ஈரான் போர் முடிவுக்கு வந்துவிட்டது. யார் இறங்கி வந்தது என்று எல்லோருக்கும் தெரியும். இருந்தாலும் இது பெருமை பேசும் நேரமில்லை. ஈரான் தன் நிலை உணர்ந்தது நல்ல விஷயம். ஆசியாவில் பங்களாதேஷுக்கு அடுத்து இன்னொரு முஸ்லீம் நாடு ஜனநாயகப் பாதைக்கு திரும்புகிறது. அதுதான் நல்ல செய்தி.
மொத்தத்தில் இது விளையாட்டல்ல இவர் ஜெயித்தார் அவர் தோற்றார் என்று அறிவிக்க. இங்கே நாட்டை அழிப்பது யாருடைய நோக்கமும் அல்ல. அவர்கள் சரியான பாதையில் செல்ல வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமும். சில நேரங்களில் தவறான பாதையில் செல்பவர்களை மிரட்டி சரியான பாதைக்கு திருப்ப வேண்டியதாகியிருக்கிறது. அதுதான் இப்போது நடந்திருக்கிறது.
இனி இதில் கடும் விமர்ச்சனத்திற்குள்ளான சில விஷயங்கள்.
டிரம்ப் ஏன் `ஒரு சமுதாயத்தையே அழித்து விடுவோம்` என்ற வார்த்தையை பயன்படுத்தினர்?
இதை படிக்க நமக்கே அதிர்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால் இது கோபத்தின் குறியீடு. ஒரு அம்மா தன் பிள்ளையை மிரட்டுவார். `விளையாடிட்டு 6 மணிக்கெல்லாம் வீட்டுக்கு வரணும். இல்ல காலை ஒடச்சி அடுப்புல வச்சிருவேன்` என்று. நான் கேட்டிருக்கிறேன். எந்த அம்மாவாவது அப்படி செய்வாரா? அதை அப்படியே லிட்ரலாக எடுத்துக்க முடியுமா? டிரம்பே நினைத்தாலும் அதை செய்ய முடியாது.
அமெரிக்க கேபினெட் கூட்டத்திலேயே அப்படி ஒரு கோரிக்கை நிராகரிக்கப்படும். அந்த அளவுக்கு ஜனநாயகமும் கருத்து சுதந்திரமும் வளர்ந்துவிட்டது. ஆனால் அதை வைத்து பல கருத்து கந்தசாமிகள் பொங்கி எழுந்ததுதான் கொடுமை. கடைசியில் டிரம்ப்பின் சீரியஸை ஈரான் புரிந்துகொண்டதால் போர் ஒருவழியாக முடிவுக்கு வந்தது.
சரி, இந்த போர் நிறுத்தம் இரண்டு வாரத்துக்கு மட்டுமா?
அநேகமாக இது நிரந்தரம். சரண்டர் என்ற வார்த்தை தற்போதைய அரசியலில் நடக்கவே நடக்காது. எனவே இதற்கான முதல் புள்ளி தற்காலிக நிறுத்தம்தான். பின்னர் பேசுவார்கள், பேசுவார்கள், பேசுவார்கள். சில மாதங்களுக்கு பிறகு ஒரு நாள் காபி சாப்பிட்டு விட்டு `சரிடா மச்சான். அடுத்த வாரம் ஒரு பார்ட்டி வச்சிருக்கேன். ஒரு புல் இருக்கு வந்துடு` என்பார்கள்.
ஜப்பான், வியட்னாம், ஈராக் எல்லாம் அமெரிக்காவின் நட்பு வட்டத்துக்குள் வந்ததை போல் எதிர்காலத்தில் ஈரானும் வரலாம்.
இனி ஹார்முஸ் நீரினை என்னவாகும்?
இது இயற்கை நீரினை. இதற்கு யாரும் உரிமை கொண்டாட முடியாது. அப்படி ஒரு நிலை வந்தால் அது தவறான முன்னுதாரணமாகிவிடும். ஏனென்றால் இதேபோல் வேறு சில பகுதிகளும் இருக்கின்றன. இருந்தாலும், இங்கே ஈரானுக்கு சலுகை கிடைக்கும். காரணம் இந்த போரில் அவர்களுக்கு ஏற்பட்ட கடுமையான பொருளாதார இழப்பு. இந்த சேதாரத்தை அவர்கள் விலை கொடுத்து வாங்கியிருக்கிறார்கள் என்றாலும், திருந்தி சரியான பாதையில் வரும்போது, இந்த உலகம் அவர்களுக்கு கை கொடுக்க வேண்டியது அவசியமாகிறது.
அவர்கள் அமெரிக்காவிடம் நஷ்ட ஈடு கேட்பார்கள். கொடுத்தால் அமெரிக்கா தவறு செய்தது என்றாகிவிடும். இருந்தாலும் சூழ்நிலையின் அவசியம் கருதி அமெரிக்கா பொருளாதார உதவி செய்யலாம். அப்படி அமெரிக்காவிடம் உதவி பெற்றால் அது ஈரானுக்கு தர்மசங்கடமாக இருக்கும்.
இந்த பிரச்சினைக்கு ஹார்முஸ் நீரினை ஈரானுக்கு உதவலாம். அங்கே வசூலிக்கப்படும் சுங்கவரியை அவர்கள் தங்களுடைய கட்டமைப்பை சீர் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். இதை அமெரிக்காவும் உலகமும் தற்போதைக்கு அனுமதிக்கும். இது நிரந்தரமாக இருக்காது. ஏதாவது ஒரு காலவரையறை நிர்ணயம் செய்வார்கள். 10-20 வருடம் என அது இருக்கலாம். பின்னர் அது பழைய நிலைக்கு வரும்.
ஹார்முஸ் நீரினை ஏற்கனவே திறந்துதானே இருந்தது. இப்போது மறுபடியும் திறப்பதில் அமெரிக்காவின் வெற்றி எங்கே இருக்கிறது? சில மேதாவிகள் கேட்பார்கள்.
வானத்தை மட்டும் பார்த்து பயணிக்கக்கூடாது, கீழே குனிந்தும் பார்க்கவேண்டும். ஏற்கனவே மேடும் பள்ளமுமாக இருந்த பாதை (ஈரான்) தற்போது பாதுகாப்பாக இருக்கிறது. அங்கே மதவாத அதிகாரவர்க்கம் வலிமையை இழந்திருக்கிறது. இது ஈரானிய மக்களுக்கும் நல்ல செய்திதானே?
பாகிஸ்தான்
பாகிஸ்தான் மத்தியஸ்தம் செய்து ஓரளவு நல்ல பேரை வாங்கியிருக்கிறது. ஆனால் நம்ம ஆட்களுக்கு பிடிக்கவில்லை. எதிரியாவே இருந்தாலும் நல்லது செஞ்சா பாராட்ட வேண்டாம். அதுமட்டுமின்றி பாகிஸ்தானுக்கும் இது பாடம். பாதை தவறினால் என்ன நடக்கும் என்பதை அவர்களும் உணர்வார்கள்.
ஏன் மோடி இந்த வேலையை செய்யவில்லை? செய்திருக்க வேண்டும். மோடி கோட்டை விட்டுவிட்டார். இருந்தாலும் காஷ்மீர் ஒரு சிக்கலை உருவாக்கியிருக்கிறது. இந்தியா காஷ்மீரில் மத்தியஸ்தத்தை விரும்புவதில்லை. அப்படியிருக்கையில் அதற்கு நேர்மாறான கொள்கையை வெளிநாட்டு விஷயத்தில் கடைபிடிக்க முடியாது. அதன் காரணமாக அவர் தயங்கியிருக்கலாம்.
மொத்தத்தில் தற்போது ஜனநாயகம் ஒரு அடி முன்னே எடுத்து வைத்திருக்கிறது.

0 comments:
Post a Comment