அகமதாபாத் செல்வதாக கடலூரில் இருக்கும் ஒரு நண்பருக்கு சொல்லி இருந்தேன். நான் சிறையிலிருந்து விடுதலையான பிறகு கடலூருக்கு போகவில்லை. போகும் மனநிலையிலும் இல்லை. எனவே அவர் `நானே வந்து பார்க்கிறேன்` என்று ஊருக்கு போவதற்கு முதல்நாள் வந்தார்.
பழைய நண்பர்கள் சந்தித்தால் பேசுவதற்கு நிறைய விஷயம் இருக்கலாம். என்னிடம் இல்லை. காலம் என்னை மாற்றி இருந்தது. பேச்சு குறைந்துவிட்டது. அதுமட்டுமின்றி, மறுநாள் பயணம் என்பதால், வேறு வேலைகளும் இருந்தது. இப்படி பயண வேளையில் நான் பிசியாக இருந்தால் இவருக்கு போரடிக்குமே, என்ன செய்வது என்ற கவலையில் மூழ்கினேன்.
அந்தநேரம் சென்னையில் பழக்கமான ஒருவர் வந்தார். இவர் கொஞ்சம் வயதானவர். நான் நமது கடலூர் நண்பருக்கு அவரை அறிமுகப்படுத்திவிட்டு, கடையில் அவர்களை விட்டுவிட்டு, மற்ற வேலைகளை முடிக்க கிளம்பினேன்.
போன இடத்திலயும் வேலை உடனே முடியவில்லை. நண்பர் தனியாக இருப்பாரே, வந்தவரை இப்படி விட்டுவிட்டு வந்தால் அவர் என்ன நினைப்பார் என்று அவசரமாக கிளம்பிவந்தேன்.
இங்கே அவர்கள் பேசிகொண்டிருந்தார்கள். நான் கொஞ்சம் ரிலாக்ஸாக அமர்ந்தேன். அவர்கள் தொடர்ந்ந்ந்ந்நது பேசிக்கொண்டிருந்தார்கள். இப்போது எனக்கு போரடிக்க ஆரம்பித்துவிட்டது.
மனிதர்கள்தான் எத்தனை வகை? நெருங்கிய நண்பருடன் பேச வார்த்தைகள் இல்லாமல் நான். ஆனால் அவர்கள் இருவரும் அறிமுகமானதே அன்றுதான். இருந்தாலும் மணிக்கணக்கில் பேச அவர்களிடம் விஷயம் இருக்கிறது. வித்தியாசமான மனிதர்கள்.
இதற்கு என்ன செய்யலாம்?
நான் ஊருக்கு போதும் அதே தேதியில் என் அத்தையும் அகமதாபாத்துக்கு போகிறார். சரி பேச்சு துணைக்கு (அதாவது அவர்கள் பேச எனக்கு பொழுது போகும்) என்று சந்தோஷப்பட்டேன். வேறு வேறு தேதியில் டிக்கெட் எடுத்திருந்தாலும், ஆச்சர்யமாக ஒரே பெட்டியில் சீட். அத்தையுடன் அவருடைய உறவினர்களும்.
நான் பெட்டியை வைத்துவிட்டு புத்தகம் வாங்க கிளம்பினேன். `எனக்கு குமுதம் வேணும்` என்றார் வந்த உறவினரில் ஒருவர். எங்களுக்கு சீட் கடைசி பெட்டியில். திரும்பி நடக்க நடக்க புத்தக கடையையே காணோம். அந்த நேரம் என் மாமா பையன் என்னை வழி அனுப்ப வந்துகொண்டிருந்தான்.அவனையே வாங்கி வரச் சொன்னேன். வாங்கி வந்தான். அவன் தமிழ் படிக்கத் தெரியாத தமிழ்மகன்.
வண்டி கிளம்பிய பிறகு, முன்னுரிமை துறையான அரசியல், நாட்டு நடப்பு என அன்றைய பேப்பரை மேய்ந்துவிட்டு நிதானமாக குமுதத்தை புரட்டினேன். கிளம்பும் முன் இணையத்தை மேய்ந்தபோது, வீடு திரும்பல் மோகன்குமார் ஜென்கதைகள் குமுதத்தில் வந்ததை குறிப்பிட்டிருந்தார். அது இதில் இல்லை. அப்போதுதான் கவனித்தேன், அது போன வார குமுதம் என்பதை. நான் 5 ம் தேதி புக் வாங்கி இருக்கிறேன். அது 1ம் தேதி முடிவடைந்த புத்தகம்.
நெற்றிக்கண் திறக்கும் அளவுக்கு இதில் எனக்கு நஷ்டமில்லை. எனக்கு கோவம் வந்தது மக்களின் அறியாமையை /அவசரத்தை இவர்கள் முறைகேடாக பயன்படுத்திக்கொள்வதும், இப்படிப்பட்டவர்களை தண்டிக்க ஒரு அமைப்பும் இல்லாததுதான்.
பழைய புத்தகம் விற்பதால் அவருக்கு கூடுதல் லாபமா, அல்லது அதை ரிடன் செய்ய முடியாமல் நஷ்டத்தை தவிர்க்க விற்கிறாரா என்ற விஷயம் நமக்கு தெரியாது. ஆனால் புது புத்தகம் வந்து 5 நாள் கழிந்த பிறகும் பழைய புத்தகத்தை விற்றால் அது மோசடிதானே?
வண்டி கிளம்பி போன பிறகுதான் நான் இதை கவனித்தேன். முதலிலேயே கவனித்திருந்தாலும் என்ன செய்ய முடியும்? சண்டைபோட முடியுமா அல்லது இதற்காக போலீசில் புகார் கொடுக்க முடியுமா?கன்னத்தில் இரண்டு அறை கொடுக்க வேண்டிய குற்றம் இது. ஆனால் யார் செய்வது?
சமூகத்தை சீர்திருத்த அரசுதான் முன்வரவேண்டும் என்றில்லாமல் சில சமூக காவலர்கள் இதற்கும் கிளம்பலாம். தமிழ் மொழியை காப்பாற்ற கடைகளில் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட போர்ட்களை அழிக்க கிளம்புகிறார்கள். சிலர் கலாச்சரத்தை காக்க காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க கிளம்புகிறார்கள்.
அதேபோல் இதற்கும் ஒரு தன்னார்வ அமைப்பு தேவை. இப்படி சின்ன சின்ன மோசடிகள் கவனத்துக்கு (புகாராக) வந்தால், அதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டு, அதை செய்பவர்களுக்கு அங்கேயே நாலு அறை விடலாம். அல்லது அவர்களுக்கு அபராதம் விதித்து இவர்களுக்கு நிர்வாக நிதி சேர்க்கலாம்.
ஏதாவது ஒரு இயக்கம் முறையான நிர்வாக அமைப்போடு, வெளிப்படைத்தன்மையும் நிறைந்ததாக இருந்து, இது போன்ற குற்றங்களுக்கு அறை கொடுக்க கிளம்பினால், கீழ்மட்ட குற்றங்கள் விரைவாக குறையும்.
தவறு செய்பவர்கள் தண்டிக்கப்படவேண்டும். அது பெரிய குற்றமாக இருந்தாலும் சரி, சிறியதாக இருந்தாலும் சரி.
இதோ நான் புகார் பதிவு செய்துவிட்டேன். யாராவது அந்த வேலையை ஆரம்பியுங்கள்.
படித்தவர்கள்?
மொபைலில் பேட்டரி டவுன். வண்டியிலேயே சார்ஜ் செய்ய போனால், அங்கே இரண்டு பேர் சார்ஜ் செய்துக் கொண்டிருந்தனர். சரி, காத்திருப்போம் என இருந்தால், அவர்கள் நகரவே இல்லை. `இது டிரைன். எல்லாருக்கும் அவசரம் இருக்கு`ன்னு சொன்னாலும், அவர்கள் இதோ இதோ என இழுத்தார்கள்.
எனக்கு இங்கே ஒரு சிறை அனுபவம் ஞாபகத்துக்கு வந்தது. அங்கே சிறை லைபரரியில் இது போன்ற தலைவலி உண்டு.
அங்கே புதுக்கைதிகள் லைப்ரரிக்கு போவதே சிரமம். புதுக்கைதிகளை வெளியே போகவிட்டால் அவர்கள் தப்பி வேறு பிளாகுக்கு போய்விடுவார்கள் என்பதால்,ரைட்டர்களும் இவர்களை வெளியே போக அனுமதிக்கமாட்டார்கள்.
சிறையில் பழைய கைதிகள் வார்டன்களை மதிப்பதில்லை. அப்புறம் அவர்கள் தங்கள் வீரத்தை எங்கேதான் காட்டுவது? எனவே அவர்களும் சொத்தை காரணத்தை சொல்லி புதுக்கைதிகளை வெளியே அனுப்பமாட்டார்கள். இந்த தலைவலிகளை சமாளித்து வாரத்துக்கு ஒரு நாள் லைப்ரரிக்கு போக முடிந்தாலே அதிர்ஷ்டம்தான்.
அப்படி கஷ்டப்பட்டு லைப்ரரிக்கு வந்தாலும், எல்லோரும் பேப்பர் படித்துக்கொண்டிருப்பார்கள். முந்திய நாள் பேப்பரும் இருக்காது, அன்றைய பேப்பர் மட்டுமே இருக்கும்.
லைப்ரரி வார நாட்களில் மட்டும்தான் திறந்திருக்கும். இதுபோன்ற நாட்களில்தான் உறவினர்கள் நம்மை பார்க்க வருவார்கள். சிலசமயம் நீங்கள் லைப்ரரியில் இருக்கும்போது உங்களுக்கு மனு வரும். மனு படிப்பவன் பிளாக்கில் உங்கள் பேரை கத்திவிட்டு, ஆள் இல்லை என மனுவை திருப்பிவிடுவான். உங்களை பார்க்க வந்த உறவினர் உங்களை பார்க்காமலே திரும்ப வேண்டியதுதான். எனவே மனு எதிர்பார்ப்பில் இருப்பவர்கள் விரைவாக படித்துவிட்டு போகவேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அது நடக்காது.
தமிழ் பேப்பராவது கலைக்கப்பட்டிருக்கும். ஆளுக்கு ஒரு பேப்பர் வைத்துக் கொண்டு படிப்பார்கள். இங்கிலீஷ் பேப்பர் படிப்பவர்கள் ரொம்ப மோசம். பர்பெக்ஷனாக இருக்கிறேன் என்று முழு பேப்பரையும் கையில் வைத்துக் கொண்டு படிப்பார்கள்.
இங்கே லைப்ரரி உதவியாளர் நமது நண்பர் என்பதால், லைப்ரரி திறந்தவுடன் எல்லா பேப்பரயும் தனித்தனியே பிரித்து போடச் சொன்னேன். ஆனால், அதுவும் பலனளிக்கவில்லை. வருபவர்கள் மெனக்கெட்டு அதை ஒழுங்காக அடுக்கி, முழு பேப்பரையும் கையில் வைத்து கொண்டு படிப்பார்கள்.
2ம் பக்கம் படித்துவிட்டு 10ம் பக்கம் படித்தால் குடியா முழுகிவிடும். ஆனால் இவர்கள் 2ம் பக்கம் 3ம் பக்கம் என வரிசையாக படித்துவிட்டு கொடுப்பதற்குள் மற்றவர்களுக்கு பிபி ஏறும்.
ஒரு பொது இடத்தில் நமக்கு ஒரு வசதி கிடைத்தால் அதை அனைவரும் பகிர வேண்டும் என்ற நாகரீகம் பலரிடம் இல்லை. படித்தவர்களிடமும் அது இல்லை என்பது இன்னும் மோசம்.
8 comments:
சிவானந்தம் ,
அகமாதாபாத்தில் இருக்கிங்களா, அப்போ அப்படியே பயணக்கட்டுரை ஒன்று போடவும், வெளியூர் போனால் பயணக்கட்டுரை போடுவது பதிவுலக பாரம்பரியம் :-))
வேலாயுதம் படம் நியுசினிமாவில் பார்த்து விமர்சனம் எல்லாம் போட்டிங்க, அப்போ அதன் பிறகு தான் சிறைவாசமா? நான் ரொம்ப பழைய சிறைவாச அனுபவம் என நினைத்துக்கொண்டேன்.
----
பேருந்து நிலையத்திலும் பழைய புத்தகம் விற்கிறாங்க. ஜீவி பழைய புத்தகம் கொடுத்தான், எப்போதும் வாங்கியதும் சிலப்பக்கங்கள் புரட்டுவேன் ,அப்போது பழைய செய்தியாகவே இருக்கவே என்ன என டேட்ப்பார்த்தால் பழைய சரக்கு.
கடைக்காரனிடம் ஏன் இப்படி என கேட்டேன், நீங்க தானே ஜீவி கேட்டிங்க, என்க்கிட்டே பழசுதான் இருந்துச்சு கொடுத்தேன் என்றான், நான் கேட்டது புதுசு , என சொல்லி புத்தகத்தையும் நீயே வச்சுக்கோ, 10 ரூ பிச்சைக்க்காரனுக்கு போட்டதாக இருக்கட்டும் என சொன்னதும் ரோஷம் வந்து 10 ரூ கொடுத்துவிட்டான் :-))
வாங்க வவ்வால்,
//வெளியூர் போனால் பயணக்கட்டுரை போடுவது பதிவுலக பாரம்பரியம் :-))///
அது தானா வரணும்.
///வேலாயுதம் படம் நியுசினிமாவில் பார்த்து விமர்சனம் எல்லாம் போட்டிங்க, அப்போ அதன் பிறகு தான் சிறைவாசமா? நான் ரொம்ப பழைய சிறைவாச அனுபவம் என நினைத்துக்கொண்டேன்.///
நான் சிறைக்கு போனது 2008 ல். விடுதலையானது 2010 ல் . அதன்பிறகு கடலூருக்கு போகவில்லை. படம் பார்த்ததும் சென்னையில்தான்.
----
/// ...என சொல்லி புத்தகத்தையும் நீயே வச்சுக்கோ, 10 ரூ பிச்சைக்க்காரனுக்கு போட்டதாக இருக்கட்டும் என சொன்னதும் ரோஷம் வந்து 10 ரூ கொடுத்துவிட்டான் //
இந்தியன் படத்தில் கமல் சொன்னமாதிரி, நாம் செய்வது தவறு என்பதை உணராத அளவுக்கு தவறுகள் சகஜமாகிவிட்டது. யாராவது தடி எடுத்தால்தான் மாற்றம் வரும்.
நல்ல பயனுல்ள்ள பதிவு
நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
பதிவாக்கிப் பகிர்ந்து கொண்டதற்கு நன்றி...
சிவா,
நாங்க சண்டிகர் என்ற நகரத்தில் இருந்தப்ப, அங்கே தென்னிந்தியர்களுக்குன்னே இருக்கும் கடையில் தமிழ்புத்தகம் பார்த்துட்டு ஆசைஆசையா வாங்குவோம்.
ரெண்டு வருசப்பழசெல்லாம் கலந்து போட்டு வச்சுருப்பாங்க.
எல்லாமே எங்களுக்குப் புதுசாத்தான் தெரியும்.
தமிழே இல்லாத நாட்டில் இருந்து போனதால்.... கிடைச்சால் போதுமுன்னு கொதிச்சுக்கிடந்தோம்.
இதைப்போலவே சிங்கை போய் வரும் வழியில் கோபால் செராங்கூன் சாலைக் கடைகளில் இருந்து
பழைய குமுதம் கல்கி ஆவி எல்லாம் நிறைய விலை கொடுத்து வாங்கி வருவார். எங்களுக்கு வேறு வழி இல்லை:(
ஆனால் உள்ளூரில் இப்படிப் பழசைக் கொடுத்து ஏமாற்றுவது சரியில்லை:(
வாங்க தனபாலன். உங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
--------
வாங்க துளசி,
இங்கே அகமதாபாத்திலும் அதே நிலைமைதான். தமிழ் என்றில்லை குஜாரத்தி இந்தி என எந்த புத்தகமும் அதிகம் கிடையாது. தமிழ்நாட்டில் தெருவுக்கு இரண்டு புத்தகக் கடைகளை பார்த்த கண்களுக்கு இந்த ஊர் பாலைவனமாகத்தான் தெரிகிறது.
//ஒரு பொது இடத்தில் நமக்கு ஒரு வசதி கிடைத்தால் அதை அனைவரும் பகிர வேண்டும் என்ற நாகரீகம் பலரிடம் இல்லை. படித்தவர்களிடமும் அது இல்லை என்பது இன்னும் மோசம்.
//
உண்மைதான், பேருந்து நிலைய கழிப்பறையை கூட பின்னால் நிற்பவனுக்கு விடாமல், எங்கோ நிற்க்கும் நன்பனை அழைத்து,எனக்கு அடுத்து இவரு என்று அறிமுகம் செய்யும் பல டை கட்டிய கோமான்களை நான் கண்டதுண்டு
என்ன செய்ய..? ஒவ்வொரு மனிதர்களின் மனதிலும் சுயநலம் குடிக்கொண்டுள்ளது.. ஒவ்வொருவரும் ஏதாவது செய்து பிழைத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளனர்.
தவறு பழைய புத்தகம் விற்றவர் கையில் இல்லை.. அதை சரியாகப் பார்த்து வாங்காததது தங்களுடைய குற்றமே..!
இதுதான் உலகம்.. !
Post a Comment