!--Related Posts with thumbnails Scripts and Styles Start-->

Pages

Thursday, September 6, 2012

ராஜீவ் கொலையாளிகள் மன்னிக்கப்படுவார்கள்?


மரண தண்டனைக்கு எதிரான குரல்கள் கேட்க ஆரம்பித்திருக்கின்றன. அவ்வவப்போது இதற்கான குரல் கேட்டாலும் தற்போது அது சத்தமாக ஒலிக்கிறது.

இந்த விஷயத்தில் நான் என் கருத்தை முதலிலேயே சொல்லிவிடுகிறேன். பேரறிவாளனை இதுவரை அனுபவித்த தண்டனையோடு விடுதலை செய்வதையும், மற்ற இருவருக்கும் ஆயுள்தண்டனை வழங்குவதையும் நான் ஆதரிக்கிறேன்.

அதேசமயம் நான் மரண தண்டனையை ஆதரிப்பவன். மனிதர்களில் எப்படி நல்லவர்கள், உயர்ந்தவர்கள், கடவுளுக்கு நிகரானவர்கள் என்று சிலரை குறிப்பிட்டு அதற்கு தகுந்தாற்போல் நடத்துகிறோமோ அதேபோல் அதற்கு எதிர்மறையாக இருப்பவர்களையும் அதற்கு தகுந்தாற்போல்தான் நடத்த வேண்டும். இவர்களில் சிலரை மிருகத்துடன் கூட ஒப்பிடமுடியாது. ஏனென்றால் அவற்றுக்கு ஆறறிவு கிடையாது.

இந்த மரண தண்டனை எதிர்ப்பாளர்கள் என்னுடைய சில கேள்விகளுக்கு மட்டும் பதில் சொன்னால் போதும்.

1 ) உடலில் ஏதாவது ஒரு பகுதி கெட்டுப்போய், `இதை உடனே அறுவை சிகிச்சை மூலம் எடுத்தாக வேண்டும் இல்லையென்றால் அது மற்ற உடல் உறுப்புகளையும் பாதிக்கும்` என்று டாக்டர் ஆலோசனை வழங்கினால், அவரிடம், `இந்த உடல் கடவுள் கொடுத்தது, எனவே இதில் எந்த பகுதியும் எடுக்கக் நமக்கு உரிமை இல்லை` என்று தர்க்கம் செய்வீர்களா?

2 ) இரண்டு பேர் நோய்வாய்ப்பட்ட தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு டாக்டரிடம் போகிறார்கள். இருவரையும் பரிசோதித்த டாக்டர், இருவருக்கும் ஒரே வியாதி இருப்பதையும் (லட்சக்கணக்கில் செலவு வைக்கும்) ஒரு ஆபரேஷன் செய்தால்தான் அவர்களை காப்பாற்ற முடியும் என்று அந்த பெற்றோரிடம் சொல்கிறார்.

வசதியான தகப்பன் உடனடியாக செலவு தன் மகனை காப்பாற்றிவிட்டார். ஆனால் வசதி இல்லாத மற்றவரால் அப்படி செய்யமுடியவில்லை. எப்படியாவது தன் மகனை காப்பாற்றவேண்டும் என்று அவருக்கும் ஆசைதான். ஆனால் நிதர்சனம் அவரை சுட்டது. ஒரு பிள்ளைக்கே லட்சக்கணக்கில் செலவு செய்தால் மற்ற பிள்ளைகளின் கதி? யதார்த்தத்தை புரிந்துகொண்ட அவர் தன்னால் முடிந்ததை பார்த்துவிட்டு அதன்பின் தலையெழுத்தே என விட்டுவிட்டார்.

இப்போது சொல்லுங்கள். இந்தியா போன்ற ஏழை நாட்டில் அரசு செலவு செய்வதில் யாருக்கு முன்னுரிமை தரவேண்டும்? ஒருவேளை மேலை நாடுகளை போல் நாமும் வறுமையை ஒழித்த பிறகு இது போன்ற கோரிக்கைகள் வைத்தால் அப்போது அது ஓரளவாவது நியாயமான ஒன்றாக இருக்கும்.

3 ) ஒருவன் கடவுள் மீது அபார நம்பிக்கை வைத்திருந்தான். ரோட்டில் போகும்போது மதம் பிடித்த யானை ஓன்று ஓடிவர, ஒருவன், `எல்லோரும் ஓடுங்கள், ஓடுங்கள்` என்று கத்திக் கொண்டே ஓடினான். ஆனால் நம்மாளோ கடவுள் மீதுள்ள நம்பிக்கையில் அவர் காப்பாற்றுவார் என்று அலட்சியமாக இருக்க..கடைசியில் கடவுளை நேரடியாகவே பார்க்கும்படி ஆகிவிட்டது. அங்கே கடவுளிடம், `உங்கள் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருந்தேன். ஆனால் நீங்கள் என்னை கைவிட்டுவிட்டீர்கள்` என்று புலம்பினான். அதற்கு கடவுள், `நான்தான் வந்தேனே. `ஓடுங்கள்` என்று எச்சரிக்கை செய்தேனே; நீ கவனிக்கவில்லை ` என்றாராம்.

நீதி என்ன தெரியுமா? கடவுள் நேரடியாக வரமாட்டாராம். மனிதர்கள் மூலமும் தகவல் சொல்வாராம். நாம்தான் அதை புரிந்து கொள்ள வேண்டுமாம்! அப்படிஎன்றால் இந்த நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பையும் அப்படிப்பட்ட ஒன்றாக ஏன் எடுத்துக் கொள்ள கூடாது? ஒருவேளை உபதேசங்கள் ஊருக்குத்தானோ? 

இலங்கை தமிழர்களுக்கும் இங்கிருக்கும் அவர்களுடைய ஆதரவாளர்களுக்கும் நான் வைக்கவிரும்புவது ஒரே கோரிக்கைதான்.

ராஜீவ் காந்தி படுகொலையில் இவர்கள் மூவரும் அப்பாவிகள் என்ற உங்கள் வாதத்தை மற்றவர்கள் வேண்டுமானால் நம்பலாம். ஆனால் எனது சிறை அனுபவத்தில் நான் தெரிந்து கொண்டது வேறு. இந்த அனுபவங்களின் மூலம் ஒரு விஷயத்தை என்னால் உறுதியாக சொல்லமுடியும். பொய் கேஸ் நம் நாட்டில் மிக சர்வசாதாரணமாக போடப்படுவது உண்மைதான். நான் கவனித்த வரையில் சிறையில் பல பேர் மீது பொய் வழக்குகள் இருக்கிறது. சிறையில் இதற்கு பெயர் `புட் ஆஃ` கேஸ்.

ஆனால் போலீசார் பொய் கேஸ் போடுவது பெரும்பாலும் தொடர் குற்றவாளிகள் மீதுதான் (வேறு சில வகை பொய் கேஸ்களும் உண்டு. அது தனிகதை). நான் கூட ஆரம்பத்தில் போலீசார் ஏன் பொய் கேஸ் போடுகிறார்கள் என தெரியாமல் குழம்பிப்போனேன். இதன் பின்னால் பல (நியாயமான) காரணங்கள் இருப்பதை போகப் போகத்தான் புரிந்துகொண்டேன் ஆனால் பிரபலமான வழக்குகளில், அதுவும் ராஜீவ் காந்தி படுகொலை போன்ற வழக்குகளிலெல்லாம் இதற்கு கொஞ்சம் கூட சாத்தியம் கிடையாது. எனவே தயவு செய்து இந்த அபத்தமான வாதத்தை நிறுத்துங்கள்.

ராஜீவ் காந்தியை கொலை வழக்கில் இவர்களுக்கு சம்பந்தம் இருக்கிறதென்றால், எதற்காக இவர்களை மன்னிக்கவேண்டும்?

மரண தண்டனையை நான் ஆதரித்தாலும், அதை யாருக்கு தரவேண்டும் என்பதில் நான் தெளிவாக இருக்கிறேன். லாப நோக்கத்தில் செய்யப்படும் செயல்கள்; சைகோத்தனமாக செய்யப்படுபவை; ஒரு குற்றம் செய்து அதற்கான தண்டனை பெற்றும் திருந்தாதவர்கள்.

ராஜீவ் காந்தி கொலையாளிகள் இந்த வகைகளில் வரவில்லை. விடுதலைப் புலிகள் ராஜீவ் காந்தியைத்தான் எதிரியாகத்தான் பார்த்தார்களே தவிர இந்தியாவை இல்லை. இந்தக் கொலையின் மூலம் அவர்கள் இந்தியாவையோ இந்திய மக்களையோ பழிவாங்க நினைக்கவில்லை. மிக முக்கியமாக இந்த படுகொலை லாபநோக்கில் செய்யப்பட்டது அல்ல. ஏதோ ஒருவித பழிவாங்கல். அவ்வளவுதான்.

அப்படிஎன்றால் அந்த குண்டு வெடிப்பில் இறந்த மற்றவர்களுக்கு நீதி?

நாம் ஏதாவது ஒரு செயலில் இறங்கும்போது அதில் சில விரும்பத்தகாத சம்பவங்களும் சேர்ந்து நிகழ்ந்துவிடும். இதை விதி அல்லது இயற்கை என்ற ஏதாவது ஒரு சித்தாந்தத்தில் புரிந்து கொள்ளுங்கள். அதேபோல்தான் இந்திய ராணுவம் இலங்கை சென்ற போதும் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்திருகிறது. இதை இலங்கைத் தமிழர்களும் புரிந்து கொள்ளவேண்டும். நான் எதையும் நியாயபடுத்தவில்லை. தியரியைத்தான் சொன்னேன்.

பேரறிவாளனை ஏன் மன்னித்து விடுதலை செய்யவேண்டும்?

உங்கள் மகன் தவறான பாதையில் போனால் அதற்கு நீங்களும் ஏதோ ஒரு வகையில் பொறுப்பாகிறீர்கள். நீங்கள் உங்கள் பிள்ளைக்கு சரியான வழிகாட்டல் தரவில்லை என்றும் அர்த்தம் ஆகும். அதோடு 19 வயதெல்லாம் எது சரி எது தவறு என்பதை புரிந்து கொள்ளும் வயதா? அந்த வயதில் நாமெல்லாம் என்னன்ன அபத்தங்கள் செய்திருப்போமோ? எனவே 20 வருடமே பேரறிவாளனுக்கு அதிகம்.

அப்படிஎன்றால் அப்சல் குருவுக்கும் மரணதண்டனையை ரத்து செய்யாலாமா?

நிச்சயமாக. அவருக்கும் ஆயுள்தண்டனையாக மாற்றிவிடலாம். நான் இதே கருத்தை ஏற்கனவே ஒரு வெளிநாட்டு பத்திரிகையில் தெரிவித்திருக்கிறேன்.


சரி. இனி என்ன நடக்கும்? 

இலங்கைத் தமிழர்களை அழிக்க துணை போனது என்ற அவப்பெயரில் காங்கிரஸ் சிக்கி தவிக்கிறது. எனவே இந்த விஷயத்தில் காங்கிரஸ் கருணை காட்டக்கூடும். ஆனால் இங்கே கருணை காட்டினால் அது தவறான முன்னுதாரனமாக்கி பல தலைவலிக்கு வழி வகுக்கும். எனவே கணிப்பதும் கடினம்.

ஆனால் என்னுடைய உள்ளுணர்வு இவர்கள் மன்னிக்கப்படுவார்கள் என்றே சொல்கிறது. ஏனென்றால் தமிழக சட்டமன்றமே ஏகமனதாக அப்படி ஒரு அசாதாரணமான கோரிக்கையை வைத்திருக்கிறது. இந்த படுகொலையின் முக்கிய குற்றவாளிகள் ஏற்கனவே கொள்ளப்பட்டுவிட்டதால், இவர்கள் மீது கோபத்தை காட்ட வாய்ப்பில்லை. அதேசமயம்  இந்தியாவின் ஒருமைப்பாடு என்று வரும்போது இந்திய ஆட்சியாளர்கள் எப்போதும் பிராக்டிகலாகத்தான் முடிவெடுப்பார்கள். மக்களை கோபப்படுத்தும் செயலில் இறங்கமாட்டார்கள். (இலங்கை விஷயத்தில் சீனா என்ற தலைவலிக்காக வேறுவழி இல்லாமல் நுழைந்திருக்கலாம்.)

அதேபோல் இவர்களை தூக்கில் போடுவதால் எந்த லாபமும் கிடையாது. சட்டம் நிலைநாட்டப்படும், அவ்வளவுதான்.  ஆனால் இவர்களை மன்னிப்பதன் மூலம் காங்கிரஸ் தமிழின விரோதி என்று எதிர்கட்சிகள் பிரச்சாரம் செய்வதை அது ஓரளவாவது தடுக்கும்.

இவர்களை மன்னிப்பதுதான் காங்கிரசுக்கும் நாட்டுக்கும் நல்லது என்றாலும் ,   மத்திய அரசு நேரடியாக மன்னிக்க முடியாது. எனவே நீதி மன்றங்களின் மூலம், ஏதாவது ஒரு சட்டவிதியை காட்டி, தப்பிக்கவிடும் என்றுதான் நினைக்கிறன்.

அதுதான் எனது விருப்பமும் கூட.12 comments:

Anonymous said...

நீண்ட அனுபவம் உடையவர் நீங்கள்....அறிவாளி, ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் முட்டாள்கள்...
அதன் அடிப்படையில் உலகிற்கு உங்கள் தீர்க்கதரிசனத்தை சொல்கிறீர்கள்....

:-(

ராஜ நடராஜன் said...

//போலீசார் ஏன் பொய் கேஸ் போடுகிறார்கள் என தெரியாமல் குழம்பிப்போனேன். இதன் பின்னால் பல (நியாயமான) காரணங்கள் இருப்பதை போகப் போகத்தான் புரிந்துகொண்டேன்//

சிவா!இதற்கான காரணத்தை நீங்கள் விடுகதை போடாமல் விளக்கியிருக்கலாம்.//அதேபோல்தான் இந்திய ராணுவம் இலங்கை சென்ற போதும் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்திருகிறது. இதை இலங்கைத் தமிழர்களும் புரிந்து கொள்ளவேண்டும். நான் எதையும் நியாயபடுத்தவில்லை. தியரியைத்தான் சொன்னேன்.// உங்கள் தியரி சரியென்றால் இது விடுதலைப்புலிகளின் பார்வையிலும் சரியென்றே வாதிக்கலாம்.ஈழப்போரின் குழறுபடிகள் அனைத்தையும் திருப்பி போட்டுவிட்டது.

ராஜ நடராஜன் said...

//அப்படிஎன்றால் அப்சல் குருவுக்கும் மரணதண்டனையை ரத்து செய்யாலாமா?//

அப்சல் குருவின் இந்திய பாராளுமன்றம் மீதான தாக்குதலில் இரண்டு முக்கிய விசயங்கள் உள்ளன.முதலாவதாக பாகிஸ்தானின் பின்புலத்தில் நிகழும் Shadow war என்று சொல்லப்படும் நிழல் யுத்தமும்,அதனுடன் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ இணைந்த இஸ்லாமிய தீவிரவாதமும் இந்தியாவுக்கு எதிரான நிலையென்பதாலே காஷ்மீர் மக்களின் சுய உரிமைப் போராட்டம் பின் தள்ளப்பட்டு விட்டது.இல்லையென்றால் இந்தியாவின் ஸ்விட்சர்லாந்தான காஷ்மீர் மக்கள் இந்து முஸ்லீம் வேறுபாடுகளின்றி சுய நிர்ணயம் மட்டுமல்ல,இந்தியாவின் தனி அதிகார பலன்களை அனுபவித்தே இருப்பார்கள்.அப்சல் குருவின் தண்டனை எதிர்காலத்தில் காஷ்மீர் மக்களிடையே அப்சல் குருவை பகத்சிங் போன்றே பாராட்டும் நிலை தோன்றும்.மேலே குறிப்பிட்ட இஸ்லாமிய விகுதியாக அப்சல் சிறை அதிகாரியையும் இஸ்லாமியராக மாற்ற முயன்றதாக அவரே வாக்குமூலம் தருகிறார்.மரணத்திலும் மதம் என்பது மட்டுமே இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு ஆணி வேர்.அப்சல் குருவின் தண்டனையை காஷ்மீர் மக்களும்,பரூக் அப்துல்லாவும் நிர்ணயக்கட்டும்.

சார்வாகன் said...

negative vote

சார்வாகன் said...

//போலீசார் ஏன் பொய் கேஸ் போடுகிறார்கள் என தெரியாமல் குழம்பிப்போனேன். இதன் பின்னால் பல (நியாயமான) காரணங்கள் இருப்பதை போகப் போகத்தான் புரிந்துகொண்டேன்//
இதுவரைக்கும் காவ‌லதுறை கூடல் சொல்லாத காரணம்.முதலில் இதனை விளக்குங்கள்

சிவானந்தம் said...

///நீண்ட அனுபவம் உடையவர் நீங்கள்....அறிவாளி, ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் முட்டாள்கள்...
அதன் அடிப்படையில் உலகிற்கு உங்கள் தீர்க்கதரிசனத்தை சொல்கிறீர்கள்...////

வாங்க மிஸ்டர் அனானிமஸ். உங்கள் கருத்துக்கு நன்றி. அதேபோல் உங்களின் நாகரீகமான நக்கலுக்கும் நன்றி. முகத்தை மறைத்துகொண்டோமே, எனவே எப்படி வேண்டுமானாலும் எழுதலாம் என எழுதாமல் நாகரீகமாக விமர்சித்ததற்கு மறுபடியும் நன்றி.

நான் தீர்க்கதரிசியாக இருந்தால் இந்நேரம் நான் ஒரு கார்பரேட் சாமியாராகி இருப்பேன் அல்லது ஏதாவது ஒரு பத்திரிகை கட்டுரையாளர் என்ற புரமொஷனை கொடுத்திருக்கும். அவ்வளவு ஏன் நான் ஜெயிலுக்கே போயிருக்க மாட்டேன். இது டீக்கடை பென்ச் மாதிரி. இங்கே சின்னஞ்சிறு வாண்டு முதல் தலைநரைத்த பெரிசு வரை அரசியல் கதைக்கலாம். அதில் நானும் ஓன்று. அவ்வளவுதான்.

இந்த பதிவில் நான் சொன்ன சில விஷயங்கள் எல்லோருக்கும் தெரிந்ததுதான். அவர்களின் கருணை மனு நிராகரிக்கப்பட்ட உடன் நான் இந்த பதிவை போட்டிருக்கவேண்டும் . ஆனால் அண்ணா ஹசாரே என்னையும் கொஞ்ச நாள் கட்டிபோட்டுவிட்டதால் அவரை பற்றி சில பதிவுகள் போடவேண்டியதாகி விட்டது.

சந்தியா said...

அவர்களது குற்றம் இத்தண்டனைக்கு உரிய குற்றமில்லை

எமக்கு கிடைத்த வரங்களை நாமே கேவலம் செய்வதற்கு ஒரு உதாரணம்
நடிகர் விஜய்யைக் கேவலப்படுத்தும் Google நிறுவனம்

மயிர் கூச்செறியும் சாதனை
மலையில் இருந்து குதித்து பிரித்தானிய வீரர் உலக சாதனை (படங்கள் இணைப்பு)

சிவானந்தம் said...

///சிவா!இதற்கான காரணத்தை நீங்கள் விடுகதை போடாமல் விளக்கியிருக்கலாம்.//அதேபோல்தான் இந்திய ராணுவம் இலங்கை சென்ற போதும் சில விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்திருகிறது. இதை இலங்கைத் தமிழர்களும் புரிந்து கொள்ளவேண்டும். நான் எதையும் நியாயபடுத்தவில்லை. தியரியைத்தான் சொன்னேன்.// உங்கள் தியரி சரியென்றால் இது விடுதலைப்புலிகளின் பார்வையிலும் சரியென்றே வாதிக்கலாம்.ஈழப்போரின் குழறுபடிகள் அனைத்தையும் திருப்பி போட்டுவிட்டது.///

வாங்க நடராஜன் சார். இது விடுகதை அல்ல. ஒரே பதிவில் எல்லாவற்றையும் போட்டு குழப்பிக்கொள்ள வேண்டாம் என விட்டுவிட்டேன். உண்மை என்னவென்றால் போலீசார்கள் எல்லாம் sherlock holmes கிடையாது. அதேபோல் குற்றவாளிகளும் போலீசார் கண்டுபிடிப்பதற்கு வசதியாக தடயங்களை விட்டு விட்டு போக மாட்டார்கள். எனவே போலீசாருக்கு பலவிதமான தலைவலிகள் இருகின்றன. அதையெல்லாம் பின்னூட்டத்தில் விளக்க முடியாது. சிலவற்றை மட்டும் சொல்கிறேன். உண்மையான வழக்குகள் பெரும்பாலும் ஜெயிப்பதில்லை. இங்கே வழக்குகள் வேண்டுமென்றே இழுக்கப்படுகிறது. கால ஓட்டத்தில் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களை மன்னிக்க தயாராகி விடுகிறார்கள். ஜெயலலிதாவையும், ராஜீவ் காந்தி கொலையாளிகளையும் மக்கள் மன்னிக்க தயாராகிவிட்டது இந்த தியரியின் அடிப்படையில்தான்.

மிகபெரிய ரவுடிகளாக இருந்தால் பாதிக்கப்பட்டவர்கள் எதற்கு வம்பு என்று பிறழ் சாட்சியாகி விடுகிறார்கள். மற்ற சின்ன வழக்குகளில் சாட்சி சொல்ல வருபவர்களை பார்த்து குற்றவாளி கையெடுத்து கும்பிட்டால் போதும் அவர்களுக்கும் மனித நேயம் பொங்கிவழிய ஆரம்பித்துவிடும். ஆனால் போலீசாருக்குத்தான் தெரியும் இது திருந்தாத ஜென்மங்கள் என்று. அதேபோல் சில குற்றங்கள் நடந்திருக்கும். ஆனால் மக்கள் புகார் கொடுக்க முன்வரமாட்டார்கள். காரணமெல்லாம் கேட்காதீர்கள். புரிந்துகொள்ளுங்கள். அதற்காக புகார் இல்லை என்று அப்படியே விடுவிட முடியுமா? எனவே இந்த தொடர் குற்றவாளிகள் போலீசாரிடம் மாட்டியவுடன், உண்மையான வழக்குகளுடன் சில பொய் வழக்கையும் சேர்த்து போடுவார்கள். அதில் இவர்கள் வகையாக மாட்டிகொள்வார்கள். அதாவது இது ஒரு வகையான என்கௌண்டர். வேறு சிலவகை பொய் கேசும் இருக்கிறது. அதையெல்லாம் பிறகு பார்ப்போம். ஆனால் ஒரு தப்பும் செய்யாத நபர்கள் தண்டனை அனுபவிப்பது மிக மிக குறைவு. அதாவது நான் கவனித்த வரையில்.

சிவானந்தம் said...

@ நடராஜன்

உங்கள் தியரி சரியென்றால் இது விடுதலைப்புலிகளின் பார்வையிலும் சரியென்றே வாதிக்கலாம்.ஈழப்போரின் குழறுபடிகள் அனைத்தையும் திருப்பி போட்டுவிட்டது.

இடியாப்ப சிக்கல்தான். இந்தியாவின் தவறும் வெளிப்படையாக தெரிகிறது. ஒரு பெண்ணை (ஈழம்) காட்டி அவளை காதலி நான் கட்டி வைக்கிறேன் என்று ஆசை காட்டிவிட்டு பின்னர் அவளை மறந்து விடு என்று சொன்னால் அந்த ஆணுக்கு என்ன கோவம் வரும்? அந்த கோவத்தைதான் நான் பிரபாகரனின் செயலில் பார்த்தேன். இருந்தாலும் இந்த செயலில் அதிகம் நஷ்டப்பட்டது யார்? அங்கேதான் பிரபாகரன் தப்புகணக்கு போட்டுவிட்டார். இனி இந்த விவாதம் தேவை இல்லை, விட்டுவிடுவோம்.

சிவானந்தம் said...

@ நடராஜன்

///அப்சல் குருவின் இந்திய பாராளுமன்றம் மீதான தாக்குதலில் இரண்டு முக்கிய விசயங்கள் உள்ளன.முதலாவதாக பாகிஸ்தானின் பின்புலத்தில் நிகழும் Shadow war என்று சொல்லப்படும் நிழல் யுத்தமும்,அதனுடன் பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ இணைந்த இஸ்லாமிய தீவிரவாதமும் இந்தியாவுக்கு எதிரான நிலையென்பதாலே காஷ்மீர் மக்களின் சுய உரிமைப் போராட்டம் பின் தள்ளப்பட்டு விட்டது.இல்லையென்றால் இந்தியாவின் ஸ்விட்சர்லாந்தான காஷ்மீர் மக்கள் இந்து முஸ்லீம் வேறுபாடுகளின்றி சுய நிர்ணயம் மட்டுமல்ல,இந்தியாவின் தனி அதிகார பலன்களை அனுபவித்தே இருப்பார்கள்.அப்சல் குருவின் தண்டனை எதிர்காலத்தில் காஷ்மீர் மக்களிடையே அப்சல் குருவை பகத்சிங் போன்றே பாராட்டும் நிலை தோன்றும்.மேலே குறிப்பிட்ட இஸ்லாமிய விகுதியாக அப்சல் சிறை அதிகாரியையும் இஸ்லாமியராக மாற்ற முயன்றதாக அவரே வாக்குமூலம் தருகிறார்.மரணத்திலும் மதம் என்பது மட்டுமே இஸ்லாமிய தீவிரவாதத்திற்கு ஆணி வேர்.அப்சல் குருவின் தண்டனையை காஷ்மீர் மக்களும்,பரூக் அப்துல்லாவும் நிர்ணயக்கட்டும்.///

தமிழனாக இருந்தும் நான் ஈழம் பற்றி படித்ததை விட காஷ்மீர் பற்றி படித்ததுதான் அதிகம். என்னுடைய முதல் ஆங்கிலக் கடிதம் (ஹிந்துவில்) கூட காஷ்மீர் பற்றியதுதான். பாகிஸத்தானை விட இந்தியாவில் அவர்களுடைய எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்றாலும், மனம் ஒப்பாவிட்டால் எதையும் நம்மால் ஏற்றுகொள்ள முடியாது. எனவே அவர்களுடைய ஆதங்கத்தையும் புரிந்து கொள்வோம். பாகிஸ்த்தான் அவர்களை தூண்டி விட்டாலும், தீவிரவாதிகளுகேதிரான இந்தியாவின் யுத்தத்தில் அப்பாவிகளும் பலியாவார்கள் என்பதும் ஒரு தியரி. அதில் பாதிக்கப்பட்டவரோ அல்லது அதையெல்லாம் பார்த்து இந்தியாவின் மீது கோவம் கொண்டவராகவும் இருக்கலாம். எனவே அப்சல் குருவையும் மன்னித்து ஆயுள்தண்டனை ஆக்கிவிடுவதுதான் நல்லது.

சிவானந்தம் said...

@ சார்வாகன்

//இதுவரைக்கும் காவ‌லதுறை கூடல் சொல்லாத காரணம்.முதலில் இதனை விளக்குங்கள்//

வருகைக்கு நன்றி நண்பரே. இதையெல்லாம் வெளிப்படையாக சொல்ல முடியுமா? விளக்கம் கொடுத்துவிட்டேன்.

சிவானந்தம் said...

@ anonymous

நண்பரே நீங்கள் என்னை விமர்சித்திருந்தாலும் உங்கள் பின்னூட்டத்தை வெளியிட்டிருப்பேன். ஆனால் மற்றவர்களை பற்றிய விமர்சனம் இங்கே வேண்டாம்.

Post a Comment