அதாவது பல வீடுகளில் ஆண் அமித்ஷாவாக இருக்கிறான், தன் விருப்பத்தை மனைவியின் மீது திணிக்கிறான்.

தற்போது பெண்களுக்கு கொஞ்சம் சுதந்திரம் வந்துவிட்டதால், நிலைமை தலைக்கீழ். சில இடங்களில் பெண்கள் அமித்ஷாவாக இருக்கிறார்கள். அவர்களுடைய விருப்பத்தை எப்படியாவது கணவனின் மீதும் குழந்தைகள் மீதும் திணித்துவிடுகிறாரக்ள். ஒரு பெண்ணுக்கு கத்திரிக்காய் பிடித்துவிட்டால் அந்த வீட்டில் அடிக்கடி கத்திரிக்காய் சாம்பார்தான். `கத்திரிக்காய் சாப்பிட்டால் காதுக்கு நல்லது` என குண்டை தூக்கிபோட்டுவிடுவார்கள். சில பெண்களுக்கு கத்திரிக்காய் பிடிக்காவிட்டால் அது அபூர்வமாக வரும். அதற்கும் அபூர்வமான விளக்கம் வரும். நான் இங்கே சும்மா விளக்கத்திற்காக இதை சொல்கிறேன்.

இப்படி இந்த அமித்ஷாக்களின் தொல்லை தாங்க முடியாமல் தனியே வந்தபிறகும் தலைவலிதான். இப்போது ஓட்டல் பயணம். பலவிதமான ஓட்டல்களில் சாப்பாடு. இந்த ஓட்டல் முதலாளிகளும் அமித்ஷாதான். 

மத்திய அரசு நாங்கள் உங்கள் மீது இந்தியை திணிக்கவில்லை, நீங்கள் ஏதாவது ஒரு மொழியை தேர்ந்தெடுங்கள் என உதார் விடுவதை போல் இந்த ஓட்டல்களிலும் அதே கதைதான். பெரிய ஓட்டல்களை விட்டுவிடுங்கள். நான் மிடில்கிளாஸ் எனவே என் ரேஞ்சுக்குத்தான் உதாரணம் சொல்லுவேன்.

பல ஓட்டல்களில் மெனு கார்ட் இருக்கும். அதில் 20-30 வகையான பெயர்கள் இருக்கும். அது மெனுகார்டில் மட்டும்தான் இருக்கும், விற்பனைக்கு இருக்காது. ஓட்டல் ஆரம்பித்த புதிதில் இப்படி பல பெயர்களை எழுதிவிடுவார்கள், பின்னர் நடைமுறையில் எது அதிகம் விற்கவில்லையோ அதை நிறுத்திவிடுவார்கள். அதன் பிறகு அவர்களுக்கு எது லாபமோ, எது அதிகமாக விற்கிறதோ அதை மட்டும் விற்பார்கள். நாமும் சரி வந்துவிட்டோம் எது இருக்கோ அதை கொடு என்று அவனுடைய விருப்பத்திற்கு நாம் சாப்பிடும் நிலைக்கு வந்துவிடுவோம். இங்கே சாப்பாடாவது பரவாயில்லை, நாம் வேறு ஓட்டலை தேடலாம். ஆனால் அரசு பள்ளிகளில் இந்த நிலைமை வந்தால் என்ன செய்வது?

மேலே சொன்னதுதான் மும்மொழி கொள்கை விஷயத்திலும் நடக்கும்.எனவே இதற்கு பலியாகாமல் இருப்பதுதான் நல்லது.

கிரிக்கெட்டில் டெண்டுல்கர் தெரியும். அவர் ஒரு மிகசிறந்த பேட்ஸ்மேன். எப்படி அவரால் இப்படி சாதனையாளராக முடிந்தது. ஏனென்றால் அவர் பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்தினார். தோணி ஒரு படி மேலே போய் கீப்பிங், பேட்டிங் என இரண்டு விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்தினார். அதுதான் எல்லை. எனவே இவர்களால் சாதனையாளராக முடிந்தது. இவர்கள் கூடுதலாக மேலும் சில விஷயங்களில் கவனம் செலுத்தினால் இவர்கள் நிலைமை என்னவாகியிருக்கும்?

இது வந்து இக்கரைக்கு அக்கரை பச்சை என்ற நிலைமை. பலர் நினைக்கிறார்கள் இந்தி கற்றுக்கொண்டால் அறிவு விசாலமாகும் என்று. அப்படி எதுவும் கிடையாது. இந்தி கற்றவன் பானிபூரி விற்பதையும் ஆங்கிலம் கற்றவன் 5000-10000 துக்கு தனியார் பள்ளியில் பாடம் நடத்துவதையும் நீங்கள் பார்க்கலாம்.

சில இந்தி சேனல்களில் வாதத்தை கவனித்தால் வினோதமாக இருக்கும். இந்தி கட்டாயமில்லை ஏதாவது ஒரு மொழியை தேர்ந்தெடுங்கள் என திரும்ப திரும்ப அதையே சொல்லுவார்கள். இது வந்து பக்கத்து இலைக்கு பாயசம் கேட்கும் கதைதான். மற்ற மொழிகளை பற்றி இவர்களுக்கு ஏன் கவலை? அந்த மொழிக்காக போராட அவர்களுக்கு என முதல்வர்கள் இருக்கிறாரகள். 

ஆனால் மற்ற மொழிகளை படிப்பதால் என்ன லாபம், அதற்கு பதில் இந்தியே பரவாயில்லை என மாணவர்கள்/ பெற்றோர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என ஒரு குறுக்கு புத்தி.

நான் ஸ்டாலில் ஆதரவாளன் இல்லை. திராவிட கட்சிகள் திருத்தமுடியாத அளவுக்கு ஊழல்வாதிகளாக மாறிவிட்டார்கள் என்பதையும் உணர்ந்தவன். ஆனால் அதற்கு மாற்று என வரும் கட்சிகள் ..... இங்கே எனக்கு என்ன எழுவது என்றே தெரியவில்லை.

0 comments:

Post a Comment