!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Friday, November 27, 2020

1ஜி vs 2ஜி



நான் போடும் அரசியல் கணக்குகள் சரியாக பலிப்பதில்லை, இருந்தாலும் நம்மாலும் சும்மா இருக்க முடியவில்லை. தினம் சில விஷயங்கள் அதாவது அரசியல் சூழ்நிலைகளை கவனிக்கும்போது, அடடா இது இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்று தோன்றும். இது அந்த வகை.

இந்த முறை திமுக காங்கிரசுக்கு தொகுதிகளை குறைத்து ஒதுக்கும் என்று ஒரு செய்தி. காங்கிரசுக்கு மேலே கீழே என எங்கேயும் கவர்ச்சியான, உறுதியான தலைமை இல்லாததால் அவர்களின் வெற்றி வாய்ப்பு குறையும். அவர்களுக்கு கூடுதலாக இடம் கொடுத்தாலும், அதில் கால்வாசி கூட அவர்கள் ஜெயிக்க மாட்டார்கள், அது இந்த கூட்டணியை பலவீனப்படுத்தும் என நக்கீரனில் ஒரு கட்டுரை.

பிஹாரில் காங்கிரஸ் இன்னும் கொஞ்சம் கூடுதலாக வெற்றி பெற்றிருந்தால் அங்கே கதை மாறி இருக்கும். அதே கதை தமிழகத்திலும் நடக்கலாம். எனவே நானும் இதை வழிமொழிகிறேன்.

ஆனால் இங்கே இன்னொரு மிகப்பெரிய கணக்கு இருக்கிறது அதை ஸ்டாலின் கவனிக்கவில்லை. தமிழகத்தில் வாக்குகளை சேகரிப்பது மற்றும் வாக்குகளை `வாங்குவது`என இரண்டு விதமான அரசியல் வந்துவிட்டது. இதில் கண்ணுக்கு தெரியாத மற்ற மோசடிகள் வேறு.

அதுமட்டுமில்லாமல் தற்போது ஊழல் செய்வதை பற்றியோ, அதைப்பற்றிய செய்தி வருவதை பற்றியோ யாருக்கும் பயம் கிடையாது. தேர்தல் மோசடிகளும் அதே கதைதான். இந்த இரண்டு விஷயத்தையும் திமுக ஆரம்பித்து வைத்தாலும், அவர்களின் குட்டி (அதிமுக) பல மடங்கு வேகமாக போய் கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் காங்கிரசை விட பிஜேபிக்கு ஓட்டு வங்கி குறைவு. இருந்தாலும் அவர்களிடம் தற்போது அதிகாரம் இருக்கிறது. அந்த அதிகாரத்தின் பலமே தனி. அதை உணர்ந்ததால் எடப்பாடி இருக்கிறார், மேலும் இருக்கக்கூடும்.

ஆனால் பிஜேபிக்கு அதிமுக மீது தனிப்பற்று இருக்க வாய்ப்பில்லை. அவர்களுக்கு பார்லிமென்டில் மெஜாரிட்டி இருந்தாலும் ராஜ்யசபா என்பது இப்படியும் அப்படியும் இருப்பதால் அது மத்தியில் ஆட்சியில் இருக்கும் எல்லா அரசுகளுக்கும் பெரும் தலைவலியாக இருக்கிறது.  அங்கே பல சட்டங்களை நிறைவேற்ற இப்படி மாநிலங்களில் ஒரு துணை தேவை. அது யாராக இருந்தாலும் சரி.

இங்கேதான் காங்கிரஸ் திமுகவிற்கு மிகப்பெரிய தலைவலியாக இருக்கிறது. அவர்களை முன்பே கழட்டிவிட்டு, எதிர்காலத்தில் நாங்களும் தயார் என்ற சிக்னலை பிஜேபிக்கு கொடுத்திருந்தால், அது வேறு சில கணக்குகளில் உதவியாக இருந்திருக்கும்.

உதாரணத்திற்கு அதிமுகவிற்கு திமுகதான் எதிரி. எனவே இவர்களை தோற்கடிக்க அனைத்து தில்லாலங்கடி வேலையும் அதிமுக செய்யும். இங்கே பிஜேபிக்கு அந்த நோக்கம் இருக்க வாய்ப்பில்லை. தமிழகத்தில் யார் ஜெயித்தாலும்  (வழக்குகளின் உதவியோடு) நாளை  நம் பக்கம் இருப்பார்கள் என்ற எண்ணம் இருந்தால் அனாவசியமாக அதிமுகவின் முறைகேடுகளை ஆதரிக்க வேண்டியதில்லை.

தற்போது காங்கிரஸ் திமுகவுடன் இருப்பதால், அது பிஜேபியின் ஜென்ம வைரியாகவும் இருப்பதால், இவர்கள் ஜெயித்தால் கூட்டணி நிர்பந்தம் காரணமாக இவர்களும் ராஜ்யசபையில் எதிர் அணியில் இருப்பார்கள் என்பதால் பிஜேபியும் இந்த திமுக கூட்டணியை  ஸாரி, அவர்களின் பார்வையில், காங்கிரஸ் கூட்டணியை  ஜெயிக்கவிடாது. இதற்காக அதிமுகவின் அனைத்து முறைகேடுகளை கண்டுகொள்ளாது. ஏற்கனவே அவர்கள் அதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்

பிஹாரில் நிதிஷ்குமார் ஓரளவு நேர்மையானவர் என பெயர் எடுத்தவர். அவர் தேர்தல் மோசடிகளில் ஈடுபடமாட்டார். தமிழ்நாட்டில் இவர்கள் எதற்கும் அஞ்சாதவர்கள். இவர்கள் எப்படி ஓட்டை வாங்குவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஓன்று. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரே நேரத்தில் திமுக இரண்டு எதிரிகளோடு மோதுகிறது. அவர்கள் இருவருமே தங்கள் எதிரிகளை தலை எடுக்ககூடாது என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். இதை ஸ்டாலின் தவிர்த்திருக்க வேண்டும் 

அதிலும் மோடி, எடப்பாடி போன்றவர்கள் 1ஜி வகையறா. இங்கே ஸ்டாலின் 2ஜி என்றால் ராகுல் காந்தி 4ஜி. அவர்களிடம் இவர்களின் மோதல் எடுபடுமா?

வரலாற்றில் முதல் தலைமுறை வெற்றியாளர்கள் என்று உண்டு. அந்த வெற்றி பெற்ற மனிதர் எந்த பின்புலமும் இல்லாமல் வந்து வெற்றிகொடி நாட்டியிருப்பார். கபில்தேவ், கவாஸ்கர், அமிதாப் பச்சன், ரஜினி என எந்த துறை எடுத்தாலும் இப்படி பலர் இருப்பார்கள்.

இவர்கள்தான் திறமைசாலிகளாச்சே அந்த திறமையை அப்படியே தங்கள் வாரிசுகளுக்கு கொடுத்துவிட்டு போக வேண்டியதுதானே?  

அவர்கள் அனுபவங்கள் மூலம் அறிவை பெற்றவர்கள். இந்த வாரிசுகள், உயில் வழியாக அவர்களின் சொத்து மற்றும் அறிவு நமக்கு வந்துவிடும் என நினைப்பவர்கள். எனவே இந்த 1ஜி  களுடன் இவர்கள் மோதி ஜெயிப்பது சிரமம்தான்.