தமிழகத்தில் தற்போது இந்த குரல்கள் அதிகமாக கேட்க ஆரம்பித்துவிட்டன. இது இந்தியா முழுவதுக்கும்னா வியாதி என்றாலும் தமிழ்நாட்டில் இது கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. டில்லியில் பிரதமரை சந்திக்க சென்ற முதல்வர் விஜய்யை பார்த்து டில்லியில் இருந்த ஊடகவியாளர்களின் அந்த குரல், எனக்கு நிஜமாக தெருக்களில் அடிக்கடி கேட்கும் `அந்த குரல்களை` நினைவுபடுத்திவிட்டது.
ஏன் இந்த நிலைமை?
முதல் காரணம், தமிழகத்தில் கல்வி அறிவு அதிகம். அதைவிட அதிகம் வாசிப்பு ஆர்வம். ஒரு காலத்தில் பத்திரிக்கைகளாக இருந்த அவை தற்போது கூடுதலாக இணையமாகவும் மாறி இருக்கிறது. எனவே அவர்களுக்கு செய்தி என்ற தீனி அடிக்கடி தேவை.
இன்னொரு காரணம், தமிழ்நாட்டில் மக்கள் கிட்டத்தட்ட எல்லோரும் படித்தவர்களாக மாறிவிட்டார்கள். ஆனால் வேலை வாய்ப்பு இல்லை. வாத்தியாருக்கு படித்தவர்கள் வேலை கிடைக்காமல் 5000 -10000 க்கு தனியார் பள்ளியில் வேலை பார்க்கிறார்கள். வக்கீலுக்கு படித்து விட்டு அங்கேயும் போனி ஆகாமல், "எவ்வளவு கேஸ் இருந்தாலும் பரவாயில்லை, நான் பெயில் வாங்கி தரேன், கொடுக்கறத கொடு; இந்த மாசம் வருமானம் ரொம்ப கம்மி" என்று புலம்பும் அளவுக்கு வழக்கறிஞர்கள் தொழிலும் மாறிவிட்டது.
இதில் இப்போது ஊடகவியாளர்களும் அடக்கம். வேலை இல்லாமல் பலர் சகட்டு மேனிக்கு யூடியூப் சேனல் ஆரம்பித்துவிட்டார்கள். அவர்கள் பார்வையார்களை பெற ஐந்து நிமிடங்களில் எந்த ஒரு செய்தியையும் உண்மை என்னவென்று ஆராயாமல் சொல்லிவிடுகிறார்கள். இது பெரிய ஊடங்களுக்கு ஒரு நிர்பந்தத்தை கொடுக்கிறது.
"ஏதாவது பரபரப்பான செய்தி கொடுத்தால் நாளை உனக்கு வேலை" என்று இலக்குகள் அங்கேயும் வந்துவிட்டது. எனவே அவர்களும் "சார், ஏதாவது பாத்து கொஞ்சம் கொடுங்க சார்" என்று தலைவர்களை பார்த்து கெஞ்சும் அளவுக்கு வந்துவிட்டார்கள். பாவம் "எப்படி இருந்தவங்க இப்படி ஆயிட்டாங்க!" என்ற நிலை அவர்களுடையது.
இன்னொரு பக்கம் முதல்வர் ஊடகங்களை சந்திக்க வேண்டுமாம்! ஒரு தலைவர்/முதல்வர் அறிவாளிகளை சந்திக்க வேண்டும்; அவர்களின் கருத்துக்களை கேட்கவேண்டும். அப்போதுதான் அவரால் நல்ல நிர்வாகத்தை தரமுடியும். ஆனால் ஊடகவியாளர்களை ஏன் சந்திக்கவேண்டும்? அவர்களும் அறிவுக்கும் என்ன சம்பந்தம்? இந்த லாஜிக் எனக்கு புரியவில்லை.
நான் ஏற்கனவே நிறைய எழுதியிருக்கிறேன். மறுபடியும் எழுதுகிறேன். எப்படி அரசியல்வாதிகளிடம் தரம் குறைந்துவிட்டதோ அதேபோல் ஊடகவியாளர்களிடமும் தற்போது தரம் இல்லை. இப்போது இருப்பவர்கள் மக்களுக்கு செய்தியை சொல்லவோ அவர்களின் அறிவை வளர்க்கவோ ஊடகங்களை நடத்தவில்லை. அது முழுக்க முழுக்க ஒரு வேலை வாய்ப்பு. சர்வைவல் பிசினஸ். அவ்வளவுதான்.
இங்கே செய்திகளை மக்களுக்கு உண்மையை உணர்ந்து பகுத்தறிந்து சொல்வதைவிட, அதன் உண்மை தன்மையை ஆராயாமல், அதன் விளைவுகளை கவனிக்காமல் உடனடியாக சொல்லிவிட வேண்டும் என்ற நிர்பந்தத்தில் சொல்லிவிடுகிறார்கள்.
அதிலும் ஒருவன் 10 வார்த்தை பேசினால், அதில் ஓன்று ஏடாகூடமாக வந்துவிழும். அது அந்த நேர மனஅழுத்தமாக அல்லது அறியாமையாகவும் இருக்கலாம். ஆனால், நமக்கு இதுதான் பரபரப்பான செய்தி என இவர்கள் அதை செய்தியாக்கி விடுகிறார்கள். தலைவர்களும் இதற்கு பலியாகிவிடுகிறார்கள்.
நான் கட்டுரையை எழுதிவிட்டு சில மணிநேரம் கழித்து மறுபடியும் வார்த்தைகளை கவனிப்பேன். அதன்பிறகு சில வார்த்தைகள் நீக்கப்படும். சில வார்த்தைகளை கவனிக்க மாட்டோம். சில மாதங்களுக்கு பின் கவனித்தால் அந்த வார்த்தைகளும் தவறு என்பது புரியும். நமக்கே இப்படி என்றால், பிரபலமான தலைவர்களின் நிலை?
எதை பேசினாலும் அதில் ஒரு குறையை கண்டுபிடித்து அதை பரப்பாக்கி அதிகம் பார்வையாளர்களை பெற்று நமக்கு வேலை உறுதியானால் போதும் என்ற பசியோடு இன்றைய ஊடகவியாளர்கள் இருக்கிறார்கள். ஊடகவியாளர்களின் இந்த நிலை வருத்தத்திற்குரியதுதான். இருந்தாலும் இது அவர்களின் தலைவலி. அவர்களுக்கு தீனி போடவேண்டும் என்பதற்காக அவர்களிடம் இயல்பாக பேசி தலைவலியை விலைக்கு வாங்க எந்த தலைவரும் விரும்பமாட்டார்கள். இதுதான் மோடி மற்றும் விஜய் அவர்களின் நிலை.
ஊடகவியாளர்களிடம் மனம் விட்டு (ஆஃ த ரிகார்ட்டாக) பேசுவதும் நல்லதுதான்; ஆனால் அதுவும் எதிர்காலத்தில் புத்தகமாக வெளிவரும் ஆபத்து இருக்கிறது. அந்த எதிர்காலம் 50 வருடமாக இருந்தால் தலைவலி இல்லை. அங்கேயும் சுயசரிதங்கள் தற்போது விரைவாக வெளிவருகிறது.
தலைவர்கள் அடிக்கடி இவர்களை சந்திப்பது நல்லதுதான். ஆனால் அவர்கள் எப்போது இதை வியாபாரமாக பார்க்க ஆரம்பித்துவிட்டார்களோ, இனி அவர்களை புறக்கணிப்பதுதான் நல்லது. இனி இதுதான் நியூ நார்ம்ஸ்.
இதில் இன்னொரு கசப்பான உண்மை ஊடகங்களை புறக்கணிப்பவர்கள்தான் அரசியலில் ஜெயிக்கிறார்கள். ஜெயிப்பவன் சரியான பாதையில்தான் போய்கொண்டிருக்கிறான். ஜெயிப்பவன் எப்போதும் பாதையை மாற்றமாட்டான். இதையும் இந்த ஊடகங்கள் புரிந்துகொண்டு அவர்கள் தரப்பு குறைகளை சரி செய்யாத வரை இந்த நிலை தொடரும்.

0 comments:
Post a Comment