
வி.எஸ். பாபுவின் இறுதிப் பயணத்தில் முதல்வர் விஜய் அவர்களும் உடலைச் சுமந்தாராம்; வெறுங்காலுடன் நடந்தாராம். பார்ப்பதற்கும் கேட்பதற்கும் நன்றாகத்தான் இருக்கும். ஆனால், இதுபோன்ற செயல்கள் ஒரு மனிதனின் இயல்பான குணத்தைக் காட்டிவிடும்.
சாதாரண மனிதர்களைக் கணக்கில் எடுத்துக்கொண்டால் சில விஷயங்களைக் கவனிக்கலாம். எங்கேயாவது பயணம். லக்கேஜ் நிறைய இருக்கும். ஆளுக்கொரு சாமானை எடுங்கள் என்று சொன்னால் போதும். சிலர் உடனடியாக ஏதோ ஒன்றை எடுப்பார்கள். இருப்பதிலேயே எடை குறைந்த ஒன்றாக அது இருக்கும். இப்படியும் சிலர் சேவை செய்வார்கள். அதாவது, இது 'நானும் உள்ளேன் ஐயா' வகை.
அந்த அனுபவத்தின் அடிப்படையில் பார்த்தால், இவையெல்லாம் ஒருவிதக் கோழைத்தனத்தின் அடையாளம். அதாவது, நல்ல பெயர் எடுக்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும். ஆனால், அதற்காகத் துணிச்சலான நடவடிக்கைகளை இவர்கள் எடுக்க மாட்டார்கள். இதுபோன்ற ஆபத்தில்லாத பப்ளிக் ஜிம்மிக் செயல்களைச் செய்து நல்ல பெயர் எடுக்கப் பார்ப்பார்கள்.
அரசியலில் எடுத்துக்கொண்டால், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரண்டு ஜாம்பவான்கள் வரலாற்றில் இடம் பெற்றிருக்கிறார்கள். பெரியார் மற்றும் காமராஜர். இதில் யாருக்கு முதல் இடத்தைத் தருவது? நான் பெரியாருக்குத்தான் தருவேன்.
காமராஜர் செய்தது சாதனைதான். நேர்மையான நிர்வாகம், கல்விக்கு முக்கியத்துவம், அதில் பிரச்சினை ஏற்பட்டபோது அதற்கு ஒரு நல்ல தீர்வு கண்டது என எல்லாமே பாராட்டப்பட வேண்டிய முன்னெடுப்புகள். ஆனால், அதில் ஆபத்து எதுவும் இல்லை; எதிரிகளும் இல்லை.
நேர்மையாக இருக்க வேண்டியது கடமை. அதிகாரத்தில் இருக்கிறீர்கள். அரசு பணம் இருக்கிறது. இப்போது அதைப் பயன்படுத்தி மக்களுக்குக் கல்வியைக் கொடுத்தால், இலவசமாகச் சாப்பாடு கொடுத்தால், 'ஏன் கொடுத்தாய்?' என்று யாரும் சண்டைக்கு வரப்போவதில்லை. எனவே, அது ஒரு நல்ல முயற்சி. அவ்வளவுதான்.
பெரியார் அப்படியல்ல. அவரிடம் அதிகாரம் இல்லை. அவர் கையில் எடுத்ததோ சமூக அவலங்கள். அவர் எதிர்த்தது மாற்றங்களை ஏற்க மறுக்கும் மனிதர்களை; தவறு என்பதை உணர்ந்தாலும் அதையும் நியாயப்படுத்தும் தலைவர்களை. பல நூற்றாண்டுகளாக இருந்த அவர்களுடைய அதிகாரத்தில் கை வைத்த இவரைச் சும்மா விடுவார்களா? எனவே, இவருக்கு வந்த எதிர்ப்பை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.
அதையும் மீறி, அதிகாரமே இல்லாமல் போராடித்தான் அவர் ஜெயித்தார். காமராஜர் கொடுத்தது கல்வி அறிவு என்றால், பெரியார் கொடுத்தது பொது அறிவு. எனவே, இதுதான் உண்மையான சாதனை.
இங்கே ஒரு கொடுமை என்னவென்றால், எதை எதிர்த்துப் பெரியார் போராடினாரோ, அந்தப் பெரியாரின் வழிவந்தவர்களே, அப்படி ஒரு அதிகாரத்தை அடைந்த பிறகு, அதிகார மையமாக மாறி அட்டூழியம் செய்ய ஆரம்பித்ததுதான். எனவே, இனி 'பிராமணியம்' என்ற வார்த்தையைவிட 'அதிகார மையம்' என்ற வார்த்தைதான் பொருத்தமாக இருக்கும்.
யாரெல்லாம் அதிகாரத்துக்கு வருகிறார்களோ, அவர்கள் நீண்ட காலம் அதிகாரத்தில் இருந்தால், அது கொடுக்கும் சுகத்தில் மயங்கி, சுயநலமாகச் செயல்பட்டு ஒரு சமூக வியாதியாக மாறிவிடுகிறார்கள் என்பதுதான் உண்மை. இதுதான் ஆபத்து. இப்போது ஜனநாயகம் வந்துவிட்டதால், அது அவ்வப்போது இவர்களுக்கு வாசலைக் காட்டிவிடும்.
ஆனால், இப்போதிருக்கும் தோற்றுப்போன அரசியல்வாதிகள் அந்தக் காலப் பிராமணர்களைப் போல அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மறுப்பார்கள். பிராமணர்களின் பெயரைச் சொல்லி ஆட்டையைப் போட்ட அடுத்தநிலை ஜாதிக்காரர்களைப் போல இப்போது அதிகாரிகள் இருக்கிறார்கள். இவர்கள் பழியை அரசியல்வாதிகள் மீது போடுவார்கள். ஆனால், இவர்களும் பெருச்சாளிகள்தான். தின்று கொழுத்தவர்கள்தான். அவர்கள் அடிமடியில் கைவைத்த விஜய்யைச் சும்மா விடுவார்களா? தங்கள் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மறுப்பார்கள். எனவே, இப்போது விஜய் மோத வேண்டியது இவர்களிடம்தான்.
அதைவிடக் கொடுமை, அவருக்கு அரசியல் குறித்த புரிதல் இன்னும் வரவில்லை. எனவே, நண்பர்களையே, தெரிந்தவர்களையே ஆலோசகர்களாக வைத்திருக்கிறார். அவர்களும் அரசியல் அப்ரண்டிஸ்களாக இருக்கிறார்கள். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பதுபோல், நல்ல ஆலோசகர்கள் அமைவதும் அப்படித்தான் போலிருக்கிறது.
இருந்தாலும், இந்தத் தலைவலிகளைத் தாண்டி எதிரிகளை அடக்கி, நல்ல தலைவனாகவும் நிர்வாகியாகவும் மாறுவதில்தான் திறமை இருக்கிறது. அது தற்போதைக்கு அவரால் முடியாது போலிருக்கிறது. எனவே, இதுபோன்ற தலைவலி இல்லாத செயல்களைச் செய்து நல்ல பெயர் எடுக்கப் பார்க்கிறாரோ?
இலவசங்களை வாரி வழங்கவும், கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்கவும் அறிவு தேவையில்லை. இந்தச் சவ உடலைத் தூக்கவும் அறிவு தேவையில்லை. அதை யார் வேண்டுமானாலும் செய்யலாம்.
கடந்த ஆட்சியில் ஊழலில் திளைத்த இரண்டு அமைச்சர்களைத் தூக்கி உள்ளே போடுவதும், எல்லை மீறும் கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ. போன்றவர்களைச் சில வாரங்களுக்காவது உள்ளே வைப்பதும், அடங்க மறுக்கும் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளைத் தூக்கி எறிவதும்தான் துணிச்சலின் அடையாளம். அதைத்தான் மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.
பெரும்பான்மை இல்லை. இது ஒரு தலைவலி. புரிகிறது. ஆனால், அசாத்தியமானவற்றைச் சாத்தியமாக்குவதுதான் சாதனை. அவர்களுக்குத்தான் வரலாற்றில் இடம் கிடைக்கும். விஜய்யால் அது இப்போதைக்கு முடியாது என்பது தெரிகிறது. இருந்தாலும் நம்பிக்கை வைப்போம்.
நடப்பதெல்லாம் நன்மைக்கே!
0 comments:
Post a Comment