கொஞ்ச நாட்களாக வட இந்திய ஆங்கில சேனல்களில் வரும் அபத்தமான கருத்துக்களுக்கு பதில் கொடுத்துக்கொண்டிருந்தேன். இப்போது இங்கே.
இந்தி மொழியை எதிர்ப்பவர்களை பார்த்து, வட இந்தியர்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ளே அறிவு ஜீவிகளும் கேட்கும் ஒரு கேள்வி, `இவர்களின் பிள்ளைகள் மட்டும் ஏன் தனியார் பள்ளியில் அதுவும் இந்தி படிக்கிறார்கள்?` என்பதுதான்.
இதை பற்றி நான் பேசுவது கொஞ்சம் அபத்தம்தான். ஏனென்றால் எத்தனை வயதில் பள்ளிக்கு போவதை நிறுத்தினேன் என்று எனக்கே தெரியவில்லை. அந்த அளவுக்கு படித்தவன் நான். அகமதாபாத்தில் இருப்பதால் இந்தி வந்துவிட்டது. ஆர்வக்கோளாராகவும் இருந்ததால் எப்படியோ ஆங்கிலமும் வந்துவிட்டது. எந்த அளவுக்கு என்றால், ஒரு முறை நியூயார்க் டைம்ஸ் படிக்கும்போது, ஒரு கட்டுரையை என்னால் முழுமையாக வாசிக்க முடியவில்லை. ஆங்கிலம் புரியாமல் இல்லை. அந்த கட்டுரையாளர் அந்த ஊர் சீமான் போலிருக்கிறது. அவர் இஷ்டத்துக்கு அடித்துக்கொண்டிருந்தார்.
அப்போதுதான் புரிந்தது ஆங்கிலத்துக்கும் அறிவு வளர்ச்சிக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது. அதாவது படிக்காதவன் கழுதை என்றால் படித்தவன் டாங்கி. எனவே இனி எழுதுபவன் என்ன படித்திருக்கிறான் என்பதைவிட அவன் என்ன சொல்கிறான் என்பதை மட்டும் கவனித்தால் போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.
தமிழ்நாட்டில் கல்விமுறை அல்லது அதில் இருக்கும் அடுக்கு முறைகள் எதுவும் எனக்கு முழுமையாக தெரியாது. இருந்தாலும் எளிமையாக ஒரு உதாரணம் சொல்கிறேன். நீங்கள் ரயிலில் எங்கேயாவது வெளியூருக்கு போக்கவேண்டுமென்றால் என்ன செய்வீர்கள். பணம் குறைவாக இருந்தால் முன்பதிவு இல்லாத சாதா பயணம். கொஞ்சம் பணம் கூடுதலாக இருந்தால் படுக்கும் வசதியுடன் முன்பதிவு. இன்னும் கொஞ்சம்கூடுதலாக இருந்தால் AC -three tier. இன்னும் கொஞ்சம் கூடுதலாக இருந்தால் AC, என இப்படி பல வசதிகள் இருக்கிறது.
உங்கள் தேவைக்கு தகுந்தாற்போல் அல்லது வசதிக்கு தகுந்தாற்போல் நீங்கள் பயணிக்கலாம். ஆனால் அப்போதும் நீங்கள் ஒரு அரசு ரயில்வே வண்டியில்தான் பயணிக்கிறீர்கள். இந்த நடைமுறை இங்கே அதாவது வியாபாரம் சார்ந்த துறையில் ஓகே. ஆனால் கல்வித்துறையில் இது சாத்தியமில்லை.
இங்கே அரசு பள்ளிக்கூடங்கள் ஒரே வரையறைதான், அல்லது கொஞ்சம் மாற்றங்கள் இருக்கலாம். எனக்கு தெரியாது. இங்கே அரசாங்கம் செலவு செய்வதால் ஏழை மாணவனோ அல்லது பணக்கார மாணவனோ எல்லோருக்கும் ஒரே கட்டமைப்புதான்.
இங்கேதான் பணக்கார பெற்றோர்களுக்கு ஒரு தலைவலி வருகிறது. அரசியல் காரணமாக அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பல உரிமைகள் பறிக்கப்பட்டுவிட்டது. ஒரு காலத்தில் ஆசிரியரை பார்த்து மாணவர்கள் பயந்த நிலை போய், தற்போது மாணவர்களை பார்த்து ஆசிரியர்கள் பயப்படும் காலம் வந்துவிட்டது. எனவே அங்கே தரமான கல்வி கிடைக்கிறது என்பது கொஞ்சம் சந்தேகம்தான். நீங்கள் ஏதோ ஒரு பள்ளியை உதாரணம் காட்டலாம். ஆனால் நடைமுறை என்பது வேறு.
அரசு பள்ளியில் மாணவர்கள் சரியாக படிப்பதில்லை/ரவுடியிசம்/காதல் என பல தலைவலிகள் இருக்கிறது. இவையெல்லாம் ஒரு தொற்று நோய். அது சக மாணவர்களையும் பிடித்துக்கொள்ளும். அடுத்த தலைவலி போதுமான சுகாதார வசதிகள் இங்கே இருக்காது. இவை ஏழை மாணவனுக்கு பழகி இருக்கும். ஆனால் பணக்கார மாணவர்களுக்கு? அதுமட்டுமின்றி தனியார் பள்ளியில் கல்வி தரமாக இருக்கிறது என்று சிலர் சொல்கிறார்கள். தமிழக அரசு சாப்பாடோ முட்டையோ கொடுக்கிறது. தனியார் பள்ளிகள் பாதாம் பருப்பு மற்றும் பிஸ்தா கொடுக்கிறார்கள் போலிருக்கிறது.
இப்படி இருக்கும் பல்வேறு தலைவலிக்கு நாம் அரசை குறை சொல்லமுடியாது. ஆனால் பணக்கார அப்பாக்கள் இப்படிப்பட்ட தலைவலிகள் இல்லாத தனியார் பள்ளியை நோக்கி நகர்கிறாரகள். இங்கே நாம் கவனிக்கவேண்டியது அவர்கள் அரசு பள்ளியை நிராகரிக்கிறார்கள்; தனியாரை ஆதரிக்கவில்லை.
தனியார் பள்ளியில் படித்தவர்கள் இன்று மத்தியில் அமைச்சர்களாகிவிட்டார்கள். ஆனால் அரசு பள்ளியில் படித்தவர்தான் பிரதமராக இருக்கிறார். நோட் த பாயிண்ட். தனியாரில் கல்வி விற்கப்படுகிறது, அரசு பள்ளியில் கற்றுக்கொடுக்கப்டுகிறது. அதுதான் வித்தியாசம்.
இது ஒரு அபாயகரமான சூழ்நிலை. நான் தனியார்மயத்தை ஆதரிப்பவன். இருந்தாலும் இது கல்வித்துறையில் பல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும். எனக்கு மார்க்தான் வேண்டும், வேலைதான் வேண்டும் என ஓடினால் அங்கே மனிதர்கள் மட்டும்தான் இருப்பார்கள். தலைவர்கள் உருவாகமாட்டார்கள்.
இந்த பிரச்சினைக்கும் அரசு தீர்வு காண வேண்டும். இதற்கு ஒரே தீர்வு கல்வித்துறையிலும் பொருளாதாரத்தை அடிப்படையாக கொண்டு Unreserved -Reservation - AC என ரயில்வேயில் இருப்பதுபோல் பல வசதிகளுடன் கூடிய புதிய பள்ளிகள் அரசு உருவாக்க வேண்டும். இதற்கு நிதி என பிரச்சினை இருக்காது. மாணவர்களுக்கு கட்டணத்தை உயர்த்திவிடுங்கள். அதிலேயே ஆசிரியர்களுக்கு சம்பளமும் வந்துவிடும், மாணவர்களுக்கு கூடுதல் வசதிகளும் செய்து கொடுக்கலாம்.
பொதுத்துறை நிறுவனங்களை மத்திய அரசு தற்போது நிர்வாக வசதிக்காக பலவிதமாக பிரிக்கிறது. இங்கே ஊழியர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளமோ அல்லது பிற வசதிகளோ இருக்காது. திறமை மற்றும் சந்தை அடிப்படையில் அவர்களுக்கு வழங்கப்படும். அதையே இங்கேயும் முயற்சி செய்து பார்க்கலாம்.
இந்த பள்ளிகள் நிச்சயம் லாபம் என்ற நோக்கில் இல்லாமல் அதே சமயம் அரசுக்கு நஷ்டம் என்ற தலைவலிக்குள்ளும் நுழையாமல் இருந்தால் நல்லதுதானே. தனியாரை விட குறைந்த கட்டணத்தில் இருந்தால் நிச்சயம் இந்த திட்டம் நல்ல பலனை தரும். ஊழல் அரசியல்வாதிகள் இதையும் விட்டுவைக்கமாட்டார்கள் என்ற பயமும் வருகிறது. இருந்தாலும் இருக்கும் சூழ்நிலையும் சரியில்லை என்பதால் இப்படி ஏதாவது செய்தாகவேண்டும்.
இந்த பள்ளிகளில் ஆசியர்களுக்கு சம்பளத்தை குறைத்தாலும் பரவாயில்லை, தயவுசெய்து அவர்கள் கையில் மறுபடியும் பிரம்பை கொடுத்துவிடுங்கள்.
இனி இந்திக்கு வருவோம்.
இங்கே தமிழ் மக்கள் இந்தி விரும்பி கற்கிறார்கள் என்பதே அபத்தம். 10-15 சதவிகிதம் இருக்கலாம். அது அவர்களுக்கு உபயோகமாகவும் இருக்கலாம்.
சில ஓட்டல்களில் சாப்பிட போனால் டீபால்ட் என ஊறுகாய் அப்பளம் வைப்பார்கள் என்பது நமக்கு தெரியும். நான் ஒரு ஓட்டலுக்கு போயிருந்தேன். அங்கே வாழைப்பழமும் பான் பீடாவும் கொடுத்தார்கள். வேண்டுமென்றால் சாப்பிடுங்கள் வேண்டாம் என்றால் வைத்துவிடுங்கள். நான் பீடாவை வைத்துவிட்டேன். இந்தியும் அப்படித்தான். அது டிபால்ட்டாக இருக்கிறது. அது ஊறுகாய் போல் ஓரமாக இருக்கிறது. வேண்டும் என்பவர்கள்....
சமீபத்தில் ஒரு தெலுங்கு பையனின் vlog பார்த்தேன். அருணாச்சல பிரதேஷ் போயிருந்தான். அங்கிருந்த பெண்ணிடம் `ஹிந்தி தோடா தோடா மாலும்` என்றான். மும்மொழி கொள்கையை பின்பற்றும் ஆந்திராவிலேயே இந்த நிலைமை. அவர்கள் வேறு வழியில்லாமல் படிக்கிறார்கள் போலிருக்கிறது. காலேஜ் முடித்துவிட்டு வெளியே வந்தவுடன் அவர்களுக்கு இந்தி மறந்துவிடுகிறது. இதுக்குத்தான் இவ்வளவு அக்கபோரு.
0 comments:
Post a Comment