!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Sunday, July 8, 2012

சிறை அனுபவம்: பணம்

சிறைக்கு சென்றவுடன் முதலில் என்னை ஆச்சரியப்படுத்தியது இதுதான். புதிய கைதிகள் கடுமையாக தண்டிக்கப்பட (வேலை வாங்கப்பட), பழைய கைதிகள் சொகுசாக வாழ்ந்ததுதான். அடுத்த சில மாதங்களில், பழைய கைதிகளில் சிலர் `உள்ளேயே` நன்றாக சம்பாதிப்பதை பார்த்த போது அது இன்னும் அதிர்ச்சியாக இருந்தது.

இந்த அதிர்ச்சி விலகி இதுதான் யதார்த்தம் எனப்புரிய பல மாதங்கள் ஆனது. ஊழல் ஒரு கொடிய தொற்று நோய். இதை நீங்கள் செய்ய ஆரம்பித்தால் அது உங்களின் டிராலி பாய், உடன்பிறவா சகோதரி என எல்லோருக்கும் ஏதாவது செய்தாக வேண்டும். இல்லையென்றால் அவர்கள் உத்தமர்களாகி உங்களை காட்டிக் கொடுத்துவிடுவார்கள்.

அரசியலில் இதுதான் யதார்த்தம் என்றால் சிறையிலும் அதுதான். இங்கேயும் ஊழல் தலைவிரித்து ஆடுகிறது. இங்கே உங்களை காட்டிக் கொடுக்கபோவது கீழ்நிலைக் காவலர்கள் மற்றும் கைதிகள்தான். எனவே அவர்களுக்கும் அவர்கள் ரேஞ்சுக்கு புகுந்து விளையாட அனுமதித்தே ஆகவேண்டும்.

இதில் கைதிகளில் பழைய கைதிகள் புதுக் கைதிகள் என இரண்டாக பிரித்துக்கொள்ளுங்கள். புதுக்கைதிகளால் எந்த ஆபத்தும் இல்லை. அவர்களுக்கு உள்ளே என்ன நடக்கிறது என புரிந்து கொள்ளவே பல மாதம் ஆகும். அதுவரை அவர்கள் உள்ளே இருக்கப்போவதில்லை. அப்படியே அரைகுறையாக புரிந்தாலும், அவர்கள் வாழ்க்கை என்பது முள்மேல் விழுந்த சேலை போன்றது. ஒரே ஒரு கேஸ் உள்ளவர்கள். இவர்களின் கவனம் தங்களை எப்படியாவது காப்பாற்றிக் கொள்வதில்தான் இருக்கும். எந்த ரிஸ்கும் எடுக்கமாட்டார்கள்.

பழைய கைதிகள் அப்படி கிடையாது. அவர்கள் மீது பல வழக்குகள் இருக்கும். சிலர் அதிகபட்ச தண்டனைக்கான வாய்ப்பில் இருப்பார்கள். அடி வாங்குவதும் பழகிப்போன ஓன்று. எனவே இவர்கள் எதற்கும் துணிந்தவர்களாக இருப்பார்கள். இவர்களை கூல் செய்யாவிட்டால், உள்ளே நடக்கும் ஊழல்கள் நீதிமன்றத்தில் வெடிக்கும். வழக்கறிஞர் மற்றும் பத்திரிகை தொடர்பில் இருக்கும் பிரபலமான கைதிகள், மவுனமாக காட்டிக் கொடுப்பார்கள்.இவர்களைத்தான் அனுசரிக்கவேண்டும். எனவே வருமானம் பார்க்க இவர்களுக்கும் பல `அனுமதி`கள் உண்டு. 

இதில் ரவுடிகளுக்கு வியாபாரம் தெரியாது. அவர்களுக்கு மிரட்டி பணம் பிடுங்கத்தான் தெரியும். பெரிய மீன்களை அதிகாரிகள் வளைத்துக் கொண்டால், சிறிய மீன்களை இந்த ரவுடிகளிடம் அட்மிஷணாக தள்ளிவிடுவார்கள். அதில் தேறாத பார்ட்டியை வேலைக்கும், தேறக்கூடியதை வருவாய்க்கும் வைத்துகொள்வார்கள்.

சிறை பராமரிப்பு வேலை உண்டு. இதை  பழைய கைதிகளும், இவர்களுக்கு மாமூல் கொடுப்பவர்களும் செய்யப்போவதில்லை. அதுமட்டுமின்றி இவர்களுக்கு சேவை செய்யவும் ஆள் வேண்டும். இந்த வேலைதான் புதுக் கைதிகள் மீது வந்து விழும்.

இந்த வேலையை சாதாரணமாக நினைக்காதீர். சாப்பாடும் சரியாக இல்லாதநிலையில், உறவினர்கள் தரும் டோக்கேன் மற்றும் உணவு பண்டங்களையும் பலர் பிடுங்கித்தின்னும் நிலையில், பலர் அழுதிருப்பதை பார்த்திருக்கிறேன்.

வசதியான கைதிகள் கதை வேறுவிதம். ஒரு முறை நான் மனுவில் சாமான் வாங்கிகொண்டு போனபோது எனக்கு முன்னால் ஒரு மினி மளிகை கடையே போய்கொண்டிருந்தது. `இவ்வளவு எதற்கு?` என்று நண்பரிடம் விசாரித்தேன். யாரிடமாவது மாட்டிக் கொண்டிருப்பார். அதான் அறுத்துக் கொண்டிருக்கிறார்கள்` என்றார்.

போலீஸ் ஸ்டேஷன் போனால், உங்களிடம் லஞ்சத்துக்கு பதில் பேப்பர், அது இது என்று லிஸ்ட் கொடுப்பார்களே அதேபோல் ரவுடிகளும் கொடுப்பார்கள். இங்கே மாமூலும் உண்டு, இப்படி லிஸ்டும் உண்டு. வசதியானவர்களுக்கு வாரம் இரண்டு மனு எப்படியும் வந்துவிடும். அந்த வகையில் பார்த்தால் வாரம் (தோராயமாக) 5000 ரூபாய்க்கு இந்த ரவுடிகளுக்கு தீனி வாங்கித் தரவேண்டும்.

ஆனால் ரவுடித்தனம் பிடிக்காத நாகரீக குற்றவாளிகள் இருப்பார்களே. அவர்களுக்கு என்ன செய்வது? இவர்கள் உள்ளே பலவிதமான வியாபாரிகளாய் இருப்பார்கள். இவர்கள் பேருக்கு அவ்வப்போது மாட்டுவதும் பின்னர் தொழிலை தொடர்வதும் வாடிக்கை.

காமதேனு 

இனி என் விஷயத்துக்கு வருவோம். நான் ஜெயிலுக்கு போனதற்கு இரண்டு காரணங்கள். ஓன்று வெறுப்பு. மற்றொன்று ஆம்பிஷன். என்னுடைய பிளான் சக்சஸ் ஆகிவிட்டால் அது என் தலையெழுத்தை மாற்றும் என்பதால் எந்த கெட்ட பெயரும் எடுக்கக் கூடாது என்பதில் ரொம்ப கவனமாகவே இருந்தேன். ஆனா முடியல.

முதல் காரணம், சிறையில் சாப்பாடு எல்லோருக்கும் ஒரே மாதிரி இல்லை. அது அவரவர் தகுதியை பொறுத்தது. அப்படி இருக்கையில் நான் மட்டும் ஏன் இளிச்சவாயனாக இருக்கவேண்டும்? இரண்டாவது காரணம், சாப்பாட்டில் தண்ணீர் அல்லது மோர் ஊற்றி எத்தனை நாள் சாப்பிடுவது? சில வாரங்களிலேயே நான் தடுமாற ஆரம்பித்தேன். 

என்னை பார்க்க வந்தவர்கள் வாங்கிக் கொடுத்த பிஸ்கட், பழம் கொஞ்சம் பயன்பட்டாலும், என்னுடைய பிடிவாதத்தை பார்த்தவர்கள் வருவதையும் குறைத்துக் கொண்டார்கள். எனவே அதுவும் கட். வாங்கி ஸ்டாக் வைக்கலாம் என்று பார்த்தால், அதுவும் முடியாது. நாளைக்கு என்று எடுத்து வைப்பது நல்ல பழக்கமாக இருந்தாலும், ஜெயிலில் அன்றே காலி பண்ணுவதுதான் புத்திசாலித்தனம். மறுநாள் எதுவும் இருக்காது. உரிமையாய் கேட்டு வாங்கிக்கொள்வார்கள். சிலருக்கு அதுவும் பிடிக்காது, அவர்களே சுட்டுவிடுவார்கள்.

எனவே உள்ளே கிடைப்பதை வாங்குவோம் என்ற முடிவுக்கு வந்தேன். அப்போது உள்ளே லாட்ஜ் ஓடிக்கொண்டிருந்தது. ஒரு கைதி, `நீங்க அங்க போறதுன்னா சொல்லுங்க` என்றார். மாதம் 15000 என்று நினைவு. அந்த அளவுக்கு எனக்கு வசதியும் கொழுப்பும் இல்லாததால் மறுத்தேன்.

சாப்பிடும் விஷயங்களில் சப்பாத்தி, குழம்பு என கிடைக்கும். அதற்கு வழி பாருங்கள் என்றேன். மாதம் 2000 பட்ஜெட்டில் அது வரும் போலிருந்தது. பணம் உள்ளே எப்படி என்று குழம்பினேன். `மனு ரூமிலேயே வாங்கிக்கலாம்` என்றார் அவர்.

30% கமிஷன் கொடுத்தால் மனு ரூமிலேயே கொடுத்துவிடுவார்கள் என்றார். அவர் சொன்னதை வேதவாக்காக நம்பி அடுத்த முறை உறவினர் வந்தபோது கேட்டேன். நான் உள்ளே செட்டிலாகிவிட போகிறேன் என்று பயந்த அவர், குறைவாகவே கொடுத்தார். எவ்வளவு என்று தெரியாது. இங்கே என் பக்கம் 350 வந்தது.

மனு ரூமில் இரண்டு பேர் இருப்பார்கள். அங்கே வாங்குபவர் சீனியர். இந்த பக்கம் வாங்கிக் கொடுப்பவர் காவலர். அவர் பையில் சொருகியத்தை பார்த்தேன். ஆனால் இந்த பக்கம் இருந்தவர், `எனக்கு` என்றார். `அங்க கொடுத்தாச்சி` என்றதற்கு,  `அவர் தரமாட்டார்` என்று சொல்லி இவர் 50 வாங்கிக் கொண்டார்.

(இந்த மனு ரூம் ஒரு காமதேனு.அதை புரிந்துகொள்ள இரண்டு உதாரணம் போதும்.

1) இந்த சீனியர் காவலர் ரொம்ப டயர்டாகிவிட்டால், கதவை பூட்டிவிட்டு ரெஸ்ட் எடுப்பாரே தவற அந்த இடத்தை யாருக்கும் தரமாட்டார்.


2) ஒருமுறை கைதியை பார்க்க ஒரு நிருபர் வந்துவிட்டார். அந்த கைதியோ உடனடியாக வரவில்லை. எனவே அந்த பத்திரிகையாளர் காத்திருக்க, சீனியரால் கையை நீட்ட முடியவில்லை. மற்ற கைதிகள் வரவில்லை என்றால் பொறுமையாக தேடுவார்கள். ஆனால் இங்கே வருமானம் பாதித்ததால், ஒரு காவலரை அனுப்பி கையோடு அந்த கைதியை  அழைத்து வந்து சீக்கிரம் பேச வைத்தார்களாம்.)        

அடுத்து அந்த மனு ரூம் வாசலிலேயே கேட்டில் ஒரு காவலர் இருந்தார். அவரும் `எனக்கு` என்று உரிமை கோர, அங்கு 50 மொய். இப்படி ஒரே ரூமில் மூன்று இடத்தில் மாமுல் கொடுத்துவிட்டதால் மீதி பணத்தை அந்த பையிலேயே போட்டுகொண்டு தெனாவட்டாக வெளியே வந்தேன்.

அடுத்து ஒரு பெரிய கேட். அங்கேயும் ஒரு காவலர். பணத்தை பையில் வெளிப்படையாக பார்த்ததால், `ஜெயிலுக்கு புதுசா? என்றார் அவர். நம்மால் கொண்டையை மறைக்க முடியாது என்பதால், `ஆமாம்` என்றேன்.

என்னுடைய ID கார்ட் வாங்கி பார்த்தார். 307 என்ற ஒரே செக்க்ஷன். பொதுவாக குற்றவாளிகள் என்றால் அவர்கள் மீது பல செக்க்ஷன் இருக்கும். எனக்கு அப்படி இல்லாததால் நான் குற்றவாளிகள் லிஸ்டில் வரவில்லை. எனவே `ஜெயில்ல பணமெல்லாம் வச்சிக்ககூடாது` என்று அக்கறையாய் உபதேசித்தவர், மறக்காமல் அவர் பங்காக 50 வாங்கிக் கொண்டார்.

எனக்கு புரிந்து போனது. இங்கே சிலை இருக்கும் இடமெல்லாம் கற்பூரம் ஏற்றவேண்டும். அடுத்து நான் இருந்த பிளாக் வாசலில் ஒரு சிலை இருக்கும் என்பதால் `அங்கேயும்கற்பூரமா` என்று டெண்ஷனானேன்.

நல்லவேளையாக எனக்கு இந்த வழியை சொன்ன நண்பர் வழியிலேயே வந்துவிட அவரிடம் ஒப்படைத்துவிட்டேன். நடந்ததையும் சொல்ல, அவர், `என்கிட்டே சொல்லிருந்தா நானும் மனு ரூமுக்கு வந்திருப்பேன். இவ்வளோ நஷ்டம் வராது என்றார். (அங்கே இருந்து இவர்கள் மறைத்து எடுத்து வந்துவிடுவார்கள்) 

`உங்களுக்கு மனு வராம, நீங்க எப்படி மனு ரூமுக்கு வருவீங்க?` என்றேன். சிரித்தார். நீங்க இப்பதானே வந்திருக்கீங்க. போகப் போக உங்களுக்கே தெரியும் என்றார்.

அதன்பிறகு காவலர்கள் சிலரே இதை செய்வதாக தெரியவந்தது. 10% தான் சேதாரம். ஆனால் எனக்கு வேறு சில அனுபவங்கள் ஏற்பட, எனக்கு சேதாரமே இல்லாமல் கிடைத்தது. எப்படி என்றெல்லாம் கேட்கக்கூடாது. நான் செய்தது  மிகப்பெரிய குற்றமோ அல்லது சிதம்பர  ரகசியமோ அல்ல. அதை எழுத ஆரம்பித்தால் அது இன்னொரு பதிவாக நீளும். எனவே அதை பிறகு பாப்போம்.

சிறை அனுபவம் பற்றி எழுதுவதை நான் குறைத்துக் கொண்டேன். சிறைத்துறையில் என்ன சீர்திருத்தங்கள் தேவை என எழுதுவதுதான் நோக்கமாக இருந்தது. ஆனால் பல வழக்குகளில் சிக்கி இருக்கும் இன்றைய, நேற்றைய ஆட்சியாளர்கள்  ஆரோக்கியமான மாற்றத்தை கொண்டுவருவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. எனவே அனுபவங்கள் என்ற வகையில் இது அவ்வப்போது வரும்.

7 comments:

Anonymous said...

எழுத்து நடை அருமையாக உள்ளது ஆனால் தொடர்ச்சி விட்டு விட்டு இருப்பதால் குழப்பமாய் உள்ளது.

விச்சு said...

சிறைக்குள் இவ்வளவு விசயங்கள் நடக்கிறதா!!! பணம் இருப்பவனுக்கு வீட்டைவிட சிறை சொர்க்கம்தான் போலும்.

Anonymous said...

Thanks for sharing these details. No one ever brought this much detail from INSIDE. This is shocking revelation. With your information, some one can take good Tamil Movie. It will give more details and awareness to everyone.

சிவானந்தம் said...

வாங்க தமிழ்மகன்.

//எழுத்து நடை அருமையாக உள்ளது ஆனால் தொடர்ச்சி விட்டு விட்டு இருப்பதால் குழப்பமாய் உள்ளது.//

நன்றாக, கோர்வையாக் எழுதும் திறமை எல்லோருக்கும் வராது. நான் புத்தகங்கள் வாசிப்பு மூலமாகவே ஓரளவு கற்றுக்கொண்டேன்.

வாங்க விச்சு,

///பணம் இருப்பவனுக்கு வீட்டைவிட சிறை சொர்க்கம்தான் போலும்.///

அப்படியும் சொல்லிவிட முடியாது. அங்கு இருக்கும் எல்லா கைதிகளும் (நன்றாக சம்பாதிப்பவர்கள் கூட) வெளியே வரவே விரும்புகிறார்கள். ஆனால் ஒரு முறை ஜெயிலுக்கு போனவர்களுக்கு பயம் தெளிந்துவிடுவதால், திரும்பி போவதற்காக அவர்கள் பயப்படுவதில்லை.

அவர்களுக்கு பயத்தை உண்டு பண்ண பல தீர்வுகளை சொல்லலாம். ஆனால் எதுவும் அமலுக்கு வராது..


வாங்க அனானிமஸ்,

//Thanks for sharing these details. No one ever brought this much detail from INSIDE. This is shocking revelation. With your information, some one can take good Tamil Movie. It will give more details and
awareness to everyone.///

சரியா போச்சு! அப்ப கூட இதை சினிமாவாதான் எடுப்பாங்க. சமூக ஆர்வலர்கள் கவனத்துக்கு போய் போராட்டமோ, மாற்றமோ வராது?

உங்க ஆசைப்படி யாராவது சினிமாவா எடுக்கட்டும். அப்படியாவது இங்க விழிப்புணர்வு வந்து சிறைத்துறையிலும் களைகள் எடுக்கப்பட்டால் சந்தோஷம்தான்.

திண்டுக்கல் தனபாலன் said...

சிறை அனுபவத்தை இவ்வாறு சொல்வதற்கே ஒரு தைரியம் வேண்டும்...
உங்கள் தளத்திற்கு முதல் வருகை !
பகிர்வுக்கு நன்றி...
தொடர வாழ்த்துக்கள் (த.ம.2)

ராஜ நடராஜன் said...

அதிர்ச்சி என்று ஒற்றை வரியில் முடித்துக்கொள்கிறேன்.

வடுவூர் குமார் said...

இதன் கோர முகம் பல படங்களில் பார்த்திருந்தாலும் Prison Break என்ற தொடரில் பல விஷயங்கள் காண்பித்தார்கள் அது போலவே இருக்கு உங்கள் விவரனையும்.

Post a Comment