இந்த வாரம் மோடியின் சாதனைகளைப் பார்ப்போம். நிஜமாகவே அவர் பல விஷயங்களில், பல துறைகளில் சாதித்திருக்கிறார். அதேசமயம் சில இடங்களில் அவருக்கு அதிர்ஷ்டம் கை கொடுத்திருக்கிறது. அதை இங்கே பார்ப்போம்.
மோடியின் தேசபக்தி, நிர்வாகத்திறமை, இந்தியாவை வல்லரசாக்க வேண்டும் என்ற துடிப்பு என எல்லாமே அவரை சிறந்த தலைவராகத்தான் காட்டுகிறது. நானும் அதை நம்புகிறேன். வரலாறு எப்போதுமே இப்படித்தான். வாழும்போது தூற்றும், மறைந்த பிறகு போற்றும்.
காரணம், அரசியலில் Coexist என்ற தியரி கிடையாது. ஒருவர் எவ்வளவு நல்ல தலைவராக இருந்தாலும், நிஜத்தில் அவர் உங்களுக்குப் போட்டியாளர். எனவே வாழும்வரை அவருடைய குறைகளைச் சொல்லிக்கொண்டே/மிகைப்படுத்திக்கொண்டே தான் அரசியல் செய்யவேண்டும். அப்போதுதான் நீங்கள் அதிகாரத்துக்கு வர முடியும். பெரும்பாலான தலைவர்களுக்கு இதுதான் நடந்திருக்கிறது.
தொடர்ந்து வட இந்திய மாநிலங்கள் இஸ்லாமிய, ஆங்கிலேய அடக்குமுறையில் இருந்ததால், அவர்கள் செய்த அட்டூழியங்கள் மக்கள் மனதில் ஆழமாகப் பதிந்துவிட்டன. அது தலைமுறை தலைமுறையாக மக்களிடம் கடத்தப்பட்டு, அந்தத் தவறு மறுபடியும் நடந்துவிடக்கூடாது என்று வட இந்தியர்கள் நினைக்கின்றனர். எனவே சிறுபான்மையினர் விஷயத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கின்றனர். அந்த மனப்பான்மைதான் மோடியிடமும் இருக்கிறது.
அதை சிறுபான்மையினர் மீதான வெறுப்பு என்று சொல்லுங்கள், மதவாதம் என்று சொல்லுங்கள், அது உங்களின் பார்வைக்கோளாறு. தலைவலியும் திருகுவலியும் நமக்கு வந்தால்தான் தெரியும் என்பது போல் தமிழ்நாட்டு மக்கள் அந்தத் தலைவலியை அனுபவிக்காதவர்கள். எனவே விடிய விடிய கதை சொன்னாலும் தமிழ்நாட்டு சோ கால்டு அறிவுஜீவிகளுக்கு அது புரியாது. எனவே அதைத் தாண்டி பொருளாதாரத்தை மட்டும் இங்கே பார்ப்போம்.
இங்கே நான் அலசப்போவது சில பிஜேபி அலப்பறைகளின் புள்ளி விவரங்களைத்தான். மோடியின் திறமையை குறை சொல்லும் பதிவல்ல இது. சில இடங்களில் இது உங்களின் சாதனை அல்ல என்பதை சுட்டிக்காட்டும் பதிவு இது.
இவர்கள் சொல்லும் முக்கியமான விஷயம், மோடி வந்த பிறகுதான் இந்தியாவின் ஜிடிபி வேகமாக உயர்ந்ததாகவும், இந்திய பொருளாதாரம் தற்போது 3-4ஆம் இடத்துக்கு வந்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த புள்ளிவிவரம் உண்மைதான். ஆனால் நடைமுறை புள்ளிவிவரம் என வேறு ஒன்று இருக்கும்.
வழக்கம் போல் உதாரணம் சொல்ல கிரிக்கெட்டுக்குதான் போக வேண்டும். அதுதான் ரொம்ப சுலபமாக இருக்கிறது. இங்கே ஓப்பனிங் பேட்ஸ்மேன்கள் முதல் 10 ஓவரில் 40-50 ரன்கள் எடுக்கிறார்கள். அதே அணியின் கடைசி வீரர்கள் கடைசி 10 ஓவரில் 80-100 ரன்கள் எடுக்கிறார்கள். இப்போது இங்கே யார் பேட்ஸ்மேன்? கடைசியில் விளையாடி 100 ரன்கள் எடுத்தவர்களை பேட்ஸ்மேன் என்று யாராவது சொல்வார்களா? முடியாதல்லவா.. அதேதான் அரசியலிலும்.
இந்திய பொருளாதாரத்தில் காங்கிரஸ் ஓப்பனிங் பேட்ஸ்மேன். அனுபவமின்மை காரணமாக, சூழ்நிலை காரணமாக பல தவறான முடிவுகளை எடுத்தார்கள், தடுமாறினார்கள், சொதப்பினார்கள் என எல்லா குளறுபடிகளும் இருந்தன. இருந்தாலும், ஒரு கட்டத்தில் தடுமாறிய இந்தியாவை ரன் ரேட் பற்றி கவலைப்படாமல், நிதானமாக செயல்பட்டு ஓரளவுக்கு பாதுகாப்பான சூழ்நிலைக்கு இந்தியாவை கொண்டுவந்து நிறுத்தியதும் அவர்கள்தான்.
அதன்பிறகு வந்தவர்தான் மோடி. ஒரு பாதுகாப்பான சூழ்நிலைக்கு வந்துவிட்டோம் என்பதை உணர்ந்தபின் பேட்ஸ்மேன்கள் என்ன செய்வார்கள்? அடிக்க ஆரம்பிப்பார்கள். அதைத்தான் மோடி செய்திருக்கிறார். ஒருவேளை காங்கிரஸ் 100 ரன்னுக்கு எட்டு விக்கெட் என்ற பலவீனமான நிலையில் விட்டிருந்தால், மோடியால் இந்த சாதனையைச் செய்திருக்க முடியுமா? தலையால் தண்ணீர் குடித்திருப்பார்.
ஏற்கனவே கடந்த பதிவில் சொன்னேன், மறுபடியும் சொல்கிறேன். ஜனநாயக நாட்டின் வளர்ச்சி என்பது ஒரு ரிலே ரேஸ் போன்றது. இங்கே தனிநபர் சாதனையாளர் இல்லை. யாராவது ஒருவருக்கு ஆட்டநாயகன் விருதை கொடுக்கலாம். அப்போதும் மற்றவர்களின் ஒத்துழைப்பு தேவை. இங்கே எல்லோரும் அவரவர் பங்கைச் சரியாக செய்தால்தான் ஜெயிக்கமுடியும்.
இனி மோடியின் சாதனையை சில சம்பவங்கள் மூலம் பார்ப்போம்.
ஒரு அரிசிக் கடை. அப்பா மாதத்துக்கு 100 மூட்டை விற்கிறார். காலம் மாறுகிறது. 5 ஆண்டுகளுக்குப் பிறகு மகன் நிர்வாகத்தில் அமர்கிறார். இவர், `அப்பாவை விட நான் 20 சதவிகிதம் விற்பனையை அதிகரித்துவிட்டேன்` என்று பெருமை பேசினால் எப்படி இருக்கும்?
இங்கே மகனும் 100 மூட்டைதான் விற்கிறார். ஆனால் வளர்ச்சி எப்படி? விலைவாசி 20 சதவிகிதம் ஏறி விட்டது. இப்போது விலையின் அடிப்படையில் பார்த்தால் வளர்ச்சி, விற்பனை அதேதான். ஆனால் தன்னை சாதனையாளராக காட்டிக்கொள்ள விலைவாசி அடிப்படையிலான புள்ளிவிவரத்தை மட்டும் நம்மிடம் சொல்கிறார்.
சரி, இப்போது மகன் 30 சதவிகித வளர்ச்சியைக் காட்டினால். இதையும் நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். ஏனென்றால் மக்கள் தொகை வளர்கிறது. 1000 பேர் இருந்த ஊரில் இப்போது 1100 என்றால், அவர்கள் கூடுதலாக அரிசி வாங்குகிறார்கள். வாடிக்கையாளர் எண்ணிக்கை என்னவோ அதேதான். எனவே இதையும் வளர்ச்சியில் காட்ட முடியாது.
சரிப்பா.. இப்போது மகன், `நான் 100 சதவிகிதம் வளர்ச்சியை காட்டிவிட்டேன், அதாவது நான் 200 மூட்டை விற்கிறேன்` என்று சொன்னால்? நிச்சயம் இது வளர்ச்சிதான். ஆனாலும் நான் சந்தேகப் பேர்வழி. எனக்கு மேலும் பல தகவல்கள் வேண்டும்.
அரிசி விற்ற மொத்த வியாபாரியிடம், நிஜமாகவே 200 மூட்டை அனுப்பினாயா என்றும், இங்கே மூட்டையை இறக்கும் கூலித்தொழிலாளியிடம் சரக்கு இந்த கடையில்தான் இறங்கியதா என்றும் குறுக்கு விசாரணை செய்வேன். ஏனென்றால் அவன் பொய்யாக பில் போடலாம், அல்லது சரக்கை வேறு எங்கோ இறக்கிவிட்டு அதை இந்த கடையில் கணக்குக் காட்டலாம்.
இது ஆடிட்டர் காலம். தன்னை சாதனையாளனாகக் காட்டவேண்டும் என்று ஒரு வியாபாரியோ, அரசியல்வாதியோ நினைத்துவிட்டால் அதை செய்ய ஆயிரம் வழிகள் இவர்களுக்கு தெரியும். அதற்கு தேவையான புள்ளிவிவரங்களும் இருக்கும்.
உண்மையிலேயே இந்த ஆள் 200 மூட்டை அரிசி விற்றிருந்தால்? ஒரே ஒரு பரீட்சை போதும். கல்லாவில் எவ்வளவு காசு இருக்கிறது என்று பாருங்கள். அது உண்மையை சொல்லிவிடும்.
இங்கே கல்லாவில் 100 மூட்டைக்கான காசுதான் இருக்கிறது. மீதி கிரெடிட் கார்டு.. இப்போது தெரிகிறதா இந்த மோடியின் சாதனையின் பின்னால் இருக்கும் சூட்சுமம். அதாவது இது EMI driven growth. ஏதாவது ஒரு கடையில் நான் போய் அமர்ந்து, இங்கு அனைத்து கார்ட்களுக்கும் கடன் கிடைக்கும் என்று போர்ட் போட்டால், என்னாலும் ஒரே மாதத்தில் விற்பனையை இரு மடங்காக மாற்ற முடியும். இதற்கு திறமை தேவையில்லை.
மக்கள் தொகை பெருக்கம், விலைவாசி உயர்வு இவை காங்கிரஸ் ஆட்சியும் சந்தித்த பிரச்சினைகள். ஆனால் பொருளாதார வளர்ச்சியின் முதல் நிலையான உணவு, உடை என்ற நிலைக்கு மனிதர்கள் வரும்போது இவற்றின் விலை மதிப்பு காரணமாக ஜிடிபியும் குறைவாகவே இருக்கும். அத்துடன் இவற்றுக்கு EMI என்ற வசதி தேவைப்படாது.
ஆனால், இந்தியா இந்த நிலையை கடந்து, ஆடம்பரப் பொருட்களை மக்கள் வாங்க ஆரம்பித்த நேரத்தில் மோடி வந்து பதவியில் அமர்ந்திருக்கிறார். அடுத்த கனவான, வீடு என்ற இலக்கை நோக்கியும் மக்கள் நகர்கிறார்கள். பணம் இருப்பவனுக்கு பிரச்சினையில்லை. இல்லாதவர்களுக்கு அது சாத்தியமில்லாத கனவாக இருக்கிறது. இவை எல்லாமே விலை அதிகமாக உள்ளவை என்பதால், இப்போது EMI எனும் அரக்கன் உள்ளே நுழைகிறான்.
இங்கே கனவுகள் தூண்டப்படுகின்றன. கல்வி மனிதர்களிடையே அறிவை மட்டும் வளர்க்காமல், பொறாமையையும் புகைச்சலையும் சேர்த்தே வளர்க்கிறது. `நான் அவனுக்கு சமமாக இருக்க வேண்டும்` என்று பலர் ஏதோ ஒரு எதிரியை மனதில் நிறுத்தி, அவர்களைப் போலவே உயர நினைக்கிறார்கள். சாத்தியமில்லாதவர்களுக்கு EMI ஒரு வரப்பிரசாதமாகத் தெரிகிறது. இது ஒரு புதைகுழி எனத் தெரியாமல் குதிக்கிறார்கள். அதாவது தேவையில்லாததையும், அவர்களால் முடியாததையும் வாங்கிக் குவிக்கிறார்கள்.
நாட்டைப் பொறுத்தவரையில் இவை அத்தனையும் விற்பனையில் வரும். அது ஜிடிபி வளர்ச்சியாகக் காட்டும். இதுதான் தற்போதைய ஜிடிபி வளர்ச்சியின் முக்கியமான காரணம். இந்த காலகட்டத்தில் யார் பிரதமராக இருந்தாலும் இந்த வளர்ச்சியைக் காட்ட முடியும்.
ஜிடிபி என்பதே ஒரு புரியாத கணக்கு. அதை போஸ்ட் மார்ட்டம் செய்தால்தான் பல உண்மைகள் வெளியே வரும். உணவு நிரந்தரமான பொருள் மாதா மாதம் வாங்கியாக வேண்டும். ஆடை வருடம் இரண்டு முறை. இவை இரண்டும் நிரந்தரமானவை. இவற்றிற்கான ஜிடிபியை தனியே பிரித்து அதை தனியே கணக்குக் காட்ட முடிந்தால் இந்த குழப்பம் வராது.
ஆனால் ஆடம்பரப் பொருட்கள் குறிஞ்சி மலர் போன்றது. ஒரு முறை வாங்கிவிட்டால் அடுத்த 10 வருடம் ஓட்டிவிடலாம். வீடு 30 -40 ஆண்டுகால முதலீடு.
மக்கள் தற்போது எதிர்கால தேவையை EMI என்ற அரக்கனை பயன்படுத்தி வாங்குகிறார்கள். அதாவது அடுத்த 10 முதல் 50 ஆண்டுக்கான விற்பனையை மோடி தற்போது அட்வான்ஸாக காட்டுகிறார். பொருளாதாரத்தில் இது இயற்கை என்றாலும், இது எப்படி சாதனையாகும்?
இது எப்படி இருக்கிறது என்றால், மாதம் 10 கிலோ அரிசி வாங்குபவனை மொத்தமா 100 கிலோ வாங்கிக்க என அவன் தலையில் கட்டிவிட்டு, விற்பனையை இன்றைய சாதனையாகக் காட்டுவது. ஆனால் அடுத்த 10 மாதம் அவன் அரிசி வாங்க வரப்போவதில்லை. அப்போது வேறு ஒரு பிரதமர் இருப்பார். அப்போது ஜிடிபி தடுமாறும். இதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது.
எனவே அடுத்த 10 ஆண்டுகளுக்கு EMI கிடையாது என்று சொல்லிப்பாருங்கள். காங்கிரஸ் எந்த மாதிரியான வியாபார முறையை கடைபிடித்ததோ அதே முறையில் மோடியும் செய்யட்டும். அதன்பிறகு காட்டுங்கள் உங்கள் ஜிடிபி வளர்ச்சியை.
இங்கே இன்னொரு விஷயமும் நடக்கிறது. நாடு வளர்ச்சியடைய வேண்டுமென்று, பல ஹைவேக்கள், மெட்ரோ திட்டங்கள், பாலங்கள் என எல்லாமே இந்த 10 ஆண்டுகளில் வேகம் எடுத்திருக்கிறது. இவையும் ஜிடிபியில் பதிவாகும். ஆனால் இவையெல்லாம் ஒரு காலகட்டத்தில் நின்றுவிடும். அதன் பிறகு?
காங்கிரஸ் ஆண்ட காலத்தின் சூழ்நிலை வேறு, அவர்கள் சந்தித்த பிரச்சினை வேறு. இந்தியாவின் பெரும்பாலான பிரச்சினைகளை காங்கிரஸ் தீர்த்ததோ அல்லது இயற்கையாகவே முடிந்ததோ, ஆனால் இந்தியா பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் ஓரளவு ஸ்திரத்தன்மை அடைந்த பிறகுதான் மோடி ஆட்சிக்கு வந்திருக்கிறார். அந்த அஸ்திவாரத்தின் மீதுதான் மோடி இந்தியாவை மேலும் முன்னே கொண்டு செல்கிறார். இந்தியாவுக்கு இருந்த கடைசி பிரச்சினையான காஷ்மீர் பிரச்சினைக்கும் நல்ல தீர்வு கொண்டுவந்தார். (இங்கேயும் காக்கா உட்கார பனம்பழம் விழுந்திருக்கிறது.) அதற்காக அவரை பாராட்டியாக வேண்டும்.
கூடவே டிமானிடேஷன், வெளிநாடுகளில் ரூபாய் மூலம் வியாபாரம், மேக் இன் இந்தியா என அவர் பாடுபடுவதும் தெரிகிறது. அதற்கான கிரெடிட் நிச்சயம் அவருக்குத்தான் போய் சேரும். அதுமட்டுமின்றி, முதல் முறையாக ஒரு அமெரிக்க அதிபர், `நான் போன் செய்தால் மோடி எடுக்கமாட்டேன்கிறார்` என்று சொல்கிறார் என்றால், இந்திய சர்வதேச மேடையில் ஏறிவிட்டது என்றுதான் பொருள். இதற்கும் மோடி என்ற தனி நபர்தான் காரணம்.ஆனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு மோடிதான் காரணம் என்று யாராவது சொன்னால் அது அபத்தமாகத்தான் இருக்கும். அவரும், வேறு பல `கை`களும் மற்றும் சில இயற்கையான காரணங்களும் இருக்கின்றன என்பதுதான் உண்மை.

0 comments:
Post a Comment