!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Wednesday, May 25, 2011

கனிமொழி வழக்கு: ஓபனிங் நல்லா இருக்கும், ஆனால்...


அரசியல் என்றாலே அது ஒரு சாக்கடைதான் என்றாகிவிட்டது. இங்கே அரசியல்வாதிகள் மட்டுமின்றி அது குறித்து விமர்சிப்பவர்களும் விமர்சனத்திற்கு உள்ளாகாமல் தப்பிக்க முடியாது. ஒரு தரப்பின் குறைகளை விமர்சிக்க ஆரம்பித்தால் உடனே நீ `அந்த பக்கத்து ஆளா?` என்ற விமர்சனம் வந்துவிடுகிறது. விமர்ச்சனங்களை வீசும் போது யார் முன்னே (அதிகாரத்தில்) இருக்கிறார்களோ அவர்கள் மீதுதான் அதிகம் படும் என்ற யதார்த்தத்தை பலர் புரிந்துகொள்வதில்லை. தற்போது ஜெயலலிதா அதிகாரத்திற்கு வந்து விட்டதால் இனி இவர் இந்த யதார்த்தத்திற்கு உட்படுத்தப்படுவார்.

அதேபோல் ஒப்பிடுதலும் அரசியலில் தவிர்க்க முடியாத ஓன்று. கலைஞரையும் ஜெயலலிதாவையும் விமர்சிக்கும் போது `இவர் மட்டும் யோக்கியமா?` என்று எதிர்த்தரப்பையும் சேர்த்துதான் விமர்சிக்க வேண்டியிருக்கும்.


அதிகாரத்திற்கு வந்துவிட்ட நிலையில் அம்மா இனி கலைஞரின் அனைத்து திட்டங்களையும் பரன் ஏற்றிவிடுவார். அதில் முதல் பலி, சட்டமன்றத்தை மீண்டும் கோட்டைக்கே கொண்டு போனது. இது நாகரீக அரசியல் இல்லைதான். ஆனால் கலைஞரின் அரசியலும் அதே அளவுக்கு தரம் தாழ்ந்ததுதானே.

தமிழகத்தின் அதிகார மையமாக அடையாளம் காட்டப்படகூடிய ஒரு மதிப்பு வாய்ந்த கட்டிடம் கட்டப்படும்போது அது குறித்து மற்றவர்களிடம் கலைஞர் ஆலோசித்தாரா? அட.. ஜெயலலிதாவை விடுங்கள். அவர்தான் வேண்டாதவர் ஆகிவிட்டார். மக்களிடம் கருத்து கேட்கலாம் இல்லையா? குறைந்த பட்சம் அதன் தோற்றம் எப்படி இருக்க வேண்டும் என்பதையாவது மக்களிடம் காட்டி அங்கீகாரம் பெற்றிருந்தால், மக்களால் அங்கீகரிக்கப்பட்ட அந்த கட்டிடத்தை புறக்கணிக்கும் தைரியம் ஜெயலலிதாவுக்கு வந்திருக்காது.

ஆனால் கலைஞர் அப்படி செய்யவில்லை. அதை ஏதோ தன்னுடைய சொந்த பண்ணை வீட்டை கட்டுவதைப் போலத்தான் பார்த்து பார்த்து கட்டி முடித்திருக்கிறார். அதையாவது ஒழுங்காக செய்தாரா. அதன் பணிகள் முடியாத நிலையில், அவசரமாக மேக்கப் செய்துதான் திறப்புவிழாவை நடத்தினார். ஆக, கலைஞரின் நோக்கம் தமிழகத்துக்கு புதிய சட்டசபை வளாகம் என்பதை விட, `எதிர்காலத்தில் தன் பெயர் சொல்ல ஒரு கட்டிடம்` என்பது வெளிப்படையாகவே தெரிகிறது. நல்ல டிசைனில் செய்திருந்தால் கூட போனால் போகிறது என்று அதையும் ஜீரணித்திருக்கலாம். ஆனால் பலரின் கிண்டலுக்கு உள்ளாகியிருக்கிறது அதன் தோற்றம். எனவேதான் இது தமிழகத்தின் சொத்தாக தெரியாமல் கலைஞரின் சொத்தாக பார்க்கபடுகிறது.

இதோ...அடுத்த செய்தி வந்துவிட்டது. சட்ட மேலவை வேண்டாமாம். அம்மா முடிவு செய்துவிட்டார். காரணம் அதேதான். இது கலைஞரின் ஆசை. எனவே அம்மா இந்த ஆசையையும் நிறைவேற்ற மாட்டார்.

ஒரு அரசின் திட்டங்கள் அனைத்தையும் அடுத்து வரும் அரசு அமல்படுத்த வேண்டும் என்றால் அதற்கு ஆட்சி மாற்றமே தேவையில்லை. அதேசமயம் , தோற்றுவிட்ட காரணத்திற்காக கடந்த கால அரசின் திட்டங்கள் அனைத்தும் குப்பைக்கு போகும் என்றால், ஜனநாயகம் ஒரு மோசமான நிர்வாகவியலாக இருக்கும். இரு அரசியல்வாதிகளின் பகையால் ஒரு தரப்பு ஆரம்பித்து வைக்கும் திட்டம் அடுத்த அரசால் கைவிடும் போக்கு எப்போதுதான் முடியப்போகிறதோ?  



`கனிமொழி கைது செய்யப்பட பிறகு வந்த செய்திகளை படித்தால் இந்த செய்தியால் கலைஞர் கடும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார் என்ற வகையில் செய்திகள் இருக்கிறது. உண்மையில் அதிர்ச்சி என்றால் என்ன? நாம் எதிர்பார்க்காத விஷயத்தை தீடிரென்று கேள்விப்படும்போது வருவதுதான் அதிர்ச்சி.

கலைஞரை பொறுத்த வரையில் கனிமொழி கைதாவார் எனபது முன்கூட்டியே உணர்த்தப்பட்ட விஷயம். ஒரு வழக்கில் பெயில் கிடைக்குமா, நீதிபதி என்ன நினைக்கிறார் என்பது போன்ற தகவல்களை தெரிந்து கொள்வது  சாதாரண மனிதர்களுக்கு வேண்டுமானால் சிரமமாக இருக்கலாம். ஆனால் மாநிலத்திலும், மத்தியிலும் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இதெல்லாம் மிகச் சாதாரணமான விஷயம். கைது உறுதி என்பது தெரிந்த பிறகுதான் குற்றப்பத்திரிக்கையில் பேரை சேர்ப்பதிலிருந்து எல்லாவற்றிலும் நாட்களை இழுத்திருக்கிறார். எனவே தேர்தல் முடிவுகள்தான் அவருக்கு அதிர்ச்சியாக இருந்திருக்குமே தவிர கனிமொழியின் கைது அல்ல. ராம்ஜெத்மலானியை அழைத்தது,  `நம் பெண்ணை காப்பாற்ற நான் மிகப் பெரிய வக்கீலை அமர்த்தியிருக்கிறேன் பார்` என்று சொல்லி ராஜாத்தி அம்மாளை சாந்தப்படுத்ததான் உதவியிருக்கும்.

கனிமொழிக்கும், ராஜாவுக்கும் பெயில் மறுக்கப்பட்டதன் மூலம் இது ஊழலுக்கெதிரான அரசின் மிகப்பெரிய நடவடிக்கையாகவும் தோற்றமளிக்கலாம். ஆனாலும் இந்த நடவடிக்கைகள் மட்டும் ஊழலை கட்டுபடுத்தப் போவதில்லை. கனிமொழியும், ராஜாவும் 2 ஜி குற்றவாளிகள். அதாவது இரண்டாம் தலைமுறை குற்றவாளிகள். முதல் தலைமுறை தலைவர்கள் கலைஞர், ஜெயலலிதா போன்றவர்கள் பல ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானாலும், அதற்காக தண்டிக்கப்படாத நிலையில், இவர்கள் இருவர் மட்டும் மாட்டிகொண்டதால், இனி எதையும் `முறையாக`  செய்யவேண்டும் என்ற பாடத்தைத்தான் அரசியல்வாதிகளுக்கு இது கற்றுக் கொடுத்திருக்கும்.

நமது நீதி அமைப்போ அதைவிட மோசம்.இது பலவிதமான அபத்த விதிமுறைகளின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. கீழ் கோர்ட்டுகளில் வெறும் குற்றம் சாட்டப்பட்ட நிலையிலேயே, அதாவது சட்டப்படி ஒருவர் குற்றவாளி என்று அறிவிக்கப்படாத நிலையிலேயே குற்றம் சாட்டப்பட்டவருக்கு பெயில் வழங்க மறுக்கும். ஆனால் ஒருவர் குற்றவாளி என்று கீழ் கோர்ட்டுகள் தீர்ப்பு அளித்த பிறகு மேல் கோர்ட்டுகளில் அப்பீல் போனால் உங்களுக்கு பெயில் உண்டு.

லாஜிக் என்னவென்றால், ஒரு வழக்கு விசாரணை நிலையில் இருக்கும் போது சாட்சியை அழிக்க, மிரட்ட வாய்பிருப்பதால் குற்றம் சாட்டப்பட்டவருக்கு பெயில் மறுக்கப்படுகிறது. ஆனால் சாட்சிகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகு அந்த அபாயம் இல்லை என்பதால் அப்பீலில் பெயில். வாதம் சரியானதுதான். ஆனால் நம் நாட்டில் பிரபலமான தலைவர்களின் வழக்குகளை பாருங்கள். அப்பீல் என்ற பெயரில் எப்படி இழுக்கிறார்கள் என்று? நமது நீதிமன்றங்கள் நீதியையும் நிலைநாட்டும், அதேசமயம் குற்றவாளிகள் தண்டனையிலிருந்து தப்பிக்கவும், அதிகாரத்தை அனுபவிக்கவும் பல வழிவகைகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும். இந்த நீதிபதிகளின் மேடை பேச்சுகளில் இருக்கும் வீரியம் அவர்களின் தீர்ப்புகளில் இருப்பதில்லை. இது போன்ற நீதித்துறை இருக்கும் வரை எதற்காக நம் நாட்டு அரசியல்வாதிகள் பயப்படவேண்டும்?
   
இதற்காக நீதிபதிகளை குறை சொல்வதிலும் அர்த்தமில்லை. இது போன்ற அபத்தமான சட்டங்களை உருவாக்கியதும், அதை இன்னும் திருத்தாமல் வைத்திருப்பதும் அரசியல்வாதிகள்தானே.

கனிமொழி வழக்கிலும் ஓபனிங் நல்லாத்தான் இருக்கும். ஆனால் பினிஷிங் மேலே சொன்னமாதிரித்தான் போய்முடியும். ஏனென்றால் இந்த வழக்கில் ஆதாரங்கள் கனிமொழிக்கு எதிராக இருந்தாலும், சில தியரிகள் கனிமொழிக்கு சாதகமாக முடியலாம்.

இந்த நடவடிக்கைகள் ஊழலை கட்டுப்படுத்தாது என்றால், ஊழலைக் கட்டுபடுத்த என்னதான் வழி?

அரசியல் நீதிமன்றங்கள் அமைப்பதுதான் ஒரே வழி. உடலில் சில இடங்களில் அடிபட்டால் அது அந்த இடத்தை மட்டும்தான் பாதிக்கும். ஆனால் மூளையில் அடிபட்டால் அது உடலின் அனைத்து பகுதியையும் செயலிழக்க செய்யும் என்பதால் அங்கே அலட்சியம் காட்டாமல் முன்னுரிமை கொடுத்து கவனிப்போம். அரசியல்வாதிகளும் அப்படிதான். இவர்கள்தான் நாட்டின் மூளை. எனவே இவர்கள் மீதான வழக்குகளை எதற்காக சாதாரண வழக்காக மற்ற கோர்ட்டுகளிலேயே நடத்த வேண்டும்? ஏற்கனவே நீதித்துறையில் சிவில், கிரிமினல், கன்ஸ்யுமர், பொருளாதார குற்றங்கள் என்று சில பிரிவுகள் பிரிக்கப்பட்டிருக்கின்றன. அதைவிட முக்கியம் அரசியல் குற்றங்களை பிரித்து அந்த வழக்குகளை விரைவாக முடிக்க அதற்கென தனி கோர்ட் அமைக்க வேண்டியது.

லோக்பால் போன்ற அமைப்புகள் பல மாநிலங்களில் இல்லை. இருக்கும் மாநிலங்களிலும் அது செயல்படுவது மாதிரி தெரியவில்லை. எனவே, அரசியல்வாதிகளை பொறுத்தவரையில், குறைந்தபட்சம் எம் எல் ஏக்கள் முதற்கொண்டும் அதற்கும் மேல் உள்ளவர்களின் மீதான வழக்குகளை இந்த அரசியல் (தனி)  நீதிமன்றங்களின் மூலம் வேகமாக விசாரித்து (அப்பீலிலும்) தீர்ப்பு வழங்கினால் அது அரசியல் சுத்தமாகும் வாய்ப்பை அதிகரிக்கும்.

9 comments:

Anonymous said...

//தோற்றுவிட்ட காரணத்திற்காக கடந்த கால அரசின் திட்டங்கள் அனைத்தும் குப்பைக்கு போகும் என்றால், ஜனநாயகம் ஒரு மோசமான நிர்வாகவியலாக இருக்கும்//

I agree with you. But, it is necessary to stop the useless things what previous government planned.

சட்ட மேலவை is really useless house. It will create again unnecessary political in TN.

♔ℜockzs ℜajesℌ♔™ said...

excellent Post . . .
நடுநிலமையான பார்வை .
உங்கள் கருத்துகளும் அருமை . .
தொடர்ந்து இதே போல நடுநிலைமையாக எழுதுங்கள் . .

Rathnavel Natarajan said...

அருமையான பதிவு.

சிவானந்தம் said...

///I agree with you. But, it is necessary to stop the useless things what previous government planned.

சட்ட மேலவை is really useless house. It will create again unnecessary political in TN.///

சட்ட மேலவையை பொறுத்தவரையில் அதை நான் ஆதரிக்கிறேன். சில நல்ல அரசியல்வாதிகள் மக்களுடனான தொடர்பில் பின் தங்கி இருப்பார்கள். அப்படிப்பட்டர்வர்கள் தேர்தல் அரசியலில் பிரகாசிக்க மாட்டார்கள். எனவே இந்த திறமைசாலிகளை அரசு பயன்படுத்திக் கொள்ள மேலவை ஒன்றுதான் சரியான வழி. கலைஞர் விரும்புகிறார் என்ற காரணத்திற்காக அதை தடுப்பது சரியில்லை. உலகில் பல நாடுகளில் இரண்டடுக்கு சபைகள் இருக்கிறது. இதில் என்ன குழப்பம் வரும்?

சிவானந்தம் said...
This comment has been removed by the author.
சிவானந்தம் said...

///அருமையான பதிவு.///

வணக்கம் ரத்தினவேல் சார்.
வருகைக்கும், கருத்துக்கும் நன்றி.

சிவானந்தம் said...

///excellent Post . . .
நடுநிலமையான பார்வை .
உங்கள் கருத்துகளும் அருமை . .
தொடர்ந்து இதே போல நடுநிலைமையாக எழுதுங்கள் . .///

நன்றி ராஜேஷ்.

`நடுநிலமையான பார்வை` இந்த பட்டம்தான் எழுதுபவர்களுக்கு ஒரு அங்கீகாரம்.

ராஜ நடராஜன் said...

நன்றாக கருத்தாக்கம் வைத்துள்ளீர்கள்.

மேல் சபை தேவையில்லாத ஒன்றே என்பது எனது கருத்து.இது வரையில் மேல் சபையில்லாமலும் தமிழகம் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

சிலருக்கு பதவிகள் தர இயலவில்லையென்ற காரணத்தாலும் எம்.ஜி.ஆர் நிறுத்தினார் என்ற மறைந்திருக்கும் காரணாத்தாலும் இதனை கருணாநிதி மீண்டும் புதுப்பிக்க முயற்சித்தாரென்றே தோன்றுகிறத்

சிவானந்தம் said...

///மேல் சபை தேவையில்லாத ஒன்றே என்பது எனது கருத்து.இது வரையில் மேல் சபையில்லாமலும் தமிழகம் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது.

சிலருக்கு பதவிகள் தர இயலவில்லையென்ற காரணத்தாலும் எம்.ஜி.ஆர் நிறுத்தினார் என்ற மறைந்திருக்கும் காரணாத்தாலும் இதனை கருணாநிதி மீண்டும் புதுப்பிக்க முயற்சித்தாரென்றே தோன்றுகிறத்///

உங்கள் கருத்துக்கு நன்றி நடராஜன்.

மேலவை என்பது ஆரோக்கியமான ஜனநாயகத்தின் ஒரு அங்கம். எம் ஜி ஆர் - கருணாநிதி இருவரின் பகையில் காணாமல் போனது அது. அது இல்லாமலும் தமிழகத்தை நன்கு ஆட்சி செய்யலாம். பிரச்சினை அதுவல்ல. இருந்தாலும் அது இட ஒதுக்கீடு போன்றது.

எல்லா தலைவர்களும் மக்களிடம் நன்கு பழகக் கூடியவர்களாக, ஓட்டு வாங்கக் கூடியவர்களாக இருக்க மாட்டார்கள். சிலரிடம் திறமை இருக்கும். ஆனால் வெகுஜனத் தொடர்பில் வீக்காக இருப்பார்கள். அவர்களுக்காக உருவாக்கப்பட்டதுதான் மேலவை. உதாரனத்திற்க்கு, ஒரு அமைச்சர் எந்த வித குற்றச்சாட்டும் இல்லாமல் திறமையாக தனது துறையை நிர்வகித்திருகிறார். ஆனால் தனது துறையை கவனித்த அளவுக்கு தனது தொகுதியை கவனிக்கவில்லை. எனவே தேர்தலில் தோற்றுவிட்டார். இப்போது என்ன செய்வது?

ஓட்டு வாங்க வேண்டுமானால் பேச்சுத் திறமை தேவைப்படலாம். ஆனால் நல்ல நிர்வாகத்திற்கு திறமைசாலிகள் தேவை. இரண்டும் ஒரே நபரிடம் இருக்கும் வாய்ப்பு குறைவு. எனவேதான் இருவரையும் பயன்படுத்திக்கொள்ள இரண்டு சபைகள்.

Post a Comment