திமுகவும், பங்களாதேஷும். இந்த இரண்டுக்கும் என்ன சம்பந்தம் என நினைக்காதீர்கள். இருக்கிறது.
தற்போது இந்தியாவில் ஒரு கொள்கை நடைமுறையில் இருக்கிறது. சங்கியாக இருந்தால் முழு சங்கியாக இருக்கவேண்டும். உபியாக இருந்தால் அதுவும் அப்படியே. ரத்தத்தின் ரத்தம், தற்குறி, ஜோம்பி என எல்லாம் இந்த வகைதான். அவர்களுடைய தலைவர்கள் தவறு செய்துவிட்டால் அதை அப்படியே பூசி மெழுகிவிட வேண்டும். ஆனால் அடுத்தவர்கள் செய்தால் வானத்துக்கும் பூமிக்கும் குதிக்க வேண்டும். நான் இந்த கொள்கையை கடைபிடிப்பவன் அல்ல. சில விஷயங்களில் எனக்கு உடன்பாடில்லை என்றால் சொல்லிவிடுவேன். அது எமனாக இருந்தாலும் சரி, அல்லது அந்த சிவனாக இருந்தாலும் சரி.
முதலில் பிஜேபியிலிருந்து ஆரம்பிப்போம். மோடி ஒரு தேசபக்தர், இந்தியாவை வல்லரசாக துடிக்கிறார் என்பது வரை ஓகே. ஆனால் அதற்காக அவருடைய எல்லா கொள்கைகளையும் நான் ஆதரிப்பதில்லை. மும்மொழி திட்டத்தில் எனக்கு உடன்பாடில்லை. வந்தே மாதரம் பாட்டை திணிப்பதையும் ஆதரிக்கவில்லை. இப்படி இன்னும் சில லிஸ்ட் போடலாம்.
அதில் ஓன்று இந்தியாவின் வெளியுறவு கொள்கை. இந்தியாவுக்கு ஆதரவான நிலையை ஒரு நாட்டின் தலைவர் எடுத்தால், அந்த தலைவரை கண்முடித்தனமாக ஆதரிப்பது என்ற நிலையை மோடி அரசு எடுத்திருக்கிறது. இது ஆபத்தான அரசியல்.
பங்களாதேஷில் ஷேக் ஹசீனா இந்தியாவை ஆதரித்ததால் அங்கே அவர் செய்த பல விஷயங்களை இந்தியா கண்டும் காணாமல் இருந்தது. அவர் அங்கே என்ன செய்தார் என்பது நமக்கு தெரியாது. அது நல்ல விஷயமாகவும் இருக்கலாம். ஆனால் மக்கள் அதிருப்தியில் இருக்கும்போது மக்கள் நிராகரிக்கும் ஒரு தலைவரை நாம் ஆதரிக்கக்கூடாது. கடைசியில் என்ன நடந்தது? அங்கே மக்கள் சக்தி வென்றது. பங்களாதேஷ் கிட்டத்தட்ட ஜனநாயக பாதைக்கு திரும்பிவிட்டது. காலப்போக்கில் அது இன்னொரு மலேஷியாவாக மாறலாம். ஆனால் இந்தியாவுக்கு பேர் கெட்டது என்னவோ நிஜம்.
அடுத்து ஈரான். இங்கேயும் காமேனி இந்தியாவுக்கு ஆதரவாக இருந்ததால் அவரை மோடி ஆதரித்தார். அங்குள்ள மக்களின் அதிருப்தியை புரிந்து கொள்ளவில்லை. மக்கள் கொடுமைப் படுத்தப்படும்போது (கொடுமை என்றால் பழமைவாதத்தை திணிப்பது), இந்தியா வேடிக்கை பார்த்தது. மக்கள் விரோத கொள்கையை கடைபிடித்து மட்டுமின்றி, எல்லாம் எனக்கு தெரியும் என்ற இறுமாப்பும் காமேனிக்கு இருந்ததால், விதி அவருக்கு ஒரு பாடத்தை கற்றுக்கொடுத்துவிட்டது. இனி அங்கு யார் வரப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.
அடுத்தது ஆப்கானிஸ்தான். இந்தியாவுக்கு ஆதரவாக இருக்கிறார்கள், பாகிஸ்தானுக்கு தொல்லை கொடுக்கிறார்கள் என்ற ஓரே காரணத்துக்காக அங்கே தாலிபான்கள் செய்யும் அடக்குமுறை குறித்து, குறிப்பாக பெண்கள் விஷயத்தில், இந்தியா எதுவும் சொல்வதில்லை.
இப்படி நமக்கேன் வம்பு என்ற மனநிலை இந்தியர்களின் ரத்தத்தில் ஊறிவிட்டது. தவறான பாதையில் செல்பவன் நண்பனாக இருந்தாலும் தடுக்கும் முதல் உரிமை சக நண்பர்களுக்குத்தான். ஆனால் இந்த தத்துவமெல்லாம் மோடிக்கு தேவையில்லை. அவருக்கு தேவை இந்திய ஆதரவு. அவ்வளவுதான்.
அதே கதைதான் தமிழ்நாட்டில். இங்கே ஸ்டாலின் அவர்கள் கூட்டணி கட்சிகள் விஷயத்தில் இதே கொள்கையைத்தான் கடைபிடிக்கிறார். சிறுத்தைகள் ரவுடியிஸத்தில் இறங்கும்போது இந்த அப்பா அரசு எதுவும் செய்வதில்லை. அதிலும் பெண்கள் பாதிக்கப்பட்டாலும் இந்த அப்பாவுக்கு கோவம் வராது. ஏனென்றால் விசிக நம்மை ஆதரிக்கிறது. ஸ்டாலினுக்கு அது போதும். கூடவே காங்கிரசின் செல்வபெருந்தகையையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
அடுத்து கம்யூனிஸ்டுகள். இந்த உலகத்திலேயே 0 சதவிகித வெற்றியை காட்டிய ஒரே தத்துவம் கம்யுனிசம்தான். உலகத்தில் இந்த பாதையில் போய் உருப்பட்ட ஒரு நாடு கிடையாது. இருந்தாலும் எங்களால்தான் இந்த உலகம் இயங்குகிறது என்று இன்னமும் இந்த கம்யூனிஸ்டுகள் உருட்டுவார்கள்.
இவர்களுக்கு அரசு ஊழியர், தொழிலாளர் பலம் இருக்கிறது. அந்த பலத்தை வைத்து மிரட்டியே அதிகப்படியான சம்பளத்தை அரசிடம் கறந்து நாட்டை திவாலாக்குகிறார்கள். ஸ்டாலின் நல்ல நிர்வாகியாக இருந்தால் யோசித்திருப்பார். அவருக்கு தேவை ஆதரவு. அதை கொடுப்பவர்கள் என்ன அநியாயம் செய்தாலும் பரவாயில்லை. அதே பாலிசி.
நாங்கள் கேட்பதை கொடுக்காவிட்டால் வேலை நிறுத்தம் செய்வோம் இந்த கம்யூனிஸ்டுகள் பொங்குவார்களே? அடிக்கடி செய்தி வருமே? இப்போது திமுக கம்யூனிஸ்ட்களுக்கு சீட் குறைவாக கொடுக்கிறது. இப்போது இவர்கள் போராடுவார்களா? எங்கே போயிற்று அந்த வீரம்?
அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு என்றால் வாரி கொடுக்கும் ஸ்டாலின், அதே கம்யூனிஸ்டுகள் சீட் கேட்டால் மட்டும் ஏன் இந்த தயக்கம்? ஏனன்றால் அரசு பணம் என்பது கடைத்தேங்காய். ஆனால் அவருடைய அடிமடியில் கைவைத்தால்? இங்கே அவர் நெல்லிக்காய் கூட கொடுக்கமாட்டார்.
இங்கே ஸ்டாலின் மட்டுமில்லை. பிஜேபி முதற்கொண்டு எல்லா அரசுகளும் இப்படி செயல்படுகின்றன.
மொத்தத்தில் டெல்லியில் பிஜேபியும் சரி, இங்கே திமுகவும் சரி ஒரே கொள்கைதான். நீ என்னை ஆதரித்தால் நீ செய்யும் அத்தனை அட்டுழியங்களையும் நான் பொறுத்துக்கொள்வேன் என்பதுதான். இந்த தியரி பிஜேபிக்கு பங்களாதேஷ் விஷயத்தில் கை கொடுக்கவில்லை.
இங்கே திமுகவே ஒரு ரவுடி கட்சிதான். ஆனால் கூட்டணி கட்சியினர் திமுகவிற்கே அதிர்ச்சி கொடுக்கும் அளவுக்கு ரவுடியிஸத்தில் இறங்கியிருக்கிறார்கள். அதன் காரணமாக திமுகவுக்கு தமிழ்நாட்டிலும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் கிடைக்கலாம்.

0 comments:
Post a Comment