!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Sunday, June 13, 2021

இது இங்கே நடந்துவிட்டதுஇந்த கோரோனா காலத்தில் சில வார்த்தைகள் அதிகம் புழக்கத்தில் இருக்கிறது. அது நம் மனதில் பதிந்தும் விட்டது. ஆனால் அந்த வார்த்தைகள் அனைத்தும் வேறு ஒரு துறையில் பொருத்தி கவனித்தால் அது சில ஆச்சர்யமான செய்திகளை தருகிறது.

PEAK 

Peak, herd immunity, vaccine இவைதான் தற்போது நாம் கொரோனா காலத்தில் மிகவும் பயன்படுத்தும் வார்த்தைகள். முதல் அலையில் கொரோனா 1 லட்சத்தை நெருங்கி இறங்கியது. இரண்டாவது அலையில் அது 4 லட்சத்தை தொட்டு விட்டு இறங்கியது.

ஆரம்பத்தில் இது எந்த அளவு போகும் என தெரியாமல் திணறினோம். அது 3க்கு கீழே போய் 2, 1 லட்சம் என இறங்கிய பிறகு, இனி இது இந்த அலையில் மட்டுமின்றி அடுத்த அலையிலும் இந்த அளவுக்கு ஏறாது என தெரிகிறது. இதே  தியரியை நாம் தமிழக அரசியலில் பொருத்தி பார்த்தால் அங்கேயும் ஒரு சுவாரசியமான செய்தி தெரிகிறது.

இங்கே ஊழல் நடக்கிறது, அது இனியும் நடந்து கொண்டுதான் இருக்கும். ஆனால் ஊழலின் முதல் அலை அம்மா ஆட்சியில் டான்சி மற்றும் சில ஊழல்கள் என பரபரப்பாகி நம்மை திகைக்க வைத்தது.

வழக்கம் போல் மக்களின் / சட்டத்தின் அலட்சியம் காரணமாக கொஞ்சம் அடங்கிய அந்த அலை பின்னர் அய்யா ஆட்சியில் 2g ஊழல் என பிரமாண்டம் எடுத்தது. அது கொடுத்த அதிர்ச்சியும் விளைவுகளும் மிக கடுமையாக இருக்க, அந்த அலையும் அடங்கியது. அதன் பிறகு இமாலய ஊழல் அலை என எதுவும் காணோம். 

அந்த கணக்குகளின் அடிப்படையில் பார்த்தால் நாம் தமிழகத்தில் ஊழலின் உச்சத்தை தொட்டு விட்டோம் என தெரிகிறது. இனி அது இறங்குமுகமாகத்தான் இருக்கும். அதேசமயம் எல்லா தொற்று நோய்களும் ஆரம்பத்தில் கோரத்தாண்டவம் ஆடிவிட்டு அடங்கினாலும், அது அவ்வப்போது வரும் seasonal disease ஆக இருக்கும் என்பதும் எதார்த்தம். அந்த வகையில் இனி தமிழகத்தில் ஊழலும் அப்படித்தான் இருக்கும். இது தியரி. நாமும் நம்புவோம்.

Herd immunity

இதுதான் நடந்து முடிந்த தேர்தலில் நான் கவனித்த சுவாரசியமான, சந்தோஷபடவேண்டிய விஷயம்.

தேர்தலில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதுதான் மிகப்பெரிய பிரச்சினையாக நமக்கு இருந்தது. தொற்று நோய் நம்மை தாக்கும்போது, ஓன்று தடுப்பூசி கண்டுபிடித்து நம்மை நாம் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அல்லது, மருந்து இல்லாத நிலையில், நம் உடல் இயற்கையாகவே அந்த நோயை எதிர்த்து போராடும் சக்தியை பெற்றுவிடும். இதைத்தான் நாம் கொரோன விஷயத்தில் Herd immunity என அதையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

இந்த ஓட்டுக்கு பணம் விஷயத்திலும் அப்படித்தானே நடக்கவேண்டும். அரசு ஓட்டுக்கு பணம் கொடுப்பவர்களை தண்டிக்கவேண்டும். அப்படி நடந்தால் இது குறையும். ஆனால் கொடுப்பதே ஆட்சியாளர்கள் எனும்போது என்ன செய்வது? இதற்கு மருந்தே இல்லை. ஆனால் அதிர்ஷ்டவசமாக ஹெர்ட் மெண்டாலிட்டி இங்கு வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது.

ஒரு காலத்தில் பணம் கொடுத்தால் கண்டிப்பாக அவர்களுக்குத்தான் ஓட்டு போடுவார்கள் என்ற எண்ணம் இருந்தது. இப்போது எல்லோரும் பணம் கொடுப்பதால், பணமும் கொடுக்கணும் கூடவே தகுதியும் இருக்கனும் என மக்கள் எதிர்பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அதிகாரம் கையில், ஊழல் செய்த பணமும் நிறைய, அதில் மக்களுக்கு கொடுத்ததும் அதிகம் என்ற நிலையில் அதிமுக தோற்கிறது என்றால், இனி பணம் தமிழக மக்களை ஏமாற்றாது என தெளிவாக தெரிகிறது. அவர்கள் எல்லோரிடமும் வாங்கி கொண்டு அவர்களுக்கு விருப்பமானவர்களுக்கு போட்டுவிடுகிறார்கள். இந்த சந்தை மனப்பான்மை `ஓட்டுக்கு நோட்டு` என்ற வியாதியையும் கட்டுப்படுத்திவிட்டது. இனி அரசியல்வாதிகள் பணம் கொடுக்க யோசிப்பார்கள். அந்த பயம் அவர்களுக்கு வந்துவிட்டது. எனவே இதுவும் சந்தோஷமான செய்திதான். 

தற்போதைய திமுக அரசு சிறப்பான ஆட்சியை கொடுக்குமா என தெரியாது, ஆனால் நிச்சயம் நல்லாட்சியாக அதாவது மோசமான பேர் எடுக்கும் ஆட்சியாக இருக்காது என நம்பலாம். அதற்கான அறிகுறிகள் தெரிகிறது. இதற்கு பின்னால் ஒரு லாஜிக் இருக்கிறது. நானும் ஏதாவது ஒரு சம்பவம் சொல்லாமல் பதிவை முடிக்கமாட்டேன். அந்த வகையில் ஒரு சம்பவம்.

இங்கே அகமதாபாத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி. கோரோனோவுக்கு முந்தையது. இரவு சாப்பாடு ஆரம்பமானது. சாப்பிடும் வரிசையில் சில சிறுவர்கள். முகமே சொல்லும் தமிழர்கள் இல்லை என்பதை. அந்த பகுதியில் இருக்கும் ஏழை சிறுவர்கள். அவர்களை கவனித்துவிட்ட `நம்மவர்` அவர்களை துரத்திவிட்டார்.

பின்னர் பந்தி முடிந்தது. சில உணவுகள் மீந்தது. இப்போது அந்த நம்மவர் சொல்கிறார், `எதையும் வீணாக்காதீங்க. பக்கத்துல ஏழைகளுக்கு கொடுத்திடுங்க` என்று. இது நல்ல செயல்தான். பல இடங்களில் கவனிக்கலாம். அதுவும் திருமண நிகழ்ச்சிகளில் விருந்தினர் சாப்பிட்ட பிறகுதான் நாம் சாப்பிடுவோம். எனவே இதை நான் இங்கே குறையாக குறிப்பிடவில்லை.

ஆனால்  மனிதர்களை நான் பல விதங்களில் கவனித்த வரையில், பசிக்கு சாப்பாடு போடும் மனிதர்களை விட தன் பசி அடங்கிய பின் சாப்பாடு போடும் மனிதர்களே இங்கே அதிகம். அந்த ஒரு விஷயத்தை மட்டும் நாம் இங்கே எடுத்துக்கொள்வோம்.

நம்மவர் 

நான் அவ்வப்போது ஏதாவது ஒரு விஷயத்துக்காக பதிவு எழுத ஆரம்பிப்பேன்  பின்னர் அது முழுமை பெறாமல் அப்படியே டிராப்டில் நின்று விடும். நம்மவர் கமல் ஒரு பேட்டியில் `மக்களுக்கு சேவை ` என பேசியதை கேட்டு கோபம் கொண்டு அவருக்காக எழுதிய பதிவில் இந்த உதாரணத்தை எழுதினேன். அதுதான் இங்கே.

கமல் அரசியலில் இறங்கியிருக்கிறார். சந்தோஷம். நடந்து முடிந்த தேர்தலில் சறுக்கியும் இருக்கிறார். அதுவும் சந்தோசம். ஆனால் மக்களுக்கு சேவை செய்ய நான் அரசியலில் இறங்கியிருக்கிறேன் என்று அவர் சொன்னால் அது பாதிதான் உண்மை.

நிஜத்தில் அவர் பணம், புகழ் மற்றும் பல என எல்லாமே திருப்தியாக பார்த்துவிட்டார். அவருடைய திரைப்பட வாழ்க்கை அந்திம காலத்தில் இருக்கிறது. எனவே இனி அவருக்கு தேவையில்லாத, பயன்படாத காலங்களை மக்களுக்காக ஒதுக்கி இருக்கிறார். சேவை எப்போது செய்தாலும் வரவேற்க வேண்டியதுதான். ஆனால் அவரின் இந்த செயல் சிறந்த முன்னுதாரணமாக சொல்லமுடியாது.

ஸ்டாலின்

கிட்டத்தட்ட ஸ்டாலின் கதையும் அப்படித்தான். அவர் இளமையிலேயே அரசியலுக்கு வந்துவிட்டது  நல்ல தொடக்கம் என்றாலும், இதற்கு  மக்களுக்கு சேவை செய்யும் மனப்பான்மை மட்டும்தான் காரணம் என்று சொல்லமுடியாது.

ஒரு மளிகை கடைக்காரர் பையன் 15 வயதில் கடைக்கு வந்து வியாபாரம் செய்வதும், ஒரு விவசாயின் மகன் சிறு வயதிலேயே நிலத்தில் இறங்குவதும் இயற்கையான நிகழ்வு. அதேபோல் ஒரு அரசியல்வாதியின், அதுவும் முதல்வரின் பிள்ளை, அரசியலுக்கு வந்தார் என்றால் அதுவும் இயற்கைதான். ஆனால் தகுதி? அது கேள்விக்குறியாகவே இருந்தது.

எனக்கும் ஸ்டாலின் மீது நல்ல அபிப்ராயம் இருந்தது கிடையாது. இதற்கு முன் `1g vs 2g` என்ற பதிவில் முதல் தலைமுறை வெற்றியாளர்களான மோடி மற்றும் எடப்பாடி போன்றவர்களை வாரிசு தலைவர்கள் வெல்வது சிரமம் என்ற தொனியில் ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதை மீறி இவர் வென்றிருக்கிறார். வாழ்த்துக்கள்.

அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகமாகவும், சுற்றிலும் ஜால்ரா கூட்டமாகவும் இருப்பதால் அவர்களால் பல விஷயங்களை கவனிக்க முடிவதில்லை. அது அவர்களை எதேச்சாதிகாரிகளாக மாற்றிவிடுகிறது.

ஆனால் ஸ்டாலின் அவர்களுக்கு கிடைத்த நீண்டகால ஓய்வில் அது போன்ற சிக்கல்களை சந்திக்காமல், அவர் பல விஷயங்களை கவனித்திருக்கிறார்/படித்திருக்கிறார் என தெரிகிறது. அது அவருடைய தற்போதைய நிர்வாக முடிவிலும் தெரிகிறது.

`உன் நண்பன் யார் என சொல் நீ யார் என நான் கூறுகிறேன்` என வசனம் ஓன்று உண்டு. அந்த வகையில் இறையன்பு அவர்களை முக்கிய பொறுப்பில் உட்கார வைத்ததன் மூலம் அவர் நாட்டுக்கு நல்ல நிர்வாகத்தை கொடுப்பதில் உறுதியாக இருக்கிறார் என தெரிகிறது.

அது மட்டுமின்றி மேலும் சில அமைச்சர்களின் பேச்சும் செயலும் தமிழகம் நல்லாட்சியை நோக்கி நகர்வதை உறுதிப்படுத்துகிறது. இதுவும் நல்ல செய்தி. வரவேற்போம்.       
 

Friday, March 26, 2021

`சின்னப்புள்ள` சீமான்


எப்போதாவது சீமானின் பேச்சை கேட்பதுண்டு. அப்படி ஒரு முறை கேட்டபோது `எதற்கய்யா 8 வழி சாலை.. வீட்டுக்கு சீக்கிரம் போய் என்ன பண்ணப்போற?` என கோபமாக கர்ஜித்தபோது, நான் அதிர்ச்சியானேன்.

பொருளாதாரத்தை தொடர்ந்து கவனிப்பவர்களுக்கு இது புரியும், உள்கட்டமைப்பு சரியாக இருந்தால்தான் எந்த ஒரு நாடும் வளம் பெறமுடியும் என்பதை. இந்த உள்கட்டமைப்பில் பல வழி சாலைகளும் ஓன்று. அப்போதே எனக்கு கோவம் வந்து ஒரு பதிவை எழுதவேண்டும் என நினைத்தேன். வழக்கம்போல் டிஃபரஷன் வந்து நின்றுவிட்டது.

சமீபத்தில் தேர்தல் பரப்புரையில் தொலைக்காட்சி நெறியாளர்களுக்கு ஒரு அறிவுரை சொன்னார். `எடப்பாடி, ஸ்டாலின், கமல் மற்றும் என்னை கூப்பிட்டு விவாதம் வையுங்கள், யார் ஜெயிக்கிறார் என பாப்போம்` என சவால் விட்டார். இவர் நன்கு வாயை வளர்த்து வைத்திருக்கிறார். அந்த நம்பிக்கை இவரை இப்படி வாயாட வைத்திருக்கிறது.

ஆனால் இவரின் வாய் சவடாலை கேட்டபோது எனக்கு கோபமும் வந்தது கூடவே இந்த நாட்டின் எதிர்காலம் குறித்து அவநம்பிக்கையும் வந்தது. இப்போதைக்கு இந்தியாவில் இரண்டுவிதமான தலைவர்கள்தான் கண்ணுக்கு தெரிகிறார்கள். ஊழல்வாதிகள் மற்றும் சீமானை போன்ற அரைவேக்காடுகள்.

இதில் துரதிர்ஷ்டம் என்னவென்றால் இவரை போன்ற நபர்கள் வார்த்தை ஜாலங்களில் அற்புதமாக, வசீகரமாக இருக்கிறார்கள். ஒருவகையில் நேர்மையான அரசியல்வாதி என்ற தோற்றமும் தெரிகிறது. அது ஒருவகையில் உண்மையாகவே இருக்கக்கூடும்.

ஆனால் எதார்த்தம் புரியாத, புத்திசாலித்தனம் இல்லாத நேர்மை யாருக்கும் பயன்படாது. மேற்கு வங்கத்தில் ஜோதிபாசு என்றோரு நேர்மையான மனிதர் இருந்தார். 23 வருடங்கள் தொடர்ந்து ஆட்சி புரிந்தார். அவருக்கு பிறகு வந்த புத்ததேவ் பட்டாச்சார்யா மற்றும் மம்தா பானர்ஜியும் நேர்மையான, எளிமையான மனிதர்களே. அவர்களின் ஆட்சியையும் 20 ஆண்டுகளாக நடந்து வருகிறது. ஆனால் என்ன பயன்?

சமீபத்திய கொரோன லாக் டவுனில் ஒரு கவனிக்கத்தக்க செய்தி. இந்த லாக் டவுன் காரணமாக புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் கணிசமானவர்கள் மேற்கு வங்கத்தை சேர்ந்தவர்கள். இந்த பரிதாபத்தை என்னவென்று சொல்வது? 40 ஆண்டுகால நேர்மையான தலைவர்களின் ஆட்சி இவர்களை எந்த நிலைமையில் வைத்திருக்கிறது.

இன்னொரு நேர்மையான தலைவரான ஒடிசாவின் நவீன் பட்நாயக் கதையும் அப்படிதான் இருக்கிறது. புலம் பெயர்ந்த தொழிலாளர்களில் கணிசமானவர்கள் ஒடிஷாவை சேர்ந்தவர்களும் அடக்கம்.

இங்கே நேர்மையான தலைவர்கள் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தவில்லை. ஆனால் தமிழகம் கழங்களின் ஊழலில் சிக்கி தவித்தாலும், வளர்ச்சியில் தமிழகம் மற்ற மாநிலங்களை விட முன்னணியில்தான் இருக்கிறது.

இது ஒரு வினோதமான சூழ்நிலை. ஊழல்வாதிகள் வளர்ச்சியை கொடுக்கிறார்கள். நேர்மையானவர்கள் மக்களை வறுமையில் வைத்திருக்கிறார்கள். இதை எப்படி புரிந்து கொள்வது? அல்லது ஓரளவு புரிந்தாலும் இதை மற்றவர்களுக்கு புரியவைப்பது அதைவிட சிரமம்.

இங்கே ஒரே செய்திதான். ஊழல்வாதிகள் ஆபத்தானவர்கள்தான், ஆனால் அதைவிட ஆபத்து இப்படி நேர்மையை மட்டும் தகுதி என நினைத்துக்கொள்ளும் முட்டாள் தலைவர்கள்.

இதற்கு ஒரு கதை இருக்கிறது. கணவனை இழந்த ஒரு அம்மா தன் இரு பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார். வேலைக்கு போய் குடும்பத்தை நடத்தினார். ஓரளவு பொருளும் இருந்தது. இவரும் சம்பாதித்து சேமித்தார்.

காலத்தின் கொடுமை இவரின் ஒரு பிள்ளையை ஊதாரியாக மாற்றியது. இன்னொரு பிள்ளை உலகம் புரியாத அப்பாவியாக இருந்தது. பெரிய பிள்ளை அவ்வப்போது வீட்டிலேயே திருட ஆரம்பித்தான். அக்கம் பக்கத்தில் இதை சொல்லி அந்த அம்மா புலம்புவது வழக்கம். சின்னப்புள்ள அப்பாவியாக இருந்தாலும் அந்த பிள்ளை மீது அந்த அம்மாவிற்கு நம்பிக்கை.

ஒருநாள் அந்த அம்மா தன்னுடைய சின்னபுள்ளையை செமத்தியாக அடித்து கொண்டிருந்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு அதிர்ச்சி. தன்னுடைய திருட்டு புள்ளையை கூட இவர் இப்படி அடித்ததில்லையே என ஆச்சர்யம். `பெரியவனாவது 100-200 திருடுவான். இவன் என்னை நடுத்தெருவுல கொண்டுவந்து நிறுத்திட்டானே` என கத்திக்கொண்டிருந்தார்.

நடந்தது இதுதான். வீட்டில் இந்த சின்னப்புள்ள தனியாக இருந்தபோது கணவன் மனைவி போல் இருவர் வந்திருக்கின்றனர். திருடர்கள். இவர்களை பற்றிய விவரம் தெரிந்து வைத்திருக்கிறார்கள். `உங்கப்பா போன பிறகு உங்கம்மா ரொம்ப கஷ்டப்படறாங்க என வார்த்தைகளை அள்ளி வீசியிருக்கிறார்கள். கடைசியில், `வரும்போது உனக்காக பிஸ்கட் வாங்க மறந்துட்டோம். நீயே போய் உனக்கு பிடித்ததை வாங்கிக்கொள்` என சொல்ல, அந்த சின்னப்புள்ள காசை வாங்கிக்கொண்டு சிட்டாய் பறந்தான். இவர்களும் வீட்டில் கிடைத்தை வாரிக்கொண்டு கிளம்பிவிட்டார்கள்.

இப்படித்தான் உலகம் வித்தியாசமாய் இருக்கும். இங்கே அயோக்கியர்களை விட முட்டாள்கள் மிக ஆபத்தானவர்கள் என்பதையும் மக்கள் உணர வேண்டும்.

இங்கே இரண்டு கழகங்களின் அழிவை ஆவலுடன் எதிர்பார்க்கும் எனக்கு, அதற்கு மாற்று என வரும் இந்த சின்னப்புள்ள கமல்,சீமான் போன்றவர்களின் அரசியலை பார்த்தால் அதுவும் பயமாக இருக்கிறது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை நேர்மையான அதே சமயம் திறமையான தலைவர்கள் தெரியவில்லை. இப்போதைக்கு எனக்கு ஒரே சந்தோசம், தமிழ்நாட்டில் எனக்கு ஓட்டு இல்லை.

Tuesday, March 16, 2021

வாலை ஆட்டும் மனிதர்கள்


சமீபத்தில் இரண்டு விஷயங்களை கவனிக்க நேர்ந்தது. ஓன்று, பதிவர் ஜோதிஜி அரசு ஊழியருக்கு (ஆசிரியர்) ஆதரவு தரும் தொனியில் ஒரு பதிவு எழுதினார். மற்றொன்று விஜய் டிவியின் நீயா நானா நிகழ்ச்சியில் கோபிநாத் இதே போன்று அவர்களுக்கு தரும் சம்பளத்தை நியாயப்படுத்தும் விதத்தில் பேசினார்.

இவர்களின் இந்த கருத்தில் எனக்கு உடன்பாடில்லை என்பது ஒருபக்கம் இருந்தாலும் இவர்கள் ஏன் இப்படி பேசுகிறார்கள் என்று ஆராய்ந்தால் அனேகமாக ஒரே பதில்தான் வரும். அதாவது இவர்களின் பெற்றோர்கள் அரசு ஊழியராக இருந்திருக்கக்கூடும். எனவே இவர்கள் கர்ணனாக இருக்கிறார்கள்.

ஜெயலலிதாவுக்கு அதிமுகவினரும் கலைஞருக்கு திமுகவினருக்கு கோவில் கட்டுவார்கள், காரணம் மக்களுக்கு அவர்கள் சேவை செய்தார்கள் என்பதால் அல்ல, ஏதோ அவர்களால் நாங்கள் வளம் பெற்றோம் என்பதுதான் காரணம். இது ஒரு உளவியல் சிக்கல்.

ஆனால் நிஜம் என்ன? அவர்களுக்கு அளவுக்கு மீறிய சம்பளம் கொடுக்கப்படுகிறது என்பதுதான் உண்மை. இது ஏன் நடந்தது, எப்படி நடந்தது?

இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. அந்த சிக்கலை புரிந்துகொள்ள வாங்க இனி சில எதார்த்தமான சம்பவங்களை பார்ப்போம்.

தனிக்குடித்தனம்

கடலூரில் நான் கடை வைத்திருந்த இடம் பாடலீஸ்வரர் கோவில் தெருவில். இங்கே எனக்கு நான்கு விதமான சிக்கல்கள் இருந்தன. முதல் தலைவலி பிச்சைக்காரர்கள். 15 நிமிடங்களுக்கு ஒரு முறை இவர்கள் வந்துகொண்டே இருப்பார்கள். ஆரம்பத்தில் புண்ணியம் தேடுவோம் என ஆரம்பித்தாலும் போக போக சலிப்பு தட்டிவிடும். இந்த தலைவலி எனக்கும் வந்தது. எனவே மூடுக்கு தகுந்தபடி போடுவேன், பல சமயம் துரத்திவிடுவேன்.

இரண்டாவது, ஆடிமாச தலைவலி அல்லது இந்த போலி பக்திமான்களின் தலைவலி. ஆடிமாசம் வந்துவிட்டால் கையில் ஒரு நோட்டீஸோடு வந்துவிடுவார்கள். ஒவ்வொரு தெருவுக்கு ஒரு கோவில்  என கடவுளையே தனிக்குடித்தனம் வைத்துவிடுவார்கள். இங்கே பாடலீஸ்வரர் இருக்கிறார், இது புராதனமான பெரிய கோவில், இங்கே போய் வந்தால் நிஜமான கோவிலுக்கு போன உணர்வு வரும்.

ஆனால் இவர்களுக்கு தனியாக கோவில் தேவை. ஒருவேளை கடவுளை இவர்கள் வேறு பெயர் கொண்டு கூப்பிட விரும்பலாம். சரி இது அவர்கள் உரிமை என்றே வைத்துக்கொள்வோம், அதற்கு அவர்கள் தெருவிலேயே வசூலை வைத்துக்கொள்ள வேண்டியதுதானே? வெளிஊருக்கெல்லாம் போய் வசூல் செய்வார்கள். காரணம் அடுத்தவர்கள் பணத்தில் நான் அதை செய்தேன் இதை செய்தேன் என பெருமை கிடைக்கும்.

இப்படி தெருவுக்கு ஒரு கோவில் என எத்தனை தெருக்கள் ஒரு நகரில் இருக்கும். எல்லோருக்கும் பணம் கொடுக்கவா முடியும்? மறுத்தால் `கோவிலுக்கு இல்லைன்னு சொல்லாதீங்க அதுல புண்ணியம் கிடைக்கும்` என்று இப்படி இந்த வசூலில் போனால் நமக்கு டீ கிடைக்கும் என கூட வரும் சில அல்லக்கைகள் வசனம் பேசும்.

அப்போதே நான் நினைத்தேன். மனிதர்களுக்கு குடும்ப கட்டுப்பாடைபோல் கடவுளுக்கும் வைக்கவேண்டும் என்று. அதாவது ஒரு ஊருக்கு ஒரு போலீஸ் ஸ்டேஷன் என்பதுபோல், குறிப்பிட்ட ஏரியாவிற்கு ஓன்று அல்லது  சில கோவில்கள்தான் இருக்கவேண்டும் என சட்டம் கொண்டு வரவேண்டும் என்று.

இந்த தலைவலி இந்த பதிவின் கிளை செய்திதான். இனி முக்கியமான செய்திக்கு வருவோம். இங்கே இன்னும் இரண்டு தலைவலிகள் இருந்தன. ஓன்று அரசியல் கட்சிகள், இன்னொன்று ஆதரவற்றோருக்கு சேவை செய்யும் தொண்டு நிறுவனங்கள்.

பெரிய அரசியல் அக்கட்சிகள் நம்மிடம் (சிறுவியாபாரிகள்) வரமாட்டார்கள். ஆனாலும் அதற்கு  அடுத்த நிலையில் இருப்பவர்கள் வருவார்கள். கிட்டத்தட்ட ரவுடிகள்தான். 10 பேர் ஒன்றாக வருவார்கள் `மக்களுக்காகவே போராடுகிறோம், அதற்காகவே நன்றாக சாப்பிட்டு உடம்பை வளர்த்து வைத்திருக்கிறோம் என `காட்டிக்`கொள்வார்கள். `இல்லை` என சொல்ல முடியாது. நாளை ஏதாவது பிரச்சினை என்றால் என்ன பண்ணுவார்கள் என தெரியாது. எனவே 100-200 என் அப்போதைய சூழ்நிலைக்கு வேண்டாவெறுப்பாக தருவோம்.

சிலசமயம் அனாதை ஆசிரமம் நடத்துகிறோம் என சிலர் வருவார்கள். இவர்களிலும் மோசடி பேர்வழிகள் இருக்கலாம். ஆனால் தோற்றம், பேச்சு நம்பும்படியாகவும், தன்மையாகவும் இருக்கும். ஆனால் மேலே சொன்ன பல தலைவலிகளை பார்த்து சலித்துப்போய் இருப்போம். இவர்கள் பலவீனமானவர்கள் என்பதால் 10-20 கொடுத்து அனுப்புவோம்.

கவனிக்கவும் பலம் பொருந்தியவர்களுக்கு, மிரட்ட கூடியவர்களுக்கு அதிகம். கொடுப்பதை வாங்கிக்கொள்ளும் எளியவர்களுக்கு குறைவு. ஆனால் தேவை எல்லோருக்கும்தான். இதுதான் எதார்த்தம்.

அரசு வேலைக்கு `விலை`

அரசு ஊழியர்கள் விஷயத்திலும் இதுதான் நடந்திருக்கிறது. இந்தியாவில் ஏழ்மையும் தேவையும் எல்லா இடத்திலும் இருக்கிறது. ஆனால் இங்கே அரசு ஊழியர்கள் பலமாக இருக்கிறார்கள், ஸ்ட்ரைக் செய்து அரசை மிரட்டும் அளவுக்கு சங்கமும், பலமும் இருக்கிறது. எனவே அவர்கள் வருடா வருடம்  அதை சாதித்துக்கொண்டு அவர்களுடைய சம்பளத்தை இந்த அளவுக்கு கொண்டுவந்து நிறுத்திவிட்டார்கள். பலமில்லாதவர்கள் கிடப்பதை வைத்துக் கொண்டு வறுமையில் வாடுகிறார்கள். இதுதான் தமிழ்நாட்டின் இன்றைய நிலை.

இங்கே இன்னொரு காரணமும் இருக்கிறது. பொதுவாக ஒருவன் திருடப்போனால் நகை பணம் மட்டும்தான் திருடுவானா, மொபைல் போனோ அல்லது வேறு விலை உயர்ந்த பொருள் இருந்தால் அதையும்தானே திருடுவான்? அந்த எதார்த்தம்தான் அரசு நிர்வாகத்திலும் நடக்கிறது.

அமைச்சர்கள் திட்டங்களில் கமிஷன் அடிப்பார்கள். மேலும் பல ல ல  ல  இடங்கள் இருக்கின்றன. அதில் ஒன்றுதான் அரசு வேலைக்கு `விலை` நிர்ணயம் செய்வது. அரசு சம்பளம் என்பது சந்தையின் டிமாண்ட் அன்ட் சப்ளை என்ற அடிப்படையில் இருந்தால் அவர்களுக்கு ஒன்றும் தேறாது. அது valuable ஆக இருந்தால்தான் அதற்கு premium அதிகமாக கிடைக்கும்.

அதாவது 20000 சம்பளம் என்றால் வேலை உத்திரவாதம் என்ற அடிப்படையில் பலர் விரும்பினாலும், அதற்கு அதிக விலை நிர்ணயம் செய்ய முடியாது. என்னிடம் ஒருவர் (15 வருடம் முன்பு) பேசினார். அரசு வேலைக்கு 3-5 லட்சம் கேட்கிறார்கள். ஒரு வருஷம் சம்பளம் நமக்கில்லைன்னு நினைச்சுக்க வேண்டியதுதான். அதற்குபின் நாம் நிம்மதியாய் இருக்கலாம் என்பது அவருடைய பிளான்.

இதற்கத்தான் இவர்கள் சம்பளத்தை உயர்த்தி இருக்கிறர்கள் என்று சொல்லமுடியாது. ஆனால் நிர்வாக கோளாறில் இப்படி தனியார் துறைக்கும் அரசு துறைக்கும் சம்பளம் வித்தியாசமாக இருக்கிறது என்பதையும், வறுமையில் மக்கள் இருக்க, அரசு நிதி இப்படி அநியாயமாக போகிறது என்பதை கவனித்து அவர்கள் அதை சரி செய்யவேண்டும். ஆனால் செய்யமாட்டார்கள். இது அவர்களின் வருமானத்தை குறைத்துவிடும்.

தற்போது பல கட்டுப்பாடுகள் வந்துகொண்டிருக்கலாம். ஆனால் இன்னமும் அரசு வேலை என்பது மக்களின் கனவாக இருக்கிறது என்றால் அது ஒரு அமுதசுரபியாக இருக்கிறது என்பதுதான் உண்மை.

சந்தைக்கு போகலாமா

அப்படியே நாம் இன்னொரு லாஜிக்கையும் பார்த்துவிடுவோம். உங்களில் பலர் சந்தைக்கு காய்கறி வாங்க அடிக்கடி போவீர்கள். அதே காய்கறியை உங்கள் தெருவிலேயே ஒரு மளிகை கடைக்காரர் விற்பார். அவசரத்துக்கு நாம் அங்கே சிலவற்றை வாங்கலாம். ஆனால் பெரும்பாலோனோர் என்ன செய்வார்கள்? சந்தைக்குத்தான் போவார்கள். அங்கே காய்கறிகள் சற்றே விலைகுறைவாக கிடைக்கும்.

அங்கே விலை குறைவாக இருக்கிறது என்பதால் அவற்றின் தரம் குறைவாக இருக்கும் என நினைக்கமுடியாது. இரண்டு வியாபாரிகளுமே தமிழர்தான். அங்கே விற்பவர் நஷ்டத்துக்கு விற்கவில்லை. அவரும் நன்றாக சம்பாதித்துக்கொண்டுதான் இருக்கிறார். இந்த எதார்த்தம் அரசு ஊழியர்கள் விஷயத்தில் ஏன் பிரதிபலிப்பதில்லை?

இன்று அரசு ஊழியருக்கு கொடுக்கும் சம்பளத்தை கணிசமாக குறைத்து கொடுத்தாலும் வேலை செய்ய ஊழியர்கள் இருக்கிறார்கள். அவர்களும் தமிழர்கள்தான். வேலையும் தரமாகத்தான்  இருக்கும்.

ஒருபக்கம் தங்கள் பலத்தை காட்டி மிரட்டி சாதிக்கும் அரசு சங்கங்கள் ஒருபக்கம், இப்படி நல்ல சம்பளம் இருந்தால்தான் நாம் இதை நல்ல விலைக்கு `விற்க` முடியும் என கண்டுகொள்ளாமல் இருக்கும் அரசியல்வாதிகள் இந்த பக்கம் என இருப்பதால்தான் இந்த நிலைமை.

இது காலத்தின் கொடுமை. வேறு என்ன சொல்வது?

Saturday, March 6, 2021

எதை நம்புவது?சசிகலா அரசியலுக்கு வரவில்லையாம். உறுதியாக சொல்லிவிட்டார். சிலமாதங்களாக நான் இதைத்தான் கணித்தேன். ஆனால் பத்திரிக்கை செய்திகள் நம்மை அநியாயத்துக்கு குழப்பிவிட்டன.

சினிமாவையும் மிஞ்சிய திரைக்கதைகளை பத்திரிக்கைகள் எழுதின. சசிகலா விடுதலையாகி தற்போது பிரம்மனை நோக்கி ஒரு வார கடுந்தவம் இருக்கிறார். இந்த ஒரு வார தவத்துக்கு மிரண்டு பிரம்மன் அவருக்கு ஏதாவது வரம் கொடுப்பார், அதை வாங்கிக்கொண்டு சசிகலா அதிரடியாக களம் இறங்குவார் என ஒரு பக்கம். (நாமும் இப்படி ஏதாவது கொளுத்தி போடுவோம்)

இன்னொரு பக்கம் சசிகலாவை அதிமுகவில் சேர்ப்பதில் பிஜேபி உறுதியாக இருக்கிறது. சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா ஒரு ஓட்டலுக்கு எடப்பாடியை வரவழைத்து, சசிகலாவை உங்கள் கட்சியில் சேர்த்தால்தான் நான் இங்கே சாப்பாட்டில் கைவைப்பேன் இல்லையென்றால் ஒரு மணிநேர உண்ணாவிரதம் இருப்பேன் என அவர் எடப்பாடியை மிரட்டினாராம். இந்த மிரட்டலால் அதிர்ந்துபோன எடப்பாடி, வேண்டுமென்றால் பிஜேபிக்கு சீட் அதிகமாக தருகிறோம் அதில் அ ம மு க விற்கு உள் ஒதுக்கீடாக நீங்கள் ஒதுக்குங்கள் என கெஞ்சினாராம். எப்படியெல்லாம் செய்திகள்!

இந்த செய்திகளையெல்லாம் படித்துவிட்டு மறுநாள் பத்திரிகைகளை பார்த்தால் சசிகலாவின் இந்த அறிக்கை. தலைவலிதான் வருகிறது. இனி பத்திரிக்கை செய்திகளை pinch of salt என்ற அடிப்பையில்தான் படிக்கவேண்டும் போலிருக்கிறது.

சரி, என்னதான் நடந்திருக்கும்? இனி நமக்கிருக்கும் சுமாரான அறிவின் அடிப்படையில் நாமே ஓரளவு கணிக்க வேண்டியதுதான்.

தமிழ்நாட்டில் கழகங்கள் ஊழலில் ஊறிப்போய் மூழ்கிப்போன கட்சிகள். ஆனால் மத்திய அளவில் பிஜேபியோ, காங்கிரஸோ இவர்கள் அளவுக்கு மோசம் இல்லை என்பதுதான் என் கருத்து. அவர்கள் (காங்கிரஸ், பிஜேபி ) ஊழலை ஆதரிக்கவில்லை. இந்திய அரசியல் நிர்பந்தம் அவர்களை இந்த விஷயத்தில் அனுசரித்து போகவைக்கிறது. இதை பற்றி எழுத ஆரம்பித்தால் அது வேறு ஒரு நீண்ட பதிவில் போய் நிற்கும்.

இந்த பதிவை எழுதும் போதே சற்று ரிலாக்ஸ்டாக உலக செய்திகளை பார்ப்போம் என பார்த்தால் ஒரு செய்தி என் கவனத்தை ஈர்த்தது. தலைப்பே வித்தியாசம். Why clean hands turn corrupt in Indonesia https://asiatimes.com/2021/03/why-clean-hands-turn-corrupt-in-indonesia/ என்று தலைப்பு. உலகம் முழுக்க இதுதான் நிலைமை. எனவே ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றன என்ற காரணத்துக்காக மத்திய தலைவர்களை தவறாக நினைக்க வேண்டாம். அவர்களுக்கு பல தலைவலிகள். எனவே இதை விட்டுவிட்டு இந்த சசிகலா விஷயத்தை மட்டும் பார்ப்போம்.

இங்கே பிஜேபியை பொறுத்தவரையில் தனது கை சுத்தமாக இருப்பதாகத்தான் காட்டிக் கொள்ளும், அல்லது அப்படி நடிக்கும். அப்படி இருக்கையில் ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை பெற்று வந்தவரை ஆதரிப்பதாக காட்டிக்கொள்ளுமா? அது வேறு ஒரு கட்சியின் தலைவலியாக இருந்தாலும், அவர்களுடன் கூட்டணி இருக்கையில் அப்படி ஒரு பிம்பத்தை உருவாக்க ஒருபோதும் விரும்பாது.

இது எதிர்கட்சிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துவிடும். தேர்தல் பிரச்சாரங்களில் இது அதிமுகவிற்கு,பிஜேபிக்கு பெரும் தலைவலியாக உருவாகியிருக்கும். தண்டனை பெற்றவர் 5 ஆண்டுகளில் மக்களால் மன்னிக்கப்பட்டு அல்லது மறக்கப்பட்ட நபராக இருந்தாலும் பரவாயில்லை. இப்படி சுடச்சுடவா அவரை முன்னிலைப்படுத்தும். அதற்கான வாய்ப்பே இல்லை. ஆனால் பிஜேபி அப்படி செய்வதாக ஒரு பிம்பத்தை பத்திரிகையாளர்கள் உருவாக்கியிருந்தார்கள். அல்லது ஏதோ ஒரு காரணத்துக்காக பிஜேபி இப்படி ஒரு செய்திகளை உலவ விட்டிருக்க வேண்டும். அதை இவர்களும் நம்பி மக்களையும் முட்டாளாக்கியிருக்கிறார்கள்.

இங்கே எடப்பாடியார் சொன்ன ஒரு விஷயம் உண்மையாக இருக்கக்கூடும். `டோன்ட் இன்குளுட் தட் லேடி இன் யுவர் பார்ட்டி` என பிரதமர் சொன்னதாக எடப்பாடி சொல்லியிருந்தார். அதுதான் உண்மை.

அப்படியென்றால் அவர் சிறையில் இருக்கும்போதே அவரை மிரட்டி அமைதியாக வெளியே அனுப்பியிருக்கலாமே? பிஜேபிக்கு பல மாநில தலைவலிகள். அமித்ஷாவிற்கு கிடைப்பதெல்லாம் இவர் சொன்ன தகவல்கள் அவர் சொன்ன தகவல்கள் என `சொல்லப்படும்` தகவல்கள் மற்றும் உளவுத்துறைகள் கொடுப்பவை போன்றவை. இவற்றை முழுவதும் நம்பமுடியாது.

சசிகலாவின் பலம் என்ன என்பதை தெரிந்து கொள்ள பிஜேபி காத்திருந்திருக்கலாம். எத்தனை எம் எல் ஏக்கள்/ மந்திரிகள் அவர் பக்கம் திரும்புகிறார்கள் என்பதை உறுதியாக தெரிந்து கொள்ள இந்த காலஅவகாசம் அவர்களுக்கு தேவைப்பட்டிருக்கும்.

இந்தியாவில் ஒரு அதிகாரமையம் உருவாகிவிட்டால், எல்லோரும் அதைத்தான் சுற்றுவார்கள் என்பது எடப்பாடி விஷயத்தில் உறுதியாகிவிட்டது. எனவே இனி சசிகலா தனியாக களம் கண்டால் அது ஓட்டுக்களை பிரித்து அதிமுகவின் வெற்றி வாய்ப்பை பாதிக்கும் என்பதால், அடிக்கவேண்டிய ஆணியை அடித்து பிஜேபி சசிகலாவை அமைதியாக்கிவிட்டது. இதுதான் நடந்திருக்க்கூடும்.

இங்கே இன்னொரு காமெடியும் நடந்தது. ஒரு பத்திரிகை சசிகலாவின் துறவறத்தை பற்றி நாங்கள் முன்கூட்டியே சொன்னோம் என்று சொல்லியது. எனக்கு இங்கே ஒரு சம்பவம் நினைவுக்கு வருகிறது. நான் லாட்டரி வியாபாரம் செய்தபோது ஒரு வாடிக்கையாளர் வருவார். பாதி நாட்கள் லாட்டரி கடைகளில்தான் இருப்பார். அவர் கொஞ்சம் டிக்கட் வாங்குவார். மற்றவர்களிடமும் `இந்த நம்பர் வாங்குங்க` பரிசு விழும்` என்று சொல்வார். தினம் 10 பேருக்கு இப்படி ஜோசியம் சொல்வார்.

நீங்கள் ஏதாவது ஒரு மரத்தின் கீழ் நின்றுகொண்டு 10 கல்களை விட்டெறியுங்கள் ஏதாவது ஒன்றில் மாங்காய் விழுந்துவிடும். இது திறமையல்ல, தியரி. அதுபோல்தான் இந்த நபரின் ஆலோசனையும். இவர் வாங்குங்கள் என்று சொன்ன 10 நபர்களில் யாரவது ஒருவருக்கு மறுநாள் பரிசு விழுந்துவிடும். அவர் ஆச்சர்யப்படுவார். `அவர் கரெக்ட்டா சொன்னாருங்க` என சொல்லி அவருக்கு ஒரு டீயும் ஒரு செட் டிக்கெட்டும் வாங்கி கொடுத்துவிடுவார். இந்த வகையிலும் அவர் தினம் நாட்களை ஒட்டிக்கொண்டிருந்தார்.

பத்திரிகைகளும் அப்படிதான் இருக்கின்றன. இந்த வாரம் இந்த செய்தியை போடுவார்கள். அடுத்த வாரம் செய்தியை வேறுமாதிரியாக போடுவார்கள் இப்படி 10 வாரங்களில் பலவிதமான செய்திகளை வெளியிட்டால் அதில் ஏதாவது ஓன்று பலிக்கத்தான் போகிறது. உடனே நாங்கள் அன்றே சொன்னோம் என்று ஒரு பில்டப். எப்படியோ எல்லோரும் வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.