!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Tuesday, March 31, 2026

செங்கோட்டையன் முதல்வரா?

செங்கோட்டையன் முதல்வரா? எதுவும் சொல்வதற்கில்லை. எது வேண்டுமானாலும் நடக்கலாம்.

சமீபத்திய தேர்தல் தொடர்பான செய்திகளை கவனித்தால் ஒரு வேளை இப்படியும் நடக்குமோ என்ற சந்தேகம் வருகிறது. சில மாதங்களுக்கு முன்,  `விஜய்யின் தவெக எனும் இ -காமர்ஸ் நிறுவனம்` என்று ஒரு பதிவு எழுதியிருந்தேன். அதாவது தனிக்கட்சி ஆரம்பிப்பது என்பது தற்போது அவுட் ஆப் பேஷன் ஆகிவிட்டது. எனவே இப்படி போக முடியாதவர்கள் விஜய்யின் தவெக வை ஒரு பிளாட்பாரமாக பயன்படுத்திக்கொள்வார்கள் என எழுதியிருந்தேன். அது தற்போது நடக்கிறது.

அதாவது 100 க்கும் மேற்பட்ட தவெக வேட்பாளர்கள் மாற்று கட்சியிலிருந்து வந்தவர்களாம். ஆக விஜய்யும் அரசியல் விளையாட்டை விளையாட ஆரம்பித்துவிட்டார். இங்கே தகுதி தரம் என்பதெல்லாம் அடுத்த கட்டம். எதிரியை வீழ்த்துவதுதான் முதல் கட்டம். இதுதான் தற்போதைய விஜயின் இலக்கு போல் தெரிகிறது.

இந்த 100 பேரும் பிற கட்சியின் அதிருப்தியாளர்கள் மற்றும் சீட் கேட்டு மறுக்கப்பட்டவர்கள் என்பதால் ஓரளவுக்கு வாக்கு வாங்கி வைத்திருப்பவர்கள். கடந்த தேர்தல்களில் இப்படி ஒரு சூழ்நிலையில் இந்த அதிருப்தியாளர்களில் சிலர் மட்டும் கட்சியை எதிர்த்து போட்டியிடுவார்கள். மற்றவர்கள் அவர்களின் பலம் அறிந்து வேலை செய்யாமல் ஒதுங்குவார்கள். இரண்டு திராவிட கட்சிகளும் பலம் வாய்ந்தவை என்பதால் இப்படி திடீர் வரவுகளுக்கு அவர்களும் சீட் கொடுக்கமாட்டார்கள்.

இந்த தேர்தல் அப்படி அல்ல. தவெக இருப்பதால் அது அவர்களுக்கு அதிர்ஷடம். இவர்களுடைய வாக்குகளும், தவெக வாக்குகளும் அதனுடன் ஆளுங்கட்சி எதிர்ப்பு ஓட்டும் சேர்ந்தால் வெற்றிக்கான வாய்ப்பு அதிகரிக்கலாம். அந்த கணக்குதான் இப்போது வேலை செய்கிறது. அவர்கள் விஜய்க்காக ஓடமாட்டார்கள், தங்களை புறக்கணித்த கட்சிக்கு பதிலடி கொடுக்க கடுமையாக ஓடுவார்கள். அவர்களின் ஓட்டம் தவெகவின்  வெற்றியாக, ஓட்டு வங்கியாக மாறலாம்.   

அப்படி இந்த கணக்கு வேலை செய்து தவெக ஆட்சியை பிடிக்கும் வாய்ப்பு வந்தால், விஜய் முதல்வர் ஆவாரா என்பதும் சந்தேகம்தான். காரணம் அவர் தனிமை விரும்பி. திடீர் அதிகாரம் அவருக்கும் சுமையாக இருக்கும். கொஞ்ச காலத்துக்கு தூரத்திலிருந்து அனுபவிப்போம் என ஒதுங்கலாம். அதுமட்டுமின்றி, இந்த வெற்றிக்கு (ஒருவேளை ஜெயித்தால்) செங்கோட்டைன் ஏதோ ஒரு வகையில் காரணமாக இருப்பார். கூடவே அவருக்கு வயதும் அதிகம் என்பதால் சில ஆண்டுகளுக்கு அவரை முதல்வராக உட்கார வைக்கலாம். வாய்ப்பிருக்கிறது.

ஓபிஸ் மற்றும் எடப்பாடி முதல்வர் பதவிக்கு வருவார்கள் என யாராவது எதிர்பார்த்தர்களா? இப்படித்தான் காலம் சிலருக்கு அதிர்ஷ்டத்தை தூக்கி கொடுக்கும்.

அதுவும் ஷேர் மார்க்கெட் வந்த பிறகு எனக்கேற்பட்ட பல அனுபவங்கள் காரணமாக நானும் இந்த அதிர்ஷ்டத்தை நம்ப ஆரம்பித்திருக்கிறேன். உதாரணத்துக்கு இது ஓன்று.

சில நாட்களுக்கு முன் நடந்த சம்பவம் இது. மாத கடைசி. டிரம்பும் ஈரானும் கொடுக்கும் தலைவலிகளால் மார்க்கெட் எப்படி இருக்கும் என்று கணிப்பது சிரமமாக இருக்கிறது. இருந்தாலும் இந்த மாத இலக்கை அடைந்துவிட்டேன்.

கடந்த வாரத்தில் ஒருநாள். மதியம் 2 மணி. எல்லாம் தப்பு தப்பாக போய் 5000 ரூபாய் நஷ்டத்தில் வண்டி ஓடிக்கொண்டிருந்தது. சரி இன்றைக்கு எதுவும் தேறாது என்று தோன்றியது. இருந்தாலும் அரிப்பு எடுத்த கை சும்மா இருக்குமா? எனவே ரொம்ப சேஃபாக சில இடங்களில் மட்டும் ஆர்டரை போட்டு வைத்தேன்.

பொழுது போகவில்லை. எனவே மொபைலில் கேம் விளையாட ஆரம்பித்தேன். விளையாடுவதும் அவ்வப்போது லேப்டாப் ஸ்கிரினை பார்ப்பதுமாக நேரம் போய்க்கொண்டிருந்தது. அரைமணி நேரம் ஆகியிருக்கும். டிரேட் எதுவும் நடக்கவில்லை. பின்னர் விளையாட்டு போரடிக்க, மறுபடியும் ஸ்கிரீனுக்கு வந்தேன். அப்போதுதான் தெரிந்தது அந்த வெப்பேஜ் ஆட்டோ ரிஃப்ரெஷ் ஆகவில்லை என்பது. ரிஃப்ரெஷ் செய்தால், ஏகப்பட்ட டிரேடிங். பக்கென்றது. ஆனால் P/L பச்சையாக இருந்தது.

எந்த ஷேர் எந்த விலைக்கு கிடைத்தது என்ற ஆராய்ச்சியெல்லாம் கிடையாது. எந்திரன் சிட்டியாக மாறி விரைவாக எல்லாவற்றையும் ஆட்டோ ஸ்குயர்ஆஃ  மூலம் மார்க்கெட் ரேட்டுக்கு விற்றேன். அதன்பிறகு பார்த்தால் 5000 மைனஸில் ஓடிய கம்பெனி 23000 பிராபிட்டில். இதை என்னவென்று சொல்வது. நல்லநேரம் வந்துவிட்டால், பெருமாளை நீங்கள் போய் பார்க்கவேண்டாம், அவரே உங்களை தேடி வந்துவிடுவார்.

அரை மணி நேரம் மறுபடியும் கேம் விளையாடுவோமா என்று நினைத்தேன். பேராசை பெருநஷ்டம் என்பதை பல அனுபவங்கள் உணர்த்திவிட்டதால் அந்த ரிஸ்க் நான் எடுக்கவில்லை. போதும் என்று விட்டுவிட்டேன். 

இது ஒரு சாம்பிள். செங்கோட்டையனுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் எதுவும் நடக்கலாம் என்பதற்காகத்தான் இந்த உதாரணம். மற்றபடி இந்த தேர்தல் நம் கணிப்பிற்கு அப்பாற்பட்டது.

0 comments:

Post a Comment