ஈரான் போர் ஒரு வாரத்தில் முடிந்து விடும் என்று நினைத்தேன். என்னுடைய கணக்கு தப்பாகிவிட்டது. அமெரிக்காவின் கணக்கும்தான். அது அவர்களுடைய தலைவலி. என்னுடைய கணக்கு தப்பானதுதான் எனக்கு பிரச்சினை. ஏன் என்று ஆராய்ந்தேன்.
சில ஆண்டுகளுக்கு முன் கேரளாவில் ஒரு சர்ச்சில் குண்டு வெடித்தது. தொடர்ந்து இஸ்லாமிய தீவிரவாதிகளின் குண்டு வெடிப்பை நாம் கேட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த அடிப்படையில் அது முஸ்லீம் தீவிரவாதி செய்த வேலை என நினைத்தேன். ஆனால் அது ஒரு கிறிஸ்துவனுடைய வேலை என்பது பின்னர் தெரியவந்தது.
அடுத்தது, தொடர்ந்து மக்கள் புரட்சியையை ஆசியாவில் கவனிக்கிறோம். இலங்கை, பங்களாதேஷ், நேபாளம் என எல்லா இடத்திலும் புரட்சி வெடித்து ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. அதேதான் ஈரானிலும் நடக்கும் என நினைத்தேன். ஆனால் நடக்கவில்லை.
இதற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, ஈரானியர்கள் படித்தவர்கள். அது நல்ல செய்தி என்றாலும், அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறது. உலகம் முழுவதும் படித்தவர்கள் பெரும்பாலும் ஆன்லைன் புலியாகத்தான் இருப்பார்கள். அவர்கள் தெருவுக்கு வந்து போராடுவது அபூர்வம்.
இன்னொரு காரணம் இஸ்லாமியர்களின் மனநிலை. அவர்கள் போராடுவதற்கு முன் நிமிர்ந்து பார்ப்பார்கள். ஆள்பவன் இஸ்லாமியனாக இருந்தால் என்ன நடக்கும் என அவர்களுக்கு தெரியும். எனவே அனைத்தையும், அதாவது அத்தனையும், மூடிக்கொண்டு அமைதியாக இருப்பார்கள். ஆனால் அது இஸ்லாமியர்களால் ஆளப்படாத நாடாக இருந்தால் ,அதுவும் ஜனநாயக நாடாக இருந்தால் அவர்களுக்கு வீரம் வந்துவிடும். இது அவர்களின் டிசைன். ஒன்னும் செய்ய முடியாது.
இதுதான் ஈரானிலும் நடந்திருக்கிறது. ஆட்சியாளன் இஸ்லாமியன் என்றவுடன் அவர்களுக்கு பயம் வந்துவிட்டது. இஸ்லாமிய உலக வரலாறு அதற்கு சாட்சியாக இருக்கிறது. அங்கே இரக்கம் என்பது அறவே இருக்காது. அதுமட்டுமன்றி சமீபத்திய மக்கள் புரட்சியில் எவ்வளவு பேர் கொல்லப்பட்டார்கள் என்பது நமக்கு தெரியாமல் இருக்கலாம், அவர்களுக்கு தெரிந்திருக்கும்.
இஸ்ரேலிய தாக்குதலில் பள்ளியில் மாணவர்கள் இறந்ததையும், அவர்களின் கல்லறைகளையும் இந்த உலகத்துக்கு ஈரானிய அரசு புகைப்படமாக காட்டினார்கள். ஆனால் போராட்டத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட சக ஈரானியர்களின் கல்லறைகளை ஈரானிய மக்கள் நேரிலேயே பார்த்திருப்பார்கள்.
இது தொடர்பாக அந்த பிராந்திய பத்திரிகைகளை படித்த போது ஒரு செய்தியை கவனித்தேன்.
``Iran’s police chief Ahmad-Reza Radan warned on state television on Tuesday that anyone taking to the streets “at the enemy’s request” will no longer be seen as a protester but as an enemy, saying security forces have their "fingers on the trigger" against protesters.``
கவனிக்கவும் "fingers on the trigger". ஜனநாயக நாட்டில் போராட்டம் என்றால் 144 தடை, லத்தி சார்ஜ், வானத்தை நோக்கி குண்டு, முழங்காலுக்கு கீழே என பல ப்ரோட்டாகால் முடிந்த பிறகுதான் சுடுவார்கள். முஸ்லீம் நாடுகளில் எல்லாம் தலைக்கீழ். இப்படி ஒரு செய்தியையும், அங்கே போராட்டத்தில் இறந்தவர்களின் கல்லறையும் பார்த்த பிறகு, அங்கு யாருக்காவது தைரியம் வருமா? அதுதான் அங்கு புரட்சி வெடிக்காததன் காரணம்.
இந்த பக்கம் அமெரிக்காவுக்கும் தலைவலி. ஏனென்றால் ஈரானிய புரட்சிப் படை சொந்த மக்களையே சுட்டுவிடுவார்கள். ஆனால் அமெரிக்கா போன்ற ஜனநாயக நாடுகள் ப்ரோடோகால் பார்க்க வேண்டும். அதிலும் ஈரானிய மக்கள் படித்தவர்கள், அங்கு மக்களால் தேர்தெடுக்கப்பட்ட ஒரு பொம்மை அரசு இருக்கிறது, அவர்களை பாதிக்காமல் ஒரு யுத்தம் என்றால் எப்படி? இப்படி மக்களை கேடயமாக அந்த நாட்டு அரசே வைத்திருந்தால்... அமெரிக்கா என்ன செய்தாலும் தலைவலிதான்.
இங்கே இன்னொற்றையும் கவனிக்கவேண்டும். ஈரானில் தேர்தெடுக்கப்பட்ட அரசியல் கட்சி தலைவர்களை அமெரிக்கா எதுவும் செய்யவில்லை. கொல்லப்பட்ட தலைவர்கள் காமேனி மற்றும் அவருடைய அடியாட்கள் மட்டுமே.
இங்கே எப்படி ஒரு காலத்தில் கலைஞர் எதிரிகளை தாக்கி அறிக்கை விடுவதற்கு மட்டும் வீரமணி போன்ற சில தலைவர்களை பயன்படுத்துவரோ அதேதான் அங்கேயும் நடக்கிறது. சமீபத்திய ஈரானிய அதிபரின் கடிதம் அந்த வகைதான். கையெழுத்து மட்டும்தான் இவருடையது.
அமெரிக்காவின் இப்போதைய பிரச்சினை ஈரானின் சர்வாதிகார அதிகாரமய்யத்தை முடிந்த அளவுக்கு நொறுக்குவது. அதில் ஏற்படும் சில பக்க விளைவுகளை சமாளிப்பது. அவர்கள் பலமிழந்தால் ஜனநாயக சக்திகள் பலம் பெறுவார்கள். அதைத்தான் அமெரிக்கா இப்போது செய்கிறது. இது எவ்வளவு காலம் ஆகும் என்பது நிச்சயம் இல்லை.
ஒரு டிரம்ப் ஆலோசகரின் கட்டுரையும் படித்தேன். அதாவது முந்தைய அதிபரை போல் டிரம்ப் சிந்திப்பதில்லையாம். அமெரிக்கா இனி கொரில்லா போர் முறையைத்தான் கையாளும் என்று சொல்கிறார்.
``...Trump understands something Washington does not want to admit: the exercise of American power should not be to build democratic societies. It should be to eliminate threats.
If Iran’s military leadership has been weakened, if its ability to threaten US forces and allies has been reduced, and if its nuclear ambitions have been significantly set back, then the mission has already succeeded, and it is time to end the war...``
வியட்னாம், ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் களத்தில் அமெரிக்க படைகள் இறங்கி, நீண்ட நாள் இருந்த நடைமுறையை இனி அமெரிக்கா கடைபிடிக்காது. எதிரி எங்கே இருக்கிறாரோ, அங்கே எதிரியை அழித்துவிட்டு, அவர்கள் மீண்டும் தலைதூக்காத அளவிற்கு பலவீனப்படுத்திவிடுவதுதான் இனி அமெரிக்காவின் நோக்கமாக இருக்கும். எனவே ஈரான் விஷயத்தில் அமெரிக்கா கிட்டத்தட்ட வெற்றி கண்டுவிட்டது என்று சொல்கிறார்.
இனி அமெரிக்கா அப்படியே இந்த யுத்தத்தை விட்டுவிட்டு நகர்ந்தாலும் வெற்றிதான். ஆனால் இன்னும் இலக்கை அடையத்தான் நினைப்பார்கள். அதில் ஓன்று ஈரானிடம் இருக்கும் யுரேனியத்தை கைப்பற்றுவது. அது சாத்தியப்படாவிட்டால், ஈரான் அணுஆயுத விஷயத்தில் மீண்டும் தலைதூக்க 20-30 வருடம் ஆகலாம், அப்போது பார்த்துக்கொள்வோம் என ஒதுங்குவது.
ஹார்முஸ் நீரினை ஒரு சிக்கல். இங்கே கார்க் தீவை கைப்பற்றுவார்களா அல்லது அதை கைப்பற்றி அது ஒரு பேரமாக மாற்றுவார்களா என்பதெலாம் ஒரு கேள்விக்குறி. அல்லது ஈரானிடம், ``இதோட நிறுத்திக்க... நானும் உன் வழிக்கு வரமாட்டேன் நீயும் பழைய பாதைல போகாதே. எனக்கு அது போதும். நான் பின் வாங்கிறதை நீ வெற்றியா சொல்லிக்கோ.. ஐ டோன்ட் கேர்`` என்று சொல்லி அமெரிக்கா பின் வாங்கலாம். நோக்கம் முடிந்துவிட்டது. இனி இதில் பெருமை என்ன வாழுது என அமெரிக்கா நினைக்கலாம்.
தமிழ்நாட்டிலும் அப்படி ஒரு சிக்கல் இருக்கிறது. விஜய் ஆட்சியை பிடிப்போம் என சொல்கிறார். சொல்வது வேறு, எதிர்பார்ப்பது வேறு. அவர் ஆட்சியை பிடிப்பது என்பது அதிர்ஷ்டம் சார்ந்தது. சூதாட்ட மொழியில் சொன்னால் 30 விழுக்காடுதான். ஆனால் விஜய் காரணமாக திமுக ஆட்சியை இழந்தால், சிறுபான்மை அரசாக மாறினால், அதுவும் வெற்றிதான்.
அதேதான் ஈரான் போரும். அமெரிக்கா வெளியே சொன்ன இலக்கு ஆட்சி மாற்றம். அதில் காமேனி போய்விட்டார். பெரும்பாலான அவரது ஆதரவு தலைவர்கள் அவருக்கு துணையாக போய்விட்டார்கள். அவர்களின் அணு ஆயுதபலம் செயலிழக்கப்பட்டது. அமெரிக்காவுக்கு இதுவும் வெற்றி.
இனி சில ஆண்டுகள் இந்த பஞ்சாயத்து ஓடும். யார் ஜெயித்தார்கள் என அவர் அவர் பார்வைக்கு சொல்வார்கள். அதன்பின் இரு நாடுகளிலும் தேர்தல் நடக்கும். வேறு ஒரு தலைவரோ அல்லது இப்போது இருப்பவரோ மீண்டும் வரலாம்.
ஈரானில் தேர்தெடுக்கப்ட்ட அதிபர் ஏதோ ஒரு கொள்கையை அமல்படுத்துவார். அப்போது புதிதாக வந்திருக்கும் ஈரானிய மதத் தலைவரிடம் ஒப்புதலுக்காக போகும். அவர் எப்படியும் காமேனியை விட கொஞ்சம் மிதவாதியாகத்தான் இருப்பார். அவர், `மக்கள் உங்களை தேர்தெடுத்திருக்கிறார்கள். எனவே நீங்களே முடிவெடுங்கள்` என கேள்வி கேட்காமல் கையெழுத்து போட்டு அனுப்புவார்.
`ஈரான் மதத்தலைவர் நிர்வாக முடிவில் தலையிடுவதில்லை, தேர்தெடுக்கப்பட்ட தலைவர்தான் முடிவெடுக்கிறார்` என்ற இந்த தகவலை உளவுத்துறை அமெரிக்க ஜனாதிபதிக்கு அனுப்பும்.
அதன்பின் அப்போதைய அமெரிக்க அதிபர், `ஈரான்` என்ற ஃபைலை கையில் எடுப்பார். `ஆட்சி மாற்றத்தை எதிர்பார்த்தோம், அது நடக்கவில்லை. கடைசியில் ஆட்சியாளர்கள் மனமாற்றம்தான் நடந்தது. நாம் நினைத்தது வேறு ஒரு வகையில் நடந்துவிட்டது` என்று குறிப்பெழுதி அந்த ஃ பைலை பரணுக்கு அனுப்புவார். காலம் கொஞ்சம் மாறியிருக்கும். உலகம் அடுத்த தலைவலியை நோக்கி நகர்ந்திருக்கும்.
இங்கே மாறாத ஒன்று, அவ்வப்போது நான் பதிவு எழுதுவதும், யாரோ சிலர் அதை படிப்பதும்தான்.

0 comments:
Post a Comment