தேர்தல் நெருங்குகிறது. இனி திமுக உடன்பிறப்புகளின் அலப்பரை அதிகமாக இருக்கும். இந்த அலப்பரை எல்லா மனிதர்களிடமும் இருக்கும். ஆனால் திமுகவினர் வித்தியாசமானவர்கள். இவர்களுக்கு லாஜிக் என்றால் என்னவென்றே தெரியாது. அவர்கள் பேசுவது `என்ன... கையைப் பிடிச்சு இழுத்தியா?` என்ற வடிவேலு காமெடி வகை. நாம்தான் தலையைப் பிய்த்துக்கொள்ள வேண்டும்.
`எனக்கு குழந்தை பிறந்திருக்கிறது` என்று ஒருவன் சொன்னால் அவனை வாழ்த்தலாம். திருமணமாகி மூன்றே மாதத்தில் ஒருவன் இதைச் சொன்னால் எப்படி இருக்கும்? காதல் திருமணமா, பல மாதங்களுக்கு முன்பே நிச்சயிக்கப்பட்டு இவர்கள் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டார்களா என்ற கேள்வியெல்லாம் உங்களுக்குள் எழும்.
நிச்சயிக்கப்பட்ட திருமணம். அதுவும் பெண்ணை பார்த்த ஒரு மாதத்தில் திருமணம், அடுத்த மூன்று மாதத்தில் குழந்தை என்று சொன்னால்...நமக்கு இப்போது தலை சுற்றுமல்லவா? அப்படிதான் இருக்கிறது தற்போது உடன்பிறப்புகள் சுட்டிக் காட்டும் சில பொருளாதாரப் புள்ளி விவரங்கள்.
கொஞ்ச நாட்களாக வரும் செய்தி என்னவென்றால், மத்திய அரசின் சமீபத்திய தரவுகளின்படி தமிழ்நாடு பல விதங்களில் முன்னேறியிருக்கிறதாம். அதிலும் சிலர் இங்கே கர்நாடகாவையும் இழுத்திருக்கிறார்கள்.
தமிழ்நாடு மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக இருந்தால் அது நிச்சயம் நமக்கு பெருமைக்குரிய விஷயம்தான். ஆனால் நான் புள்ளிவிவரங்களை அப்படியே நம்புவதில்லை. இந்த புள்ளிவிவரங்கள் உண்மையை சொன்னாலும், அதை மேலும் சில புள்ளிவிவரங்களுடன் அலசினால்தான் நிஜமான உண்மை தெரியவரும்.
இங்கே இந்த திமுக உடன்பிறப்புகள் சொல்ல வருவது என்னவென்றால், திரு.ஸ்டாலின் ஆட்சிக்கு வருவதற்கு முன் தமிழ்நாடு பாறாங்கல்லாக இருந்ததாகவும், ஸ்டாலின் வந்துதான் சுத்தியல் மூலம் உடைத்து, மினரல் வாட்டர் ஊற்றி அதை தரிசு நிலமாக மாற்றி இப்படி ஒரு மாபெரும் வளர்ச்சியை நிகழ்த்திக் காட்டியது போன்ற தோற்றத்தை காட்டுகிறார்கள். ஆனால் நிஜம்?
இதற்கு ஒரு உதாரணம் போதும். ஆனால் உடன்பிறப்புகளுக்கு அறிவாலயம் கட்டும் அளவுக்கு அறிவு அதிகம் என்பதால் அவர்களுக்கு ஓன்று பத்தாது. எனவே மூன்று சொல்லப்போகிறேன்.
உதாரணம் ஒன்று
ஒரு நாள் கிரிக்கெட் போட்டி. முதலில் விளையாடிய அணி 438 ரன்களை குவித்தது. ஒரு அணி இவ்வளவு பலமாக இருக்குமோ என ஆச்சர்யப்பட்டோம். ஆனால் எதிரணி அதையும் தாண்டி ரன் எடுத்து ஜெயித்தது. இதிலிருந்து தெரிவது என்ன? அது பேட்டிங் பிட்ச், அல்லது அன்று அது பேட்டிங்கிற்கு சாதகமாக இருந்திருக்கிறது. இங்கே உண்மை என்ன? இது போன்ற பிட்ச்களில் எந்த நாய் பேட் செய்தாலும் ரன் குவிக்க முடியும்.
உதாரணம் இரண்டு
நீங்கள் ஒரு கிராமத்தில் இருந்து வெளியூருக்கு காரில் பயணிக்கிறீர்கள். சென்னைக்கு அருகே ஒரு கிராமம் என வைத்துக்கொள்வோம். இங்கே ஒரு வழிப்பாதைதான் இருக்கும். இங்கே நீங்கள் 30 கிலோமீட்டர் வேகத்தில்தான் ஓட்ட முடியும். அடுத்து சென்னைக்குள் நுழைகிறீர்கள். இங்கே நகரங்களில் ரோடு அகலமாக இருக்கும். ஆனால் டிராபிக் மற்றும் சிக்னல் காரணமாக 50-ல் போகலாம்.
அடுத்து நீங்கள் ஹைவேயில் நுழைகிறீர்கள். இப்போது உங்கள் மகன் டிரைவராக வந்து அமர்கின்றார். வண்டி இப்போது 100-ல் பறக்கிறது. அப்போது உங்கள் மகன் `நான் வந்து அமர்ந்த பிறகு வண்டி எவ்வளவு ஸ்பீடா போகுது பார்` என்று சொன்னால் உங்களுக்கு எப்படி இருக்கும்?
உண்மை: ஹைவேயில் எந்த நாய் வண்டி ஓட்டினாலும் வண்டி வேகமாகத்தான் போகும்.
உதாரணம் மூன்று
ஒரு டீக்கடை. காலை 4 மணிக்கு அப்பா கடை திறக்கிறார். 6 மணி வரை வியாபாரம் செய்கிறார். அவ்வளவு காலையில் எவன் வருவான்? ஏதோ 500 ரூபாய்க்கு வியாபாரம் நடக்கிறது. அடுத்து 6 மணிக்கு மகன் வந்து 8 மணி வரை வியாபாரத்தை கவனிக்கிறான். அவன் 2000 ரூபாய்க்கு கல்லா கட்டுகிறான். இப்போது வியாபாரம் அதிகமானதற்கு மகனின் திறமையா காரணம்? காலை 6-8 என்பது டீ டைம். அந்த நேரத்தில் எந்த நாய் கடையில இருந்தாலும் வியாபாரம் ஆகும்.
இங்கே சொன்னது ராணுவ ரகசியமோ, சிதம்பர ரகசியமோ இல்லை. இந்த உலகத்தில் உள்ள எல்லா அரைவேக்காடுகளுக்கும் தெரிந்த உண்மை. ஆனால் திமுக உபிகளுக்கு மட்டும் இது தெரியாது.
மேலே குறிப்பிட்ட மூன்று சம்பவங்களும் தமிழ்நாடு, குஜராத் மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களுக்கு பொருந்தும். இந்த மூன்று மாநிலங்களில் ஒரு வடிகட்டிய முட்டாள் முதல்வராக இருந்தாலும், இந்த மாநிலங்கள் கணிசமான பொருளாதார வளர்ச்சியைக் காட்ட முடியும். அந்த அளவுக்கு பிரைம் லொகேஷனில் இந்த மாநிலங்கள் இருக்கின்றன.
இதை சரியாக புரிந்துகொள்ள வேண்டுமென்றால், உங்களுக்கு ஓரளவுக்காவது வியாபார மூளை வேண்டும். அந்த அடிப்படையில் கவனிக்க வேண்டும்.
ஒரு தொழில் அதிபர் தொழில் செய்ய தேர்வு செய்யும் இடம் எதுவாக இருக்கும்? முக்கியமாக கடற்கரை வேண்டும். இதன் காரணமாகத்தான் தொழில் முனைவோர்களில் (பெரிய நிறுவனங்கள்) பெரும்பாலோனோர் இதுபோன்ற மாநிலங்களில் முதலீடு செய்கிறார்கள். அப்போதுதான் உற்பத்தியில் 50-50 அல்லது 30-70 என்ற பார்முலா வேலை செய்யும். அதாவது உள்ளூர் தேவை என குறிப்பிட்ட சதவீதம் போக கணிசமாக ஏற்றுமதியும் செய்ய வேண்டும்.
கடற்கரை மாநிலங்களில் தண்ணீர் பஞ்சத்திற்கான வாய்ப்பு குறைவு. வருண பகவான் முதல் மொய் இங்கேதான் வைப்பார். துறைமுகம் அருகிலேயே இருப்பதால் குறைந்த செலவில் உடனடி ஏற்றுமதியும் சாத்தியமாகும். அந்த வகையில் கடற்கரை மாநிலங்கள் இந்த அதிர்ஷ்டத்தை கொண்டுள்ளதால் வளர்ச்சியை காட்டுகிறார்கள்.
இதுபோக வேறு சில அதிர்ஷ்டமும் இந்த மாநிலங்களுக்கு இருக்கிறது. இலங்கையில் நாலாபக்கமும் கடற்கரைதான். அப்படி பார்த்தால் அங்கே முதலீடு செய்யலாமே? அங்கே மக்கள் தொகை குறைவு. குறைந்த மக்கள் தொகை கொண்ட நாடுகளில் இது போன்ற 50-50 பார்முலா வேலை செய்யாது.
எனவே முதலீடு செய்யப்படும் இடம் பெரும் மக்கள் தொகை கொண்ட நாடாகவும் இருக்க வேண்டும், கூடவே கடற்கரையும் வேண்டும். பேட்டிங் பிட்ச், பிசி ஹவர், பிரைம் டைம் என பல துறைகளில் இருப்பதுபோல், தொழில் துறையில் இது பிரைம் லொகேஷன்.
இந்த அதிர்ஷ்டம் இந்தியா என்ற கூட்டமைப்பில் இருப்பதால் தென் இந்திய மாநிலங்களுக்கும், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்துக்கும் இருக்கிறது. இந்த அதிர்ஷ்டத்தை அறுவடை செய்துவிட்டுத்தான் நாங்கள் அறிவாளிகள் என்று இவர்கள் பெருமை பேசுகிறார்கள்.
இது சாதாரண கணக்கு. வேறு சில கணக்குகளும் இருக்கின்றன. இந்தியாவின் அரபிக்கடலின் வியாபார வாய்ப்பு அதை எல்லையாக கொண்டிருக்கும் குஜராத், மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் கேரளாவுக்கு போய் சேரும். இதில் கேரளா கம்யூனிச கோளாறை கொண்டிருப்பதால், அங்கே தொழிலதிபர்கள் வரமாட்டார்கள். எனவே அந்த வருவாயை மற்ற மூன்று மாநிலங்கள் பகிர்ந்துகொள்கிறார்கள்.
அதிலும் மகாராஷ்டிரா மற்றும் குஜராத் இந்தியாவின் எல்லா பகுதிகளுக்கும் சரக்குகளை அனுப்பும் அளவுக்கு கேட்வே ஆஃப் இந்தியாவாக இருப்பதால், அதிகபட்ச பலனை அனுபவிப்பது அவர்கள்தான். இந்தியா இறக்குமதி செய்யும் கணிசமான கச்சா எண்ணெயை இந்தியா முழுவதும் அனுப்புவது மட்டுமின்றி, அதை சுத்திகரிப்பு செய்து vas ஆக மாற்றி ஏற்றுமதி செய்யும் வாய்ப்பை அந்த இடத்தின் வசதி காரணமாக குஜராத் அனுபவிக்கிறது.
மஹாராஷ்டிராவும் கணிசமாக கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வது மட்டுமின்றி, மற்ற மாநிலங்கள் செய்யும் உற்பத்தியை ஏற்றுமதி செய்ய மகாராஷ்டிராவில் இருக்கும் துறைமுகங்கள் கணிசமாக உதவுவதால், இந்த பலனையும் மகாராஷ்டிரா அனுபவிக்கிறது. அதாவது, விற்பவன் ஒருவன், வாங்குபவன் வேறு ஒருவன், ஆனால் அதற்கான ட்ரான்சிட் பாயிண்ட் என இந்த இரண்டு மாநிலங்கள் இருப்பதால் லாபம் இவர்களுக்கு.
இதையே கொஞ்சம் மாற்றி பார்ப்போம். ஒரு வேளை நாளை மலேஷியாவில், இந்தோனேசியாவில் பெட்ரோல் கிடைத்து விட, அவர்கள் `நாங்கள் 10 டாலர் கம்மியாக தருகிறோம்` என்று நம்மிடம் சொன்னால் நாம் என்ன செய்வோம்.
அதன்பின் இறக்குமதி இந்த பக்கம் ஒரிசா, ஆந்திரா என திசை திரும்பிவிடும். இங்கே ரிஃபைனரிகள் உருவாகும். குஜராத் மற்றும் மஹாராஷ்டிராவின் ஜிடிபி கணிசமாக குறையும்.
இன்னொருபக்கம் பாகிஸ்தான் உடைந்து சிந்து பிரதேஷ் இந்தியாவில் இணைந்தால், கராச்சி துறைமுகம் இந்தியாவுக்கு கிடைத்துவிடும். டில்லியில் இருந்து மும்பையை விட கராச்சி தூரம் குறைவு. பஞ்சாபுக்கு பக்கத்துக்கு வீடு. அதன்பின் பல வட மாநிலங்கள் இறக்குமதி, ஏற்றுமதிக்கு கராச்சி துறைமுகத்தை பயன்படுத்தினால், எண்ணெயும் போய் ஏற்றுமதியும் போய், இவர்களின் டப்பா டான்ஸ் ஆடும். இவையெல்லாம் ஒரு கற்பனை. இங்கே சொல்ல வருவது, இந்த மாநிலங்களின் சாதனைக்கு பின்னால் திறமையை விட இடவசதி என்ற அதிர்ஷ்டம் இருக்கிறது என்பதுதான் உண்மை.
இனி நம்ம ஏரியாவுக்கு வருவோம். அதாவது வங்காள விரிகுடாவுக்கு வருவோம். இங்கேயும் அதேபோல் நான்கு மாநிலங்கள். அதில் மேற்கு வங்கத்திற்கு கம்யூனிசம் என்ற தலைவலி. மீதி இருக்கும் மூன்றில் ஒடிசா ஒரு துரதிருஷ்டமான மாநிலம். பிஜு பட்நாயக், நவீன் பட்நாயக் என இரண்டு கை சுத்தமான நிர்வாகிகள் நீண்ட காலம் அதிகாரத்தில் இருந்திருக்கிறார்கள்.
அலுவலகம் வந்ததும் 8 மணி நேரம் அவர்களுடைய வேலையே கையை கழுவுவதுதான். ஏனென்றால் அவர்கள் மிஸ்டர் கிளீன் அல்லவா? இவர்களின் இந்த முடிவே எடுக்காத நேர்மையை பார்த்து மிரண்டு போய் தொழில் அதிபர்கள் ஒடிசா பக்கம் திரும்புவதே இல்லை. மீதி இருக்கும் ஆந்திராவும், தமிழ்நாடும்தான் இந்த பகுதியின் வியாபாரத்தை அள்ளுகிறார்கள். அதிலும் தமிழ்நாட்டிற்கு மேலும் இரண்டு அதிர்ஷ்டம் கை கொடுக்கிறது. அதுதான் தமிழ்நாட்டை இந்த ஏரியாவின் தாதாவாக மாற்றியிருக்கிறது.
அதாவது பெரிய நாடு, கடற்கரை என முக்கியமான தகுதிகள் இந்த எட்டு மாநிலங்களுக்கு இருந்தாலும், ஒரு விஷயத்தில் தமிழ்நாடு இவர்களை முந்திவிட்டது. மற்ற ஏழு கடற்கரை மாநிலங்களில் தேசிய கட்சிதான் அதிகாரத்தில். தமிழகம்தான் முதல் முதலாக மாநில கட்சியின் கட்டுப்பாட்டில் வந்தது. இங்கேதான் தமிழ்நாட்டுக்கு மச்சம் வேலை செய்ய ஆரம்பித்தது.
உதாரணத்துக்கு, 10,000 கோடி முதலீட்டுத் திட்டம், 500 கோடி லஞ்சமாக தருகிறேன் என்று ஏதாவது ஒரு தொழில் அதிபர் கர்நாடகா போனால், அங்கே சித்தராமையா முடிவெடுக்க 3 மாதம் டைம் கேட்பார். முதல் மாதம் வாங்கலாமா வேண்டாமா, வாங்கினால் பதவி போய்விடுமா என்று யோசிப்பதற்கு. அடுத்த மாதம் கட்சியின் அடுத்த போட்டியாளரான சிவகுமார் எவ்வளவு கேட்பார் என்று கணக்கு போடுவதற்கு. அதன்பின், தேசிய கட்சி அல்லவா, மேலிடத்திற்கு எவ்வளவு கொடுக்க வேண்டும் என்ற கணக்கிற்கு.
தேசிய கட்சிகளில் இதுதான் நிலைமை. தேசிய கட்சிகளின் நிர்வாகம் என்பது பொதுத்துறை நிறுவனம் மாதிரி. அவ்வளவு சீக்கிரம் முடிவெடுக்க மாட்டார்கள். அவர்களுக்கு வளர்ச்சியை விட பதவிதான் முக்கியம். ஏதாவது சின்ன தப்பு நடந்தாலும், மேலிடம் பதவியை பறித்துவிடும் என்பதால், முடிந்த வரை முடிவுகளை தள்ளிபோடுவார்கள்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் ஒற்றை தலைமை வந்துவிட்டது. அதன்பின் எம்ஜிஆரும் தனியாக களம் இறங்கிவிட்டதால், இந்தியாவில் ஆளுங்கட்சி மட்டுமின்றி எதிர்க்கட்சியும் மாநில கட்சிதான் என்ற நிலைமை தமிழ்நாட்டில் எப்போதோ வந்துவிட்டது. இது போட்டியை டூ ஆர் டை என்ற நிலைக்கு இரண்டு கழகங்களையும் கொண்டுவந்துவிட்டது.
இப்போது இரண்டு கழகங்களுக்கு நிர்பந்தம். தேர்தலில் ஜெயிக்க ஏதாவது செய்தே ஆகவேண்டும். காங்கிரசை போல் நாங்கள்தான் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தோம் என்று கதை சொல்ல முடியாது.
ஆந்திராவில் மாநில கட்சியாக என் டி ராமராவ் வந்துவிட்டாலும், எதிர்க்கட்சி காங்கிரஸ்தான். களைத்துப்போன கட்சி அது. `நாங்கள் ஆட்சிக்கு வந்தால்` என்று அவர்களால் சொல்ல முடியாது. எனவே என் டி ஆருக்கு வேகமாக ஓட வேண்டிய நிர்பந்தம் இல்லை.
தமிழ்நாட்டில் அப்படி இல்லை. இவர்கள் ஓடினார்கள். போட்டி கடுமையாக இருந்ததால், செலவும் அதிகமாக இருந்தது. திராவிட கட்சிகள் வளர்ந்த அதே நேரத்தில் மார்க்கெட்டிங் என்ற துறையும் அசுர வளர்ச்சி அடைந்தது, பொருட்களை மட்டுமின்றி தலைவர்களையும் மக்களிடையே விற்க வேண்டிய நிர்பந்தம் உருவானது. செலவு, செலவு, செலவு.
தமிழ்நாட்டில் தொழில் அதிபர்களுக்கு சிகப்பு கம்பளம் விரிக்கப்பட்டது. 500 கோடியும், கூடுதலாக 50 கோடியும் கொடுத்தால், ஆர்டர் உங்கள் வீட்டுக்கே 10 நாளில் வரும் என்று சொல்லப்பட்டது. இது தவறு என்றாலும், தொழில் அதிபர்கள் இதை விரும்புகிறார்கள். அவர்களுக்கு பணமோ, பொருளோ அது நீண்டகாலம் முடங்கக்கூடாது. அது நஷ்டத்தையும் சேதாரத்தையும் உருவாக்கிவிடும். அந்த நஷ்டம் 550 கோடியையும் தாண்டிப் போகும். அதற்கு இது பரவாயில்லை. எனவேதான் தமிழ்நாடு தொழில் முனைவோரின் டார்லிங்காக இருக்கிறது.
மொத்தத்தில் அரபிக்கடலின் வருமானத்தை அங்கே மூன்று மாநிலங்கள் பங்கு போட, வங்காள விரிகுடாவில் போட்டியே இல்லாமல் தமிழ்நாடு வளர்ச்சியை அறுவடை செய்கிறது.
கதை அதோடு முடிந்ததா.. இல்லை. இன்னும் இருக்கிறது.
அதிர்ஷ்டம் தமிழ்நாட்டுக்கும், தமிழ் மொழிக்கும் பல வகைகளில் சாதகமாக இருக்கிறது. சென்னையில் இருந்து நீண்ட தூரம் போகும் பேருந்துகள் இருக்கும். அதில் மதுராந்தகம் போன்ற குறைந்த தூரத்திற்கு சில பயணிகள் ஏறுவார்கள். அவர்களிடம் `உள்ளே போகாது, பைபாஸில் இறங்கிக்கொள்ளவேண்டும்` என்று நடத்துனர் சொல்வார். உள்ளே பஸ் ஸ்டாண்ட் போய் நெரிசலில் சிக்கி நேரமாகும். சில பயணிகளுக்காக அதை செய்யமாட்டார்கள்.
சர்வதேச கப்பல் போக்குவரத்தும் அப்படித்தான். இந்துமகா சமுத்திரத்தில் பயணிக்கும் பெரும்பாலான கப்பல்களுக்கு தமிழ்நாடு இந்தியாவுக்கான ஒரு பைபாஸ் நிறுத்தமாக இருக்கிறது. இந்தியாவின் பிற மாநிலங்களுக்கான பொருட்கள் தமிழ்நாட்டில் இறங்கி பின்னர் இலக்கை நோக்கி பயணிக்கிறது. இது தமிழ்நாட்டுக்கு கிடைத்த கூடுதல் போனஸ்.
இந்தியாவிலேயே மூன்று சர்வதேச துறைமுகம் கொண்ட ஒரே மாநிலம் தமிழ்நாடுதான். மூன்று துறைமுகம் மூலம் பொருட்களை இறக்குமதி செய்யும் அளவுக்கு நமக்கு தேவை இருக்கிறதா? நிச்சயம் இல்லை. நாம் இந்த பக்கம் இந்தியாவின் கேட் வே என்பதால் இந்த நிலைமை.
வேறு ஒரு மாநிலத்துக்கு தேவையான பொருள் தமிழக துறைமுகங்களில் இறங்குகிறது. இங்கே அதை இறக்கி வேறு மாநிலங்களுக்கு லாரி மூலம் அனுப்பி வைக்கும் நிறுவனம், நாங்கள் இந்த வருடம் 5000 கோடிக்கு பொருட்களை கையாண்டோம் எனப் பதிவு செய்யும். அந்த நிறுவனம் தமிழ்நாட்டில் பதிவு செய்யப்பட்ட நிறுவனம் என்பதால், அந்த வியாபாரம் தமிழ்நாட்டின் ஜிடிபியில் கணக்கு காட்டப்படும். இப்போது லாரி நிறுவனம் வேறாக இருந்தால், அவன் நான் 10 கோடி சரக்கை கையாண்டேன் என கணக்கை தமிழ்நாட்டில் கொடுப்பான்.
இப்படி சரக்கை கையாள்வதிலிருந்து, அந்த டிரைவர்கள் வண்டிக்கு பெட்ரோல் போடுவது, டீ சாப்பிடுவது, இன்ன வேலைகள் என பல்வேறு மறைமுக தொழில்கள் இதன் மூலம் தமிழ்நாட்டில் உருவாகின்றன. கணக்குப்படி இவையெல்லாம் தமிழக ஜிடிபியில் வரும். தொழில் இப்படித்தான் இருக்கும், இருந்தாலும் இவையெல்லாம் நம்முடைய ஜிடிபியில் சேர்த்து பெருமை கொண்டாடினால் எப்படி. இங்கே தமிழ்நாட்டின் உண்மையான ஜிடிபியை கண்டுபிடிப்பது சிரமம்.
சமீபத்தில் வெனிசுலா நாட்டின் கதையை பார்த்தோம். 20 ஆண்டுகால மோசமான நிர்வாகம் காரணமாக அது தற்போது வீழ்ந்திருக்கிறது. வீழ்வதற்கே இருபது ஆண்டுகள் ஆகிறது என்றால், முன்னேற்றம் காண்பதற்கு அதற்கும் மேலான காலம் தேவைப்படாதா. இங்கே ஐந்தாண்டு காலம் ஆட்சியில் இருந்துவிட்டு இந்த உடன் பிறப்புகள் செய்யும் அலப்பரை என்பது மூன்றே மாதத்தில் ஒருவன் அப்பா ஆகும் கதைதான். இது அசிங்கம் என்பது அவர்களுக்கு புரியவில்லை.
தமிழ்நாட்டின் அதிர்ஷ்டத்தை பற்றி சொல்லிவிட்டேன். இருந்தாலும் அந்த அதிர்ஷ்டத்தையும் பயன்படுத்தி முன்னேற திறமை வேண்டும். அந்த அங்கீகாரத்தை தமிழ்நாட்டு திராவிட தலைவர்களுக்கு கொடுக்கலாம். இருந்தாலும், ஜனநாயக நாட்டில் நிர்வாகம் என்பது ஒரு ரிலே ரேஸ் போன்றது. இங்கே தனி நபர் வெற்றியாளர்கள் இல்லை. பெரியார், காமராஜர் என வரிசையாக வந்த தலைவர்கள் தங்கள் பங்கை தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஏதோ ஒரு வகையில் கொடுத்திருக்கிறார்கள். இந்த நீண்ட பயணத்தில் குறைந்த காலம் ஆட்சியில் இருந்தது திமுகதான். ஆனால் அவர்கள் இந்த வளர்ச்சிக்கு உரிமை கொண்டாடுவதுதான் காலத்தின் கொடுமை.
அதேசமயம் திராவிட தலைவர்கள் எதுவுமே செய்யவில்லை என்று நான் சொல்லப்போவதில்லை. பாராட்டுவதற்கு சில விஷயங்கள் இருக்கிறது. ஆனால் இயற்கை ஒரு நியதியை வைத்திருக்கிறது. ரத்த தானம் கொடுத்தவன் பலவீனமாகவும், ரத்தம் பெற்றவன் பலமாகவும் இருக்கவேண்டும். அந்த தியரி தமிழ்நாட்டில் இல்லை.
இங்கே மக்கள் ஓரளவுக்கு வளர்ச்சியில் இருக்கிறார்கள், ஆனால் திராவிட தலைவர்கள் அதைவிட மாபெரும் வளர்ச்சியாக கோடிகளில் புரள்கிறார்கள். மக்களுக்கு நல்லது செய்தால் கோடிக்கணக்கில் சொத்து சேர்க்கலாம் என்ற திராவிட வரலாறு யாருக்கும் புரியாத புதிராக இருக்கிறது.
இந்த தியரி டெல்லியில் இருக்கும் பிஜேபிக்கும் ஓரளவுக்கு பொருந்தும். அவர்கள் அலப்பரையும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கிறது. அங்கேயும் இந்தியாவின் வளர்ச்சிக்கு தாமரையை விட வேறு பல `கை`களின் பங்கு அதிகம். அதை இன்னொரு நாள் பார்ப்போம்.

0 comments:
Post a Comment